ஜனாபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் அமோக வெற்றியீட்டிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியைக் கொண்டு செல்வதில் தடுமாற்றங்களை எதிர்கொண்டுள்ளதாக எதிர்க் கட்சிகள் விமர்சிக்கின்ற அதேநேரம் தவறுகள் நிகழ்ந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுடன் நிதானமான சில தீர்மானங்களை அரசாங்கம் எடுத்து வருவதையும் அவதானிக்க முடிகிறது.
பாராளுமன்ற தேர்தல் நடந்து ஒரு மாதம் கூட சரியாகப் பூர்த்தியாகாத நிலையில் தேர்தல் காலங்களில் அளித்த அத்தனை வாக்குறுதிகளையும் உடன் நிறைவேற்ற வேண்டும் என எதிரணியினரும் நாட்டு மக்களும் எதிர்பார்ப்பது யதார்த்தத்துக்கு முரணானதாகும்.
நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அரசாங்கம் விரைவாகவும் நிதானமாகவும் பிரச்சினைகளுக்கு பதிலளிப்பது அதன் ஆரோக்கியமான நகர்வைக் காண்பிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
13 ஆவது திருத்தச் சட்டம் ஒழிக்கப்பட்டு மாகாண சபை முறைமை இல்லாமலாக்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்த கருத்து இந்த வாரம் அரசியல் அரங்கில் பேசுபொருளாகியிருந்தது. எனினும் புதிய அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்படும் வரை மாகாண சபை முறைமை அமுலில் இருக்கும் என்றும் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கு ஆகக் குறைந்தது மூன்று வருடங்களேனும் எடுக்கும் என்றும் அரசாங்கம் தற்போது விளக்கமளித்துள்ளது. புதிய அரசியலமைப்புக்கான பணி அனைவரதும் கருத்துக்களை உள்வாங்கியே இடம்பெறும் என்றும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
அதேபோன்றுதான் பயங்கரவாத தடைச்சட்டம் மின்சாரக் கட்டணம் தேங்காய் மற்றும் மரக்கறி விலை அதிகரிப்பு அரிசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு என அரசாங்கம் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதை அவதானிக்கிறோம்.
தேசிய மக்கள் சக்தியானது கடந்த காலங்களில் அரச நிர்வாகத்தை வழிநடாத்திய அனுபவத்தைக் கொண்டிருக்கவில்லை. ஜனாதிபதி பிரதமர் மற்றும் அமைச்சரவை என அனைவரும் இந்தப் பணிக்குப் புதியவர்கள். அந்த வகையில் அவர்கள் தமது திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அவகாசத்தை வழங்குவதும் தவறுகள் விடுகின்ற போது அவற்றைச் சுட்டிக்காட்டி திருத்திக் கொள்ள அழுத்தம் வழங்குவதுமே இப்போதைக்கு எதிர்க்கட்சிகளினதும் சிவில் அமைப்புகளினதும் பணியாக இருக்க வேண்டும். மாறாக அமையப் பெற்றுள்ள ஆட்சியை வீழ்த்தி மீண்டும் நாட்டில் அரசியல் ஸ்திரமின்மையைத் தோற்றுவிக்க முனைவதானது நிச்சயமாக இலங்கையை மேலும் மேலும் படுகுழியில் தள்ளவே வழிவகுக்கும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
பேசுவது இலகு செய்வது கடினம் என்பது போல கடந்த காலங்களில் பேசிய பல விடயங்களை நடைமுறையில் செய்து காட்ட முனையும் போது இந்த அரசாங்கம் பல சவால்களைச் சந்திக்கும் என்பது உண்மையே. அதனையே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது உணர்ந்து வருகிறது. குறிப்பாக ஊழல் மலிந்துள்ள அரச நிர்வாகத்தில் எடுத்த எடுப்பிலேயே மாற்றங்களைக் கொண்டு வருவது சாத்தியமானதல்ல. தெரிவு செய்யப்பட்டுள்ள எம்.பி.க்களும் அமைச்சர்களும் ஊழலுக்கு எதிரானவர்கள் என்ற போதிலும் அதிகாரிகள் எந்தளவு தூரம் ஊழலற்ற ஆட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கப் போகிறார்கள் என்பதிலேயே வெற்றி தங்கியுள்ளது. முதலில் இதற்கான களத்தை அரசாங்கம் தயார்படுத்த வேண்டியுள்ளது. கடந்த காலங்களில் ஊழல் மோசடிகளுக்குத் துணைபோன அதிகாரிகளை அகற்றி புதியவர்களை பொருத்தமானவர்களை நியமிக்க வேண்டியுள்ளது.
கடந்த சில தினங்களாக பொலிஸ் துறையில் இவ்வாறான களையெடுப்புகள் நடப்பதை அவதானிக்கிறோம். ஏனைய துறைகளிலும் இவ்வாறான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு தகுதியும் திறமையும் மிக்க அதிகாரிகள் நியமிக்கப்படுவதன் மூலம் அரசாங்கம் முன்வைத்த திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த வாய்ப்பு ஏற்படும்.
அதேபோன்றுதான் சிறுபான்மை கட்சிகளுடன் சினேகபூர்வமான முறையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி அவர்களது கோரிக்கைகளையும் நிறைவேற்ற தாம் தயாராகவிருப்பதாக அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. நேற்றைய தினம் தமிழரசுக் கட்சியுடன் ஜனாதிபதி நடத்திய பேச்சுவார்த்தை சிறந்த சமிக்ஞையாகும். அதேபோன்றுதான் எதிர்வரும் நாட்களில் முஸ்லிம் கட்சிகளும் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேச வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் சமகாலப் பிரச்சினைகளை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வுகளைப் பெற வேண்டும். ஆளும் தரப்பிலுள்ள முஸ்லிம் எம்.பி.க்கள் புதியவர்கள் அனுபவமற்றவர்கள் என்ற விமர்சனங்களை மாத்திரம் முன்வைக்காது அவர்களோடு இணைந்து முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை புதிய அரசாங்கம் மூலமாக எவ்வாறு சினேகபூர்வமாக வென்றெடுக்கலாம் என்பது பற்றி முஸ்லிம் கட்சிகள் சிந்திக்க வேண்டும். அதற்கான வாயில் அரச தரப்பில் திறந்தேயுள்ளது என்பதையே நேற்றைய சந்திப்பு காண்பிக்கிறது.
அந்த வகையில் ஆட்சியை தற்போதுதான் ஆரம்பித்துள்ள தேசிய மக்கள் சக்தியின் நல்ல திட்டங்களை வரவேற்று தவறான தீர்மானங்களை எதிர்த்து நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கான பொறுப்பை விளங்கி பாராளுமன்றத்திலுள்ள அனைத்து தரப்பினரும் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.- Vidivelli