எம்.எல்.எம்.மன்சூர்
தேசிய மக்கள் சக்தியின் அமோக தேர்தல் வெற்றியையடுத்து, ‘தகுதியும், திறமையும் வாய்ந்தவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்படும் ஆட்சி’ (Meritocracy) எனப் பொதுவாக அழைக்கப்படும் ஓர் ஆட்சி முறையை நாடு முதல் தடவையாக பரீட்சித்துப் பார்க்கப் போகிறது.
தென்னாசியாவில் மேற்கொள்ளப்படும் முதலாவது அரசியல் பரீட்சார்த்தம் இது. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் ‘System Change’ என்ற கோஷம் தேர்தல்களில் இன்னமும் ஒரு முதன்மைச் சுலோகமாக முன்வைக்கப்பட்டிருக்காத பின்னணியில், அந்தத் திசையில் காலடி எடுத்து வைக்கும் பிராந்தியத்தின் முதலாவது நாடு என்ற பெருமையை இலங்கை தட்டிச் செல்கிறது. அடுத்து வரும் ஆண்டுகளில் இலங்கை அரசியலிலும். சமூகத்திலும் ஏற்படவிருக்கும் பல புரட்சிகரமான மாற்றங்களின் ஒரு தொடக்கப் புள்ளியாக இந்த வரலாற்றுத் தருணத்தை கருத முடியும். இலங்கை இப்பொழுது அந்த நிலைமாறு கால கட்டத்திற்குள் (Transitionary Period) பிரவேசித்திருக்கிறது. இதுவரையில் யாரும் பயணித்திராத ஒரு பாதையில் மேற்கொள்ளப்படும் ஒரு பயணம் அது. வழி தவறாவிட்டாலும் கூட, இடையிடையே சறுக்கல்கள் இடம்பெறக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் உள்ள பயணம். புதிய அரசாங்கத்தின் அந்த முதலாவது சறுக்கல் எவரும் எதிர்பார்த்திராத ஒரு புள்ளியில் ஏற்பட்டிருப்பது பெரும் துரதிர்ஷ்டம்.
கடந்த 10-12 ஆண்டுகளாக பல சந்தர்ப்பங்களில் சர்ச்சைகளின் மையத்தில் இருந்து வந்திருக்கும் முஸ்லிம் சமூகம், இப்பொழுது மீண்டும் ஒரு முறை தேசிய அரசியலில் ஒரு பேசு பொருளாக மாறியிருக்கிறது. அமைச்சரவையில் முஸ்லிம் உறுப்பினர் ஒருவர் உள்வாங்கப்படாத விடயம் குறித்து குறிப்பாக, முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில்- கடுமையான வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த ஜனாதிபதி தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் திசைகாட்டிக்கு வாக்களித்திருக்கும் பெருந்தொகையான முஸ்லிம்களின் மனக் குமுறல்களை பிரதிபலிக்கும் விதத்தில் எழுதப்பட்டிருக்கும் பதிவுகளால் முகநூல் நிரம்பி வழிகிறது. அதிர்ச்சி, சங்கடம் மற்றும் ஏமாற்றம் என்பவற்றுடன் கூடிய ஒரு விதமான குற்ற உணர்ச்சியில் பலர் தவித்து வருவதை தெளிவாக பார்க்க முடிகிறது. இலங்கை முஸ்லிம் சமூகத்தின் கூட்டு உளவியல் செயற்படும் விதத்தை நன்கு புரிந்து கொண்டிருக்கும் ஒருவரால் மட்டுமே இந்த உணர்வுகள் எந்த அளவுக்கு வலுவானமை என்பது ஊகித்துக் கொள்ள முடியும். “கொடுத்துப் பார்த்தோம்; நீங்கள் யார் என்பதை காட்டி விட்டீர்கள்! நன்றி, விடை பெறுகின்றோம்” என ஒரு பதிவு. அதே நேரத்தில், தேசிய மக்கள் சக்தியின் தீவிர ஆதரவாளர்களான ஒரு சில முஸ்லிம்கள் இந்தச் சர்ச்சை தொடர்பாக தமது கட்சிக்கு சார்பான ஒரு நிலைப்பாட்டை எடுத்து, முஸ்லிம் சமூகத்தின் மீது குறை காணும் இயல்பிலான பதிவுகளை எழுதி வருகிறார்கள்.
