தேர்தல் முடிந்தது: இனிச் செய்ய வேண்டியது என்ன?

0 41

பேராசிரியர்
எம்.ஏ. நுஃமான்

யாரும் எதிர்­பா­ராத வகையில் மூன்றில் இரண்­டுக்கு அதி­க­மான பெரும்­பான்மை பெற்று தேசிய மக்கள் சக்தி பாரா­ளு­மன்­றத்தைக் கைப்­பற்றி இருக்­கி­றது. மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தைத் தவிர இலங்­கையின் 21 தேர்தல் மாவட்­டங்­க­ளிலும் அது வெற்றி பெற்­றி­ருக்­கின்­றது, வடக்கில், குறிப்­பாக யாழ்ப்­பாண மாவட்­டத்தில், அது பெற்ற வெற்றி வர­லாற்று முக்­கி­யத்­துவம் உடை­யது. பெரும்­பான்­மை­யினர், சிறு­பான்­மை­யினர் என்ற வேறு­பாடு இன்றி; சிங்­க­ளவர், தமிழர், முஸ்­லீம்கள் என்ற வேறு­பாடு இன்றி, எல்லா மக்­களும் இதன் வெற்­றியில் பங்­க­ளிப்புச் செய்­துள்­ளனர்.

அண்­மைக்­கால இலங்கை அர­சியல் வர­லாற்றில் இது ஒரு பாரிய மாற்றம் என்­பதில் ஐய­மில்லை. இந்த மாற்றம் இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்னர் நடந்த மக்கள் எழுச்­சியின் (அர­க­லய) தொடர்ச்சி என்றே சொல்ல வேண்டும். பாரம்­ப­ரிய அர­சியல் கட்­சிகள், அர­சி­யல்­வா­திகள் மீதான மக்­களின் வெறுப்பும்; தேசிய மக்கள் சக்தி வாக்­கு­றுதி அளித்­த­துபோல் அர­சி­ய­லிலும், நாட்­டிலும் புதிய மாற்­றங்­களைக் கொண்­டு­வரும் என்ற மக்­களின் எதிர்­பார்ப்பும், நம்­பிக்­கையும் இந்த வெற்­றியின் அடிப்­படை என்­பதில் ஐய­மில்லை.

ஜனா­தி­பதி தேர்­த­லிலும், பாரா­ளு­மன்றத் தேர்­த­லிலும் தேசிய மக்கள் சக்தி மக்­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­திகள் பல. ஊழலை ஒழிப்­ப­தி­லி­ருந்து அடிப்­ப­டை­யான அர­சியல் மாற்­றங்கள் வரை இதில் அடங்கும். “வள­மான நாடு அழ­கான வாழ்க்கை“ என்ற தலைப்பில் அவர்கள் வெளி­யிட்ட தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் இவை விரி­வாகப் பேசப்­ப­டு­கின்­றன. அவற்றை நான் இங்கு பட்­டி­யல்­ப­டுத்த வேண்­டி­ய­தில்லை. அவை எல்­லா­வற்­றையும் அடுத்­து­வரும் அவர்­களின் ஐந்­தாண்டு ஆட்­சிக்­கா­லத்தில் அவர்­களால் நிறை­வேற்­ற­மு­டியும் என்றும் நாம் எதிர்­பார்க்க முடி­யாது. ஆனால், அவற்றுள் சுமார் 25% வீதத்­தை­யா­வது அவர்கள் நிறை­வேற்­றி­னாலே மக்கள் இவர்­களை ஆட்­சிக்குக் கொண்­டு­வந்­ததன் பயனை அடைந்­த­வர்­க­ளா­வார்கள் என்­பதில் ஐய­மில்லை.

