மீலாத் பாடசாலைக்கு உடனடி தீர்வு வேண்டும்
சபையில் எதிரணி முஸ்லிம் உறுப்பினர்கள் கோரிக்கை இனவாதமாக மாற்ற இடமளியோம் என்கிறது அரசாங்கம்
(எம்.ஆர்.எம்.வசீம், இரா.ஹஷான்)
தெஹிவளை மீலாத் மகாவித்தியாலயத்தில் நிலவும் இடப் பற்றாக்குறையை விரைவில் நிவர்த்தி செய்து அந்த மாணவர்களின் கல்வி நடவடிக்கையை தொடர்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிரணி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் கோரிக்கை விடுத்தனர்.
இதனிடையே, இவ்விவகாரத்தை இனவாத பிரச்சினையாக மாற்றுவதற்கு ஒரு சில தரப்பினர் முயற்சிப்பதாகவும் அதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது, அத்தோடு இவ்விவகாரத்திற்கு தீர்வை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதுவிடயமாக சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் முன்வைத்தார். இவ்விடயம் நேற்று முன்தினம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது பிரேரணையை முன்வைத்து முஜிபுர் ரஹ்மான் எம்.பி உரையாற்றுகையில்,
முஜிபுர் ரஹ்மான்
தெஹிவளை மீலாத் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றுவரும் இடப் பற்றாக்குறையை விரைவில் நிவர்த்தி செய்து அந்த மாணவர்களின் கல்வி நடவடிக்கையை தொடர்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாடசாலைக்கு அருகில் இருக்கும் அரசாங்கத்துக்கு சொந்தமான கட்டிடம் ஒன்றை தற்காலிகமாகவேனும் வழங்க வேண்டும்.
1952ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பிலியந்தலை கல்வி வலயத்துக்கு உட்பட்ட மீலாத் மகா வித்தியாலயத்தில் தற்போது 574 மாணவர்கள் வரை கல்வி கற்று வருகின்றனர். பாடசாலையில் பூமி அளவு 23 பேச்சர்ஸ் என்பதால் அது போதுமானதாக இல்லை என்பதால் அதிகமான மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமல் வீடுகளில் இருக்கிறார்கள். உயர்கல்வி கலைப்பிரிவு பாடங்கள் கற்பிக்கப்படும் இந்த பாடசாலை இருமொழி பாடசாலையாகும்.
இந்த பாடசாலைக்கு போதுமான இடவசதி இல்லாமையால் பிலியந்தலை கல்வி வலயத்துக்கு உட்பட்ட தெஹிவளை பிரதேசத்தில் பயன்படுத்தாமல் இருந்த சுமங்க வித்தியாலயத்துக்கு சொந்தமான கட்டிடத்தை கல்வி அதிகாரிகளின் அனுமதியுடனே தற்காலிகமாக 2024.10.10 ஆம் திகதி இதற்காக வழங்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் இந்த கட்டிடத்தை செப்பனிடுவதற்காக பாடசாலை அபிவிருத்தி அதிகாரிகளினால் 30 இலட்சம் ரூபாவரை செலவழித்து அதனை புதுப்பிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.
2025 ஜனவரி 8ஆம் திகதி 1 தொடக்கம் 5 ஆம் தரங்களை உடைய மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு இந்த கட்டிடத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் குழுவொன்றின் தலையீட்டின் மூலம் இதனை ஆரம்பிக்க முடியாமல் போயுள்ளது. புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்துக்கும் அதிக காலம் கடந்துள்ளபோதும் இந்த மாணவர்களின் கல்வி நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் வெளியில் அந்த மாணவர்கள் கல்வியை தொடர்கின்றனர்.
அதனால் இந்த விடயம் தொடர்பில் கருத்தில் கொண்டு இந்த பிரதேசத்தில் கல்வி அமைச்சுக்கு சொந்தமான பயன்படுத்தாத கட்டிடம் ஒன்றை இதற்காக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முஜிபுர் ரஹ்மான் எம்.பி. கோரிக்கை விடுத்தார்.
இப்பிரேரணையை ஆமோதித்து ஆளும் கட்சி கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க கருத்துரைத்தார். அவர் இதுவிடயமாக கருத்து தெரிவிக்கையில்,
சமன்மலி குணசிங்க
2024ஆம் ஆண்டு இதற்கான நடவடிக்கைகள் எடுக்க அப்போதைய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். இருப்பினும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. மீலாத் பாடசாலைக்கு, சுமங்க பாடசாலையை வழங்குவதற்கும் இந்த ஆண்டு மீண்டும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் ஒரு தரப்பினர் இனவாத முரண்பாடுகளை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள். மும்மொழி பாடசாலைகளை உருவாக்க வேண்டும். இந்த பாடசாலையின் மாணவர்களுக்கு உரிய பாடசாலையை வழங்க வேண்டும். தெஹிவளை பகுதியில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் சகோதரத்துவத்துடன் வாழ்கிறார்கள்.
