சிறுவர்கள் மாத்திரமன்றி, வயது வந்தவர்களும் பல மணித்தியாலங்களுக்கு தொலைபேசியை அல்லது இலத்திரனியல் கருவிகளை விட்டு விலகி இருக்க முயற்சிப்பதுண்டு. வீட்டின் மேல் மாடியில் ஒரு முக்கியமான வேலை செய்து கொண்டிருக்கும் போது, அந்த வேலையில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என்பதற்காக கையடக்க தொலைபேசியை, வீட்டின் கீழ் மாடியில் வைத்துவிட்டு ஒருவர் வேலையைத் தொடங்குகின்றார். நாள் முழுவதும் மேல் மாடியில் உள்ள வேலையை செய்து முடிக்காமல் கைபேசியை பார்ப்பதில்லை என்பது அவரது திண்ணமான எண்ணம்.
எனினும், ஒரு மணி நேரத்துக்கு மேல் அவரால் அவ்வாறு இருக்க முடியவில்லை. யாராவது செய்திகளை அனுப்பி இருப்பார்களோ, யாராவது முக்கியமானவர்களிடமிருந்து அழைப்புகள் வந்து இருக்குமோ, சமூக ஊடகப் பக்கங்களில் யாராவது முக்கியமான தகவல்களை பதிவேற்றம் செய்திருப்பார்களோ – என்ற எண்ணம் அவரை ஆட்கொண்டு விடுகிறது. இதனால், தொலைபேசியை அவர் கையில் எடுக்காவிட்டாலும் மேல் மாடியில் அவர் செய்து கொண்டிருக்கின்ற வேலையில் அவரது முழு கவனத்தையும் செலுத்த முடியாமல் போகிறது.
கைபேசி எண்ணங்கள் அவ்வப்போது வந்து அவரது கவனத்தை கலைத்து விடுகின்றன. இவ்வாறு இருக்கையில் திடீரென்று தண்ணீர் அருந்துவதற்காக கீழ் மாடிக்கு வர வேண்டிய அவர், தனது தொலைபேசியில் குறுஞ்செய்தி ஒன்று வந்த சத்தத்தை கேட்டு விடுகிறார். இப்போது தொலைபேசியை நாள் முழுக்க பார்ப்பதில்லை என்று அவருடைய எண்ணம் விடைபெற்றுப் போகிறது. சரி ஏதாவது ஒரு முக்கியமான செய்தி வந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கைபேசியை எடுக்கின்றார். வந்த செய்தி முக்கியமானதொன்றல்ல. மாறாக, அது ஒரு, வர்த்தக விளம்பரக் குறுஞ்செய்தி. எனினும், முக்கியமான ஏதாவது ஒரு செய்தி முன்னர் வந்திருக்கும் அவற்றைப் பார்க்க வேண்டும் என்று எண்ணி தனது செய்திகளுக்குள் கண்களை துலாவ விடுகிறார். ஒரு நிமிடம் அரை மணி நேரமாக மாறிவிடுகிறது. தன்னைறியாமலேயே அதிக நேரத்தை கைபேசியில் செலவிட தொடங்கி விட்டார். தனக்குள் தான் ஏற்படுத்திக் கொண்ட கட்டுப்பாட்டை மீறி, வேலை செய்கின்ற மேல்மாடிக்கு தனது கைபேசியை கொண்டு சென்று விடுகிறார்.
இது எவ்வாறு நடக்கிறது? குறித்த அந்த நபருடைய சுய கட்டுப்பாட்டை தகர்த்து அவரது நேரத்தை இந்த தொலைபேசி எவ்வாறு காவு கொள்கிறது? அந்த சமயத்தில் வந்த குறுஞ்செய்தியை பார்ப்பதற்காக கைபேசியை எடுத்த அவரை, தொழில்நுட்பம் எவ்வாறு வேறு செய்திகளை நோக்கி அழைத்துச் செல்கிறது?
இங்குதான் தொழில்நுட்பத்தின் கவர்ந்திழுக்கின்ற ஈர்ப்பு சக்தியின் உளவியலை நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. சிறுவர்கள் கைபேசியையோ அல்லது ஏனைய இலத்திரனியல் கருவிகளையோ கையில் எடுத்தால் நீண்ட நேரம் அவற்றை பயன்படுத்துகின்றனர். இது பெற்றோருக்கு ஒரு பேரிடியாக உள்ளது. அநேகமான பெற்றோர் இதனால் எரிச்சல் அடைகின்றனர். பிள்ளைகள் மீது சீறி விழுகின்றனர். இலத்திரனியல் கருவிகளை தரையில் தூக்கி எறிந்து உடைத்து விடுகின்றனர். இவற்றுக்கெல்லாம் சிறுவர்களை பழி சொல்ல முடியுமா? இங்கு தொழில்நுட்பத்தின் ஈர்ப்பு சக்தி மறைவில் இருக்கிறது என்பதை ஏன் நாம் மறந்து விடுகிறோம்?
