அரசாங்கத்தின் பலத்தை இன்னும் சில தினங்களில் கண்டுகொள்ளலாம்
ராஜாங்க அமைச்சர் நளின் பண்டார தெரிவிப்பு
அரசாங்கத்தின் பலத்தை இன்னும் சில தினங்களில் கண்டுகொள்ளலாம். அதன் பிறகு பொதுத்தேர்தல் தொடர்பாக யாரும் கதைக்கமாட்டார்கள். அத்துடன் ஜனாதிபதி தேர்தலே ஆரம்பத்தில் இடம்பெறும் என ராஜாங்க அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார்.
அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசாங்கம் முன்வைத்த இடைக்கால கணக்கறிக்கைக்கு ஆதரவாக 102 பேரே வாக்களித்துள்ளனர். அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. அதனால் பொதுத்தேர்தலுக்கு செல்லவேண்டும் என எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். பொதுத்தேர்தலுக்கு செல்வது தொடர்பில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஐக்கிய தேசியகங கட்சி எந்த தேர்தலுக்கும் தயாராகவே இருக்கின்றது.
என்றாலும் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கின்ற நிலையில் அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்ற காரணத்தினாலே பொதுத் தேர்தல் தொடர்பில் கூச்சலிட்டு வருகின்றனர். இன்னும் சில தினங்களில் அரசாங்கத்தின் பலத்தை நாங்கள் காண்பிப்போம். அதன் பின்னர் பொதுத்தேர்தல் குறித்து யாரும் வாய் திறக்கமாட்டார்கள்.
அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைச்சேர்ந்த பெரும்பான்மை உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தீர்மானித்திருக்கின்றனர். ஜனாதிபதியின் சில தடைகள் காரணமாகவே அவர்கள் எம்முடன் இணைந்து செயற்படும் தீர்மானத்தை பிற்படுத்தி வருகின்றனர். எதிர்காலத்தில் ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் எவ்வாறான தீர்மானங்களை எடுப்பார் என்று எங்களுக்கு தெரியாது. என்றாலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவுபடாமல் பாதுகாக்கும் பொறுப்பு ஜனாதிபதியின் கையிலேயே இருக்கின்றது.
இதுதவிர, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு குழுவினர் பொதுஜன பெரமுனவில் இணைந்துகொண்டுள்ளனர். சிலர் ஏற்கனவே அரசாங்கத்தில் இணைந்துகொண்டுள்ளனர். இவ்வாறான நிலையில் இருக்கும் சிலர் எதிர்காலத்தில் தீக்கமான முடிவொன்றை எடுக்க இருக்கின்றனர். பெரும்பாலும் அவர்கள் அரசாங்கத்தில் இணைந்துகொள்ளவே விருப்பம் தெரிவித்திருக்கின்றனர். அவ்வாறான நிலை ஏற்பட்டால் பலம் மிக்க அரசாங்கமாக நாம் ஆகிவிடுவோம். அதன் பின்னர் யார் என்ன சொன்னாலும் ஜனாதிபதி தேர்தலே ஆரம்பமாக இடம்பெறும் என்றார்.
-Vidivelli