எம்.எல்.எம். மன்சூர்
கிட்டத்தட்ட 35 வருட காலமாக இலங்கையின் இதழியல் துறையில் மட்டுமின்றி நாட்டின் அரசியல் சமூகத்திலும் (Polity) ஒரு இராட்சதக் குழந்தையாக (Enfant Terrible) செயற்பட்டு வந்த விக்டர் ஐவன் ஜனவரி 19 ஆம் திகதி காலமானார்.
கடந்த வாரம் நெடுகிலும் அச்சு, இலத்திரனியல் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பல்வேறு தரப்பினரும் அவருக்கு அஞ்சலி செலுத்தியிருந்தார்கள். சிங்களத்திலும், ஆங்கிலத்திலும், அதேபோல தமிழிலும் கணிசமான அளவிலான அஞ்சலிக் குறிப்புக்கள் எழுதப்பட்டிருந்தன.
(1960 களின் தொடக்கத்தில் இலங்கை கம்யூனிஸ்டு கட்சியின் உத்தியோகபூர்வ நாளிதழாக வெளியிடப்பட்ட) ‘அத்த’ பத்திரிகையின் ஆரம்பத்துடன் இலங்கையின் அச்சு ஊடகத்துறை ஒரு புதிய யுகத்துக்குள் பிரவேசித்தது. பெரும் ஊடக நிறுவனங்களினால் அப்பொழுது வெளியிடப்பட்டு வந்த ‘தினமின’ , ‘லங்காதீப’ மற்றும் ‘தவஸ’ போன்ற சிங்கள நாளிதழ்கள் குறிப்பிட்ட சில வரையறைகளை வகுத்துக் கொண்டு, இயங்கி வந்த ஒரு சூழலில் ‘அத்த’ பத்திரிகை வேண்டுமென்றே அந்த வரம்புகளை மீறியது. அது வரையில் சிங்களப் பத்திரிகைகள் பயன்படுத்தி வந்த இடக்கரடக்கலுடன் கூடிய சொற்பிரயோகங்களுக்குப் பதிலாக, ஒரு கலகக்கார மொழியை உபயோகித்தது..
பி ஏ சிரிவர்தன, எச் ஜி எஸ் ரத்னவீர ஆகியோரின் கூட்டில் (மொஹமட் யூனுஸ் என்ற கார்ட்டூன் கலைஞரின் பக்கபலத்துடன்) 1960 களிலும், 1970 களிலும் ‘அத்த’ பத்திரிகை முன்னெடுத்த வீரியத்துடன் கூடிய அந்த மாற்று இதழியல் துறையை, அதற்கு மேலும் பல புதிய பரிமாணங்களைச் சேர்த்து அதன் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியவர் விக்டர் ஐவன். 1987 இல் சர்வோதய இயக்கத்தின் அனுரணையுடன் ஒரு மாத சஞ்சிகையாக ஆரம்பிக்கப்பட்ட, ‘ராவய’ 1990 இல் ஒரு ‘Tabloid’ பத்திரிகையாகவும், பின்னர் முழு அளவு (Broad Sheet) வார இதழாகவும் உருமாறியது.
1969 / 1970 காலப் பிரிவில் ஜேவிபி யின் கொழும்பு ஆயுதக் கிடங்குக்கும், வெடி பொருட்களுக்கும் பொறுப்பாக இருந்து வந்த (‘பொடி அத்துல’ என்ற இயக்கப் பெயரில் அழைக்கப்பட்ட) விக்டர் ஐவன் கவனக் குறைவாக மேற்கொண்ட ஒரு பரீட்சார்த்தம் காரணமாக வலது கையின் மணிக்கட்டுக்குக் கீழுள்ள பகுதியை இழந்தார்; இடது கை விரல்கள் நிரந்தரமாக உள்நோக்கி சுருண்டு கொண்டன. ஆனால், அவரை வாழ்நாள் முழுவதும் அலைக்கழித்த அந்த உடல் உபாதை அவருடைய சிந்தனைக்கும், எழுத்துக்கும் செயல் வேகத்திற்கும் ஒரு போதும் ஒரு தடையாக இருந்து வரவில்லை.