பெற்றோர்கள் மாத்திரம் இன்றி ஆசிரியர்கள், பாடசாலை நிர்வாகிகள், குழந்தை பராமரிப்பாளர்கள், சிறுவர் கற்றல் நிறுவனங்களை நடத்துகின்றவர்கள் யாவரும் தினமும் நாம் பயன்படுத்துகின்ற இலத்திரனியல் கருவிகளின் உருவாக்கம் எவ்வாறு இடம்பெறுகின்றது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இதனை புரிந்து கொள்வதற்கு முன்னர் எமது அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கின்ற விற்பனை பொருட்கள் எவ்வாறு நம்மை கவர்ந்திழுக்கின்றன என்பதை நாம் சிந்திக்கலாம்.
பொருட்களை வாங்க சந்தைக்குச் செல்கின்றோம். அல்லது சகல பொருட்களும் கிடைக்கின்ற ஒரு பல்பொருள் விற்பனை நிலையத்துக்கு செல்கின்றோம் என வைத்துக்கொள்வோம். அங்கு நாம் செல்வது ஒரு குறிப்பிட்ட பொருளை மாத்திரம் கொள்வனவு செய்வதற்காக. அல்லது, அந்த பல்பொருள் விற்பனை நிறுவனம் எத்தகைய விற்பனை பொருட்களைக் கொண்டிருக்கிறது என்ற ஆரம்பகட்ட ஒரு பார்வையை செலுத்துவதற்காக. குறிப்பிட்ட தெரு ஒன்றில் இருக்கின்ற ஒரு குறிப்பிட்ட பல்பொருள் விற்பனை நிலையத்துக்கு மாத்திரம் செல்ல வேண்டும் என்ற தீர்மானத்தோடு நாம் சென்றிருக்கலாம். அங்கே என்ன நடக்க முடியும்?
பல பொருள் விற்பனை நிறுவனத்தின் வாயிலின் ஆகர்சனம் முதலில் நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறது. பல்வேறு வண்ணங்களில் தொங்கவிடப்பட்டிருக்கின்ற பொருட்கள் கண்களை பறித்துக் கொள்கின்றன. நமக்கு அங்கு தென்படுகின்ற பொருட்கள் தேவையற்றதாக இருந்தாலும் ஒரு மனத் திருப்திக்காக பொருட்களின் விலைப் பட்டியலை தொட்டுப் பார்க்கிறோம். விலை சற்று குறைவாக இருக்கிறது, அதனால் நமக்குத் தேவை இல்லாவிட்டாலும் குடும்பத்தில் உள்ள நமது அன்புக்குரிய குழந்தைகளுக்கு அல்லது மனைவிக்கு இவற்றை வாங்கலாம் என்ற எண்ணம் தோன்றி விடுகிறது.
சில நேரங்களில் வீட்டுக்கு தொலைபேசியை எடுத்து, கண்ணுக்கு அழகாக காட்சி தரும்படி தொங்கவிடப்பட்டிருக்கின்ற பல்வேறு துணிமணிகள் மற்றும் இதர பொருட்கள் பற்றிய விவரங்களை மனைவியிடம் சொல்வோம். அப்போது அவர் இவை யாவும் தேவைக்கு மேலதிகமாக வீட்டில் இருப்பதால் அவற்றை கொள்வனவு செய்ய வேண்டிய அவசியம் இப்போதைக்கு இல்லை என்று வற்புறுத்தலாம். என்றாலும், நமது மனம் தாங்காது. சரி, குறைந்த பட்சம், அந்த பல்பொருள் நிலையத்துக்குள் நுழைந்து விட்டோமே என்ற காரணத்தால் ஏதாவது ஒரு சிறு பொருளையாவது கொள்வனவு செய்ய வேண்டும் என்ற சுய நிர்ப்பந்தத்திற்கு உட்படுகிறோம்.
இப்போதைக்கு தேவையில்லாவிட்டாலும் கூட பின்னர் ஒரு காலத்தில் பயன்படுத்த உதவும் என்ற காரணத்திற்காக விலை குறைந்த ஒரு பொருளை ஏன் நாம் வாங்க வேண்டும்?
