வடக்கில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 25 ஆயிரத்து 519 ஆக அதிகரித்துள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களில் பலர் இன்னும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் தனியார் துறைகளும் உதவிகளை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வடக்கில் கடந்த ஒருவார காலமாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 500 வீடுகள் முழுமையாகவும் 4000க்கு அதிகமான வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. வீடுகள் இழந்தவர்கள் வட மாகாண முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் கடந்த ஒரிரு நாட்களில் மழைவீழ்ச்சி குறைவடைந்துள்ளது. வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை கடந்த சனிக்கிழமை மாலை வரை ஒரு இலட்சத்து 23 ஆயிரமாக காணப்பட்டது. ஆனால் நேற்று மாலையாகும்போது பாதிக்கப்பட்டவர்களின் தொகை ஒரு இலட்சத்து 25 ஆயிரமாக உயர்வடைந்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் 78 ஆயிரத்து 528 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 32 ஆயிரத்து 511 பேர் உள்ளடங்கலாக வடமாகாணத்தில் மாத்திரம் ஒரு இலட்சத்து 23 ஆயிரத்து 862 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரையில் மொத்தமாக 40 ஆயிரத்து 278 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
எனினும், இன்று மாலை வரை கிழக்கு கடற்கரை உள்ளிட்ட இன்னும் ஒருசில கடற்கரை பிரதேசங்களில் மழையுடனான காலநிலை நிலவும் என்றும் நாட்டை சூழவுள்ள கடற்கரை பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 25 தொடக்கம் 35 கிலோ மீற்றர்களாகவும் அல்லது மணித்தியாலயத்துக்கு 40 தொடக்கம் 50 கிலோமீற்றர்களாக காணப்படுமென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
-Vidivelli