“உயிர்த்த ஞாயிறு அனர்த்தம்” (மறைகரம் வெளிப்பட்டபோது) “நாங்கள் வேறானவர்கள் அல்ல மண்ணின் வேரானவர்கள்”…..
இன்று வெளியிடப்படும் இரு நூல்கள் பற்றிய பார்வை
நாச்சியாதீவு பர்வீன்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் தலைகுனிந்து அவமானப்பட்டதோடு அப்பாவி முஸ்லிம் சமூகம் குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்பட்டு கேள்விக்குட்படுத்தப்பட்டது. அப்பாவி முஸ்லிம்கள் சந்தேகக் கண் கொண்டே பார்க்கப்பட்டார்கள். முஸ்லிம் சமூகத்திற்கும் ஏனைய சமூகங்களுக்கும் இடையில் பெரும் இடைவெளியும் விரிசலும் இதன்மூலம் உருவாகியது.
முஸ்லிம் சமூகம் இரண்டாம் தரப்பிரஜைகளாக திட்டமிட்ட இனவாத சக்திகளினால் ஆக்கப்பட்டது. நின்றால், நடந்தால், பார்த்தால் எல்லாமே சந்தேகக் கண்கொண்டே நோக்கப்பட்டது. வேலைத்தளங்களிலும், வெளியிடங்களிலும் பெரும்பான்மை சகோதரர்களின் பார்வையை எதிர்நோக்க திராணியற்று, தயங்கிய வேதனை நிறைந்த நாட்களவை.காலப்போக்கில் இந்த எண்ணம் தளர்வுற்றாலும் முற்றாக இல்லாமல் போகவில்லை.
இந்த பெரும்பான்மை எண்ணக்கருவை கேள்விக்குட்படுத்தும் ஒரு ஆவணமாக ராஜன் ஹுல் ஆங்கிலத்தில் எழுதிய Easter Sunday attack (when The Mystery Hand Raised) என்ற நூல் அமைந்துள்ளது. இந்த ஆங்கில நூலை தமிழுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா ஃபோரத்தின் தலைவரும் மூத்த ஊடகவியலாளருமான என் எம்.அமீன் “உயிர்த்த ஞாயிறு அனர்த்தம்” (மறைகரம் வெளிப்பட்டபோது) எனும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார்.
சஹ்ரான் என்னும் தீவிரவாதி தொடர்பில் சாதாரண முஸ்லிம் மக்கள் இலங்கையில் அறிந்திராத பல விடயங்களை இவரது ஆய்வு தெளிவுபடுத்தி நிற்கின்றது. சஹ்ரானின் பிறப்பு வளர்ச்சி இயக்க ரீதியான செயல்பாடுகள் தீவிரவாதத்தின் மீதான ஈடுபாடு என்பவற்றை மிகத் தெளிவாகவும் ஆழமாகவும் ராஜன் ஹுல் இங்கே தனது ஆய்வின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். ராஜன் ஹுலின் இந் நூலானது அந்தக் காலகட்டத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும் இணைந்தே உருவாக்கப்பட்ட அவப்பெயரை கேள்விக்குற்படுத்தியது எனலாம்.
மிக நீண்ட காலமாக ஊடகத்துறையில் இருக்கின்ற என்.எம். அமீன் ஊடகத்துறையில் தான் பெற்ற அனுபவத்தையும் தனது தமிழ் மொழி ஆற்றலையும் இந்த மொழிபெயர்ப்பை செய்வதற்கு செவ்வனே பயன்படுத்தியிருக்கிறார். சாதாரண ஒரு பாமரனும் இந்த புத்தகத்தை வாசிப்பதன் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்கள் அதன் முரண்பாட்டின் தோற்றுவாய் சஹ்ரான் பற்றிய மேலதிக விபரம் போன்றவற்றை மிகத் தெளிவாக அறிந்து கொள்ளக் கூடிய வகையில் இலகு மொழிநடையில் இந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. துல்லியமான இந்த மொழிபெயர்ப்பைச் செய்த சிரேஷ்ட பத்திரிகையாளர் என்.எம். அமீன் அவர்கள் பாராட்டுக்குரியவரே!
அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட சவால்களை, அவமானங்களை, எதிர்ப்புகளை அடையாளப்படுத்தி அச்சவால்கள் மூலம் பெற்றுக்கொண்ட அனுபவத்தினையும், முஸ்லிம் சமூகத்தை இந்த அவப்பெயரிலிருந்து பாதுகாப்பதில் அரசியல்வாதியாக மேற்கொண்ட முன்னெடுப்புகளையும் ஆவணப்படுத்தும் முகமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் எழுதிய “நாங்கள் வேறானவர்கள் அல்ல மண்ணின் வேரானவர்கள்” என்ற நூலும் கருத்தில் கொள்ளத்தக்கது.
முஸ்லிம் சமூகத்தின் மீதான அழுத்தங்களும் நீதமற்ற செயற்பாடுகளும் வேண்டுமென்றே கட்டமைக்கப்பட்ட அபாண்டங்களும் என்று வெவ்வேறு தலைப்புகள் கூடாக தனது அனுபவத்தை ஆழமாக பதிந்திருக்கின்றார் ரவூப் ஹக்கீம்.