1994ல் சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க பல வாக்­கு­று­தி­களை அளித்து 62% வீத­மான வாக்­கு­களைப் பெற்று ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வு­செய்யப் பட்­ட­போது மக்­க­ளுக்கு அதிக எதிர்­பார்ப்­புகள் இருந்­தன. ஆனால், அவ­ரு­டைய பத்­தாண்­டு­கால ஆட்­சியில் அவற்றுள் எதையும் அவரால் நிறை­வு­செய்ய முடி­ய­வில்லை. அதற்­கு­ரிய தற்­து­ணிபு அவ­ருக்கு இருக்­க­வில்லை என்­பது மட்­டு­மன்றி, பாரா­ளு­மன்­றத்தில் அவ­ருக்கு மூன்றில் இரண்டு பெரும்­பான்மை இருக்­க­வில்லை என்­ப­தையும் ஒரு சமா­தா­ன­மாகக் கூறலாம்.
ஆனால், தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கத்­துக்கு அந்தச் சிக்கல் இல்லை. மக்கள் பூர­ண­மான ஆணை கொடுத்­தி­ருக்­கி­றார்கள். ஆகவே, தங்கள் வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றாமல் இருப்­ப­தற்கு இவர்­க­ளுக்கு எந்­த­வித கார­ணமும் இல்லை.

இது­வரை எல்லாம் நன்­றா­கவே முடிந்­தி­ருக்­கின்­றது. சில சர்ச்­சைகள் மேற்­கி­ளம்­பி­னாலும் உயர் கல்வித் தகைமை பெற்ற பலர் அமைச்­ச­ர­வை­யிலும் இருக்­கி­றார்கள். இனிச் செய்ய வேண்­டி­யது என்ன? என்­ப­தையே அர­சாங்கம் சிந்­தித்துச் செய­லாற்ற வேண்டும். அது­பற்­றியே நான் இங்கு சில கருத்­து­களைச் சொல்ல விரும்­பு­கிறேன்.

1. பொரு­ளா­தார வங்­கு­றோத்து நிலை­யி­லி­ருந்து நாட்டை மீட்­டெ­டுத்தல் அரசு நிறை­வேற்ற வேண்­டிய முக்­கி­ய­மான சவா­லாகும். மக்கள் பழைய அர­சி­யல்­வா­தி­களை வீட்­டுக்கு அனுப்­பி­விட்டு, இந்த அர­சாங்­கத்தை ஆட்­சியில் அமர்த்­தி­ய­மைக்கு அடிப்­படைக் கார­ணமே தங்கள் பொரு­ளா­தாரச் சுமை­யி­லி­ருந்து விடு­பட வேண்டும் என்­ப­துதான். நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை ஸ்திரப்­ப­டுத்தி, மக்­களின் வரு­மா­னத்தை அதி­க­ரித்து, வாழ்க்கைச் செலவைக் குறைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளுக்கு அரசு முன்­னு­ரிமை கொடுக்­க­வேண்டும் என்­பதை வலி­யு­றுத்த வேண்­டி­ய­தில்லை.

ஆனால், இது இல­கு­வான காரியம் அல்ல என்­பது எல்­லா­ருக்கும் தெரியும். முன்­னைய அர­சாங்­கங்கள் சேமித்­து­வைத்த பல்­லா­யிரம் கோடி உள்­நாட்டு, வெளி­நாட்டுக் கடன் சுமை இந்த அர­சாங்­கத்தின் தலையில் சுமத்­தப்­பட்­டுள்­ளது. சர்­வ­தேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபி­வி­ருத்தி வங்கி போன்ற சர்­வ­தேச வட்டிக் கடைக்­கா­ர­ரிடம் நாடு ஏற்­க­னவே அட­கு­வைக்­கப்­பட்­டுள்­ளது. அமெ­ரிக்க நீதி­மன்றம் ஒன்றில் ஹமில்ரன் றிசேவ் வங்கி 240 மில்­லியன் அமெ­ரிக்க டாலர் கடனை இலங்கை அரசு திருப்பிச் செலுத்த ­வேண்டும் என்று தொடுத்த வழக்கில் நீதி­மன்றம் அர­சாங்­கத்­துக்கு ஒரு­மாத அவ­காசம் வழங்­கி­யுள்­ள­தாக தற்­போது ஒரு தக­வலும் வெளி­யா­கி­யுள்­ளது. அர­சாங்கம் இத்­த­கைய அழுத்­தங்­களிலிருந்து மீள்­வது அவ்­வ­ளவு இல­கு­வான காரியம் அல்ல.

