புயலின் தாக்கம் இலங்கைக்கு இல்லை பலத்த காற்றும் கடும் மழையும் நிலவும்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் இரு தினங்களில் தமிழ்நாட்டை நோக்கி நகரும்
(எம்.மனோசித்ரா)
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகி நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புதன்கிழமை மாலை 5 தொடக்கம் 6 மணிக்குள் புயலாக வலுப்பெற்றது. இந்தப் புயல் நாளை அல்லது நாளை மறுதினம் கிழக்கு கடற்பிராந்தியத்தியத்தினூடாக நகர்ந்து இந்தியாவின் தமிழ்நாட்டைக் கடக்கவுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இப் புயல் காரணமாக நேரடி பாதிப்புக்கள் இலங்கைக்கு ஏற்படாது என்ற போதிலும், மறைமுக தாக்கமாக வேகமான காற்று மற்றும் தொடர்ச்சியான மழையுடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகர் அத்துல கருணாநாயக்க தெரிவித்தார்.
பாதிப்புக்கள்
நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைத் தாண்டியுள்ளது. நாட்டிலுள்ள 18 மாவட்டங்களில் 141 பிரதேச செயலகப்பிரிவுகளில் 66 947 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 30 743 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நேற்று புதன்கிழமை மாலை வரை நால்வர் உயிரிழந்துள்ளதோடு, 8 பேர் காணாமல் போயுள்ளனர். இது தவிர 9 பேர் காயமடைந்துள்ளனர்.
நிந்தவூர் டிரக்டர் விபத்தில் நான்கு மாணவர்களும், புத்தளம் பிரதேசத்தில் வெள்ளித்தில் அடித்துச் செல்லப்பட்ட நபரொருவரும் உள்ளடங்கலாக 8 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் உதய ஹேரத் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 8 வீடுகள் முழுமையாகவும், ஏனைய மாவட்டங்களில் 620 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. மண்சரிவு மற்றும் வெள்ள எச்சரிக்கை காரணமாக 165 பாதுகாப்பு முகாம்களில் 15 586 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை 12 மாவட்டங்களில் 1712 குடும்பங்களைச் சேர்ந்த 6016 பேர் உறவினர்கள் மற்றும் நண்பர்களது வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் 20 பிரதேச செயலகங்களில் 34 885 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 23 876 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 2082 குடும்பங்களைச் சேர்ந்த 6710 பேர் 52 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோன்று மன்னார் மாவட்டத்திலும் 14 237 குடும்பங்களைச் சேர்ந்த 49 560 பேரும், யாழ்ப்பாணத்தில் 2706 குடும்பங்களைச் சேர்ந்த 9642 பேரும், புத்தளத்தில் 1893 குடும்பங்களைச் சேர்ந்த 6615 பேரும், அநுராதபுரத்தில் 1730 குடும்பங்களைச் சேர்ந்த 5451 பேரும், திருகோணமலையில் 1537 குடும்பங்களைச் சேர்ந்த 4385 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கேகாலை, கிளிநொச்சி, இரத்தினபுரி, காலி, பதுளை, முல்லைத்தீவு, நுவரெலியா, மட்டக்களப்பு, மாத்தறை, மாத்தளை மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளன.
காலநிலை
தெற்கு அந்தமான் தீவில் கடந்த 21ஆம் திகதி இக்காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டு வடக்கு நோக்கி நகர்ந்தது. இந்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை 4 மணியளவில் திருகோணமலைக்கு 120 கிலோ மீற்றர் தூரத்தில் நிலைகொண்டிருந்தது. இதன் தாக்கமாகவே வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் 100 – 200 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகர் அத்துல அத்துல கருணாநாயக்க தெரிவித்தார்.
இந்த தாழமுக்க மண்டலம் புயலாக வலுவடைந்துள்ளமையால் இலங்கைக்கு நேரடி தாக்கங்கள் இல்லை. இப்புயல் நாளை அல்லது நாளை மறுதினம் இந்தியாவின் தமிழ் நாட்டை நோக்கி நகர்வதால் எமக்கு பாதிப்புக்கள் இல்லை. எவ்வாறிருப்பினும் சில பகுதிகளில் ஓரளவு மழை வீழ்ச்சி பதிவாகும். அதேவேளை இது கிழக்கு கடலின் ஊடாக நகர்வதால் அப்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 40 – 50 கிலோ மீற்றராகக் காணப்படும். ஆழ்கடல் பகுதிகளில் 80 – 90 கிலோ மீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதால் கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அத்துல அத்துல கருணாநாயக்க தெரிவித்தார்.
பொது போக்குவரத்து பாதிப்பு
வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக கொழும்பு – கோட்டையிலிருந்து பதுளை வரையான இரவு நேர அஞ்சல் புகையிரத சேவை நேற்றைய தினம் இரத்து செய்யப்பட்டது. இதேவேளை வெள்ளத்தால் மட்டக்களப்பு புகையிரத வீதியூடான புகையிரத போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டிருந்தன.
ஒழுவில் பிரதேசத்தில் பாலமொன்று தாழிறங்கியதால் அக்கரைப்பற்று – கல்முனை வீதியூடான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டது. மரமொன்று முறிந்து விழுந்ததன் காரணமாக கொழும்பு – அநுராதபுரம் வீதியூடான போக்குவரத்தும் தடைபட்டது.
கொழும்பு – யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் ஓமந்தை பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மாற்று வீதிகள் பயன்படுத்தப்பட்டன. பாதெனிய – அநுராதபுரம் வீதியில் மினுவாங்கொடை பாலம் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் மாற்று வீதியைப் பயன்படுத்துமாறு குருணாகல் மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.
வெள்ளம், மண்சரிவு அபாய எச்சரிக்கை
தொடர் மழை காரணமாக களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளமையால் சீதாவாக்கை, தொம்பே, கடுவலை, பியகம, கொலன்னாவ, கொழும்பு மற்றும் பகுதிகளுக்கும், கலா ஓயா நீர்மட்டம் உயர்வடைவதால் நொச்சியாகம, இராஜாங்கனை, வனாத்தவில்லு மற்றும் கருவலகஸ்வௌ பகுதிகளுக்கும் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மல்வத்துஓயா நீர்மட்டம் உயர்வடைவதால் அநுராதபுரம் – மஹவிலச்சி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளுக்கும், வவுனியா – வெண்கலச்செட்டிக்குளம், மன்னார் – நானாட்டான், மூசாலை, மடு ஆகிய பகுதிகளுக்கும், தெதுரு ஓயா நீர்மட்டம் உயர்வடைவதால் வாரியபொல, நிக்கவரெட்டிய, மஹவ, கொபெய்கனே, பிங்கிரிய, பல்லம, சிலாபம், ஆரச்சிகட்டுவ மற்றும் ரஸ்நாயக்கபுர ஆகிய பகுதிகளுக்கும் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்கமைய கண்டி மாவட்டத்தில் ஹரிஸ்பத்துவ, மெததும்பர, உடுதும்பர, தொலுவ, யட்டிநுவர, உடபலாத்த, பஹதஹேவாஹெட்ட, உடுநுவர மற்றும் தெல்தோட்ட பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாத்தளையில் உகுவெல, யடவத்த, ரத்தோட்டை, வில்கமுவ, அம்பன்கங்க கோரள, லக்கல, பல்லேபொல, நாவுல மற்றும் மாத்தளை பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும், நுவரெலியாவில் வலப்பனை பிரதேச செயலகப்பிரிவுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை பதுளை, காலி, களுத்துறை, கேகாலை, குருணாகல், மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. – Vidivelli