தற்சமயம் முல்லைத்தீவு இராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 103 ரோஹிங்யா அகதிகளை சந்தித்துப் பேச இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவினருக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஈரானுக்கான தூதுவருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம். எம்.ஸுஹைர் வலியுறுத்தியுள்ளார். இந்த அகதிகளில் பெண்களும், சிறார்களும் பலர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
2017 முதல் 2024 வரை மியன்மாரில் இனவாதக் குழுக்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை காரணமாக சுமார் 2.5 மில்லியனுக்கும் அதிகமான ரோஹிங்யா இன முஸ்லிம்கள் மியன்மாரை விட்டு வெளியேறியுள்ளதுடன் 25,000 க்கும் அதிகமான மக்கள் அந்நாட்டிலேயே படுகொலை செய்யப்பட்டனர்.
இது தவிர, உயிரை காப்பதற்காக கடல் வழியாக வேறு நாடுகளுக்குத் தப்பிச் செல்ல முயற்சி செய்தவர்களில் பலர் படகு விபத்துக்கள் காரணமாகவும் மாண்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தற்சமயம், இந்தியா, தாய்லாந்து, மலேசியா, கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் அந்த நாடுகளுக்கு தஞ்சம் தேடி வந்த ரோஹிங்யாக்களுக்கு அடைக்கலம் தந்துள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி எம். எம்.ஷுஹைர் தெரிவித்தார்.
மேலும், மியன்மாரில் உள்ள இராணுவ ஆட்சியாளர்களின் அடக்குமுறையை பொறுத்துக் கொள்ள முடியாமல், அமெரிக்கா வந்த மியன்மார் பௌத்தர்கள் பலர் பிறகு அந்நாட்டுக்கு வந்த ரோஹிங்யா முஸ்லிம்களை வரவேற்றதாகவும் கூறிய அவர், இன மத வேறுபாடு பார்க்காமல் இங்கு வந்துள்ள ரோஹிங்யா அகதிகளுக்கு கருணை காட்ட வேண்டும் என இலங்கையர்கள் பலரும் குரல் எழுப்பி வருவதையும் சுட்டிக்காட்டினார்.
மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி எம். எம்.ஸுஹைர், 1948 ஆம் ஆண்டு மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா பிரகடனத்தில், 14 வது சரத்தில் ‘தங்கள் சொந்த நாடுகளின் துன்புறுத்தல்கள் காரணமாக வேறு நாடுகளுக்குச் சென்று தஞ்சம் கோருவதற்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிமை உண்டு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்ததோடு இலங்கையும் அப்பிரகடனத்தின் ஒரு சாரார் எனவும் சுட்டிக்காட்டினார்.
மேலும் மியன்மாரில் ரோஹிங்யாக்கள் துன்புறுத்தப்படுவது உலகம் அறிந்த உண்மை. நிலைமை இவ்வாறிருக்க தொழில்நுட்ப விடயங்களை தேடி நேரத்தை வீணாக்காது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இந்த ஆதரவற்ற மக்களைச் சந்தித்து ஐ.நாவின் பரிந்துரையின் படி செயற்படுவதற்கு அரசு வசதி செய்து கொடுக்க வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி ஷுஹைர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டுதலுக்கு மேலதிகமாக, இலங்கையின் அரசியலமைப்பின் 27 (15) இன் பொதுக்கொள்கை மற்றும் அடிப்படைக் கடமைகள் பற்றிய வழிகாட்டுதல்களின் கீழ், அரசாங்கங்கள் சர்வதேச சமாதானம், பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் நியாயமான சர்வதேச பொருளாதார மற்றும் சமூக ஒழுங்கை நிலைநாட்ட ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி ஷுஹைர் சுட்டிக்காட்டினார்.
அது மட்டுமன்றி மனித நேய அடிப்படையிலான குறிப்பிட்ட உடன்படிக்கை ஒன்றிற்கு அரசாங்கம் ஒரு தரப்பினராக இல்லாவிட்டாலும், நடைமுறையில் உள்ள சர்வதேச மனிதாபிமான நியதிகளை அரசு கவனத்தில் கொள்ள கடமைப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூட பல்வேறு வழக்குகளில் வரைவிலக்கணம் வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்பில் தமக்குக் கிடைத்துள்ள அறிவித்தல் அல்லது எழுத்துபூர்வ உத்தரவின் பரிந்துரைகளை ஒருவர் நிராகரித்தால் அல்லது அதன்படி செயற்படத் தவறினால், அவ்வாறான நடவடிக்கைகள் மூலம் அவ்வாணைக்குழு அவமதிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் ஏற்படுவதாகவும், அவை தண்டனைக்குரியவை என்பதையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி ஸுஹைர் எச்சரித்தார்.
மேற்படி அகதிகளுக்கு புகலிடம் வழங்க இலங்கை அரசு விரும்பாத பட்சத்தில், ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் மற்றும் இலங்கை ஐக்கிய நாடுகள் அலுவலகம் ஊடாக இந்த அகதிகளை ஏற்றுக் கொள்ள இணக்கம் தெரிவிக்கும் வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க இயலும் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். ஸுஹைர் மேலும் தெளிவுபடுத்தினார்.- Vidivelli