அவருடன் 1971 இல் ஜேவிபி கிளர்ச்சியில் பங்கேற்று, சிறைவாசம் அனுபவித்த லயனல் போப்பகே மற்றும் சுனந்த தேசப்பிரிய போன்ற மூத்த தோழர்கள் எழுதியிருக்கும் அஞ்சலிக் குறிப்புக்களில் விக்டர் ஐவன் ரோஹண விஜேவீரவுடன் பராமரித்து வந்த ‘நெருக்கமும் விலகலுமான’ உறவையும், சமூக மாற்றத்தை சாதித்துக் கொள்ளும் பொருட்டு வன்முறையின் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்த ஒரு கலகக்காரராக அவர் முன்னெடுத்த துணிகரமான சாகச செயல்களையும், சிறையில் கழித்த ஐந்தாண்டுகளின் போது அஹிம்சை வழியில் நம்பிக்கை வைக்கும் ஒரு காந்தியவாதியாக அவரிடம் ஏற்பட்ட நம்ப முடியாத நிலைமாற்றத்தையும் மிகவும் நுட்பமாக பதிவு செய்திருந்தார்கள்.
இதழியல் நுட்பங்களுடன் சேர்த்து அவரிடமிருந்து தன்னம்பிக்கையையும், துணிச்சலையும் கற்றுக்கொண்ட புதிய தலைமுறை இதழியலாளர்கள் பலரும் ‘Athula Aiya’ குறித்த தமது மனப் பதிவுகளை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் அவர் ஒரு நண்பராக, நல்லாசானாக, வழிகாட்டியாக இருந்து வந்திருக்கிறார்.
1994 ஜனாதிபதி தேர்தலில் சந்திரிகா குமாரதுங்கவின் (CBK) வெற்றிக்காக திரை மறைவில் இருந்து முக்கியமான பங்களிப்பை அவர் வழங்கியிருந்தார். அதே போல, 2015 நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதில் மாதுலுவாவே சோபித தேரருடன் நெருக்கமாக இணைந்து செயற்பட்டிருந்தார்.
ஆனால், CBK ஆட்சிக்கு வந்த ஒரு சில வருடங்களில் விக்டர் ஐவன் அவருடன் பல பிரச்சினைகளின் போது முரண்படத் தொடங்கினார். ‘சரத் சில்வாவை பிரதம நீதியரசராக நியமனம் செய்ய வேண்டாம்’ எனக் கேட்டு ‘ராவய’ பத்திரிகை பல மாத காலம் ஜனாதிபதி மீது கடும் அழுத்தத்தை பிரயோகித்து வந்தது. ஆனால், CBK அதனை பொருட்படுத்தாமல் சர்ச்சைக்குரிய அந்த நியமனத்தை வழங்கினார்.
சரத் சில்வா ஜனாதிபதி முன்னிலையில் பிரதம நீதியரசராக பதவிப் பிரமாணம் செய்த புகைப்படத்தை தலைகீழாக பிரசுரித்து, ”நீதித் துறையின் ஈமச் சடங்கு” எனத் தலைப்பிட்டிருந்தது ‘ராவய’ பத்திரிகை.
மாவனல்லையில் 2001 மே மாத இறுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறையின் போது “மாவனல்லை தீயை மூட்டியவர்கள் மஹிபாலவின் அடியாட்கள்” என துணிச்சலான விதத்தில் ‘ராவய’ பெரிய எழுத்தில் தலைப்புச் செய்தியாக அதனை வெளியிட்டதுடன், அங்கு நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பான விரிவான புலனாய்வு செய்திக் கட்டுரையொன்றையும் பிரசுரித்திருந்தது.
இலங்கையில் மாடறுப்புக்கு எதிரான இயக்கம் ஓர் இனவாதச் சாயலுடன் எழுச்சியடைந்த சந்தர்ப்பத்தில், வலுவான தர்க்க ரீதியான வாதங்களை முன்வைத்து, அதற்கு எதிராக எழுந்த முதல் குரல் விக்டர் ஐவனுடையது.
பால் மற்றும் இறைச்சி உற்பத்தி ஆகிய இரு விதமான பொருளாதார நடவடிக்கைகளிலும் தங்கியிருந்து வரும் காரணத்தினாலேயே உலக அளவில் கால்நடை கைதொழில் வணிக ரீதியில் வெற்றி கண்டிருக்கின்றது என்று வாதிட்ட. அவர், இலங்கை ( இறைச்சி உற்பத்தியின் பொருளாதார மதிப்பை புறக்கணித்து) பால் உற்பத்தி மீது மட்டும் கவனம் செலுத்தும் வரையில் பால் பண்ணை தொழில் துறையின் வீழ்ச்சி தவிர்க்க முடியாதது என ஆணித்தரமாக கூறினார்.
2016 இல் ‘ராவய’ பத்திரிகையின் 30 ஆவது ஆண்டு நிறைவு வைபவத்தில் பங்கேற்று, உரையாற்றிய அநுர குமார திசாநாயக்க மாடறுப்பு தொடர்பான சர்ச்சையின் போது அப்பத்திரிகை எடுத்த துணிச்சலான நிலைப்பாட்டை நினைவு கூர்ந்து, தனது உரையை ஆரம்பித்தார்.
