மாவனெல்லை பிரதேசத்தில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவத்தையடுத்து அப் பிரதேச முஸ்லிம்கள் மத்தியில் அச்சம் நிலவியபோதிலும் பாதுகாப்பு தரப்பினதும் நீதிமன்றத்தினதும் அப் பகுதிவாழ் பௌத்த மக்களினதும் தீர்க்கமான செயற்பாடுகளால் அங்கு அமைதி நிலவுகிறது.
எனினும் சிலை உடைப்பு நடவடிக்கைகளை எதிர்த்து மாவனெல்லை பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு பௌத்த தேரர் ஒருவர் தலைமையிலான குழுவினர் முயற்சித்த போதிலும் அதற்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விடயத்தில் பொலிசார் முன்னெச்சரிக்கையாக செயற்பட்டு தடையுத்தரவைப் பெற்றுள்ளமை பாராட்டத்தக்கதாகும்.
கடந்த காலங்களில் அளுத்கம, கிந்தோட்டை, திகன போன்ற பிரதேசங்களில் இவ்வாறான அசாதாரண சூழ்நிலை தோற்றம் பெற்றபோது பொலிசார் அசமந்தமாக செயற்பட்டிருந்தனர். ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புக் கூட்டங்களை நடத்த அனுமதி வழங்கினர். இதன் காரணமாகவே பாரிய வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டன. எனினும் இம்முறை அதற்கு இடமளிக்கப்படவில்லை. குறித்த நீதிமன்றத் தடையானது ஜனவரி 11 வரையே அமுலிலிருக்கும். அதன் பிற்பாடு சில சமயங்களில் ஏதேனும் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு திட்டமிடப்படலாம். எனினும் அவை தொடர்பிலும் பொலிசாரும் பாதுகாப்புத் தரப்பினரும் சமயோசிதமாக செயற்பட வேண்டியது அவசியமாகும்.
உண்மையில் மாவனெல்லை விவகாரத்தைப் பொறுத்தவரையில், அப் பகுதி பௌத்த பெரும்பான்மை மக்கள் அமைதி காப்பதும் புரிந்துணர்வுடன் நடந்து கொள்வதும் பாராட்டத்தக்கதாகும். பிரதேச சிங்கள, பௌத்த மக்களும் பிரதேச பௌத்த குருமாரும் இதுவிடயத்தில் வழங்கும் ஒத்துழைப்புகளுக்கு மாவனெல்லை, தெல்கஹகொட மஸ்ஜிதுல் அப்ரார் நிர்வாகம் நன்றி தெரிவித்துள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
அதுமாத்திரமன்றி கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான கபீர் ஹாஷிமும் இந்த விடயத்தில் சிங்கள- முஸ்லிம் உறவைப் பேணிப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிட்டுக் கூறப்பட வேண்டியதாகும். கபீர் ஹாஷிம் பெரும்பான்மை மக்களுடன் நெருக்கமான உறவைக் கொண்டவராக இருப்பதும் இதற்கு பிரதான காரணமாகும். அந்தவகையில் அவர், தொடர்ந்தும் பிரதேசத்தில் இரு இனங்களிடையேயும் எந்தவித கசப்பான சம்பவங்களும் ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்த பாடுபடுவார் என நம்புகிறோம்.
இந்த விவகாரத்தை சுமுகமாக தீர்த்து தொடர்ந்தும் அமைதியைப் பேண வேண்டுமாயின் தற்போது தலைமறைவாகியிருக்கும் இரு பிரதான சந்தேக நபர்களும் உடனடியாக சரணடைய வேண்டியது அவசியமாகும். அவர்கள் சரணடைவதே முஸ்லிம் சமூகத்திற்குச் செய்யும் பேருபகாரமுமாகும்.
குறித்த இளைஞர்களைச் சரணடையச் செய்து சட்டத்திற்கு முகங்கொடுக்க வலியுறுத்துவதன் மூலமாகவே இப் பிரச்சினைக்கு ஒரு முடிவு காணமுடியும். அத்துடன் இதன் பின்னணி குறித்து அறித்து மேலும் இவ்வாறான விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்த முடியும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
-Vidivelli