அத்தகைய பதிவுகளுக்கான ஓர் உதாரணம் இது -“கம்யூனிச அரசை நிர்மாணிக்க அவர்கள் நீண்ட காலமாக உடல், பொருள், ஆவி என்பவற்றை தியாகம் செய்து, போராடி வென்றிருக்கிறார்கள். தேர்தல் காலத்தில் வேட்பாளர்களாக இணைந்து கொண்ட புரியாணிவாலாக்கள் இன ரீதியாக அமைச்சுப் பதவி கேட்கிறார்கள். கம்யூனிஸ்டுகளாக மாறுங்கள்; முடியாதெனில், முஸ்லிம் காங்கிரஸிலேயே இருந்து கொள்ளுங்கள்”. இலங்கையில் இன்னமும் ஒரு கம்யூனிச அரசு அமையவில்லை. அதற்கான மக்கள் ஆணையை (Mandate) பெற்றுக் கொள்வதும் இன்றைய நிலையில் சாத்தியமில்லை.
ஆனால், (லெனினின் திரட்டிய நூல்கள் அனைத்தையும் கரைத்துக் குடித்தவர் எனக் கருதப்படும்) தோழர் டில்வின் சில்வா போன்ற கடும் போக்கு (Dogmatic) மார்க்சியவாதிகள் தேசிய மக்கள் சக்தி ஈட்டிக் கொண்டிருக்கும் தேர்தல் வெற்றியை ‘ஹைஜக்’ செய்திருக்கிறார்களா என்ற கேள்வி இங்கு எழுவது தவிர்க்க முடியாததாகும். மறுபுறம், இன்னொரு பிரிவினரிடம் இது ஒரு பெரும் கொண்டாட்ட மனநிலையை தூண்டிவிட்டிருக்கிறது. நக்கல், நையாண்டி, எகத்தாளம் என்பவற்றுடன் கூடிய ஏராளமான பதிவுகள். மீண்டும் ஒரு முறை முஸ்லிம்களை உணர்ச்சிவசப்படச் செய்து, இந்த விடயத்தை தமது அரசியல் ஆதாயத்திற்கு எப்படி பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதில் பலர் குறியாக இருந்து வருகிறார்கள். “முஸ்லிம் அமைச்சர்கள் இதுவரையில் சமூகத்திற்கு என்ன செய்து கிழித்திருக்கிறார்கள்” எனக் கேள்வி எழுப்பும் சிலர், அதனால் “அமைச்சரவையில் முஸ்லிம் அமைச்சர் ஒருவர் இல்லாததை ஒரு பெரிய குறையாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை” எனப் பொருள்பட எழுதுகிறார்கள்.
ஆனால், இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் பலர் இந்தப் பிரச்சினையை உணர்ச்சிவசப்படாத விதத்தில் அணுகி, மிகவும் நிதானமாக தமது கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள். அமைச்சரவையில் தமக்குப் பிரதிநிதித்துவம் வேண்டுமென முஸ்லிம்கள் விடுக்கும் வேண்டுகோளின் நியாயத்தை (Rationale) உரத்துக் குரலெழுப்பாமல், அதே நேரத்தில், அழுத்தமாக வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார்கள் அவர்கள். சமூகம் சம்பந்தப்பட்ட முக்கியமான பிரச்சினைகளின் போது பொதுப் புத்தி சார்ந்த நிலைப்பாடுகளை எடுக்காமல் வித்தியாசமான கோணத்தில் சிந்தித்து, கருத்துத் தெரிவிக்கக் கூடிய பலர் இருந்து வருவது மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயம். எதிர்காலம் குறித்த நம்பிக்கையை தரும் எழுத்துக்கள் அவை. அனைவரையும் உள்வாங்கும் ஒரு ஜனநாயகத்தில் (Inclusive Democracy) அரசாங்கத்தின் முக்கியமான முடிவுகள் மேற்கொள்ளப்படும் அதியுச்ச பீடமான அமைச்சரவையில் எல்லா இனங்களையும் / மதங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் விதத்தில் உறுப்பினர்கள் உள்வாங்கப்படுவது அவசியம். வாக்காளர்கள் என்ற முறையில் நாட்டின் இறைமையில் அனைவருக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்பதை