அடுத்தது விவசாயப் பயிர்களுக்கு விலங்குகளாலும், பறவைகளாலும் நிகழ்த்தப்பட்டு வரும் சேதம் குறித்த பிரச்சினை. விவசாய உற்பத்திகளில் கிட்டத்தட்ட 40% இவ்விதம் அழிவடைந்து’ வருவதாக ஒரு தசாப்த காலத்துக்கு முன்னரேயே அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். அண்மையில் அமைச்சர் லால்காந்த இந்தப் பிரச்சினை குறித்து அதே மாதிரியான ஒரு கருத்தை முன்வைத்திருந்ததை இங்கு சுட்டிக் காட்டுவது பொருந்தும்.
நில்வலா கங்கையில் நடமாடும் ஆட்கொல்லி முதலைகள் குறித்த அவருடைய கருத்துக்களும் சுவாரஷ்யமானவை. முதலைகளை சுதந்திரமாக நடமாட விட்டு விட்டு, மனிதர்கள் குளிப்பதற்கென ஆற்றில் கூண்டுகளை வைத்திருப்பது சுத்த அபத்தம் என்பது அவருடைய கருத்து. முதலைகளின் தோல் மற்றும் இறைச்சி என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட முதலைப் பண்ணை பொருளாதார நடவடிக்கை ஒன்று இருந்து வருவதனை இலங்கை உதாசீனம் செய்துள்ளது என்பதே அவருடைய மனக்குறை.
1977 இன் பின்னர் அவர் தனது எழுத்துக்களிலும், பேச்சுக்களிலும் தொடர்ந்து ஓர் இந்திய ஆதரவு நிலைப்பாட்டை முன்வைத்து வந்திருக்கிறார். இந்தியத் தலைவர்களின் தூரநோக்கு, தேசபக்தி மற்றும் அறிவுத்திறன் என்பன எப்பொழுதும் அவருக்கு பிரமிப்பூட்டி வந்த விடயங்கள். (ஆனால், ஜவஹர்லால் நேருவையும், நரேந்திர மோடியையும் ஒரே தட்டில் வைத்து மதிப்பீடு செய்த அவருடைய அணுகுமுறை மிக மிகத் தவறானது.)
“……………இலங்கை ஒரு முட்டாள்களின் ஒரு தேசம்……… பல வருட காலமாக அது மூடத்தனமான ஓர் இந்திய எதிர்ப்பை முன்னெடுத்து வந்திருக்கிறது. ……………….. இந்தியாவின் சுதந்திரமான ஒரு மாநிலமாக இலங்கை மாறினால் பல வழிகளிலும் நாங்கள் பயனடைந்து கொள்ள முடியும். எமது நீதிமன்றங்களிலிருந்து நீதியை பெற்றுக் கொள்ள முடியாது போனால், இந்திய உச்ச நீதிமன்றத்தை அணுகக் கூடிய வாய்ப்பு எமக்குக் கிடைக்கும்” என்று பொது வெளியில் கூறும் தைரியம் அவருக்கிருந்தது.
யாரும் அறிந்திராத அவருடைய வேறு இரண்டு பரிமாணங்கள் செஸ் விளையாட்டிலும், சமையல் கலையிலும் அவருக்கிருந்த நிபுணத்துவ அறிவு.
“செஸ் விளையாட்டு: கோட்பாடுகளும் நுட்பங்களும்” என்ற அவருடைய நூல் (1994) அந்த விளையாட்டு தொடர்பாக சிங்களத்தில் எழுதப்பட்டிருக்கும் ஒரு முக்கியமான ஆக்கம். அவருடைய மகன் அத்துல ரஸல் தொடர்ந்து 6 ஆண்டுகள் இலங்கையின் செஸ் சம்பியனாக இருந்து வந்திருக்கிறார்.
பௌத்த / கிறிஸ்தவ விழுமியங்களின் செழுமையான பல கூறுகளின் ஓர் அபூர்வ கலவையான அவர், இலங்கையின் பல நூற்றாண்டு கால பல்லின, பல் சமய பாரம்பரியத்தை தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டேயிருந்தார். அவர் அளவுக்கு தமிழ், முஸ்லிம் நண்பர்களையும், அபிமானிகளையும் கொண்டிருந்த சிங்களப் புத்திஜீவிகள் வேறு எவரும் இருந்து வரவில்லை.
