உலகில் அபிவிருத்தி மற்றும் வளர்ச்சிப்பாதையில் செல்கின்ற நாடுகளைப் பார்க்குமிடத்து எமக்குப் பாரிய சவால்கள் காத்திருக்கின்றன என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன், மலரும் புத்தாண்டை ஊழலற்ற வித்தில் சேவையாற்றும் ஒரு வருடமாகப் பெயரிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டதன்பின் அஸ்கிரிய பீடத்திற்கு விஜயம் செய்து அனுநாயக்கத் தேரர் வேண்டறுவே உபாலி மற்றும் மல்வத்தை மகாநாயக்கத் தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள என்போரைச் சந்தித்து நல்லாசிகள் பெற்றபின் ஜனாதிபதி ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அவர் மேலும் தெரிவிக்கையில்
வறுமையை ஒழித்து, வளமான நாடாக கட்டியெழுப்ப சகலரதும் நேர்மையான தியாகம் தேவைப்படுவதாகவும் மலரும் புத்தாண்டு ஊழல் இல்லாமல் பணியாற்றக் கூடிய ஒரு வருடமாக இதனை மாற்றியமைக்க வேண்டியுள்ளதாகவும் கூறினார்.
உலகில் அபிவிருத்தி மற்றும் வளர்ச்சிப்பாதையில் செல்கின்ற நாடுகளைப் பார்க்குமிடத்து எமக்குப் பாரிய சவால்கள் காத்திருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடியும். அரசியல் வாதிகள், அரச ஊழியர்கள் மற்றும் சகல பிரஜைகளும் இது எமது நாடு என்ற அடிப்படையில் தமது மனச்சாட்சிக்கு ஏற்ப கருமமாற்றுவது முக்கியமாகும்.
அரசியலைப் பொறுத்தவரை பல்வேறு கலந்துரையாடல்கள், விவாதங்கள், பேச்சுவார்த்தைகள் இக்காலத்தில் நடந்து வருவதாகவும் அதற்கு மத்தியில் நாட்டை தூய்மையாக நேசிக்கும் மக்கள் எத்தனைபேர் உள்ளனர் எனப் பார்க்கவேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
அரசியல் களத்தில் பணியாற்றும் தற்போதைய நிலையில் ஊழல் இல்லாது சேவையாற்றக்கூடிய ஒரு வருடமாக 2019ஆம் வருடத்தை குறிப்பிட்டுள்ளதாகவும், அதற்கமைய நல்லதொரு சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு சகலரும் தமது பொறுப்புக்களை சரியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அஸ்கிரிய கெடிகே விகாரையில் அமைக்கப்பட்டு வரும் அருங்காட்சியகம், கேட்போர் கூடம் என்பவற்றையும் ஜனாதிபதி பார்வையிட்டார். இவ்விஜயத்தின்போது பாராளுமன்ற அங்கத்தவர் எஸ். பீ. திசாநாயக்கா, முன்னாள் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.
-Vidivelli