அங்கீகரிக்கும் செயல் அது. ‘அப்படித் தேவையில்லை’ என்று வாதிடும் அளவுக்கு இலங்கை அரசியல் இன்னமும் இலட்சிய ரீதியான ஒரு நிலைமாற்றத்தை அடையவில்லை; மக்களும் அரசியல் ரீதியாக அந்த உயர் மட்ட மனப்பக்குவத்தை எட்டவில்லை; அதனால் இந்த நிலைமாறு காலப் பிரிவின் போது ஒரு சில சமரசங்களை செய்து கொள்வது தவிர்க்க முடியாதது. ‘அமைச்சரவையில் முஸ்லிம் உறுப்பினர் ஒருவர் சேர்த்துக் கொள்ளப்படாதது ஏன் என்ற விதத்தில் முஸ்லிம் தரப்புக்களால் பரவலாக எழுப்பப்பட்டிருக்கும் கேள்விக்கு அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர்கள் பிமல் ரத்னாயக்க மற்றும் விஜித ஹேரத் ஆகியோர் பதிலளித்திருக்கிறார்கள். பிமல் ரத்னாயக்க இது குறித்துப் பேசிய விதம், அவருடைய உடல் மொழி மற்றும் தொனி ஆகிய அனைத்துமே ‘இனிமேல் இந்த விடயம் பற்றி எவரும் பேச வேண்டாம்’ என்ற மறைமுகமான செய்தியையே விடுத்தன. மாற்றுக் கருத்துக்கள் முன் வைக்கப்படும் கோணத்தை பார்க்க மறுப்பதும், ‘இது குறித்துப் பேசிப் பயனில்லை’ என்ற விதத்தில் தொடர் உரையாடல்களுக்கான வாய்ப்புக்களை முற்றிலும் நிராகரிப்பதும் நிச்சயமாக ஒரு மக்கள் நேய அரசாங்கத்தின் பண்புக் கூறொன்றாக இருந்து வர முடியாது. மாறாக, அமைச்சர் விஜித ஹேரத் (அக்குரணை) முஸ்லிம் சமூகத்துடன் இது தொடர்பாக சிநேகபூர்வமான ஓர் உரையாடலை நிகழ்த்தியிருந்தார். ஆனால், பெருமளவுக்கு உணர்வுகளைத் தூண்டக் கூடிய ஒரு தலைப்பு தொடர்பான உரையாடல் ஒன்றை பகிரங்கமாக மேற்கொள்வதும், அச்சந்திப்பை நேரடியாக ஊடகங்களில் காட்சிப்படுத்துவதும் எந்த விதத்திலும் விவேகபூர்வமான ஒரு தெரிவாக இருந்து வர முடியாது என்பதனை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். ”
முஸ்லிம்களாக சிந்திக்காதீர்கள்; இலங்கையர்கள் என்ற கண்ணோட்டத்தில் சிந்தியுங்கள். அமைச்சரவையில் முஸ்லிம் உறுப்பினர்கள் இல்லாவிட்டாலும், நாங்கள் முஸ்லிம்களுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்குவோம்” என்ற செய்தியையே இரு அமைச்சர்களும் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு விடுத்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் இருவரும் அந்தக் கேள்விக்கு நேரடியாக பதிலளிப்பதை தவிர்த்து, மழுப்பலான விதத்திலேயே பேசினார்கள். இந்தச் சங்கடமான கேள்வியை உடனடியாக கடந்து செல்ல வேண்டும் என்ற பதற்ற உணர்வைப் பிரதிபலிக்கும் உடல் மொழியை இருவரிலும் அவதானிக்க முடிந்தது. “இலங்கையர்களாக சிந்தியுங்கள்” என்பது வரவேற்கத்தக்க ஒரு விடயம். அத்தகைய ஒரு மாற்றம் ஒட்டுமொத்த சமூகத்திலும் ஏற்படும் வரையில் இலங்கைக்கு விமோசனம் கிடைக்கப் போவதில்லை. அது குறித்து எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், அத்தகைய ஒரு மாற்றம் ஓரிரவில் ஏற்பட முடியாது. ஒரு கற்பனை நிலவரத்தை (Imaginary Scenario) உதாரணமாக எடுத்து, மேற்படி அமைச்சர்களின் கூற்றிலுள்ள முரண்பாட்டை சுட்டிக் காட்ட முடியும் – புத்தசாசனத்தின் மேம்பாட்டுக்கென (நீண்ட காலமாக) இருந்து