- மத்ரஸா மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் மத்ரஸா அதிபருக்கு விளக்கமறியல்
- 17 வயது அரபுக் கல்லூரி மாணவி தற்கொலை கலண்டர் விற்பனை விவகாரமா காரணம் என பொலிஸார் விசாரணை
- வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 6 அரபுக் கல்லூரி மாணவர்களின் ஜனாஸாக்கள் மீட்பு
கடந்த ஒரு வருட காலப் பகுதிக்குள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட செய்திகளே இவை.
சாய்ந்தமருது மத்ரசாவில் அதன் அதிபரால் கடுமையான தண்டனைக்குட்பட்டதாக கூறப்படும் 13 வயதான மாணவர் மலசல கூடத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். ஆரம்பத்தில் இதனை தற்கொலை என குறித்த அதிபர் நாடகமாடிய போதிலும் பின்னர் கொலை என்ற சந்தேகத்தில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
அதேபோன்று இரு வாரங்களுக்கு முன்னர் புத்தளம் பகுதியில் உள்ள ஒரு அரபுக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். கலண்டர் விற்பனை விவகாரமும் இதற்கான காரணங்களில் ஒன்று என குடும்பத்தினர் கூறுகின்றனர். இது தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இன்று பல அரபுக் கல்லூரி நிர்வாகங்கள் வருட இறுதியில் கலண்டர்களை அச்சிட்டு வீடு வீடாக கடை கடையாகச் சென்று விற்று வருமாறு மாணவர்களைத் திணிக்கின்றனர். இளம் மாணவர்கள் வெயிலில் அலைந்து இவற்றை விற்பனை செய்ய வேண்டியுள்ளது. இவ்வாறு மாணவர்களை கட்டாயமாக கலண்டர் விற்பனையில் ஈடுபடுத்துவது சிறுவர் மற்றும் மனித உரிமை மீறல் என்ற அடிப்படை கூட இவர்களுக்குத் தெரியவில்லை. இவ்வாறான மத்ரசாக்கள் இயங்க எப்படி அனுமதி வழங்க முடியும்? இவற்றை கண்காணிப்பதற்கு யாருமில்லையா?
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் நிந்தவூர் அரபுக் கல்லூரி ஒன்றில் கல்வி கற்ற ஆறு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆபத்தான வெள்ளத்தைக் கடந்து அனுப்புவதை விட மத்ரசாவில் பாதுகாப்பாக வைத்திருக்கவே கல்லூரி நிர்வாகம் முயற்சித்திருக்க வேண்டும். இது இறைவனின் நாட்டம் என்ற போதிலும் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் அரபுக் கல்லூரிகள் அசிரத்தையாக இருக்கின்றன என்பதையே இந்தச் சம்பவம் உணர்த்தி நிற்கிறது.
எனவேதான் எதிர்காலத்திலும் இவ்வாறு அரபுக் கல்லூரிகளை மையப்படுத்திய சர்ச்சைகள் தொடர அனுமதிக்கப் போகிறோமா அல்லது அவற்றை ஒழுங்குபடுத்தி இறுக்கமான சட்டதிட்டங்களின் கீழ் கொண்டு வரப் போகிறோமா என்ற சிந்தனையைக் கிளறவே இந்தப் பத்தி முயல்கிறது.
நாட்டில் இயங்கும் பல பழைமை வாய்ந்த மத்ரசாக்களும் புதிதாக உருவாக்கப்பட்ட நவீன காலத்தின் தேவைகளைக் கருத்திற் கொண்டு இயங்கும் சில மத்ரசாக்களும் மிகச் சிறப்பாக தமது பணியை முன்னெடுக்கின்றன. அவற்றை நாம் பாராட்டுகின்றோம்.
எனினும் நாட்டின் மூலை மூடுக்கெல்லாம் நாளுக்கு நாள் அரபுக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு முறையற்று செயற்படும் நிறுவனங்கள் பற்றியே நாம் அதிகம் கவலைப்படுகிறோம். இந்த அரபுக் கல்லூரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட வகையில் செயற்படுகின்றனவா என்பது தான் பாரிய கேள்விக்குறியாகும். இவற்றைக் கண்காணிப்பதற்கான நடைமுறை ஒன்று எமது நாட்டிலில்லை. முஸ்லிம் சமய திணைக்களம் இவற்றைப் பதிவு செய்வதில் மாத்திரமே கவனம் செலுத்துகிறது. மாறாக இவற்றைக் கண்காணித்து கண்டிப்பதற்கு முன்வருவதில்லை.
