சிலை உடைப்பு மாவனெல்லையின் சகவாழ்வுக்கு விழுந்த அடி

0 988
  • எம்.எஸ். அமீர் ஹுசைன்

மாவனெல்லை – ரம்­புக்­கனை வீதியில் அமைந்­துள்ள ரந்­தி­வலை மற்றும் மஹந்­தே­கம பகு­தியில் அமைந்­தி­ருந்த புத்தர் சிலை­களை சம்­மட்­டியால் தட்டி உடைத்­தமை தொடர்­பாக தொடர்ந்தும் தீவிர விசா­ர­ணைகள் தொடர்­கின்­றன. இந்த விசா­ர­ணை­களை கேகாலை பிராந்­திய பொலிஸ் பொறுப்­ப­தி­காரி சாமிக பி. விக்­கி­ர­ம­சிங்க, கேகாலை பிராந்­திய குற்­றத்­த­டுப்பு பிரிவின் பொறுப்ப­தி­காரி ஓ.பி. அம­ர­பந்து உட்­பட அவரின் கீழான அதி­கா­ரி­களின் தலை­மையில் விசா­ர­ணைகள் தொடர்­கின்­றன. இந்த சம்­ப­வத்­தோடு தொடர்­பு­டைய 6 பேர் கைது செய்­யப்­பட்டு கேகா­லையில் தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இந்த சிலை உடைப்பை கண்­டித்து 2018 டிசம்பர் 29 ஆம் திகதி மாவ­னெல்லை நக­ரத்தில் பௌத்த தீவிர போக்­கு­டைய குழுக்கள் சில இணைந்து ஏற்­பாடு செய்­தி­ருந்த எதிர்ப்பு ஊர்­வ­லத்­திற்கு நீதி­மன்றம் தடை உத்­த­ரவு பிறப்­பித்­ததால் அந்த எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டமும் ஊர்­வ­லமும் நடை­பெ­ற­வில்லை. இந்த ஊர்­வ­லத்­திற்கு முன்னர் மாவ­னெல்லை பிர­தே­சத்தில் சற்று பதற்­ற­மான அசா­தா­ரண சூழ்­நிலை காணப்­பட்­ட­தா­யினும் ஆர்ப்­பாட்டம் தடை செய்­யப்­பட்­டது என்ற செய்தி கிடைத்­த­வுடன் அனை­வரும் நிம்­மதிப் பெரு­மூச்சு விட்­டனர். மாவ­னெல்லை மக்கள் மாத்­தி­ர­மன்றி மாவ­னெல்லையை அண்­டிய பிர­தேச மக்­களும் கூட இந்த செய்­தியால் நிம்­மதி அடைந்­தனர்.

ஏன் இவ்­வா­றான ஒரு இன­வாத எதிர்ப்பு ஆர்ப்­பாட்டம் நடை­பெ­ற­வில்லை என்­ற­வுடன் நிம்­மதி அடைந்­தனர் என்ற கேள்வி எழு­கின்­றது. அதற்கு ஒரே காரணம் அளுத்­க­மை­யிலும் திக­ன­யிலும் ஏற்­க­னவே நடை­பெற்ற சில அசம்­பா­வி­தங்­க­ளுக்கு எதிர்ப்புத் தெரி­விப்­ப­தற்­காக ஆர்ப்­பாட்டம் நடத்­திய இன­வாத சிங்­கள அமைப்­புக்­களின் குழு­வினர் அளுத்­கமை நக­ரத்­தையும் திக­னை­யையும் எரித்து நாச­மாக்­கினர். அதனால் பெரு­ம­ள­வி­லான முஸ்­லிம்­க­ளது உடை­மைகள் அழிக்­கப்­பட்­டதால் மக்கள் பொரு­ளா­தார ரீதி­யாக நடுத்­தெ­ரு­வுக்கு இழுத்து விடப்­பட்­டனர். பாரிய வன்­மு­றை­யாக மாறின. ஓரிரு தனி­ந­பர்­களின் செயற்­பா­டு­களே எமது சமூ­கத்­த­வர்­களால் இன­வாத வன்­மு­றை­க­ளுக்கு அடிப்­ப­டை­யாக அமைந்­ததை ஒரு­போதும் மறக்க முடி­யாது.