வரும் அமைச்சு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையில் இந்தத் தடவை உள்வாங்கப்படவில்லை என வைத்துக் கொள்வோம். அதனையடுத்து பிக்குகள் அமைப்புக்களையும் உள்ளிட்ட பல பௌத்த இயக்கங்கள் கொதித்தெழுந்து, அரசாங்கத்திற்கு தமது கடும் எதிர்ப்பை தெரிவிக்கின்றன. அச்சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர்கள் பிமல் ரத்னாயக்க மற்றும் விஜித ஹேரத் ஆகியோர் ஊடக மாநாடொன்றை நடத்தி, பின்வரும் விதத்தில் கருத்துத் தெரிவிக்க முடியுமா – “சிங்கள பெளத்தர்களாக சிந்திக்காதீர்கள். அனைவரும் இலங்கையர்கள் என்ற கோணத்தில் சிந்தியுங்கள். புத்தசாசன அமைச்சு இல்லாவிட்டாலும் கூட, நாங்கள் பௌத்த மதத்துக்கு முழுமையான பாதுகாப்பை வழங்குவோம்”. நிச்சயமாக முடியாது. அதற்கு நியாயமான காரணங்களும் இருக்கின்றன. ஏனென்றால், இலங்கையின் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை சமூகங்கள் அனைத்துமே பல தசாப்த காலம் இனவாத அரசியல் சேற்றில் புரண்டு, விளையாடி உடல் முழுவதும் அச்சேற்றைப் பூசிக்கொண்டிருப்பவை. இப்பொழுது தான் அவர்கள் அந்த சேற்றைக் கழுவி, உடலை துடைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வரத் தொடங்கியிருக்கிறார்கள். வடக்கில் கோப்பாய் மற்றும் கிழக்கில் கல்முனை ஆகிய தொகுதிகளின் தேர்தல் முடிவுகளும், சிங்கள பெருநிலத்திற்குள் வரும் கம்பஹா, மாத்தறை போன்ற மாவட்டங்களில் (சிங்களவர்களின் விருப்பு வாக்குகளுக்கூடாக) முஸ்லிம் உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருப்பதும் அதற்கான வெளிப்படையான அடையாளங்கள். ஆனால், அத்தகைய ஒரு தலைகீழ் சிந்தனை மாற்றம் ஏற்படுவதற்கு இன்னமும் காலம் இருக்கிறது (Too Early) என்பதே யதார்த்தம். 1982 -2019 காலப் பிரிவில் 5 சதவீதத்திற்கும் குறைவாக இருந்து வந்த JVP இன் வாக்கு வங்கியை 50 சதவீதத்திற்கு மேல் உயர்த்துவதற்கு தன்னை ஒரு சமூக ஜனநாயக கட்சி என அழைத்துக் கொள்ளும் தேசிய மக்கள் சக்தியே முக்கியமாக பங்களிப்புச் செய்திருக்கிறது. 2024 தேர்தல்களில் JVP தன்னை சிவப்புத் தொப்பி அணிந்த தோழர்களின் / பாட்டாளிகளின் ஒரு கட்சியாக முன் நிறுத்தவில்லை. எனவே, அரசாங்கத்தின் முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்படும் பொழுது (தோழர் டில்வின் சில்வாவையும் உள்ளிட்ட) மேற்படி 5 சதவீதத்தினரின் கை ஓங்கியிருக்கிறதா அல்லது (லிபரல் ஜனநாயகவாதியான பிரதமர் ஹரினி அமரசூரியவையும் உள்ளிட்ட) 50 சதவீதத்தினரின் கை ஓங்கியிருக்கிறதா என்பதை பொறுத்தே புதிய அரசாங்கத்தின் பயணம் சுமுகமாக அமையப் போகிறதா அல்லது நெருக்கடிகள் நிறைந்த ஒரு பயணமாக அமையப் போகிறதா என்ற விடயம் நிர்ணயிக்கப்படவிருக்கிறது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அடுத்த ஐந்தாண்டு கால சாதனைகளை (அல்லது தோல்விகளை) அடிப்படையாகக் கொண்டே எதிர்கால வரலாற்றாசிரியர்கள் அநுர குமார திசாநாயக்கவின் எழுச்சி இலங்கையில் உண்மையிலேயே ஒரு அரசியல் மற்றும் சமூகப் புரட்சிக்கு (System Change) வித்திட்டதா என்பது தொடர்பான இறுதி மதிப்பீட்டை மேற்கொள்வார்கள்.