மத்ரஸாவில் மாணவர்களை தங்கவைக்க முடியாத நிலையில் விடுமுறையளித்தோம்
நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக்கல்லூரி விளக்கம்
மத்ரஸாவுக்குள் மழை நீர் புகும் நிலை ஏற்பட்டதையடுத்து மாணவர்களை தங்க வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டமையால் விடுமுறையளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக்கல்லூரி தெரிவித்துள்ளது.
மாவடிப்பள்ளி பகுதியில் வெள்ள நீரில் 6 மத்ரஸா மாணவர்கள் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன சம்பவத்தையடுத்து மேற்படி அரபுக் கல்லூரியின் நிர்வாக சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்ககப்பட்டுள்ளதாவது, கடந்த இரு தினங்களாக எமது பிரதேசத்தில் ஏற்பட்ட அசாதாரண காலநிலை மாற்றத்தை அடுத்து கடும் காற்றுடன் கூடிய பெருமழை காரணமாக முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் பள்ளிவாசலினுள் மழை நீர் உட்புகுந்தது. அத்துடன் மாணவர் விடுதி (மூன்றாம் மாடியில் முழுமையாக நீர் ஒழுக்கு ஏற்பட்டது) மற்றும் பாடசாலை பொது கல்வி பிரிவு ஆகியவற்றிலும் நீர் ஒழுக்குகள் பரவலாக காணப்பட்டதுடன் மலசல கூட குழிகளும் நிரம்பி மலசல கூடங்கள் பாவிக்க முடியாத நிலையில் காணப்பட்டது, அத்துடன் மூன்று மாணவர்கள் மாடிப்படியில் வழுக்கி விழுந்த நிலைமையும் அவதானிக்கப்பட்டது.
இந்த நிலையில் தொடர்ந்து மாணவர்களை பாதுகாப்பாக வைத்திருப்பது சிரமம் என்பதால் இக் கல்லூரியின் நிர்வாக சபை தலைவர் மௌலவி என் இஸ்மத் (ஷர்கி) யின் அனுமதியோடு, மசூறாவின் அடிப்படையில் கல்லூரிக்கு அவசரமாக விடுமுறை வழங்குவது பொருத்தம் என தீர்மானிக்கப்பட்டது
இதனையடுத்து, மாணவர்களை பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இது குறித்து அதிபர் வட்ஸ் அப் குழுவின் மூலமும் நேரடியாக தொலைபேசி ஊடாகவும் பெற்றோர்களுக்கு நேற்றுமுன்தினம் காலையிலேயே தெரியப்படுத்தியிருந்தார்,
அதிபர் மற்றும் 3 உஸ்தாதுமார்கள் மற்றும் இரு பணியாளர்களோடு விசேடமாக வாடகைக்கு அமர்த்தப்பட்ட பேருந்து வண்டி மூலம் மாணவர்கள் தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மாணவர்களின் வதிவிட பிரதேசத்தை பஸ்வண்டி அண்மிக்கின்ற போது அவர்களது பெற்றோர்களுக்கு தொலைபேசி மூலம் மீண்டும் அழைப்பை ஏற்படுத்தி அவர்களை பிரதான வீதிக்கு வரவழைத்து அவர்களிடம் மாணவர்களை ஒப்படைப்பது, என்ற அடிப்படையிலேயே இந்த பயண ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது காரைதீவு சந்தியில் இருந்து சம்மாந்துறை நோக்கி பேருந்து வண்டி பயணிக்க முடியாத நிலையில் அங்கு சேவையில் ஈடுபடுத்தப்பட்ட உழவு இயந்திரத்தின் இழுவை பெட்டியில் ஏற்றப்பட்ட மாணவர்கள் (13) பதின்மூன்று பேர், மாவடிப்பள்ளி தாம்போதியை கடக்கும் போது உழவு இயந்திரம் தடம் புரண்டு குடைசாய்ந்ததில் ஆறு மாணவர்கள் காணாமல் போயுள்ளனர்.
மேலும் முற்கூட்டியே வானிலை முன்னறிவிப்புக்கள் செய்யப்பட்ட போதிலும் மாணவர்கள் கல்லூரியில் தங்கியிருப்பது தான் பாதுகாப்பானது என கருதிய நிலையில், இக்கல்லூரியில் ஏற்பட்ட அனர்த்த அசாதாரண நிலைமையை அடுத்து மீண்டும் இவ்வாறான ஒரு முடிவை மேற்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
இந்த கவலையான நேரத்தில் நிலைமையை உணர்ந்து அனைவரும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. – Vidivelli