மாவ­னெல்லை­யிலும் 2001 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி நடை­பெற்ற வன்­மு­றையில் இதே போன்ற அழிவை மாவ­னெல்லை மக்கள் சந்­தித்த கசப்­பான அனு­பவம் இன்னும் நினைவில் இருக்­கின்­றது. அதே நேரம் மாவ­னெல்லை கல­வரம் நடை­பெற்று அதனால் ஏற்­பட்ட இன ரீதி­யான உறவில் ஏற்­பட்ட விரி­சலை மீண்டும் இணைத்து நல்­லி­ணக்­கத்­தையும் சக­வாழ்­வையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக மாவ­னெல்லை கல்விச் சமூகம், வர்த்­தக சமூகம் உட்­பட பல தரப்­பட்­ட­வர்­களும் 10 வரு­டங்­க­ளுக்கு மேலாக கடு­மை­யாக பாடு­பட வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. அதற்­காக சிங்­கள பௌத்த சமூ­கத்தில் எமக்­காக குரல் எழுப்­பக்­கூ­டி­ய­வர்­களை உரு­வாக்­கு­வ­தென்­பது மிகவும் சிர­ம­மான காரி­ய­மா­க­வி­ருந்­தது. அதிலும் கடந்த 10 வரு­டங்­க­ளுக்கு மேலாக மாவ­னெல்லை வாழ் முஸ்­லிம்­க­ளோடு தோளோடு தோள் நின்­று­பா­டு­பட்ட ஒரு­வ­ராக பேரா­தனைப் பல்­க­லைக்­கழக  முன்னாள் பேரா­சி­ரி­யரும் வைத்­தி­ய­ரு­மான கமகே இருந்து வந்தார்.

சில மாதங்­க­ளுக்கு முன்னர் அவரும் இறந்து இப்­போது அந்த பணியில் பாரிய வெற்­றிடம் ஒன்று ஏற்­பட்­டுள்ள நிலையில் அதற்­காக பௌத்த சமூ­கத்தில் எமக்­காக பேசக்­கூ­டி­ய­வர்­களை எவ்­வாறு நாம் உரு­வாக்­கு­வது என்று சிந்­தித்துக் கொண்­டி­ருக்­கின்ற சந்­தர்ப்­பத்­தி­லேதான் இந்த சிலை உடைப்பு சம்­ப­வங்கள் நிகழ்ந்­துள்­ளன. இதனால் எல்­லா­வி­த­மான சமா­தான, நல்­லி­ணக்க மற்றும் சக­வாழ்வு நட­வ­டிக்­கை­க­ளுக்கும் ஒரு­வி­த­மான பாதிப்பும் பின்­ன­டைவும் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. சாதா­ரண மக்கள் இது­பற்றி ஆழ­மாக சிந்­திக்­கா­விட்­டாலும் உயர் மட்­டங்­களில் அதி­கார தரப்­புக்­களில் பெரும்­பா­திப்பை ஏற்­ப­டுத்தி இருக்­கின்­றது.

குறித்த கைது செய்­யப்­பட்­டுள்ள இளை­ஞர்கள் இந்த செயலை செய்­தி­ருக்­க­மாட்­டார்கள், அவர்கள் நிர­ப­ரா­திகள் என்று அவர்­க­ளது பெற்றோர், உற­வி­னர்கள் உட்­பட அவர்­க­ளது குடும்­பத்தில் நேசம் கொண்ட அனை­வரும் கூறு­கின்­றனர். இதனை சிங்­க­ள­வர்­களே செய்­து­விட்டு அவ்­வ­ழியால் சென்ற அப்­பாவி இளை­ஞர்­களைப் பிடித்து தாக்கி கட்டி பொலிசில் ஒப்­ப­டைத்­தனர் என்­பது அவர்­க­ளது குடும்­பத்­தா­ரது வாத­மாகும். நாம் அதனை வைத்­துக்­கொண்டு அவர்­க­ளுக்கு சாத­க­மாக அனு­தா­பத்­துடன் பேச முற்­ப­டு­கின்­ற­போது இந்த குற்றச் செயலை விசா­ரணை செய்யும் பொலிஸ் பொறுப்­ப­தி­கா­ரி­களோ ”தடுப்­புக்­கா­வலில் உள்ள இளை­ஞர்கள் புத்தர் சிலை­களை உடைத்­த­தாக ஒப்­புக்­கொண்­டுள்­ளனர். அதற்கு பயன்­ப­டுத்­திய சம்­மட்­டி­யையும் சந்­பந்­தப்­பட்ட நபரின் வீட்டில் இருந்து மீட்­டுள்ளோம். அதனால் இது தொடர்­பாக ஆழ­மாக விசா­ரணை செய்ய வேண்டும்” என்று கூறு­கின்­றனர்.

