இஸ்லாத்துக்கும் ஐ.எஸ். அமைப்புக்கும் சம்பந்தம் கிடையாது
ஆட்சியாளர்களுக்கு தெளிவுபடுத்தியிருக்கிறோம் என்கிறார் ரிஸ்வி முப்தி
இஸ்லாத்துக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாதென முன்னைய ஆட்சியாளர்களுக்கும், இன்றைய நாட்டின் தலைவர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தெளிவாக எடுத்துக்கூறியுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர் அஷ்ஷெய்க், எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி (பின்னூரி) தெரிவித்தார்.
புத்தளம் மணல்குன்று மன்பவுஸ்ஸாலிஹாத் பெண்கள் அரபுக்கல்லூரியின் ஐந்தாவது வருட பட்டமளிப்பு விழா கடந்த சனிக்கிழமை அரபுக்கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றபோது அங்கு விசேட உரை நிகழ்த்தும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மன்பவுஸ்ஸாலிஹாத் பெண்கள் அரபுக்கல்லூரியின் பரிபாலன சபை தலைவர் ஏ.எம்.அஹமத் நபீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இந்தியா – தமிழ்நாடு, திருச்சி ஜாமிய்யா அன்வாருல் உலூம் கலாசாலை பணிப்பாளரும், ஜமாஅத்துல் உலமா தலைவருமான மௌலானா முப்தி, ஷைகுல் ஹதீஸ் ஏ.எஸ். ரூஹுல் ஹக் (தேவ்பந்தி) கலந்து கொண்டார்.
புத்தளம் நகரபிதா கே.ஏ. பாயிஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், அப்துல்லாஹ் மஹ்ரூப், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி, புத்தளம் மாவட்ட ஜம்இய்யதுல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் (மதனி), மகளிர் அரபுக் கல்லூரிகளின் ஒன்றிய தலைவர் அஷ்ஷெய்க் ஜஹ்பர் (ரஹ்மானி), அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நிறைவேற்று குழு உறுப்பினர் அஷ்ஷெய்க் எஸ்.எம். எம். ஜுனைத் (மதனி) உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், அரபுக்கல்லூரிகளின் அதிபர்கள், உலமாக்கள், அரசாங்க அதிகாரிகள், சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மன்பவுஸ்ஸாலிஹாத் பெண்கள் அரபுக்கல்லூரியின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் அல்காரி, அல்ஆலிம், அல்ஹாபிழ் ஏ.எம்.எம். ரியாஸ் (தேவ்பந்தி) பணிப்பாளர் உரையினை நிகழ்த்தியதோடு இந்தப் பட்டமளிப்பு விழாவில், அல்ஆலிமா சான்றிதழ்களை 47 மாணவிகளும், அல்முரபிய்யா சான்றிதழ்களை 23 மாணவிகளும், அல்ஹாபிழா சான்றிதழ்களை 12 மாணவிகளும், மத்னுல் ஜஸாரிய்யா சான்றிதழ்ளை 09 மாணவிகளும் பெற்றுக்கொண்டனர்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர் அஷ்ஷெய்க், அல்ஆலிம் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி (பின்னூரி) அங்கு மேலும் உரையாற்றுகையில்,
சவூதியும் ஏனைய நாடுகளும் இந்த ஐ.எஸ்.ஐ.எஸ். விவகாரம் தொடர்பாக தீர்வுகளை எட்ட முன்பதாகவே நாம் இலங்கையிலே உலமாக்கள் ஒன்றுகூடி இதனை தெளிவாக அரசுக்கு முன்வைத்துள்ளோம்.
இன்றைய சூழ்நிலையில் நாம் ஓர் அபாயகரமான நிலைமைக்கு ஆளாகியுள்ளோம். எங்களுடைய மடத்தனமான, கொள்கை ரீதியாக வரக்கூடிய தவறான வழிகாட்டல்களின் மூலம் ஏற்படக்கூடிய விபரீதங்கள், இந்த நாட்டிலே நாம் பெற்றுள்ள ஜனநாயக உரிமைகளை பறிகொடுக்க கூடிய நிலைமைகளுக்கு உள்ளாக்கியுள்ளது.
சகவாழ்வும் நல்லிணக்கமும் ஏற்படுவது என்பது பாலும் சீனியும் கரைவது போல் அல்ல. பெரும்பான்மை பௌத்தர்கள் வாழக்கூடிய இந்த நாட்டிலே அவர்களோடு நாம் எப்படி சேர்ந்து வாழ முடியும் என்கின்ற சூழலை தோற்றுவிக்க வேண்டும். பழவர்க்க தட்டுகளை பௌத்த மதத் தலைவர்களுக்கு அன்பளிப்பு செய்வதன் மூலமாக, பௌத்த மத சகோதரர்கள் மத்தியில் கிணறுகளை அமைத்து வழங்குவதன் மூலமாக, அவர்களுடைய பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கி அன்பளிப்பு செய்வதன் மூலமாக இந்த சகவாழ்வினையும், நல்லிணக்கத்தையும் எம்மால் நிச்சயம் தோற்றுவிக்க முடியும்.
எங்களுக்குள்ளே ஒருவரை ஒருவர் மதித்து வேற்றுமைக்கு மத்தியில் விட்டுக்கொடுக்கும் தன்மையோடு, மற்றவர்களின் கருத்துக்களையும் மதித்து செயற்பட்டாலேயே இந்நாட்டில் நாம் எம் இருப்பிடத்தினை பாதுகாத்துக்கொள்ள முடியும்.
நாட்டிலுள்ள பெண்கள் மத்ரஸாக்களில், பெண்கள் ஆர்வத்தோடு கல்வி பயில்கின்றனர். அவர்கள் பாரிய பொறுப்புக்களை சுமக்கக்கூடியவர்களாக உள்ளனர். ஸஹீஹுல் புஹாரியை தந்த, தந்தையை இழந்த இமாம் புஹாரி அவர்களை அவரது தாயார் எவ்வாறு உருவாக்கினார்களோ அத்தகைய தாயின் ஸ்தானத்தை இந்த கல்லூரியில் பிள்ளைகளை கல்வி கற்க வைத்த நீங்கள் பெறுகிறீர்கள்.
புத்தளம் நகரமானது வந்தாரை வாழவைத்த நகரம். 1996 இல் மாபெரும் இஜ்திமாவை 5 இலட்சம் மக்களை ஒன்றுகூட்டி வெற்றிகரமாக நடாத்திய ஊர். இடம்பெயர்ந்து வந்த மக்களை ஆதரித்து வாழவைத்த ஊர். 30 வருடங்களுக்கும் மேலாக இடம்பெயர்ந்து வாழும் அந்த மக்களுடைய அவர்களது சொந்த மண்ணை சரியாக வழங்க வேண்டும் என நாம் அரசினை வலியுறுத்தி வருகிறோம் எனக்கூறினார்.
-Vidivelli