றிப்தி அலி
“ஜனாஸா எரிப்புக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம்” என ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் (ஓகஸ்ட் 29ஆம் திகதி) விடிவெள்ளிக்கு வழங்கிய நேர்காணலில் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரான அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டு 90 நாட்கள் கழிந்துள்ளன. இந்த நிலையில் பலவந்த ஜனாஸா எரிப்பு தொடர்பில் இதுவரை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவின் அரசாங்கத்தினால் எந்தவித ஆரம்பகட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
இவ்வாறான நிலையிலேயே நேற்று முன்தினம் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வாய் மொழி மூலமான கேள்வியொன்றினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் எழுப்பியிருந்தார்.
கொவிட் தொற்று காரணமாக எரிக்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் பெயர், முகவரி, நெருங்கிய நபர்களின் பெயர் விபரம் ஆகியவற்றினை வழங்குமாறே ரவூப் ஹக்கீம் கோரியிருந்தார்.
இதற்கு சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் ஆளும்கட்சி பிரதம கொரடாவுமான நளிந்த ஜயதிஸ்ஸ பதிலளித்த போது நாட்டில் கொவிட் காலத்தில் மொத்தமாக எரிக்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 13,183 என்றார். எனினும், எரிக்கப்பட்டவர்களின் பெயர்கள், அவர்களின் முகவரி போன்ற தகவல்களை தகவலறியும் உரிமைச் சட்டம் மற்றும் மருத்துவ நெறிமுறைகள் ஆகியவற்றின் ஊடாக வெளியிட முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதனையடுத்து குறித்த வாய் மொழி மூலமான கேள்வி பாராளுமன்றத்தில் விவாதமாக மாறியது. சுகாதார அமைச்சரின் கருத்திற்கு பதிலளித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், “இவ்வாறான தரவுகள் அரசாங்கத்திடம் இருக்க வேண்டும். அதனை மக்கள் மயப்படுத்த வேண்டும். அவ்வாறில்லாமல் மறைத்து வைத்திருத்தல் மற்றும் அதனை வெளியிடமால் இருப்பது சுகாதார அமைச்சின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும்.
இதுவொரு பாரிய குற்றமுமாகும். பலவந்தமாக எரிக்கப்பட்டவர்களின் பெயர் மற்றும் முகவரியினைத் தான் நாம் கோருகின்றோம். இதில் என்ன பிரச்சினை இருக்கின்றது என்று எனக்குத் தெரியாது. எப்படியோ பலவந்தமாக எரிக்கப்பட்டவர்களின் பெயர்களை நீங்கள் வெளியிட வேண்டும்” என்றார்.
இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சரும் ஆளும் கட்சி பிரதம கொறடா, “மரணங்கள் தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானம் அந்த சமூகத்தின் ஒழுக்கத்தினை அளவிடுவதற்கான ஒரு கருவியாகும். கொரோனா சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் நாடு என்ற ரீதியில் வெட்கமடைய வேண்டும். அந்த சந்தர்ப்பத்தில் எமது கட்சியும் எதிர்ப்பு வெளியிட்டது. அத்துடன் விஞ்ஞானபூர்வமற்ற தகவல்களை வைத்து அறிக்கைகள் தயாரித்து தீர்மானம் மேற்கொண்டமையினை தவறு என்றோம்.
இங்கு தகவல்களை மறைப்பது பிரச்சினையில்லை. மருத்துவ ஒழுக்கநெறிக்கமைய நோயாளிகளின் தகவல்களை வெளியிடுவதிலேயே பிரச்சினை உள்ளது. இது தொடர்பில் அமைச்சரவையில் பிழையான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறான ஒரு நிலையினை எதிர்காலத்தில் நாம் மேற்கொள்ள அனுமதிக்கமாட்டோம். கடந்த அரசாங்கமே இந்த பிழையான நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தது. இதனால் பெயர்களை வெளியிடுவதில் எமக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. எனினும், மருத்துவ ஒழுக்கநெறியின் பிரகாரம் வெளியிட முடியாதுள்ளது. நீங்கள் கோருகின்ற விடயங்கள் தொடர்பில் சட்டமா அதிபருடன் கலந்துரையாடிய பின்னர் பதிலளிக்கின்றேன்” என்றார்.
இவ்விடயத்தில் குறுக்கிட்ட கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான். “கட்டாய எரிப்பு அரசியல் தீர்மானமில்லை. இது சுகாதார அமைச்சின் தீர்மானம் என அப்போதைய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக இருந்த அனில் ஜயசிங்க ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழுவிடம் தெரிவித்தார். இவ்வாறான ஒருவரை ஏன் நீங்கள் இன்று சுகாதார அமைச்சின் செயலாளராக நியமித்துள்ளீர்கள்” என்று கேள்வி எழுப்பினார்.