இந்த சம்­பவம் மாவ­னெல்லையில் மாத்­திரம் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­த­வில்லை. முழு இலங்­கை­யிலும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தி இருக்­கின்­றதை நாம் மறக்க முடி­யாது. இந்த சம்­ப­வத்தில் ஈடு­பட்­ட­வர்கள் தொடர்­பாக பார­பட்­ச­மற்ற முறையில் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கடந்த 26 ஆம் திகதி வேண்­டுகோள் விடுத்­துள்ளார். இந்த சம்­பவம் தொடர்­பாக புல­னாய்வுப் பிரி­வினர் பல கோணங்­களில் விசா­ரணை செய்­வ­தாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர கூறினார். இது தொடர்­பாக பல அர­சி­யல்­வா­திகள் செய்­தி­யாளர் மாநா­டு­களை நடத்தி கருத்­துக்­களை வெளி­யிட்­டுள்­ளனர். அது­ர­லியே ரத­ன­தேரர் குறிப்­பி­டு­கையில், இலங்­கையில் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தமும் பயங்­க­ர­வா­தமும் இருக்­கின்­றது என்­பதை இந்த சம்­ப­வங்கள் நிரூ­பிக்­கின்­றன. அதனால் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் தலை­யிட்டு விசா­ர­ணை­களை தடுக்­காமல் ஆழ­மாகச் சென்று பின்­ன­ணியை கண்­டு­பி­டிக்க வேண்டும் என்று வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

அவர்கள் அனை­வரும் இது­வ­ரையில் இலங்­கையில் இஸ்­லா­மிய பயங்­க­ர­வாதம் ஒன்­றில்லை என்று கூறி வந்­தாலும் திரை­ம­றைவில் இஸ்­லா­மிய பயங்­க­ர­வா­தமும் பௌத்த மதத்­திற்கு எதி­ரான சதித்­திட்­டமும் இருக்­கின்­றது என்­பதை  இந்த புத்தர் சிலை­களை சேதப்­ப­டுத்­திய சம்­ப­வங்கள் காட்­டி­யுள்­ளன. அதனால் பின்­ன­ணியில் யார் இருக்­கின்­றார்கள், வழி­ந­டத்தும் இஸ்­லா­மிய அமைப்பு எது? எந்த இஸ்­லா­மிய நாடு பின்­பு­லத்தில் இருந்து இவர்­களை வழி­ந­டத்­து­கின்­றது? எங்­கி­ருந்து இவர்­க­ளுக்கு பணம் வரு­கின்­றது? மத்­திய கிழக்கில் இயங்­கு­கின்ற சர்­வ­தேச நாடுகள் இஸ்­லா­மிய பயங்­க­ர­வாத அமைப்பு என்று முத்­திரை குத்தி இருக்­கின்ற ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­புக்கும் இந்த இளை­ஞர்­க­ளுக்கும் இடையில் தொடர்பு இருக்­கின்­றதா? என்ற வினாக்­க­ளுக்கு விடை காணும் வகையில் பல கோணங்­களில் புல­னாய்­வு­களை நடத்த வேண்டும் என்று அனைத்து தரப்­பி­னரும் அர­சாங்­கத்­தையும் பாது­காப்பு தரப்­பி­ன­ரையும் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.

