கண்டி – திகன முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை மனித உரிமை ஆணைக்குழு அறிக்கை எங்கே?

0 29

பார்தீபன் சண்முகநாதன்

கண்டி மற்றும் அதன் புற­நகர் பகு­தி­களில் வாழும் முஸ்­லிம்­களை குறி­வைத்து, அரச அனு­ச­ர­ணை­யுடன் சிங்­கள பௌத்த குண்­டர்­களால் ஏழு வரு­டங்­க­ளுக்கு முன்னர் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்ட வன்­மு­றைகள் குறித்த விசா­ரணை அறிக்­கையை வெளி­யி­டு­வதில் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­குழு தொடர்ந்தும் தாம­தப்­ப­டுத்­து­கி­றது.
இது தொடர்­பான விசா­ரணை அறிக்கை அடுத்த சில மாதங்­களில் வெளி­யி­டப்­படும் என கடந்த வரு­டத்தில் மாத்­திரம் இரண்டு தட­வைகள் ஆணைக்­கு­ழுவின் உயர் அதி­கா­ரிகள் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளி­டமும் ஊட­கங்­க­ளி­டமும் தெரி­வித்­தி­ருந்­தனர்.

விசா­ரணை அறிக்­கையில்
சிறிய பிழையாம்
கண்டி – திகன முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கட்­ட­விழ்த்து விடப்­பட்ட வன்­மு­றை­களில் அரச அனு­ச­ர­ணை­யுடன் கூடிய அர­சியல் கும்­பல்­களும் பாது­காப்புப் படை­யி­னரும் ஈடு­பட்­ட­தாக நம்­பத்­த­குந்த தக­வல்­களின் அடிப்­ப­டையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளி­யான “திகன முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கல­வரம் நடந்து 6 வரு­டங்கள்: நீதி எங்கே?” என்ற ஆவ­ணப்­ப­டத்தின் பின்னர், இது தொடர்­பான அறிக்கை அடுத்த சில மாதங்­க­ளுக்குள் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­படும் என இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் ஆணை­யாளர் கலா­நிதி கெஹான் குண­தி­லக்க ஊட­கங்­க­ளுக்குத் தெரி­வித்தார். பின்னர் டிசம்­பரில், அந்த பகு­தியின் ஊட­க­வி­ய­லாளர் எம்.ஐ.எம்.முசா­திக்கின் எழுத்­துப்­பூர்வ கேள்­விக்கு பதி­ல­ளித்த ஆணைக்­குழு அறிக்கை ஜன­வரி 2025 இல் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­படும் எனக் கூறி­யது.

ஏழு வரு­டங்­க­ளாக
மறைக்­கப்­படும் ஆதாரம்
கண்டி மற்றும் அதனை அண்­மித்த பகு­தி­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கட்­ட­விழ்த்து விடப்­பட்ட வன்­முறைச் சம்­ப­வங்­களை அடுத்து, அந்த ஆணைக்­கு­ழுவின் தலை­வி­யாக இருந்த கலா­நிதி தீபிகா உட­கம தலை­மை­யி­லான உயர்­மட்ட விசா­ரணைக் குழு, அப்­ப­குதி முஸ்­லிம்கள் உட்­பட பல்­வேறு தரப்­பி­ன­ரையும் கண்டி அஞ்சல் அலு­வ­லக வளாக கேட்போர் கூடத்­திற்கு வர­வ­ழைத்து, பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நியாயம் கிடைக்கும் எனக் கூறி சாட்­சி­யங்­களை பதிவு செய்­தி­ருந்­தது.

அப்­ப­கு­தியில் உள்ள முஸ்லிம் மக்­களை உடல் ரீதி­யா­கவும் மன ரீதி­யா­கவும் தாக்­கிய கும்பல், அவர்­களின் வீடுகள் மற்றும் வணிக இடங்­களை எரித்து சொத்­துக்­களை அழித்த கும்பல் தொடர்­பாக எழுத்து, வாய்­மொழி மற்றும் புகைப்­படம் மற்றும் காணொளி ஆதா­ரங்கள் விசா­ர­ணையின் போது ஆணைக்­கு­ழுவில் சமர்ப்­பிக்­கப்­பட்­ட­தாக பாதிக்­கப்­பட்ட முஸ்­லிம்கள் உட்­பட இடைத்­த­ர­கர்கள் வலி­யு­றுத்­து­கின்­றனர். கலா­நிதி தீபிகா உட­கம பதவி வகித்த காலப்­ப­கு­தியில் மாத்­திரம் விசா­ரணை அறிக்கை “விரைவில்” வெளி­யி­டப்­படும் என ஆணைக்­குழு ஊட­கங்­க­ளுக்கு பல சந்­தர்ப்­பங்­களில் தெரி­வித்­தி­ருந்­தது.

பேரா­சி­ரியர் உட­க­ம­விற்கு பின்னர் ஓய்­வு­பெற்ற நீதி­பதி ரோஹினி மார­சிங்க ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ராக பத­வி­யேற்­ற­துடன், தனது இரண்டு வருட பதவிக் காலத்­திலும் உரிய விசா­ரணை அறிக்­கையை பகி­ரங்­கப்­ப­டுத்­து­வதில் ஏற்­பட்ட தாமதம் குறித்து குறிப்­பிட்ட விளக்­கத்தை வழங்­க­வில்லை. உச்ச நீதி­மன்­றத்தின் தற்­போ­தைய தலை­வ­ரான ஓய்­வு­பெற்ற நீதி­பதி எல்.டி.பி.தெஹி­தெ­னிய தலை­மையில் அறிக்கை வெளி­யி­டப்­ப­டு­மென ஆணைக்­கு­ழுவின் சிரேஷ்ட அதி­கா­ரிகள் தெரி­வித்­தி­ருந்த போதிலும் இது­வ­ரையில் அது நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.