நாம் பூகோள மயப்­ப­டுத்­தப்­பட்ட பெரு­மு­த­லா­ளித்­துவ யுகத்தில் வாழ்­கிறோம். ஒவ்­வொரு வளர்­முக நாடும் நிதி­மூ­ல­தன வல்­ல­ர­சு­களால் நேர­டி­யா­கவும் மறை­மு­க­மா­கவும் கட்டுப்படுத்­தப்­ப­டு­கின்­றது. நமது சுயா­தீ­ன­மான வளர்ச்­சிக்கு அதுவே பிர­தா­ன­மான சவா­லாகும். அதை இந்த அரசு எவ்­வாறு எதிர்­கொள்ளப் போகின்­றது என்­பது காலப்­போக்­கில்தான் தெரி­ய­வரும்.

1977ல் இருந்து நடை­மு­றை­யி­லி­ருக்கும், இன்­றைய சமூக அர­சியல் நெருக்­க­டி­க­ளுக்­கெல்லாம் மூல கார­ண­மான திறந்த பொரு­ளா­தாரக் கொள்­கை­யி­லி­ருந்து நாம் விடு­ப­டு­வது அவ்­வ­ளவு இல­கு­வான காரியம் அல்ல. ஆயினும், இறக்­கு­மதிப் பொரு­ளா­தா­ரத்தை மட்­டுப்­ப­டுத்தி சுய­சார்புப் பொரு­ளா­தாரக் கொள்கை ஒன்றை வகுத்துச் செயற்­ப­டு­வது நாட்டு மக்­களின் பொரு­ளா­தார நிலையை மேம்­ப­டுத்­து­வ­தற்கு அவ­சி­ய­மாகும். அதில் இந்த அரசு அக்­கறை செலுத்தும் என்று நம்­பு­கின்றேன்.

2. இன ஒற்­று­மை­யையும் ஒரு­மைப்­பாட்­டையும் உறு­திப்­ப­டுத்தி தேசிய ஐக்­கி­யத்தைக் கட்டி எழுப்­பு­வது இந்த அரசின் முன்­னுள்ள பிறி­தொரு முக்­கிய சவா­லாகும். சுதந்­தி­ரத்­துக்குப் பின்னர் இந்த நாட்டில் மேலோங்­கி­வந்த இன­வா­தமும், இன­மு­ரண்­பாடும், மோதல்­களும், பிரி­வி­னை­வாத யுத்­தமும் இன்­றைய இலங்­கையின் அர­சியல், பொரு­ளா­தார, சமூக நெருக்­க­டி­க­ளுக்கு பிர­தா­ன­மான கார­ணி­க­ளாகும் என்­பதைப் பலரும் ஒப்­புக்­கொண்­டுள்­ளனர். நீண்ட கால இனப்­பா­கு­பாடும், முரண்­பா­டு­களும், முப்­பது ஆண்­டு­கால யுத்­தமும் சிறு­பான்மை மக்­கள்­மீது ஏற்­ப­டுத்­தி­யுள்ள மாறாத வடுக்­களை மாற்ற இந்த அரசு உறு­தி­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும்.

தேசிய மக்கள் சக்தி, குறிப்­பாக அதன் தலைவர் அநுர குமார திசா­நா­யக்க, ஜனா­தி­பதி தேர்­த­லிலும் பொதுத் தேர்­த­லிலும் இன­வா­தத்­துக்கு எதி­ரா­கவும், தேசிய ஒரு­மைப்­பாட்­டுக்­கா­கவும் அதிகம் பேசினார். வட கிழக்குத் தமிழ் மக்கள் உட்­பட இலங்கை முழு­வ­திலும் வாழும் அனைத்துச் சிறு­பான்மை மக்­களும் அவர்­மீது நம்­பிக்கை வைத்து பெரு­ம­ளவில் அவர்­க­ளுக்கு வாக்­க­ளித்­துள்­ளனர். அந்த நம்­பிக்­கையைக் காப்­பாற்ற வேண்­டிய கடப்­பாடு இந்த அர­சாங்­கத்­துக்கு உண்டு.

