ஐக்கிய தேசியக் கட்சியின் எட்டு உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதுடன் 2019 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்போதும் சுயாதீன அணியாக செயற்படவுள்ளதாகவும் அந்த அணி குறிப்பிட்டுள்ளது. கிடைக்கப்பெற்றிருக்கும் இந்த ஒரு வருடத்தில் சகல மக்களுக்கும் சமமான சலுகைகள் கிடைக்கப்பெறவேண்டும். கடந்த மூன்றரை வருடங்களிலும் நாட்டின் சகல பகுதிகளுக்கும் முழுமையான சலுகைகள் பெற்றுக் கொடுக்கப்படவில்லை.
அவ்வாறு மக்களின் ஆட்சிக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிர்ப்பினை வெளியிடுவதற்காகவே சுயாதீனமாக இயங்குவதற்கான தீர்மானத்தை எடுத்தாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷான் விதானகே குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த மூன்றரை வருடங்களாக நாட்டில் வேகமான முன்னேற்றங்கள் எதுவும் இருக்கவில்லை. சகல பிரதேச மக்களுக்கும் சரிசமமான அபிவிருத்தி பணிகள் போய் சேரவில்லை. அநேகமாக கடந்த காலங்களில் கொழும்பு மாவட்டம் உள்ளிட்ட குறிப்பிட்ட பிரதேசங்களுக்கே அபிவிருத்தி பணிகள் போய் சேர்ந்திருந்தன.
ஆகவே, கிடைக்கப் பெற்றிருக்கும் இந்த ஒருவருடத்திலும் மீண்டும் நாட்டை பழைய நிலைமைக்கு திருப்ப முடியாது. அதற்கு ஆளும் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களின் பங்கு மிகமுக்கியமாகும். எனவேதான் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் எட்டு உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயாதீனமான இயங்கத் தீர்மானித்துள்ளோம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான அரசாங்கத்தை உருவாக்க நாங்களும் பாரிய ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளோம். கடந்த சில தினங்களாக சில அமைச்சர்களின் நடவடிக்கைகளை பார்க்கும்போது அவர்களின் செயற்பாடுகள் எங்களுக்கு திருப்தியாக இல்லை. மக்களாட்சிக்கு எதிராக செயற்படுபவர்களை கட்டுப்படுத்தி கிடைக்கப்பெற்றிருக்கும் ஒரு வருடத்தை சிறப்பாக முன்னெடுப்பதற்காக பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் எங்களின் வாக்குரிமையை பயன்படுத்துவோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறிவித்துள்ளோம். சுயாதீனமாக இயங்குவது தொடர்பிலும் பிரதமருக்கு அறிவிக்கவுள்ளோம்.
இதுவரையில் எங்களின் சுயாதீன அணியில் எட்டுப் பேர் ஒன்றிணைந்துள்ளதுடன் எதிர்காலத்தில் இன்னும் பலர் இணைவர். மேலும் 2019 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்திற்கு வாக்களிக்காமல் சுயாதீனமாக செயற்படவும் தீர்மானித்துள்ளோம்.
ஆளும் தரப்பு சார்பில் நாங்கள் சுயாதீனமாக செயற்பட்டாலும் கட்சியில் எந்தப் பிளவுகளும் ஏற்படாது. கட்சி உறுப்பினர்கள் என்றவகையில் கட்சியின் செயற்பாடுகள் அனைத்திற்கும் முழுமையான பங்களிப்பினை பெற்றுக்கொடுப்போம் என்றார்.
-Vidivelli