கல்-எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி ஒரு பொது அதிகார சபையே!

0 31

றிப்தி அலி

கல்-­எ­ளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்­லூரி ஒரு பொது அதி­கா­ர­ச­பை­யாகும் என தகவல் அறியும் உரி­மைக்­கான ஆணைக்­குழு அறி­வித்­துள்­ளது.

இதனால், கல்-­எ­ளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்­லூ­ரிக்கு சமர்ப்­பிக்­கப்­ப­டு­கின்ற தகவல் கோரிக்­கை­க­ளுக்கு பத­ல­ளிக்க வேண்டும் எனவும் ஆணைக்­குழு உத்­த­ர­விட்­டுள்­ளது.
2016 ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தக­வ­ல­றியும் உரிமைச் சட்­டத்தின் “43 (ஓ)” பிரிவின் கீழே கல்-­எ­ளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்­லூரி ஒரு பொது அதி­கார சபை­யாகும் என ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது.

“ஏதேனும் எழுத்­தி­லான சட்­டத்தின் கீழ் தாபிக்­கப்­ப­டு­கின்ற அல்­லது உரி­மை­ம­ளிக்­கப்­ப­டு­கி­ன்ற அல்­லது அர­சினால் அத்­துடன் அல்­லது ஒரு பகி­ரங்க கூட்­டுத்­தா­ப­னத்­தினால் அல்­லது ஒரு மாகாண சபையின் நியதிச் சட்­டத்­தினால் தாபிக்­கப்­பட்ட அல்­லது உரு­வாக்­கப்­பட்ட ஏதேனும் நியதிச் சட்­ட­மு­றை­யான குழு­வினால் முழு­மை­யாக அல்­லது பகு­தி­ய­ளவில் நிதி­ய­ளிக்­கப்­பட்ட வாழ்க்கைத் தொழில் அல்­லது தொழில்­நுட்பக் கல்­வியை வழங்­கு­கின்ற நிறு­வ­னங்கள் உள்­ள­டங்­க­லாக தனியார் கல்வி நிறு­வ­னங்கள் பொது அதி­கார சபை­யாகும்” என மேற்­படி பிரிவில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

சம்­மாந்­து­றை­யினைச் சேர்ந்த எம்.ஏ ஹசன் என்­ப­வ­ரினால் தகவல் அறியும் உரி­மைக்­கான ஆணைக்­கு­ழுவில் மேற்­கொள்­ளப்­பட்ட மேன்­மு­றை­யீடு தொடர்­பான தீர்ப்பின் போதே குறித்த அறி­விப்பு மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

குறித்த தகவல் கோரிக்­கை­யா­ள­ரினால் கல்-­எ­ளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்­லூ­ரிக்கு கடந்த 2022.10.01ஆம் திகதி தகவல் கோரிக்­கை­யொன்று சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த மகளிர் அரபுக் கல்­லூ­ரியின் நீண்ட மற்றும் குறு­கிய கால நோக்­கங்கள், குறிக்­கோள்கள், அர்சத் மற்றும் டில்சாத் ஆகி­யோ­ருக்கு இந்த அரபுக் கல்­லூ­ரி­யுடன் உள்ள தொடர்­புகள் போன்ற விட­யங்­களை உள்­ள­டக்­கிய ஒன்­பது கேள்­விகள் இந்த தகவல் கோரிக்­கையில் காணப்­பட்­டுள்­ளன.

“தக­வ­ல­றியும் உரிமைச் சட்­டத்தின் கீழ் கல்-­எ­ளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்­லூரி உள்­வாங்­கப்­ப­ட­வில்லை என எமக்கு ஆலோ­சனை வழங்­கப்­பட்­டுள்­ளதால் உங்­க­ளு­டைய தகவல் கோரிக்­கைக்கு பதி­ல­ளிக்க வேண்­டிய எந்தத் தேவை­யு­மில்லை” என இக்­கல்­லூ­ரியின் அப்­போ­தைய உப தலைவர் பயாஸ் சலீ­மினால் 2022.10.13ஆம் திகதி பதில் வழங்­கப்­பட்­டுள்­ளது.