இலங்­கையின் பல்­லினத் தன்­மையை ஏற்­றுக்­கொண்டு, ஒவ்­வொரு சமூ­கத்தின் தனித்­து­வத்­தையும், பிரச்­சி­னை­க­ளையும் புரிந்­து­கொண்டு, தாங்கள் அந்நி­யப்­ப­டுத்­தப்­பட்­ட­வர்கள் என்ற உணர்­வுக்கு அவர்கள் ஆளா­கா­த­வ­கையில் அவர்­க­ளையும் அர­சி­யலில் பங்­கா­ளி­க­ளாக ஏற்­றுக்­கொண்டு ஆட்சி நடத்­தாத வரையில் இந்த நாட்டில் இன நல்­லி­ணக்­கத்­தையும் ஒரு­மைப்­பாட்­டையும் கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது என்­பதை இந்த அரசு செயலில் காட்­ட­வேண்டும். இது தொடர்­பாக அரசு மேற்­கொள்ள வேண்­டிய சில நட­வ­டிக்­கை­களை நான் இங்கு சுட்­டிக்­காட்­டலாம்.

  • வட கிழக்கில் அமைக்­கப்­பட்­டுள்ள இராணுவ முகாம்­களை அகற்­றுதல் அல்­லது மட்­டுப்­ப­டுத்­துதல்.
  • இராணுவம் கைய­கப்­ப­டுத்­தி­யுள்ள பொது மக்­களின் காணி­களை விடு­வித்தல்.
  • காணா­மற்­போனோர் பிரச்­சி­னையைத் தீர்த்­து­வைத்தல்.
  • அக­தி­களின் மீள் குடி­யேற்­றத்தை விரை­வு­ப­டுத்தல்.
  • சட்­ட­பூர்­வ­மற்ற குடி­யேற்­றங்­களைத் தடுத்தல்
  • ஆட்­சி­மொழிச் சட்­டத்தை நாடு­மு­ழு­வ­திலும் சரி­யாக அமுல்­ப­டுத்­துதல்
  • அர்த்­த­முள்ள அதி­காரப் பகிர்வு /மாகாண சபை முறை­மையை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­துதல்
  • பாரா­பட்­ச­மற்ற தொழில்­வாய்ப்பு. அரச தனியார் தொழில் வாய்ப்­பு­களில் இன­வி­கி­தா­சா­ரத்தைப் பேணுதல்
  • பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை நீக்­குதல்.

3. 1994 ஜனா­தி­பதி தேர்தல் காலத்­தி­லி­ருந்து, கோட்­டா­பாய ராஜ­பக்ச தவிர்ந்த, எல்லா வேட்­பா­ளர்­களும் நிறை­வேற்று அதி­கா­ர­முள்ள ஜனா­தி­பதி முறை­மையை ஒழிப்­ப­தா­கவே வாக்­கு­றுதி அளித்­தார்கள். ஆனால், பத­விக்கு வந்­தபின் ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரத்தை அதி­க­ரிக்­கவும், ஆட்­சிக்­கா­லத்தை நீடிக்­கவும் முயன்­றார்­களே தவிர, அதை நீக்க நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை.

புதிய ஜனா­தி­பதி தேர்தல் பிர­சா­ரத்தின் போது “இதுதான் கடைசி ஜனா­தி­பதி தேர்தல்“ என்று கூறி­யி­ருக்­கின்றார். தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­திலும் அது­பற்றிக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அவ்­வ­கையில் அடுத்த தேர்தல் பாரா­ளு­மன்றத் தேர்­த­லாக இருக்­க­வேண்­டுமே தவிர ஜனா­தி­பதி தேர்­த­லாக இருக்கக் கூடாது என்­பது மக்­களின் எதிர்­பார்ப்பு.
இந்த அர­சாங்­கத்தின் ஆட்­சிக்­காலம் முடி­வுக்­கு­வ­ரமுன் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யற்ற, ஜன­நா­ய­கத்தை வலுப்­ப­டுத்­து­கின்ற, இன ஐக்­கி­யத்தை உறு­திப்­ப­டுத்­து­கின்ற, மக்கள் நல அரசை உரு­வாக்­கு­கின்ற ஒரு புதிய அர­சியல் யாப்பை உரு­வாக்க இந்த அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்கும் என்று நம்­புவோம். ஏற்­க­னவே 2000, 2015, 2019 ஆம் ஆண்­டு­களில் புதிய யாப்புத் திருத்­தத்­துக்­கான யோச­னைகள் பல முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. அவற்­றையும் இந்த அர­சாங்கம் கருத்தில் கொள்­வது அவ­சி­ய­மாகும்.