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே அரபுக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. எனினும், கடந்த 1981ஆம் ஆண்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் உருவாக்கப்பட்ட பின்னர், அரபுக் கல்லூரிகளை பதிவுசெய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை 317 அரபு கல்லூரிகள் நாடளாவிய ரீதியில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதேவேளை, 132 ஹிப்ழு மத்ரஸாக்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
இதில் அதிகூடிய 41 அரபுக் கல்லூரிகள் அம்பாறை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் 37 அரபுக் கல்லூரிகளும், திருகோணமலை மாவட்டத்தில் 29 அரபுக் கல்லூரிகளும், கண்டி மாவட்டத்தில் 28 அரபுக் கல்லூரிகளும், கொழும்பு மாவட்டத்தில் 26 அரபுக் கல்லூரிகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 அரபுக் கல்லூரிகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
எனினும் ஈஸ்டர் தற்கொலைத் தாக்குதலை அடுத்து அரபுக் கல்லூரிகளை பதிவுசெய்யும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. இருப்பினும் பதிவுசெய்யப்படாத அரபுக் கல்லூரிகள் நாட்டில் பல இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதனை எவராலும் கண்காணிக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாமலுள்ளது. பல பள்ளிவாசல்களில் இன்று பகுதி நேர குர்ஆன் மனன வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாடசாலைக்குச் செல்வதற்கு முன்பாகவும் பாடசாலை விட்டு வந்த பிற்பாடும் மாணவர்கள் மனன வகுப்புகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. விளையாடுவதற்கோ ஏனைய உடல் உள விருத்தி செயற்பாடுகளில் ஈடுபடவோ அவர்களுக்கு நேரம் வழங்கப்படுவதில்லை. சரியான நேரசூசியின்றி இவ்வாறான வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அல்குர்ஆனை மனனமிடுவதன் முக்கியத்துவத்தை நாம் அறிவோம். எனினும் அதனை மாணவர்களின் உடல் உள ஆரோக்கியத்தை மையப்படுத்தியே முன்னெடுக்க வேண்டும். அவர்களைக் கஷ்டப்படுத்தி மனனமிடச் செய்வதை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை அடுத்து அரபுக் கல்லூரிகள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக முன்வைக்கப்பட்டது. இதில் அன்று எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்கவில்லை. எனினும் இப்போது அதனை எல்லோரும் வசதியாக மறந்துவிட்டார்கள்.
இவற்றுக்குத் தீர்வாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்களின் பங்களிப்புடன் அரபுக் கல்லூரிகளுக்கான பொதுவான பாடத்திட்டமொன்றை உருவாக்கியுள்ளது. எனினும், இதற்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சம்மதம் வழங்கவில்லை என்றும் அரபுக் கல்லூரிகள் பின்பற்றும் சிந்தனை முகாம்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. நமது சமூகத்தின் சாபக்கேடே இந்தக் கருத்து வேறுபாடுகள்தான்.
அதேவேளை, அரபு மத்ரஸா கல்வி தொடர்பில் கல்வி அமைச்சினால் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் உறுப்பினராக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதிநிதியொருவரும் உள்ளடக்கப்பட்டுள்ளார். எனவே, நாட்டிலுள்ள அரபு மத்ரஸாக்களை ஒழுங்குபடுத்த வேண்டியதன் அவசியம் உணரப்படும் இக் காலகட்டத்தில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் ஒன்றிணைந்து இந்தப் பணிகளை முன்னெடுக்க வேண்டும்.
குறிப்பாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், பதிவுசெய்யப்பட்ட அரபு மத்ரஸாக்களையாவது முதலில் கண்காணிப்பதற்கான பொருத்தமான நடமுறையொன்றினை அமுல்படுத்த வேண்டியுள்ளது. மாவட்ட ரீதியாக கலாசார உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ள போதிலும் அவர்களது செயற்பாடுகள் திருப்திப்படும்படியாக இல்லை.
எப்படியோ, நாட்டிலுள்ள அனைத்து அரபு மத்ரஸாக்களும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். அதேவேளை, இந்த அரபு மத்ரஸாக்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட விசேட பொறிமுறையொன்றின் ஊடாக கண்காணிக்கப்பட வேண்டும். முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் உருவாக்கப்படுவதற்கு முன்னர் அரபு மத்ரஸாக்கள் கல்வி அமைச்சின் கீழே பதிவுசெய்யப்பட்டதைப் போன்று மீண்டும் இவற்றை கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வர வேண்டும். இதன் ஊடாக அரபு மத்ரஸாக்களுக்கு அரச அங்கீகாரம் உள்ளிட்ட பல நன்மைகள் கிட்டும். இது தொடர்பிலான கருத்தாடல்கள் முஸ்லிம் சமூகத்திலும் அதற்கு வெளியிலும் பரவலாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
அரசாங்கத்தின் க்ளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் அரபுக் கல்லூரிகளும் க்ளீன் செய்யப்பட வேண்டும். இங்கு நாம் க்ளீன் எனக் குறிப்பிடுவது சுத்தத்தை மட்டுமல்ல. அவற்றை மிகச் சரியான ஒழுங்குமுறையின் கீழ் கொண்டுவருவதையும்தான்.- Vidivelli