அழுத்தங்களிலிருந்து தப்பிக்கொள்ள தேர்தலுக்கு செல்வதே சிறந்த தீர்வாகும். என்றாலும் அரசாங்கம் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள பல்வேறு சதி முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஆரம்ப கட்டமாகவே ஜனவரி முதல் ஊடகங்களை கட்டுப்படுத்துவதாக பிரதமர் தெரிவித்திருக்கின்றார் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
சோசலிச மக்கள் முன்னணி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் அதிகாரத்துக்கு வருவதற்காக அவர்களுடன் இருந்தவர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. தற்போது அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் அழுத்தங்களுக்கு உள்ளாகி வருகின்றது. குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவிலே இந்த அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்தது. புதிய அரசியலமைப்பொன்றை தயாரிப்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்து வருகின்றது. அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சியில் இருந்தாலும் அரசாங்கத்தின் பங்காளியாகவே செயற்பட்டு வருகின்றது. புதிய அரசியலமைப்பொன்றை தயாரித்துக்கொள்ளவே அவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்து வந்தனர். தற்போது அவர்கள் அரசியலமைப்பு தொடர்பாக அரசாங்கத்துக்கு அழுத்தங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அமைச்சுப்பதவிகள் தொடர்பாக அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. ஐக்கிய தேசியக் கட்சி பின்வரிசை உறுப்பினர்களுக்கு எந்த அமைச்சுப் பதவியும் கிடைக்காததால் அவர்கள் விரக்தியடைந்துள்ளனர். அதேநேரம் ஐக்கிய தேசிய முன்னணி கட்சிகளின் சிலருக்கு அமைச்சுப்பதவி வழங்குவதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டவர்களுக்கும் அமைச்சுப்பதவிகள் வழங்கப்படவில்லை. அதனால் அவர்களும் அரசாங்கத்துக்கு அழுத்தங்களை பிரயோகிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.
இவ்வாறான நிலையில் அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு கிடைக்காவிட்டால் 103 உறுப்பினர்களே இருக்கின்றது. அரசாங்கத்துக்கு தொடர்ந்து இந்நிலையில் பயணிப்பது கடினமான விடயமாகும். அதனால் அரசாங்கம் பொதுத்தேர்தலுக்கு செல்வதே சிறந்த தீர்வாகும். என்றாலும் அரசாங்கம் தேர்தலுக்கு செல்லாமல் எப்படியாவது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளவே முயற்சிக்கின்றது.
மேலும் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. அண்மையில் மாவனெல்லையில் இடம்பெற்ற சம்பவமும் அரசாங்கத்தின் சதித்திட்டமாகவும் இருக்கலாம். அத்துடன் ஊடகங்களை அடக்கவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனவரியிலிருந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருக்கின்றார். எனவே அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள அரசாங்கம் மேற்கொள்ளும் சதித்திட்டங்களை மறைக்கவே ஆரம்பமாக ஊடகங்களை அடக்க பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்றார்.
-Vidivelli