இலங்கை அரசியலிலும், சமூகத்திலும் சாதி வகித்து வரும் செல்வாக்கு குறித்து விக்டர் ஐவன் விரிவாக தனது கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார். தெற்கில் 1971 இலும், 1987–1989 காலப் பிரிவிலும் உருவாகிய இரண்டு கிளர்ச்சிகளும் சிங்கள சமூகத்தில் நிலவி வந்த சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான எழுச்சிகள் என்ற வாதத்தை அவர் தொடர்ந்து முன்வைத்து வந்தார். ‘அரசியலில் குடும்பமும், சாதியும்’ (2011) என்ற நூலில் அது தொடர்பான விரிவான பகுப்பாய்வுகளை அவர் மேற்கொண்டிருக்கிறார்.
“விஜேவீர தனது வாழ்நாள் நெடுகிலும் ஒரு தாழ்வுச் சிக்கலால் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்தார். இந்தத் தாழ்வுச் சிக்கலே அவர் கொண்டிருந்த தமிழர் விரோத அணுகுமுறைக்கு பங்களிப்புச் செய்திருந்தது” என்று எழுதிய அவர், வட புல தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டமும் பெருமளவுக்கு சாதிய அடக்குமுறையுடன் சம்பந்தப்பட்டிருந்தது என்ற நிலைப்பாட்டை முன்வைத்தார்.
பெரும்பாலான தனது உரைகளை “எமக்கு இந்த அவலம் நேர்ந்தது ஏன்” என்ற கேள்வியுடன் ஆரம்பிப்பது அவருடைய வழக்கம் (அதற்கு அவர் பயன்படுத்திய சொல் ‘கேதவாச்சக்கய’ என்பது அச்சொல்லுக்கு பெரும் கேடு, முன்னொரு போதும் இல்லாத சீரழிவு என்ற விதத்தில் பரவலாக விளக்கமளிக்க முடியும்).
“1948 இல் இலங்கை தனிநபர் வருமான அடிப்படையில் ஆசியாவில் ஜப்பானுக்கு மட்டுமே அடுத்ததாக இருந்து வந்தது. ஆனால், இன்று அது பங்களாதேஷ் நாட்டைப் பார்க்கிலும் மோசமாக சரிவடைந்திருப்பதற்கு அரசியல்வாதிகள் மீது மட்டும் நாங்கள் பழியைப் போட முடியாது. அரச உத்தியோகத்தர்கள், கல்விமான்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய அனைத்துத் தரப்புக்களும் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்…………..”
“…………………… எமது தேசிய வீரராக போற்றப்பட்ட கெப்பெட்டிப்பொல தனது இறுதிக் காலத்தில் ‘இனி ஒரு போதும் இலங்கையில் பிறக்கக் கூடாது’ என்று மன்றாடிப் பிரார்த்தித்தார்.
நமது மின் உற்பத்திக் கட்டமைப்பை வடிவமைத்த பொறியியல் வல்லுநர் விமலசுரேந்திரவை நாங்கள் எப்படி நடத்தினோம்? ‘இலவசக் கல்வியின் தந்தை’ என வர்ணிக்கப்பட்ட சி டப்ளியு டப்ளியு கன்னங்கரவின் இறுதிக் காலம் எப்படி இருந்தது?”
“நமது மரபணுக்களில் ஏதோ ஒரு சிக்கல் (அவுலக்) இருந்து வருவதாகவே நான் நினைக்கிறேன்” என இலங்கையின் பொது சமூகம் குறித்து கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைத்து வந்திருக்கிறார்.
ஆனால், ஒரு போதும் ஒரு சாய்வு நாற்காலி விமர்சகராக மட்டும் அவர் இருந்து வரவில்லை. இலங்கை சமூகத்தின் மீது எந்த அளவுக்கு நிர்த்தாண்யமாக விமர்சனங்களை முன்வைத்தாரோ, அதே அளவுக்கு நாட்டுக்கு பயனளிக்கக் கூடிய ஆக்கபூர்வமான பல யோசனைகளை இடையறாது சமர்ப்பித்துக் கொண்டிருந்தார். “இலங்கையின் சீர்த்திருத்தங்களுக்கான நிகழ்ச்சிநிரல்” என்ற பெயரில் அவர் தயாரித்திருந்த ஆவணத்தை ஒருவர் பின் ஒருவராக வந்த பல ஜனாதிபதிகளிடம் கையளித்து, அதற்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டிய உடனடித் தேவையை வலியுறுத்திக் கொண்டேயிருந்தார்.
விக்டர் ஐவன் தனது வாழ்வின் இறுதி வருடங்களில் (விக்ரமபாகு கருணாரத்னவை போலவே) ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒரு நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்ட மாற்றம், அவரை ஒரு ஆதர்ச புருசராக கொண்டாடிய பலருக்கு மத்தியில் ஒரு பெரும் மனக்குழப்பத்தை ஏற்படுத்தியது.