இரண்டு புத்தர் சிலை­களை சேதப்­ப­டுத்­தி­யமை சிறிய சம்­ப­வ­மா­னாலும் இந்த சம்­பவம் முஸ்லிம் சமூகம் தொடர்­பாக சிங்­கள மக்­க­ளுக்கு இருந்த சந்­தே­கத்­தையும் அச்­சத்­தையும் அதி­க­ரிக்கச் செய்­தி­ருக்­கின்­றது.  பாது­காப்பு தரப்­பையும் வித்­தி­யா­ச­மான கோணங்­களில் சிந்­திக்கத் தூண்டி இருக்­கின்­றது. அதே நேரம் இந்த சம்­ப­வத்தை கேகாலை குற்­றத்­த­டுப்பு பொலிஸ் பொறுப்­ப­தி­காரி ஓ.பி. அம­ர­பந்து குறிப்­பி­டு­வது போன்று இந்த இளை­ஞர்­களே செய்­தி­ருப்­பார்­க­ளானால் ஏன் இவர்கள் இத்­த­கைய செயலைச் செய்­தார்கள், புனித இஸ்லாம் மார்க்கம் இவ்­வாறு வலி­யு­றுத்­து­கின்­றதா? அவ்­வா­றாயின் இஸ்லாம் வலி­யு­றுத்தும் ஏனைய சமூ­கங்­க­ளு­ட­னான புரிந்­து­ணர்வு, நல்­லி­ணக்கம், சமா­தானம், ஒற்­றுமை மற்றும் சக வாழ்வு என்­ப­வற்­றுக்கு இஸ்லாம் மார்க்­கத்தில் இடம் இல்­லையா என்று சிந்­திக்க வேண்­டி­யி­ருக்­கின்­றது.

இஸ்­லா­மி­ய­வா­திகள் இஸ்­லா­மிய பாச­றைக்குள் மட்டும் இருந்­து­கொண்டு அல்­லது சவூதி அரே­பி­யாவில் இருந்து ரியால்­க­ளுக்­காக அல்­லது அங்கு குடி­யி­ருந்து தொழில் புரிந்­து­விட்டு நாடு திரும்­பிய நிலையில் இலங்­கையின் பல்­லின, மத, கலா­சார சூழலை சிந்­திக்­காது செயற்­பட்டால் இந்த நாட்டில் ஏனைய இனங்­க­ளோடு நாம் கடைப்­பி­டிக்க வேண்­டிய ஒற்­று­மையை பூண்­டோடு அழித்து சின்­னா­பின்­னப்­ப­டுத்­தி­விட்டு இங்கு வாழ முடி­யுமா என்று சிந்­திக்க வேண்டி இருக்­கின்­றது. இந்த குறு­கிய வட்­டத்­திற்குள் வாழ முற்­படும் இஸ்­லாத்தின் ஒரு பிரி­வி­ன­ருக்­காக நாம் இந்­நாட்டின் இன நல்­லி­ணக்­கத்தை தாரை­வார்த்து உடைத்து நொறுக்கி நடப்­பது நடக்­கட்டும் என்று வாழ முடி­யுமா என்றும் சிந்­திக்க வேண்டி இருக்­கின்­றது.

அதே போன்று இத்­த­கைய தூர நோக்கும் புத்­தி­மங்­கிய நிலை­யி­லான செயல்­களால் பாதிக்­கப்­ப­டப்­போ­வது முஸ்லிம் சமூ­கத்திலுள்ள இளை­ஞர்­க­ளே­யாவர். ஏற்­க­னவே வடக்கில் தாண்­ட­வ­மா­டிய தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக்க பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளின்­போது இளை­ஞர்கள் பயங்­க­ர­வா­திகள் என்ற அடிப்­ப­டையில் விசா­ர­ணைக்கு என அழைத்துச் செல்­லப்­பட்­ட­வர்கள் மீண்டும் இன்று வரையில் வீடு திரும்­ப­வில்லை. இவ்­வாறு அநி­யா­ய­மாக கொல்­லப்­பட்ட இளை­ஞர்­களின் எண்­ணிக்கை 29000 ஆகும். தக­வல்­களை பெறு­வ­தற்­காக அவர்கள் பாது­காப்புத் தரப்­பி­னரால் சித்­தி­ர­வதை செய்­யப்­பட்ட பின்னர் ஏற்­படும் உடல் காயங்கால் அவர்­களை வெளி உல­கிற்கு விடு­விக்க முடி­யாத நிலையில் கொலை செய்­யப்­பட்டு அங்­காங்கே புதைக்­கப்­பட்ட வர­லாறும் இந்­நாட்­டிற்கு புதி­ய­தல்ல. செம்­மணி புதை குழி, வன்னி புதை­கு­ழிகள் என்­பன இதற்கு ஆதா­ரங்­க­ளாகும்.