முஸ்­லிம்­க­ளுக்கு இல்­லாத
உரி­மைகள் ஏனை­ய­வர்­க­ளுக்கு
கண்­டியில் இடம்­பெற்ற முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் தொடர்­பான மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் விசா­ரணை அறிக்கை ஏழு வரு­டங்­க­ளாக வெளி­யி­டப்­ப­டா­மைக்கு ஆணைக்­கு­ழுவின் உயர் அதி­கா­ரிகள் பல்­வேறு கார­ணங்­களைக் கூறி­யுள்­ளனர். தொகுப்பு பிழை­களை சரி­செய்தல், ஒரேதடவையில் மும்­மொ­ழி­களில் வெளி­யிடும் திட்டம், உரிய அறிக்­கையை அவ்­வப்­போது தலை­வர்கள் மற்றும் ஆணை­யர்கள் மீள்­ப­ரி­சீ­லனை செய்தல் ஆகி­யவை அதில் முதன்­மை­யா­னவை. ஆனால் கடந்த ஏழு ஆண்­டு­க­ளாக மனித உரி­மைகள் ஆணைக்­குழு பல்­வேறு வகை­யான அறிக்­கை­களை வெளி­யிட்­டுள்­ளது. அவற்றில் பெரும்­பா­லா­னவை வழக்கு ஆய்­வுகள் மற்றும் கள விசா­ர­ணை­களை அடிப்­ப­டை­யாகக் கொண்­டவை. ஆனால் அந்த அறிக்­கைகள் எத­னையும் பாதிக்­காத பல தொழி­நுட்ப, நிர்­வாகச் சிக்­கல்கள் மலை­யக முஸ்­லிம்கள் மீதான வன்­முறைத் தாக்­குதல் தொடர்­பான விசா­ரணை அறிக்­கையை மாத்­திரம் பாதித்­தது என்­பது ஆச்­ச­ரி­ய­மான நிலை­யாகும்.

பாது­காப்புப் படை­யி­ன­ரையும், உயர் அர­சியல் தொடர்­பு­க­ளையும் பாது­காப்­ப­தற்­காக இந்த அறிக்கை மறைக்­கப்­ப­டு­கி­றதா?
2018 மார்ச்சில் பல நாட்­க­ளாக இடம்­பெற்ற வன்­மு­றைகள் அர­சியல் அனு­ச­ரணை பெற்ற குண்­டர்கள், மஹசோன் படை­யணி போன்ற சிங்­கள இன­வாத அமைப்­புக்கள் மற்றும் பொலிஸ் விசேட அதி­ர­டிப்­ப­டையின் பாது­காப்பில் வெளி­நாட்டில் இருந்து வர­வ­ழைக்­கப்­பட்ட ஒழுங்­க­மைக்­கப்­பட்ட நபர்­க­ளினால் மேற்­கொள்­ளப்­பட்­டது என்­பது பின்னர் நாடா­ளு­மன்­றத்தில் ஆதா­ரங்­க­ளுடன் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது. வன்­மு­றையைக் கட்­டுப்­ப­டுத்­து­வதில் பொலி­ஸாரும் பாது­காப்புப் படை­யி­னரும் முக்­கியப் பங்­காற்­ற­வில்லை எனவும் நாடா­ளு­மன்றக் குழு அறிக்­கை­களில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

முன்னாள் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் 2019 ஆம் ஆண்டு நிறு­வப்­பட்ட “இலங்­கையில் தேசிய மற்றும் மத சக­வாழ்வை உறுதி செய்­வ­தற்­காக” என்ற நாடா­ளு­மன்ற விசேட கூட்­ட­றிக்கை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் பற்றி பின்­வ­ரு­மாறு கூறு­கி­றது.

“களுத்­துறை, காலி, அம்­பாறை மற்றும் கண்டி மாவட்­டங்­களில் அண்­மைக்­கா­ல­மாக இடம்­பெற்ற சம்­ப­வங்கள் தொடர்பில், பொலிஸ் திணைக்­களம் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் மன்­னிக்க முடி­யாத மந்­த­க­தியை கடைப்­பி­டித்­துள்­ள­துடன், வன்­முறைச் செயல்­களில் ஈடு­பட்­ட­வர்­களை சட்­டமா அதிபர் திணைக்­களம் தண்­டிக்கத் தவ­றி­யுள்­ளது.”

தாக்­கு­தல்­க­ளுக்கு தலைமை
தாங்­கி­ய­வர்­க­ளுக்கு உயர் பத­விகள்
அப்­போது மத்­திய மாகா­ணத்­திற்குப் பொறுப்­பாக இருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்­ர­ம­சிங்க, வன்­முறைச் செயல்கள் மற்றும் தாக்­குதல் நடத்­து­ப­வர்­களைப் பாதுகாப்பது பற்றி முன்னரே அறிந்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டார். பின்னர் பொதுமக்களின் முறைப்பாடுகள் மற்றும் குறைகளை விசாரிப்பதற்கான ஒம்புட்ஸ்மனாக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவரை மார்ச் 31, 2022 மற்றும் மே 15 க்கு இடையில் நாட்டில் இடம்பெற்ற “தீ வைப்பு, கொள்ளை மற்றும் கொலை உட்பட அனைத்து வகையான சொத்து சேதங்கள் மற்றும் உயிர் சேதங்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின்” உறுப்பினராக நியமித்தார்.

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர்களும், பௌத்த பிக்குகளும் இந்த தாக்குதலுக்கும் டி.ஐ.ஜிக்கும் தொடர்பு இருப்பதாக பகிரங்கமாக கூறி வந்த நிலையிலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.