(எப்.அய்னா)
பிரபல பாதாள உலக உறுப்பினராக அறியப்படும் கனேமுல்ல சஞ்ஜீவ கொழும்பு நீதிவான் நீதிமன்றினுள் வழக்கு விசாரணையின் இடையே நேற்று முற்பகல் 10.00 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டார். பேலியகொடை பகுதியில் இரவு நேரம் பலாத்காரமாக வீடொன்றுக்குள் புகுந்து நபர் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில், கொழும்பு மேலதிக நீதிவான் பவித்ரா சஞ்ஜீவனீ பத்திரன முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோது இந்த சம்பவம் பதிவானது.
அதன்படி, இலங்கையில் நீதிமன்ற அறை ஒன்றுக்குள் பதிவாகும் மூன்றாவது சுட்டுக் கொல்லப்படும் சம்பவமாக இந்தச் சம்பவம் பதிவானது.
இந்த படுகொலை சம்பவம் தொடர்பில் சட்டத்தரணி வேடத்தில் நீதிமன்றில் நுழைந்த துப்பாக்கிதாரி, அதே வேடத்தில் அவருக்கு உதவி ஒத்தாசை செய்ய நுழைந்த பெண் ஆகியோரை தெளிவாக, பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்களுடன் அடையாளம் கண்டுள்ளதாக குறிப்பிட்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் புத்திக மனதுங்க, அவர்களை கைது செய்ய சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் கீழ் 5 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இது இவ்வாறிருக்க, சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். வேன் ஒன்றில் தப்பித்து சென்றுகொண்டிருந்த போது புத்தளம், பாலாவி பகுதியில் வைத்து பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் முன்னெடுத்த நடவடிக்கையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிசார் கூறினர்.
இராணுவத்தின் கொமாண்டோ படைப் பிரிவின் முன்னாள் லெப்டினன் தர வீரராக கடமையாற்றிய 34 வயதுடைய மொஹம்மட் அஸ்மான் ஷெரிப்டீன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
கே.டி.எச். ரக சொகுசு வேன் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த போது அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் சீதுவை மற்றும் கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவில் பதிவான 7 கொலைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவிடம் கையளிக்க அதிரடிப் படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு உதவி ஒத்தாசை அளித்த பெண் மற்றும் இதன் பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் இந்திக லொக்கு ஹெட்டியின் கீழ் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.
இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளின் படி சம்பவம் வருமாறு:
கடந்த 2023 செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி, நேபாளத்தில் இருந்து யூ.எல்.182 எனும் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்த போது, போலி கடவுச் சீட்டு தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினரால் சஞ்ஜீவ குமார சமரரத்ன எனும் கனேமுல்ல சஞ்ஜீவ கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அதன் பின்னர் சஞ்ஜீவ குமார சமரரத்ன எனும் கனேமுல்ல சஞ்ஜீவ தொடர்பில் உள்ள சுமார் 12 படுகொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த நிலையில், தடுப்புக் காவல் உத்தரவு நிறைவுற்ற பின்னர், சஞ்ஜீவ குமார சமரரத்ன எனும் கனேமுல்ல சஞ்ஜீவ காலி பூசா அதி உயர் பாதுகாப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையிலேயே கனேமுல்ல சஞ்ஜீவவுக்கு எதிரான, பேலியகொடை பகுதியில் வீடு புகுந்து எம்.ஏ. சஜித் ரங்க எனும் நபரை கொலை செய்தமை மற்றும் கொழும்பில் நால்வருக்கு மரண காயங்களை ஏற்படுத்தியமை தொடர்பில் இரு வழக்குகள் நேற்று (19) கொழும்பு நீதிவான் நீதிமன்றின் 5.4 ஆம் இலக்க விசாரணை அறைகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருந்தது.
கனேமுல்ல சஞ்ஜீவ பூசா சிறையில் இருந்து ஆயுதம் தரித்த 12 பொலிஸ் விஷேட அதிரடிப் படை மற்றும் சிறைச்சாலை சிறப்பு பாதுகாப்பு பிரிவின் பாதுகாப்பில் கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டார்.
ஒரு வழக்கில் சுருக்க முறையற்ற சாட்சி விசாரணைகள் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பின்னணியில் அவர் இவ்வாறு நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.
அதன்படியே முதலில் அவர் 5 ஆம் இலக்க நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் பவித்ரா சஞ்ஜீவனி பத்திரன முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார்.
கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றின் நுழைவாயிலில் இருந்து அதிரடிப் படை மற்றும் சிறைச்சாலை பாதுகாப்பு பிரிவினரின் பாதுகாப்பில் அவர் 5 ஆம் இலக்க நீதிவான் நீதிமன்றுக்கு அழைத்து செல்லப்பட்டிருந்த்தார். எனினும் நீதிமன்ற அறைக்குள் ஆயுதம் தரித்த பொலிஸார் இருக்கவில்லை.
இதன்போது, கொலை வழக்கில் கனேமுல்ல சஞ்ஜீவ ஆஜர் செய்யப்பட்டார். பிரதிவாதி கூண்டில் ஏறிய கனேமுல்ல சஞ்ஜீவ அதிலிருந்து இறங்க தயாரான போது, சட்டத்தரணிகள் வீற்றிருக்கும் பகுதியில் இருந்து எழுந்துள்ள சந்தேக நபர், பிரதிவாதி கூண்டுக்கு அருகில் சென்று ரிவோல்வர் கொண்டு துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார். சுமார் 6 துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்துள்ள சந்தேக நபர், நீதிமன்ற அறையிலிருந்து தெறித்து ஓடி மக்களோடு மக்களாக வெளியே தப்பிச் சென்றுள்ளார்.