இத்­த­கைய செயல்­களால் முஸ்லிம் சமூ­கத்­திற்­குள்ளும் இஸ்­லா­மிய பயங்­க­ர­வாதம் என்றும் பௌத்­தத்­திற்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை ஒழித்தல் என்ற அடிப்­ப­டையில் எமது அப்­பாவி இளை­ஞர்­க­ளையும் பலி கொடுக்கும் நிலை ஏற்­பட்டால் அதற்கு இந்த  தீவிர சிந்­த­னை­யா­ளர்கள் பொறுப்­பா­வார்­களா? அதே நேரம் எம் சமூ­கத்­திற்குள் நட­மாடும் இயக்க வெறி­யர்கள் இந்த சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்தி தமது இயக்கம் வாழ வேண்டும் என்­ப­தற்­காக மற்­ற­வர்­களை இஸ்­லா­மிய பயங்­க­ர­வா­திகள் என்று முத்­திரை குத்தி காட்டிக் கொடுப்­ப­தற்கு முற்­ப­டு­கின்­றனர். அதற்­காக வட்ஸ் அப் மற்றும் சமூக ஊட­கங்­களை பயன்­ப­டுத்தி வரு­கின்­றனர். இவர்கள் முஸ்லிம் என்ற தோர­ணையில் காட்­டிக்­கொ­டுத்து வாழ முற்­படும் புல்­லு­ரு­வி­க­ளாவர். இது முற்­றிலும் அனு­ம­திக்க முடி­யாத செய­லாகும். இத்­த­கைய சந்­தர்ப்­ப­வா­தி­க­ளான இஸ்­லா­மிய இயக்­க­வா­தி­களை இனங்­கண்டு சமூ­கத்தில் இருந்து ஓரம் கட்ட வேண்­டி­யது எம் சமூ­கத்தின் பொறுப்­பாகும்.

அல்­குர்­ஆனின் வச­னங்­களை நாம் ஆழ­மாக ஆராய்ந்தால் சில விட­யங்கள் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த அதுவும் அன்­றைய அரே­பிய சமூ­கத்­திற்கு இஸ்­லாத்தை போதனை செய்த 23 வருட காலப்­ப­கு­திக்குள் இருந்த சூழ்­நி­லை­களை கவ­னத்தில் கொண்டு இறங்­கிய அல்குர் ஆன் வச­னங்­க­ளா­கவும் உள்­ளன. நாம் முஸ்­லிம்கள் என்ற வகையில் அல்­குர்­ஆ­னையோ நபி­ய­வர்­களது வாழ்க்கை வழி­காட்­டல்­க­ளையோ மறுக்க முடி­யாது. ஆனாலும் எல்லா இஸ்­லா­மிய சட்­டங்­க­ளையும் இலங்கை போன்ற இஸ்லாம் அல்­லாத மாற்று மத ஆட்சி நிர்­வாகம் நடக்­கின்ற நாட்டில் அமுல்­ப­டுத்த முடி­யாது.

இருந்­தாலும் இந்த முஸ்லிம் சமூ­கத்தை கண்­ணி­யப்­ப­டுத்தும் வகையில் முஸ்லிம் தனியார் சட்டம் என்ற அடிப்­ப­டையில் அர­சாங்கம் பல சலு­கை­க­ளையும் உரி­மை­க­ளையும் வழங்கி இருக்­கின்­றது. அதன் அடிப்­ப­டையில் இங்கு பல இஸ்­லா­மிய இயக்­கங்கள் உரு­வாகி பல கோணங்­களில் செயற்­றிட்­டங்­களை முன்­வைத்தும் அலு­வ­ல­கங்­களை அமைத்தும் இஸ்­லா­மிய தஃவாப் பணி­க­ளையும் சன்­மார்க்க போத­னை­க­ளையும் மேற்­கொண்டு வரு­கின்­றன. இந்­நி­லையில் நாம் எல்லை மீறி இஸ்­லா­மிய போதனை என்றும் இஸ்­லாத்­திற்கு மாற்­ற­மா­னதும் விரோ­த­மா­ன­து­மான செயல்­களை இல்­லா­தொ­ழிப்­பது என்ற அடிப்­ப­டையில் பௌத்த, இந்து, கிறிஸ்­தவ மதங்­க­ளுக்கு அச்­சு­றுத்­த­லாக அல்­லது அவர்­க­ளது மத வணக்க, கலா­சார, பாரம்­ப­ரி­யங்­களை நாச­மாக்கி அழிக்கும் வகையில் செயற்­பட முடி­யாது. வடக்கு, கிழக்கில் தமிழ் மக்­க­ளோடும் தெற்கில் சிங்­க­ள­வர்­க­ளோடும் இரண்­டறக் கலந்­த­வர்­க­ளாக ஒற்­று­மை­யாக வாழ்ந்து வரு­கின்றோம். இந்த ஒற்­று­மைக்கு சுமார் 1200 வரு­டங்­க­ளுக்கு மேற்­பட்ட வர­லாறு இருந்து வரு­கின்­றது.

