ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் களமிறங்கத் தயாராகவே உள்ளார். மஹிந்த தரப்புக்கு வெற்றியடையும் நம்பிக்கை இருக்குமானால் ஜனவரியில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொது தேர்தல்களை நடத்துவது தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
2019 ஜனவரிக்குப் பின்னர் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும். ஆனால் பொதுத் தேர்தல் 2020 ஆம் ஆண்டே இடம்பெறும். அடுத்த பொதுத் தேர்தல் 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி 17 ஆம் திகதியே நடத்தப்படும். அதற்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த முடியாது. அதற்கு முன் தேர்தலை நடத்த வேண்டுமானால் பெரும்பான்மையோடு பாராளுமன்றத்தை கலைத்தால் மாத்திரமே நடத்த முடியும்.
பலவந்தமாகவே பிரதமர் பதவியினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ பெற்றுக்கொண்டார். அவ்வாறு பெற்றுக்கொண்டாலும் நீண்டநாட்கள் அந்தப் பதவியில் அவரால் நிலைக்க முடியவில்லை. இவ்வாறானவொரு நிலைமைகளில் அவர்களால் பொதுத் தேர்தலை நடத்த முடியது.
பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு மாத்திரம் 106 ஆசனங்கள் உள்ளன. ஆட்சி புரியும் அந்தஸ்தும் எங்களுக்கே உள்ளது. கிடைக்கப்பெற்றிருக்கும் இந்தக் குறுகியகாலத்தில் வெற்றிகரமாக ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தவே எதிர்பார்க்கின்றோம். சுதந்திரக் கட்சி உறுப்பினர்களையும் எங்களுடன் இணைத்துக்கொண்டு ஆட்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஏனையவர்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு ஆட்சிபுரிவதற்கான அவசியமும் எங்களுக்கு இல்லை. சிக்கலான நிலை ஏற்படுமாயின் தேர்தலுக்கு செல்வோம். தேர்தலுக்கான தீர்மானம் எங்களிடமே உள்ளது.
மாறாக பொதுத் தேர்தலை நடத்தினால் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு இருக்குமானால் பொதுத் தேர்தலை நடத்தவேண்டும். இறுதியில் யார் வெற்றிபெறுவார் என்பதை தீர்மானிப்போம்.
பிளவுபட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி இன்று ஒன்றிணைந்துள்ளது. கட்சியில் எந்தவித பிரச்சினைகளும் இல்லை. எங்களுக்கும் இதுவே சரியான சந்தர்ப்பம். தற்போது சுதந்திரக்கட்சி, பொதுஜன பெரமுன ஆகிய இருகட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளன. ஆகவே, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையிருக்குமானால் உடனடியாக ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும். ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்தே வைத்துள்ளது. தேவையான நேரத்தில் வேட்பாளரை அறிவிப்போம். ஆனால் அவர்களின் தரப்பில் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை குறிப்பிட முடியாத நிலை எழுந்துள்ளது.
-Vidvelli