இந்த பாடசாலை விவகாரத்தை ஒரு தரப்பினர் இனவாத போக்குக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறார்கள். இதற்கு இடமளிக்கிறார்கள். இந்த பிரச்சினைக்கு சுமுகமான முறையில் தீர்வு காண வேண்டும் என சமன்மலி குணசிங்க தெரிவித்தார்.
குறித்த ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் உரையாற்றுகையில்,
எஸ்.எம்.மரிக்கார்
தெஹிவளை இரத்மலானை மற்றும் மொரட்டுவை உள்ளிட்ட பிரதேசங்களில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர். இந்த நாட்டில் எந்தவொரு பிள்ளையும் தனக்கு விரும்பிய மொழியில் கல்வி கற்பதற்கான உரிமை உள்ளது என நாம் நம்புகிறோம். தான் விரும்பும் மொழியில் தமது சமயம் சார்ந்த கல்வியை கல்வி அமைச்சின் பாடத்திற்கு அமைய தொடர முடியும். எனினும் கடந்த காலங்களில் மீலாத் பாடசாலையை மேம்படுத்த முடியாமல் போயுள்ளது. அதற்கான அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுக்க முடியாமல் போய் உள்ளது. எனவே அதற்கான உரிய தீர்வை பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆனால் இந்த பணியை முன்னெடுத்து செல்லும் போது இதனை அடிப்படையாக கொண்டு சிங்கள -முஸ்லிம் மக்களுக்கு இடையில் அல்லது சிங்கள- தமிழ் மக்களுக்கு இடையில் இனவாதத்தை தூண்டுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர்.
பாராளுமன்ற உறுப்பினர் சமன்மல்லி குணசிங்க கூறியது போன்று பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் இனவாதத்தை தோற்றுவிக்க முயற்சிக்கின்றனர். எனவே இனவாதிகளுக்கு வாய்ப்பை பெற்றுக்கொடுக்காமல் இந்த மாணவர்களின் உரிமைகளை பாதுகாத்து அவர்களுக்கான உரிய கல்வியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.எம். மரிக்காத் தெரிவித்தார்.
குறித்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்கு கல்வி உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன பதிலளித்து உரையாற்றினார். அவர் இதன்போது உரையாற்றுகையில்,
பிரதி அமைச்சரின் பதில்
தெஹவளை மீலாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மாணவர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. 2015 இல் 52 மாணவர்களாக இருந்த இந்த எண்ணிக்கை 2025இல் 544 மாணவர்களாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதனால் அங்கு இடப்பற்றாக்குறை இருப்பது தொடர்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அது உண்மை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த பாடசாலையில் பிரதான மண்டபம் இல்லாமை மற்றும் மாணவர்களுக்கு போதுமான இடவசதி இல்லாத நிலையிலேயே பாடசாலையினால் இடவசதி செய்து தருமாறு கோரிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. கட்டிடம் ஒன்றை வழங்குமாறு அவர்களின் கோரிக்கை நியாயமானதாகும்.
இந்த பாடசாலையில் தற்போது 11 வகுப்பறைகளே இருக்கின்றன. 37 வகுப்பறைகள் தேவைப்படுகின்றன. 26 வகுப்பறைகளின் தேவைப்பாடும் அங்கு இருக்கிறது. அதனால்தான் மேல் மாகாண பிரதான செயலாளரின் அனுமதியுடன் சுமன வித்தியாலய கட்டிடத்தை தற்காலிகமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்துக்காக மீலாத் முஸ்லிம் வித்தியாலயம் 25இலட்சம் ரூபா வரை செலவழித்திருக்கிறது. இந்நிலையில் அந்த பிரதேசத்தில் இருக்கும் அடிப்படைவாதிகளின் நடவடிக்கையால் இந்த பாடசாலை மாணவர்களுக்கு அங்கு கல்வி நடவடிக்கையை ஆரம்பிக்க முடியாமல் போயுள்ளது.
அதனால் இதற்கு மாற்று திட்டமாக பல யோசனைகள் முன்மொழியப்பட்டிருக்கின்றன. அதில் பிலியந்தலை விஜய வித்தியாலயம், புத்த கவேச வித்தியாலயம் இதற்கு மேலதிகமாக பிலியந்த சுமன வித்தியாலயம். என்றாலும் தெஹிவளை ஒருங்கிணைப்புக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைய நிகபே வித்தியாலயம் இதற்காக பிரேரிக்கப்பட்டிருக்கிறது. அதனால் மிக விரைவாக மாணவர்களை அங்கு அழைத்துச் செல்ல முடியுமாகி இருக்கிறது.இதன் மூலம் இந்த த நடவடிக்கை பிரச்சினை எதுவும் இல்லாமல் முடிவுக்கு கொடுண்டுவரப்படும என நாங்ள் நம்புகிறோம் என பிரதியமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.- Vidivelli