சிரியப் படைகளுடன் மோதலில் ஈடுபட்ட கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளித்த பிராந்திய எதிர்நிலை நாடுகளுடன் இராஜதந்திரத் தொடர்புகளை வலுப்படுத்தும் நகர்வுகளை ஜனாதிபதி பஷர் அல்-அஸாத் மேற்கொண்டு வரும் நிலையில் டமஸ்கஸில் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் ஐக்கிய அரபு அமீரக தூதரகம் திறக்கப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு பஷர் அல்-அஸாதிற்கு எதிராக மக்கள் எதிர்ப்பு ஆரம்பமாகியதையடுத்து ஐக்கிய அரபு அமீரகம் தூதரகத்தை மீள அழைத்துக் கொண்டது. அந்தப் போராட்டம் கொடூரமான பல்முனை யுத்தமாக மாறியதோடு அதன் காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர், மில்லியன் கணக்கானோர் தமது வாழ்விடங்களை இழந்தனர், நாட்டின் உட்கட்டமைப்புக்களும் சேதமடைந்தன.
சுமார் ஏழு ஆண்டுகளின் பின்னர் சிரியப் படையினர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளை தமது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்ததனையடுத்து கடந்த வியாழக்கிழமை மத்திய டமஸ்கஸிலுள்ள அபூ றுமானேஹ் மாவட்டத்தில் அமைந்துள்ள கட்டடத்தில் இராஜதந்திரிகள் மற்றும் ஊடகவியலாளர்களும் பங்குபற்றுதலுடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் கொடி ஏற்றப்பட்டது. தூதரகத்தின் பதில் பொறுப்பதிகாரி ஏலவே பணிகளை ஆரம்பித்துவிட்டார் என அமீரக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூதரகம் மீளத் திறக்கப்படுவதன் நோக்கம் சிரியாவுடனான உறவினை சுமுக நிலைக்குக் கொண்டு வருவதும் அரபு – சிரியா விவகாரங்களில் பிராந்தியத் தலையீடுகள் இடம்பெறும் ஆபத்தை தடுப்பதுமாகும் என ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளதாக சவூதிக்கு சொந்தமான அல்-அரபிய்யா தொலைக்காட்சி அலைவரிசை தெரிவித்துள்ளது.
-Vidivelli