இத்தகைய அனுபவம் நம்மில் பலருக்கு இருக்க முடியும். சிறுவர்களும் அவ்வாறு தான். தந்தை வாகனத்தை எடுத்துக் கொண்டு வெளியிலே ஒரு அவசர பயணம் செல்ல முற்படுகிற போதெல்லாம் வீட்டில் இருக்கிற சிறுவர்கள் தந்தையோடு அல்லது தாயோடு தொற்றிக்கொண்டு வாகனத்தில் பயணம் செல்ல முற்படுகிறார்கள். முதலில் தந்தையோடு அல்லது தாயோடு ஒரு பயணத்தை செல்ல வேண்டும் என்ற ஆர்வம் மாத்திரமே அவர்களுக்கு இருக்கும். தந்தை அல்லது தாய் சடுதியாக ஒரு பொருளை கொள்வனவு செய்வதற்காக ஒரு விற்பனை நிலையத்துக்குள் சென்று விட்டால், கூடவே குழந்தையும் உள்ளே வந்து விடுகிறது. அங்கே அப்பியாச புத்தகங்கள், பந்து, உடை சிறுவர் விளையாட்டுப் பொருட்கள், இனிப்பு பண்டங்கள் என பல்வேறு விற்பனை பொருட்கள் பார்வைக்கு விடப்பட்டிருக்கும். சிறுவர்கள் அவற்றை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்து அதில் ஏதாவது ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று ஆர்வப்படுவார்கள். ஒவ்வொரு பொருட்களை கையில் எடுக்கின்ற பொழுதும் தந்தை அல்லது தாய் அதன் விலையை பரிசோதித்து விட்டு இதனை இப்போதைக்கு வாங்க முடியாது என்று குழந்தையின் ஆர்வத்தை தட்டி விடலாம். என்றாலும், குழந்தை தனது முயற்சியை கைவிடாது. ஏதாவது ஒரு பொருளை கையில் எடுத்து இது விலை குறைந்த ஒரு பொருள் எனவே இதனையாவது எனக்கு வாங்கி தாருங்கள் என்று அடம் பிடிக்கும்.
அப்போது பெற்றோர் இது போன்ற பல பொருட்களை உங்களுக்கு இதற்கு முன்னரும் நாங்கள் வாங்கி தந்திருக்கின்றோம் அவற்றையெல்லாம் நீங்கள் ஒழுங்காக பயன்படுத்தாமல் உடைத்தெறிந்து விட்டீர்கள். அல்லது இதுபோன்ற பொருட்கள் உங்களிடம் ஏராளமாக உள்ளன. எனவே, மேலதிகமாக அப்பொருட்களை வாங்குவது வீண்விரயம் என்று சொல்லலாம்.
என்றாலும், குழந்தைகள் இவை எதனையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்தும் பெற்றோரை வற்புறுத்திக் கொண்டிருப்பர். குழந்தை பாசத்தின் மேலீட்டால் ஆகக் குறைந்தது, விலை குறைவாக உள்ள ஒரு பொருளையாவது வாங்கி கொடுத்து குழந்தையை ஆசுவாசப்படுத்த பெற்றோர் முற்படுவார்கள்.
இத்தகைய அனுபவம் நம்மில் பலருக்கு இருக்க முடியும். இங்கு சிந்திக்க வேண்டிய விடயம் யாதெனில் ஏதோ ஒரு பொருளை கொள்வனவு செய்வதற்காக ஒரு விற்பனை நிலையத்துக்குள் சென்ற நாம் பிரயோசனமற்ற, தேவைக்கு மேலதிகமாக உள்ள ஒரு பொருளை பணம் கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டிய சுய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகின்றோம். இது ஏன் ஏற்படுகிறது? இங்கு விற்பனை நிறுவனங்களின் தந்திரோபாய ஈர்ப்பு சக்தி நம்மை ஏமாற்றி விடுகிறது என்பதை நாம் அறிந்திருந்த போதும் அதனை பொருட்படுத்துவதில்லை. தொழில் நுட்பமும் இவ்வாறுதான். அது சிறுவர்களை மாத்திரமன்றி வயது வந்தவர்களையும் ஏதாவது ஒரு விடயத்தை காட்டி, தன்பால் இலகுவாக ஈர்த்துக் கொள்கிறது. அந்த ஈர்ப்பு சக்தியை தான் ஆங்கிலத்தில் பேசுவேஷன் (Persuasion) என்று சொல்கிறோம்.
(தொடரும்…)
-Vidivelli