கொவிட் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் போது சுகாதார அமைச்சின் நிபுணர்களின் விடயங்கள் கவனத்திற்கொள்ளப்படவில்லை. மாறாக அரசியல்வாதிகளின் அழுத்தங்களே அதிகமாக காணப்பட்டன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் நிபுணர்கள் விஞ்ஞான ரீதியான விடயங்களை வெளிப்படுத்தினர். எனினும் அரசியல்வாதிகளின் தீர்மானம் மேலோங்கியதால் இந்த நிலைமை ஏற்பட்டது என சுகாதார அமைச்சர் பதிலளித்தார்.
எனினும், கவலையான விடயம் என்னவெனில் பாராளுமன்ற உறுப்பிர் முஜீபுர் ரஹ்மானினால் கேட்கப்பட்ட கேள்விக்கு சுகாதார அமைச்சினால் நேரடியாக பதில் வழங்கப்படவில்லை. மாறாக அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட அனில் ஜயசிங்கவின் நியமனத்தினை சரிகாண முயற்சிக்கின்றதை இதன் ஊடாகத் தெளிவாகின்றது.
இதேவேளை, கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களை தகனம் செய்ததன் மூலம் சமய மரபுகளுக்கும் அம்மக்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதியை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கோட்டாபய அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம் எந்தவகையிலும் நியாயப்படுத்தப்படக்கூடிய ஒன்றல்ல. இது மிகவும் உணர்ச்சியற்ற மற்றும் மிகவும் கொடூரமான ஒரு தீர்மானம்.
ஒரு மரணத்திற்குப் பின்னர் நிறைவேற்றப்படும் சம்பிரதாயங்கள் மூலம் குடும்பத்தினர் தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தவும் துக்கத்தைக் குறைக்கவும் முடிகிறது. அதனால்தான் இதற்கு சமய ரீதியான பெறுமானம் வழங்கப்பட்டுள்ளது.
கொவிட் தொற்றுநோய் போன்ற நிச்சயமற்ற சூழ்நிலையில் இத்தகைய மரபுகள் மிகவும் முக்கியமானவை. இப்படியான சந்தர்ப்பத்தில் இத்தகையதொரு கொடூரமான தீர்மானத்தை மேற்கொண்டமையை எந்தவகையிலும் அனுமதிக்க முடியாது.
அதற்கு அரசியல் அல்லது வேறு எந்த நியாயமும் செல்லுபடியாகாது. விஞ்ஞான அடிப்படையின்றி இதுபோன்றதொரு தீர்மானத்தை மேற்கொள்வது நியாயமற்றது.
அதனால், எந்த ஒரு பிரிவினருக்கும் இதுபோன்ற துன்பத்தை ஏற்படுத்தும் அல்லது சமய மரபுகளை அவமதிக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் எமது அரசாங்கம் ஒருபோதும் மேற்கொள்ளாது.
ஏதேனும் ஒரு சம்பவம் நடந்தால் அது அப்போதைய அரசியல் கலாசாரத்தின் அடிப்படையில் அந்த அதிகாரிகள் மேற்கொண்ட தீர்மானம் என்று நாம் நினைக்கிறோம். அந்த கலாசாரத்தை நாம் மாற்றுவோம். மீண்டும் மக்களைப் பாதிக்கும் இவ்வாறான தீர்மானங்களை அதிகாரிகள் எடுக்க இடமளிக்க மாட்டோம் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.
இதன்மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதை நாம் அறிவோம். அதற்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து கலந்துரையாட நாங்கள் தயாராக உள்ளோம்” என்றார்.
இதேவேளை, பலவந்த எரிப்பு விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீட்டை வழங்குங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.
கொவிட் காலத்தில் ஒரு இனத்தையும் மதத்தையும் இலக்கு வைத்து கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் நடந்து கொண்டது. கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கிய வழிகாட்டுதல்களையும் மீறி செயற்பட்டது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
உரிமைகள் மீறப்பட்ட இஸ்லாமிய சமூகத்தினருக்கும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும். இதனால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீட்டை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
இவ்வாறானதொரு செயற்பாட்டை ஹிட்டலரும் மேற்கொண்டார். இது தொடர்பில் அரசாங்கம் என்ற ரீதியில் கலந்துரையாடி உங்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து இதனுடன் தொடர்புடையவர்களுக்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என சபை முதல்வாரன அமைச்சர் பிமல் ரத்நாயக்க பதிலளித்தார்.
அத்துடன் இந்த விடயத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் எதிர்க்கட்சியுடன் விரிவாக கலந்துரையாடத் தயாராகவுள்ளோம் எனப் பதலளித்தார்.
எப்படியோ இது தொடர்பில் சுகாதார அமைச்சு மட்டத்தில் விசாரணைகள் மேற்கொண்டு பொறுப்பானவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.
தற்போதைய ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் பலவந்த எரிப்பு விடயத்தில் ஒரு நிலைப்பாட்டிலேயே உள்ளன. இதனை கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் நேரடியாக அவதானிக்க முடிந்தது.
இதனால், இன்னும் காலம் தாமதிக்காமல் பலவந்த எரிப்பினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயம் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.- Vidivelli