இந்த பதிலில் திருப்தி அடை­யாத தகவல் கோரிக்­கை­யாளர், 2022.10.15ஆம் திகதி உப தலை­வ­ருக்கு மேன் முறை­யீட்­டினை மேற்­கொண்­டுள்ளார். எனினும், தக­வ­ல­றியும் உரிமைச் சட்­டத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள காலப் பகு­திக்குள் குறித்த மேன்­மு­றை­யீட்­டுக்கு பதில் வழங்­கப்­ப­ட­வில்லை. இதனால், குறித்த விடயம் தொடர்பில் 2022.11.21ஆம் திகதி ஆணைக்­கு­ழு­விடம் தகவல் கோரிக்­கை­யா­ள­ரினால் மேன்­மு­றை­யீடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்த மேன்­மு­றை­யீடு தொடர்­பான விசா­ர­ணைகள் 2023 ஆம் ஆண்டில் நான்கு தட­வைகள் இடம்­பெற்­றுள்­ளன. இதன்­போது விண்­ணப்­ப­தா­ர­ருடன் சட்­டத்­த­ரணி ஷெரீப் ஏ. நவாஸும் பிர­தி­வா­திகள் சார்பில் சட்­டத்­த­ர­ணி­க­ளான தாரக்க நாண­யக்­கார, அஸ்லம் அலா­வுதீன் மற்றும் தற்­போ­தைய உப தலைவர் சபீர் ஷவாட் ஆகியோர் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.

இந்த விசா­ர­ணை­க­ளுக்கு மத்­தியில் தகவல் கோரிக்­கை­யா­ள­ரி­னாலும் முஸ்லிம் மகளிர் அரபுக் கல்­லூ­ரி­யி­னாலும் தலா இரண்டு தட­வைகள் எழுத்து மூல சமர்ப்­ப­ணங்­களும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

இரு தரப்­பி­ன­ரு­டைய எழுத்து மற்றும் வாய்­மொழி மூல­மான சமர்ப்­ப­ணங்­களை மிகவும் கவ­ன­மாக அவ­தா­னித்த பின்னர் கடந்த நவம்பர் 6 ஆம் திகதி குறித்த மேன்­மு­றை­யீடு தொடர்­பான தீர்ப்­பினை தக­வ­ல­றியும் ஆணைக்­குழு வழங்­கி­யுள்­ளது.
இதன்­போதே, 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தக­வ­ல­றியும் உரிமைச் சட்­டத்தின் “43 (ஓ)” பிரிவின் கீழ் கல்-­எ­ளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்­லூரி, பொது அதி­கார சபை­யாகும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் தக­வ­ல­றியும் கோரிக்­கையில் கேட்­கப்­பட்ட ஒன்­பது கேள்­வி­களில் ஆறு கேள்­விகள் தக­வ­ல­றியும் உரிமைச் சட்­டத்தின் 43ஆவது பிரிவில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள ‘தகவல்’ எனும் பகு­திக்குள் உள்­ள­டங்­க­வில்லை எனவும் ஆணைக்­குழு அறி­வித்­துள்­ளது.

ஆணைக்­கு­ழுவின் தலைவர் ஓய்­வு­பெற்ற நீதி­ய­ரசர் உபாலி அபே­ய­ரத்ன, உறுப்­பி­னர்­க­ளான சட்­டத்­த­ரணி கிஷாலி பின்டோ ஜய­வர்த்­தன, சட்­டத்­த­ரணி ஜகத் லிய­னா­ராச்சி மற்றும் ஏ.எம். நஹியா ஆகி­யோ­ரி­னா­லேயே இந்த தீர்ப்பு மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.
இதே­வேளை குறித்த அரபுக் கல்­லூ­ரி­யினால் சிறுவர் பாது­காப்பு கொள்கை வெளி­யி­டப்­பட்­டுள்­ளதா? ஆமெனில், சிறுவர் பாது­காப்பு கொள்­கையில் கையொ­ழுத்­தி­டப்­பட்டு ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளதா?, இந்த கல்­லூ­ரியின் வதி­விட முகா­மை­யாளர் யார்? இந்த அரபுக் கல்­லூரியில் பணி­யாற்றும் உத்­தி­யோ­கத்­தர்கள் யாரும் சட்­டத்­த­ர­ணி­யினை தொடர்­பு­கொண்டு சத்­தி­யக்­க­ட­தாசி பெற்­றுக்­கொண்ட விடயம் சபைக்குத் தெரி­யுமா? போன்ற கேள்விகளுக்கு பதலளிக்குமாறு ஆணைக்குழுவினால் முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 13ஆம் திகதிக்கு முன்னர் இந்த கோரிக்கைகளுக்கான தகவல்களை வெளியிடுமாறும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அவ்வாறில்லாத பட்சத்தில் இந்த தகவலறியும் உரிமைச் சட்டத்தின் 39ஆவது பிரிவின் கீழ் தகவல் அதிகாரி மற்றும் பிரதிவாதி ஆகியோருக்கு எதிராக நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் எனவும் இந்த மேன் முறையீடு தொடர்பான தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.