இஸ்­லாத்­திலும் அல்­குர்­ஆ­னிலோ அல்­லது நபி­ய­வர்­க­ளது வாழ்க்கை வழி­காட்­டல்­க­ளிலோ முஸ்­லி­மல்­லா­த­வர்­க­ளோடு எதிரி மனப்­பான்­மையில் வாழ வேண்டும் என்ற எவ்­வா­றான போத­னை­களும் இல்லை. அதற்கு அல்­குர்­ஆனில் உள்ள 06 ஆவது ஸூரா அல் அன்ஆம் மற்றும் 60 ஆவது ஸூரா அல் முன்­த­ஹினா ஆகிய சூராக்கள் சிறந்த ஆதா­ரங்­க­ளாகும்.

ஸூரா அல் அன்­ஆமில் 108 ஆவது வச­னத்தில் பின்­வ­ரு­மாறு கூறப்­பட்­டி­ருக்­கின்­றது. “அவர்கள் அழைக்கும் (வணங்கும்) அல்லாஹ் அல்­லா­த­வற்றை (தெய்­வங்­களை) திட்­டா­தீர்கள். அவ்­வாறு திட்­டினால் அவர்கள் வரம்பு மீறி (எல்லை கடந்து) அல்­லாஹ்வை திட்­டு­வார்கள்”. 6:108

இவ்­வாறு பார்க்கும் போது கடந்த 7 வரு­டங்­க­ளாக இலங்கை வாழ் முஸ்­லிம்கள் இத்­த­கைய செயல்­களால் மிக மோச­மாக பாதிக்­கப்­பட்டு கடு­மை­யான மன­வே­த­னைக்­குட்­பட்­டி­ருப்­பதை மறக்க முடி­யாது. பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் அல்­லாஹ்வை மிக மோச­மான முறையில் தகாத வர்த்­தை­களால் திட்­டிய பல சந்­தர்ப்­பங்­களை நாம் மறக்க முடி­யாது.

அதே போன்று ஸூரா அல் முன்தஹினாவின் 08 ஆம் வசனம் பின்வருமாறு கூறுகின்றது. “மார்க்க விசயத்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இருப்பிடங்களில் இருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே, அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும் நீதம் செய்வதையும் அல்லாஹ் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதியாக நடப்பவர்களை  நேசிக்கின்றான். 60: 08

இந்த வசனங்கள் முஸ்லிம்கள் அந்நிய சமூகத்தவர்களுடன் வாழுகின்ற போது எவ்வாறு அவர்களுடன் ஒற்றுமையாகவும் புரிந்துணர்வுடனும் வாழ்வதையும் சகவாழ்வை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றது.

அவ்வாறிருக்க பல்லின மத, மொழி, கலாசார பாரம்பரியங்களைக் கொண்ட இலங்கை போன்றதொரு நாட்டில் இன உறவை முறித்து முஸ்லிம்கள் மாத்திரம் தனித்துவமான ஓர் இனமாக வாழ முடியுமா? அதே நேரம் எமது இருப்பை கேள்விக்குறியாக்கும் பல செயற்றிட்டங்கள் திரைமறைவில் நடைபெறுகின்ற நிலையில் அவர்கள் எமது மத நடவடிக்கைகளையும் பொருளாதாரத்தையும் அழித்து நாசமாக்கி எம்மை வெற்று சமூகமாக்குவதற்காக தருணம் பாத்திருக்கின்றனர். அத்தகையவர்களுமக்கு இதுபோன்ற  சந்தர்ப்பங்கள் கதவுகளை அகலத் திறந்து கொடுப்பதாக அமையக் கூடாது. எம்மை நாமே அழித்துக்கொண்டால் இந்நாட்டில் இஸ்லாத்தை எவ்வாறு வாழ வைப்பது? முஸ்லிம்களால் அரேபிய தீபகற்பத்திற்கு குடிபெயர முடியுமா? நாம் எமது நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றபோது பல கோணங்களில் இருந்து சிந்தித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றோம்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.