பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுஜிஸ்தானில் கிளர்ச்சிக்காரர்களுடன் ஏற்பட்ட மோதலில் குறைந்தது நான்கு துணைப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமையன்று மாகாணத் தலைநகர் குஎட்டாவுக்கு வடகிழக்கே 262 கிலோமீற்றருக்கு அப்பால் அமைந்துள்ள லெராலயி மாவட்டத்தில் இம் மோதல் இடம்பெற்றதாக நேற்று முன்தினம் இராணுவத்தினரால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுழைபாதை எல்லையில் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட போது கிளர்ச்சிக்காரர்கள் துணைப்படையினரின் குடியிருப்புப் பகுதியின் மீது தாக்குதல் நடத்த முயன்றதாக அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில் நான்கு படையினர் கொல்லப்பட்டதோடு ஒரு குண்டுதாரி உள்ளடங்கலாக நான்கு கிளர்ச்சிக்காரர்களும் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதலுக்கு எந்தக் குழுவும் உரிமை கோரவில்லை. எனினும், கடந்த காலங்களில் குறித்த மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் மீது பலொச் பிரிவினைவாதக் குழுக்களும், கிளர்ச்சிக்காரர்களும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி மலைப் பாங்கான மாவட்டமான கெச்சில் துணைப் படையினரின் வாகனத் தொடரணி மீது துப்பாக்கிதாரியொருவர் மேற்கொண்ட தாக்குதலில் 06 பாகிஸ்தான் படையினர் கொல்லப்பட்டனர்.
பிரச்சினை நிலவும் இம்மாகாணத்தில் கடந்த ஜுலை மாதம் அரசியல் நிகழ்வொன்றின் போது இடம்பெற்ற குண்டு வெடிப்பில் சுமார் 130 பேர் கொல்லப்பட்டனர். மஸ்டங் நகரில் இடம்பெற்ற இக் குண்டுத் தாக்குதலில் 200 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதோடு, ஐ.எஸ். தக்பீரி பயங்கரவாதக் குழு இதற்கு உரிமை கோரியிருந்தது.
பரபரப்பானதும் கனிப்பொருட்கள் நிறைந்ததுமான பலுஜிஸ்தான் மாகாணம் பிரிவினைவாத, தீவிரவாத மற்றும் மதரீதியான வன்முறைகள் இடம்பெறும் பிரதசமாகும். கடந்த பல ஆண்டுகளாக பல குண்டு வெடிப்புக்களும், துப்பாக்கித் தாக்குதல்களும் இடம்பெறும் பிரதேசமாக காணப்படுகின்றது.
2016 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பலுஜிஸ்தானில் தொடரான பயங்கரவாதத் தாக்குதலின் அதிகரிப்பு ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புபட்ட பயங்கரவாதிகள் உள்ளிட்ட ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிக்காரர்களின் பிரசன்னத்தை பிரதேசத்தில் அதிகாத்துவிடுமோ என்ற அச்சத்தைத் தோற்றுவித்தது.
மாகாணத்திலுள்ள பிரிவினைவாத கிளர்ச்சிக்காரர்கள் மத்திய அரசாங்கத்திற்கு எதிராக ஒரு தசாப்த காலமாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
-Vidivelli