4. ஊழல் ஒழிப்பு தேசிய மக்கள் சக்­தியின் கவர்ச்­சி­க­ர­மான ஒரு தேர்தல் பிர­சா­ர­மாக இருந்­தது. பழம்­பெரும் அர­சியல்வாதி­களின் பாரிய ஊழல் மோச­டிகள் பற்­றியே அவர்கள் அதிகம் பேசி­னார்கள். அவற்றைக் கண்­டு­பி­டித்து அவர்­கள்­மீது சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்­வது அவ­சி­யம்தான். ஆனால், லஞ்­சமும், ஊழலும் அரச நிரு­வா­கத்தின் எல்லா மட்­டங்­க­ளிலும் ஆழ வேரோடி உள்­ளது. அதை அகற்­று­வ­தற்­கான, அல்­லது மட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான பொறி­மு­றை­களை உரு­வாக்­கு­வது முக்­கி­ய­மா­னது. இந்த ஆட்­சிக்­கா­லத்தில் அது செயற்­பட வேண்டும். இலங்கை உலகின் ஊழல் மிகுந்த நாடு­களின் வரி­சை­யை­விட்டு, ஊழல் குறைந்த நாடு­களின் வரி­சையில் சேரும் காலம் விரைவில் வர­வேண்டும் என்று எதிர்­பார்க்­கிறோம்.

5. பாரா­ளு­மன்­றத்தைச் சுத்­தி­க­ரித்தல் பற்றி ஜனா­தி­பதி தனது தேர்தல் பிர­சாரக் கூட்­டங்­களில் சுவை­யாகப் பேசினார். பாரா­ளு­மன்­றத்தைச் சுத்­தி­க­ரித்தல் என்­பது ஊழல் மிகுந்த பழைய அர­சியல் வாதி­களை வீட்­டுக்கு அனுப்­பி­விட்டு, புதிய அர­சி­யல்­வா­தி­களால் பாரா­ளு­மன்­றத்தை நிரப்­பு­வது அல்ல என்­பதை நாம் புரிந்­து­கொள்ள வேண்டும்.
புதி­ய­வர்­களும் பழை­ய­வர்­கள்போல் ஊழல் மிகுந்த அரசியல்வாதிகளாக ஆகமுடியாத, சட்டபூர்வமான ஒரு புதிய சூழலை உருவாக்குவதாகவே அது இருக்கவேண்டும். தொழில்ரீதியான அரசியல்வாதிகள் (Professional Politicians) உருவாக முடியாத ஒரு சூழலை உருவாக்குவது அதன் பொருளாக இருக்க வேண்டும்.

வேறு தொழில் எதுவும் இல்லாது, அல்­லது தனது தொழிலைக் கைவிட்டு, பாரா­ளு­மன்றப் பத­வி­யையே தன் வாழ்நாள் தொழி­லாகக் கொள்­ப­வர்தான் தொழி­ல்­ரீ­தி­யான அர­சி­யல்­வாதி எனப்­ப­டு­கிறார். பின்னர், அது அவ­ரு­டைய குடும்ப உரி­மை­யா­கி­றது. அது அவர்கள் சொத்துக் குவிப்­ப­தற்­கான வாயி­லா­கி­றது. வளர்ச்­சி­ய­டைந்த நாடு­க­ளில்­கூட தொழில் ரீதி­யான அர­சி­யல்­வாதி பிரச்­சி­னைக்கு உரி­ய­வர்தான். தொழில் ரீதி­யான அர­சி­யல்­வா­திகள் உரு­வா­வதைத் தவிர்க்க வேண்­டு­மானால் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் பதவிக் காலம், வயது, கல்­வித்­த­கைமை என்­பன பற்றி சட்­ட­ரீ­தி­யான வரை­ய­றைகள் வேண்டும். தங்­களைப் பாதிக்கும் சட்­ட­ரீ­தி­யான இத்­த­கைய வரை­ய­றை­களைச் செய்ய பத­வி­யி­லுள்ள எந்த அர­சாங்­கமும் முன்­வ­ருமா என்­பது ஐயத்­துக்­கு­ரி­யது. இவற்றை மேற்­கொள்­ளாமல் பாரா­ளு­மன்­றத்தைச் சுத்­தி­க­ரிக்க முடி­யுமா என்­பது கேள்­விக்­கு­ரி­ய­துதான்.

அடுத்துவரும் ஐந்தாண்டு காலத்துள் நல்லது நடக்கவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.