சந்தேக நபர் துப்பாக்கிச் சூட்டினை தொடர்ந்து, நீதிமன்றுக்குள் துப்பாக்கியால் சுடுகின்றார்கள் என கூறிய வண்ணம் வெளியே தப்பி ஓடியுள்ளார். விசாரணைகளில் இவை தெரியவந்தது.
நீதிமன்ற அறையில் நீதிவானின் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் தவிர வேறு யாரும் ஆயுதம் பயன்படுத்துவதில்லை. எனவே தான் சஞ்ஜீவ குமார சமரரத்ன எனும் கனேமுல்ல சஞ்ஜீவவின் பாதுகாப்புக்கு சென்ற அதிகாரிகள் நீதிமன்ற அறைக்கு வெளியே இருந்துள்ளனர்’ என சம்பவம் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் புத்திக மனதுங்க குறிப்பிட்டார்.
சம்பவத்தை அடுத்து பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜேசூரிய, சி.சி.டி. பணிப்பாளர் இந்திக லொக்குஹெட்டி உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள், பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர், நீதி அமைச்சர் உள்ளிட்டவர்கள் நீதிமன்றுக்கு நேரடியாக சென்று விடயங்களை அவதானித்தனர்.
நீதிமன்ற சி.சி.ரி.வி. காணொளிகள் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் சந்தேக நபர்கள் தெளிவாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உண்மையில் நீதிமன்றுக்கு உடல் ரீதியிலான பரிசோதனை இன்றி நுழைய முடியுமான பிரிவினரே சட்டத்தரணிகள். அதனை சாதகமாக பயன்படுத்தியே சந்தேக நபர் மன்றுக்குள் நுழைந்துள்ளார். சி.சி.ரி.வி காணொளி ஊடாக நாம் தெளிவாக அவரை அடையாளம் கண்டுள்ளோம்.
அவர் ஒரு சட்டத்தரணியை போன்று வேடமிட்டு மன்றுக்குள் நுழைகின்றார். பின்னர் அங்கிருந்து வெளியே வருகின்றார். அவருடன் மற்றொரு பெண் குற்றவியல் நடவடிக்கை சட்டக் கோவை புத்தகத்துடன் உதவி சட்டத்தரணி போன்று நுழைகின்றார். அவர் எடுத்துச் சென்ற அந்த குற்ற, குற்றவியல் நடவடிக்கை சட்டக் கோவையின் பக்கங்கள், ஒரு ரிவோல்வரை மறைத்து வைக்கும் வண்ணம் கிழித்து வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிலேயே மறைத்து ஆயுதம் எடுத்து செல்லப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டின் பின்னர் அந்த ரிவோல்வரும், குற்றவியல் நடவடிக்கை சட்டக் கோவையும் மீட்கப்பட்டுள்ளன. சம்பவத்தின் பின்னர் படுகாயமடைந்த கனேமுல்ல சஞ்ஜீவ தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அதன் பின்னரேயே அவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் புத்திக மனதுங்க குறிப்பிட்டார்.
இந்நிலையில் நேற்று மாலை சந்தேகநபர் புத்தளத்தில் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த துப்பாக்கிதாரி, கடந்த 2025 ஜனவரி 07 ஆம் திகதி தெஹிவளை, வட்டரப்பல பகுதியில் துப்பாக்கிச் சூடு நடாத்தி இருவரை கொலை செய்த சம்பவத்தின் துப்பாக்கிதாரி என அடையாளம் கண்டுள்ளதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
1990 ஆம் ஆண்டு அத்தனகல்ல நீதிமன்றில் பொலிஸ் பரிசோதகர் ஒருவரையும் அவரது மாமனாரையும் பிரதிவாதிக் கூண்டில் வைத்து சுட்டுக் கொன்றமை, 2004 ஆம் ஆண்டு தம்மிக அமரசிங்கவை சட்டக் கல்லூரி மாணவனாக நடித்து கொழும்பு 6 ஆம் இலக்க நீதிமன்றில் நுழைந்த சந்தேக நபர் சுட்டுக் கொன்றமை ஆகிய சம்பவங்கள் பதிவாகியிருந்தன. அதன்படியே நேற்று இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
முன்னதாக சஞ்ஜீவ குமார சமரரத்ன எனும் கனேமுல்ல சஞ்ஜீவ தமிழீழ விடுதலை புலிகள் புதைத்து வைத்த ஆயுதங்களை கொழும்பில் பல தரப்புக்கு விற்பனை செய்ததாக கூறி சி.சி.டி.யினரால் கைது செய்யப்பட்டார். அதில் மேலும் சில முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்களும் இருந்தனர். எனினும் 2021 ஏப்ரல் 12 ஆம் திகதி, சாட்சிகள் இல்லாமையால் சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அவர் அப்போதைய பிரதான நீதிவான் புத்திக சி ராகலவினால் விடுவிக்கப்பட்டார்.
அதன் பின்னர் அதே ஆண்டு அவர் தலைமன்னார் ஊடாக நாட்டை விட்டு தப்பி சென்ற நிலையிலேயே 2023 செப்டம்பர் 13 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதானமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli