அமெரிக்காவும் இஸ்ரேலும் ஐக்கிய நாடுகள் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ அமைப்பிலிருந்து புத்தாண்டு ஆரம்பித்த நள்ளிரவில் உத்தியோகபூர்வமாக வெளியேறின. வெளியேறவுள்ளதாக கடந்த வருடம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அச்செயற்பாடு இடம்பெற்றுள்ளது.
சமாதானத்தைப் பேணிக் காக்கும் நோக்கில் இரண்டாம் உலக மகா யுத்தத்தினைத் தொடர்ந்து அமெரிக்கா இணைந்து ஆரம்பித்த யுனெஸ்கோ அமைப்பிற்கு இந்த வெளியேற்றம் ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகின்றது.
2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ட்ரம்ப் நிருவாகம் தனது வெளியேற்றம் தொடர்பில் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிராகச் செயற்படுவதாக யுனெஸ்கோ மீது குற்றச்சாட்டைத் தெரிவித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகூவும் வெளியேற்றம் தொடர்பில் அறிவித்தார்.
பாரீஸைத் தளமாகக் கொண்ட யுனெஸ்கோ கிழக்கு ஜெரூசலத்தை ஆக்கிரமித்தமைக்காக இஸ்ரேலை விமர்சித்த அதேவேளை, 2011 ஆம் ஆண்டு பலஸ்தீனத்திற்கு முழுமையான அங்கத்துவத்தை வழங்கியது.
யுனெஸ்கோவில் அடிப்படையான மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டுமென அமெரிக்கா கோருகின்றது.
உலகிலுள்ள பூர்வீக இடங்களை பட்டியல்படுத்தி பேணிவருவது உள்ளிட்ட பாரம்பரியங்களை பாதுகாக்கும் பணிகளுக்கு பிரசித்தி பெற்ற அமைப்பான யுனெஸ்கோ அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளில் கல்வி மேம்பாட்டுக்கான நிகழ்ச்சித் திட்டங்களையும் செயற்படுத்தி வருகின்றது.
இந்த வெளியேற்றம் நிதியியல் ரீதியாக யுனெஸ்கோவுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தப் போவதில்லை, ஏனெனில் யுனெஸ்கோவின் அங்கத்துவ நாடாக பலஸ்தீன் தெரிவு செய்யப்பட்ட 2011 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்காவும் இஸ்ரேலும் முகவரகத்திற்குச் செலுத்த வேண்டிய தொகையினை நிறுத்தியுள்ளதோடு நிதியளிப்பையும் குறைத்து விட்டன.
முகவரகத்தின் மொத்த வரவு செலவுத் திட்டத்தில் சுமார் 22 வீதத்த்தை செலுத்த வேண்டிய அமெரிக்கா முகவரகத்திற்குச் செலுத்த வேண்டிய தொகை 600 மில்லியன் அமெரிக்க டொலர் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் யுனெஸ்கோவிலிருந்து விலகிக் கொண்டமைக்கான பிரதான காரணம் இதுவாகும். இஸ்ரேல் முகவரகத்திற்கு செலுத்தவேண்டிய தொகை 10 மில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா தனது வெளியேற்றத்திற்கு முன்வைத்த குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து அமெரிக்காவினால் மேற்கோள்காட்ட முடியாது. ஏனெனில் மத்திய கிழக்கு தொடர்பில் அதன் பின்னர் 12 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை அரபு அங்கத்துவ நாடுகள் மற்றும் இஸ்ரேலின் இணக்கப்பாட்டுடன் நிறைவேற்றப்பட்டன.
அமெரிக்கா வெளியேறிவிட்டதனால் இது தொடர்பில் இராஜாங்கத் திணைக்களம் கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை. உலகப் பூர்வீக இடங்களின் பாதுகாப்பு, ஊடக சுதந்திரத்திற்கான பிரசாரம் மற்றும் விஞ்ஞான ஒத்துழைப்பு மற்றும் கல்வி உள்ளிட்ட அரசியல் சாராத விடயங்களில் உறுப்பினரல்லாத பார்வையாளர் நாடு என்ற அடிப்படையில் யுனெஸ்கோவில் தனது கடமைகளை முன்னெடுக்க விரும்புகிறதெனஅமெரிக்கா யுனெஸ்கோவிடம் தெரிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள யுனெஸ்கோவின் நிறைவேற்றுச் சபைக் கூட்டத்தில் அமெரிக்க இந்த அந்தஸ்தைக் கோரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கு முன்னரும் அமெரிக்கா யுனெஸ்கோவிலிருந்து வெளியேறியிருந்தது. முறையற்ற நிர்வாகம், ஊழல் மற்றும் சோவியத்தின் அபிலாஷைகளுக்கு முன்னுரிமையளித்தல் என்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ரீகன் நிருவாகம் 1984 இல் வெளியேறியிருந்தது. 2003 ஆம் ஆண்டு அமெரிக்கா மீண்டும் யுனெஸ்கோவில் இணைந்துகொண்டது.
-Vidivelli