கொடூரமான உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது வரலாற்றில் முஸ்லிம்களாகிய எங்களை இக்கட்டுக்குள் தள்ளி இருப்பதை வருத்தத்துடன் ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். எங்கு எவ்வாறு எப்போது நிலைமைகள் மோசமடைந்தன என்பதைப் பற்றி விமர்சன ரீதியாக பின்னோக்கிப் பார்ப்பது நல்லது. எங்களது சொந்த வாழ்விலும் நடவடிக்கைகளிலும் ஒத்துவராதவற்றை கண்டறிந்து துண்டு துண்டான அவற்றை ஒன்று சேர்த்து ஒரு சட்டகத்தில் பொருத்திப் பார்ப்பதே சாலச் சிறந்ததாகும். அப்பொழுதுதான் இலங்கையின் பன்மைதுவ சமூகத்தில் ஓர் அழகிய வரைவாக அது இடம்பெற வாய்ப்புள்ளது. பாலைவனப் புழுதி புயலில் தீக்கோழி தனது தலையை புதைத்துக் கொள்வது போல எங்களது பல்லின பல மத சமூக அமைப்பில் வழமையான பாரம்பரிய உண்மைகளை இலகுவில் மறைத்து விட முடியாது என்கிறார் ஹக்கீம்.
பழுத்த அனுபவம் வாய்ந்த வாசகனும், எழுத்தாளனும், ஆய்வாளனும், அரசியல்வாதியுமாக தன்னை இந்த நூலின் மூலம் நிரூபித்துள்ளார் நூலாசிரியர் சட்டமுதுமாணி ரவூப் ஹக்கீம்.
# சமாதானத்திற்கான ஆர்வமும், அதிருப்தி அளிக்கும் தலைவிதியும்.
# அறியப்பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்பான தெளிவுபடுத்தல்: முஸ்லிம் குடித்தொகை பற்றி சிங்களவர்களுக்குள்ள பயப்பிராந்தி.
# முஸ்லிம்களிடமிருந்து சிங்கள கலாச்சாரத்திற்கு வரக்கூடிய அச்சுறுத்தல்கள் குறித்த எண்ணங்கள்
# பயங்கரவாதம் குறித்த மாயையை களைதல். இனத்துவ சமய தீவிரவாதமா? அல்லது பொருளாதார மேலாதிக்க போட்டியா?
இப்படி பல்வேறு தலைப்புகளில் தனது அனுபவத்தையும் ஆய்வையும் ஒன்று திரட்டி மிக அழகிய முறையில் இந்த புத்தகத்தை தந்திருக்கின்றார் எழுத்தாளர்.
இனக்குழுக்கள் அனைத்தும் அணைந்தும் இணைந்தும் செல்லும் வகையில் சமூக ரீதியாக கட்டமைக்கப்பட வேண்டும் பாரிய தேசிய சட்டகமொன்றில் அவை பொருத்தப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டு வேற்றுமையிலும் ஒற்றுமை காண்பதுவே சாலச் சிறந்தது.
இந்தச் சொற்கள் கைதேர்ந்த ஒரு எழுத்தாளனின் கைகளிலே சிக்கியதால் அற்புதமான சிற்பம் போல் ஆகிப்போயுள்ளது. வித்துவச்செருக்கற்ற மொழிநடையில் தனக்கே உரிய மொழிவாண்மையை இலாவகமாக பயன்படுத்தி வாசகனை வளைத்துப் போடும் வசீகரத்தை இந்நூல் செய்கிறது. ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் இந்த நாட்டில் எதனை எதிர்பார்க்கின்றது என்பதனை இந்த சமூகத்தின் குரலாக ஹக்கீம் இந் நூலின் மூலம் முன்வைத்துள்ளார்.
நம் முன்னே இருக்கின்ற பிரச்சினைகளைப் பற்றி பேசுவதோடு நாம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளைப் பற்றியும் மிக ஆழமாக பேசுகின்றது இந்நூல். பல்லினச் சமூக கட்டமைப்புக்குள் சிறுபான்மையாக வாழுகின்ற ஒரு சமூகக் குழுமத்தின் எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படுகின்ற தடங்கல்களையும் தெளிவுபடுத்துகிறது இந்நூல்.
உயிர்த்த ஞாயிறு தீவிரவாத சம்பவத்தின் பின் உருக்குலைந்து போயிருந்த எமது சமூகக் கட்டமைப்பை மீண்டும் அந்த பழைய நிலைக்கே கொண்டு வருவதற்கு ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் மிகவும் காத்திரமாக முன்னெடுப்புகளை மேற்கொண்டவர் என்பது நடுநிலையான அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும். அவ்வாறே கொவிட்- 19 வைரஸின் தாக்கத்தின் மூலம் இறந்த முஸ்லிம் உடல்களை எரிக்க வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனங்களே தெரிவித்த போதும் அவற்றைக் கருத்தில் கொள்ளாது இலங்கையில் இறக்கின்ற முஸ்லிம் உடல்களை தகனம் செய்வதற்கு அன்றைய இலங்கை அரசு வழங்கிய அந்த கசப்பான அனுபவத்தை எந்த ஒரு முஸ்லிமாலும் மறக்க முடியாது. அதன் பின்னணியில் இருந்த இனவாத போக்கினையும் மெல்லச் சுட்டிக் காட்டுகிறது இந்த புத்தகம்.
உயிர்த்த ஞாயிறு அனர்த்தம் (மறைகரம் வெளிப்பட்டபோது), மற்றும் “நாங்கள் வேறானவர்கள் அல்ல மண்ணின் வேரானவர்கள்” இந்த இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்வும் இன்று வியாழக்கிழமை சரியாக மாலை 5 மணிக்கு இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளன.
வேண்டுமென்றே புனையப்பட்ட பொய்களால் புண்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகத்திற்கு ஓரளவேணும் ஒத்தடம் கொடுக்கும் ஔடதமாக இவ்விரு நூல்களும் அமையும் என்று நம்புவோம்.- Vidivelli