வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களின் 4 ஜனாஸாக்கள் மீட்பு
- உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் என அச்சம்
- காணாமல்போனோரை தேடும் பணிகள் தொடர்கின்றன
(யூ.எல்.எம்.றியாஸ், பாறூக் ஷிஹான்)
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த சமயம் வெள்ள நீரினால் அடித்துச் செல்லப்பட்டு அரபுக் கல்லூரி மாணவர்கள் அறுவர் காணாமல் போன நிலையில் நால்வரின் ஜனாஸாக்கள் நேற்று மாலை வரை மீட்கப்பட்டுள்ளன. ஏனையோரின் ஜனாஸாக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து வருகின்றன.
நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியில் கல்வி பயின்று வரும் மாணவர்களே இவ்வாறு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களாவர்.
காரைதீவு சம்மாந்துறை பிரதான வீதியில் மாவடிப்பள்ளி பிரசேத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது. கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளும் மழை மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர்கள் பஸ் மூலமாக தமது வீடுகளுக்குச் செல்ல முற்பட்ட போது சம்மாந்துறை மாவடிப்பள்ளி பிரதேசத்தில் வெள்ள நீர் பாய்ந்தோடியதால் அப்பகுதியை கடப்பதற்கு உழவு இயந்திரத்தில் ஏறிச் சென்றுள்ளனர். இந்த உழவு இயந்திரத்தில் 11 மாணவர்களும் மேலும் சிலரும் பயணித்துள்ளதாக தெரிய வருகிறது. எனினும் பாய்ந்தோடும் வெள்ள நீருக்கு தாக்குப் பிடிக்க முடியாத உழவு இயந்திரம் குடைசாய்ந்துள்ளது.
இதனால் அதில் பயணித்த அனைவரும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். எனினும் அங்கிருந்தவர்கள் மூலம் 5 மாணவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் அதில் பயணித்த ஏனையோரை மீட்க முடியாது போயுள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை வரை நான்கு மாணவர்களின் ஜனாஸாக்கள் மீட்கப்பட்டன. சம்மாந்துறை மலையடிக்கிராமத்தை சேர்ந்த 15 வயதுடைய பாரூக் முகம்மது நாஸிக் மற்றும் சம்மாந்துறையைச் சேர்ந்த 16 வயதுடைய முஹம்மது சாஜின், சம்மாந்துறை மலையடிக்கிராமத்தைச் சேர்ந்த16 வயதுடைய ஆசிக் முகம்மது அப்னான் மற்றும் சம்மாந்துறை மலையடிக்கிராமத்தைச் சேர்ந்த முஹம்மட் பாறூக் சர்ஹான் (வயது 15) ஆகியோரின் ஜனாஸாக்களே மீட்கப்பட்டுள்ளன. ஏனையோரைத் தேடும் பணிகளில் கடற்படை, விசேட அதிரடிப்படை, மற்றும் இராணுவத்தினருடன் பொதுமக்களும் ஈடுபட்டுள்ளனர்.
சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி அமைப்பு, மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பு, காரைதீவு சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் தேடுதல் நேற்றும் தொடர்ந்தது. இதன்போதே 4 ஜனாஸாக்களும் மீட்கப்பட்டன. எனினும் நேற்று மாலை வேளை இருள் சூழ்ந்த நிலையில் இன்று காலை வரை மீட்புப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை இந்த உழவு இயந்திரத்தில் மொத்தம் எத்தனை பேர் பயணித்தனர் என்ற விபரங்கள் இதுவரை சரியாகத் தெரியவில்லை. குறித்த உழவு இயந்திரம் நேற்றைய தினம் மீட்கப்பட்டபோது அதனுடன் சேர்த்து இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளன. இந்த மோட்டார் சைக்கிள்களில் பயணித்தவர்களும் உழவு இயந்திரத்தின் சாரதியும் வெள்ளத்தில் சிக்குண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை காரைதீவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். – Vidivelli