இடதுசாரி செயற்பாட்டாளர் விதர்சன கன்னங்கர தனது அஞ்சலிக் குறிப்பில் அதனை ‘வரலாற்றின் மாபெரும் நகைமுரண்’ என வர்ணிக்கிறார்.
2024 ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு அவர் தனது முழு ஆதரவை வழங்கிய பொழுது அது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
“அநுர குமார திசாநாயக்கவும், சஜித் பிரேமதாசவும் இன்னமும் தமது ஐம்பதுகளில் இருந்து வருபவர்கள். நாட்டை ஆள்வதற்கான அனுபவமும், முதிர்ச்சியும் அவர்களுக்கில்லை.”
“……………..ஆனால், இன்றைய சூழலில் இலங்கையை இந்த நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்கக்கூடிய ஆற்றலை கொண்டிருக்கும் ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க என்றே நான் நம்புகிறேன்” என அக்கேள்விக்குப் பதிலளித்தார்.
1987 -–1994 காலப் பிரிவில் மனித உரிமைகள் தொடர்பாக ‘ராவய’ பத்திரிகை முன்னெடுத்த பரப்புரைகளினால் ஜேவிபி மறைமுகமாக பயனடைந்த போதும், விக்டர் ஐவனுக்கும், புதிய தலைமுறை ஜேவிபியினருக்குமிடையில் மிகவும் நெருடலான ஓர் உறவே நிலவி வந்தது.
“ஜேவிபி யை ஒரு புதிய கட்சியாக அடையாளப்படுத்த முடியாது. 60 ஆண்டு காலமாக இருந்து வரும் கட்சி அது. மேலும், 30 ஆண்டு காலம் அது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றிருக்கிறது….. ஒரு சந்தர்ப்பத்தில் அக் கட்சியைச் சேர்ந்த 39 உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருந்தார்கள் ஆனால், அவர்கள் பாராளுமன்ற விவாதங்களுக்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எந்தவொரு பங்களிப்பையும் வழங்கியிருக்கவில்லை. ஆழ்ந்த வாசிப்பு மற்றும் பகுப்பாய்வு சிந்தனை எதுவுமே இல்லாதவர்களாக அவர்கள் இருந்து வருகிறார்கள்” என்ற அவருடைய கறாரான விமர்சனத்தை தற்போதைய என்பிபி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு சவாலாக எடுத்துக் கொள்ள வேண்டுமென்பதே எனது கருத்து.
இறுதியில், இலங்கை தேசத்திற்கான விக்டர் ஐவனின் பன்முகப் பங்களிப்புக்களை வரலாறு எவ்வாறு நினைவு கூரப் போகிறது? அவர் நமக்கு விட்டுச் சென்றிருக்கும் முதுசம் (Legacy) என்ன?
அவருடைய வாழ்வையும், பணிகளையும் உன்னிப்பாக அவதானிக்கும் எவரும் எளிதில் கண்டறியக் கூடிய விடயம் நாட்டின் இன, சமய நல்லிணக்கம் மற்றும் பொருளாதார செழிப்பு நிலை என்பன தொடர்பாக அவர் காட்டி வந்த அதீத அக்கறை; அவை தொடர்பாக அவர் மேற்கொண்ட ஆழமான பகுப்பாய்வுகள்; இலங்கைக்கான விரிவான ஒரு சீர்திருத்த நிகழ்ச்சிநிரலை உருவாக்குவதில் அவர் காட்டிய அர்ப்பணிப்புணர்வு; எல்லா இனங்களையும், மதங்களையும் அரவணைத்து, முன்னோக்கிய ஒரு பயணத்தை மேற்கொண்டால் மட்டுமே இலங்கைக்கு ஒரு எதிர்காலம் இருக்கிறது என்று விடயத்தில் அவர் கொண்டிருந்த ஆழமான நம்பிக்கை.
மிக அரிதாக தோன்றக் கூடிய ஒரு மாபெரும் தேசாபிமானியை நாடு இழந்திருக்கிறது; இன ரீதியான மற்றும் மத ரீதியான அடக்குமுறையையும், அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு வரும் சிறுபான்மைச் சமூகங்கள், தமக்காக துணிச்சலுடன் ஓயாது குரலெழுப்பி வந்த ஒரு உற்ற தோழரை இழந்திருக்கின்றன; அது ஒரு போதும் ஈடுசெய்ய முடியாத ஓர் இழப்பு.- Vidivelli