இஸ்லாமிய மார்க்கம் என்பது அன்பு, மனித நேயம், ஐக்கியம், சமாதானம், சகவாழ்வு, சகோதரத்துவம் போன்ற உயர்ந்த விழுமியங்களை தன்னகத்தே கொண்டுள்ளது, இவற்றை உலகில் மலரச் செய்து தானும் தன்னைச் சூழவுள்ளவர்களும் அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழ வழியமைத்துக் கொடுப்பதே உண்மையான முஸ்லிமின் பணியாகும், இதனை உணர்ந்த உண்மையான முஸ்லிம் தனது நாவினாலோ கரத்தினாலோ பிற மனிதர்களுக்கு ஒருபோதும் தீங்கிழைக்கக் கூடியவனாக இருக்கவே மாட்டான்.
அதனால்தான் நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் தனக்கு விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்பாதவரை ஈமான் கொண்டவராக மாட்டார்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
இஸ்லாம் அன்பை போதிக்கிறது, அது மனித நேயத்தை இறைச்செய்திகளினூடாக மனிதர்களுடைய உள்ளங்களில் விதைக்கின்து, பிறரை நேசிப்பது, அன்பு கொள்வது போன்ற உயர்ந்த குணங்களுடன் பிறருக்கு தொந்தரவில்லாமல் வாழ்ந்தால் மாத்திரமே சுவனம் செல்லமுடியும் என்ற நம்பிக்கையை இஸ்லாம் மனிதர்களுக்கு அதன் அடிப்படைக் கொள்கையாக கற்றுக் கொடுக்கின்றது.
“நிச்சயமாக நாம் உங்களை ஒரே ஆணிலிருந்தும் ஒரே பெண்ணிலிருந்தும் சிருஷ்டித்தோம். பின்னர் கோத்திரங்களாகவும் குழுக்களாகவும் ஆக்கினோம். நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக.” (சூரா அல் ஹுஜுராத் – 13)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், “மக்களே! உங்கள் இறைவன் ஒரே ஒருவன்தான். உங்களுடைய தந்தை ஒருவர்தான். ஓர் அரபிக்கு அரபியல்லாதவரை விடவும் ஓர் அரபியல்லாதவருக்கு அரபியரை விடவும் ஒரு கறுப்பருக்கு சிவப்பரை விடவும் ஒரு சிவப்பருக்கு ஒரு கறுப்பரை விடவும் எந்தச் சிறப்பும் இல்லை இறையச்சத்தைத் தவிர!”
நூல் – முஸ்னத் அஹ்மத் 22391
இஸ்லாம் உலக மக்களுக்குரிய பொதுவான மார்க்கமாகும். அது உலக அமைதிக்கும் மறுமலர்ச்சிக்கும் வழிகாட்டிக் கொண்டே இருக்கும். அதேபோன்று இஸ்லாம் மனிதர்களை மனிதர்களாக பார்க்கின்றது. பிற மனிதர்களின் உயிர்கள், உரிமைகள், உணர்வுகள், உடமைகள், சொத்துக்கள் போன்றவற்றில் தேவையின்றி உள்நுழைவதையும் அவற்றுக்குப் பங்கம் விளைவிப்பதையும் மிகப்பெரும் குற்றச் செயலாக இஸ்லாம் கருதுகின்றது.
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி (ஸல்) அவர்கள் மினாவில் இருந்தபோது ஸஹாபாக்களை நோக்கி, “இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?” எனக் கேட்டார்கள். அதற்கு ஸஹாபாக்கள், “அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கறிவர்!” என்றனர். உடனே அவர்கள், “இது புனிதமிக்க தினமாகும்!” என்றார்கள். “இது எந்த நகரம் என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்க மக்கள், “அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கறிவர்!” என்றனர். அவர்கள், “(இது) புனிதமிக்க நகரமாகும்!” என்றார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள், “இது எந்த மாதம் என்பதை அறிவீர்களா?ங என்றதும் மக்கள், “அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிவர்” என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இது புனிதமிக்க மாதமாகும்” எனக் கூறிவிட்டு, “உங்களுடைய இந்த புனித நகரத்தில், உங்களுடைய இந்தப் புனித மாதத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அது போலவே அல்லாஹ் உங்கள் உயிர்களையும் உடைமைகளையும் உங்கள் மானம் மரியாதைகளையும் புனிதமாக்கியுள்ளான்!” எனக் கூறினார்கள். (புஹாரி)
மனிதர்களை மனிதர்களாக மதிப்பதும் அவர்களது உணர்வுகளை மதிப்பதும் எவ்வகையிலும் ஒருவர் மற்றொருவரை காயப்படுத்தாமல் இருப்பதனையுமே இஸ்லாம் மனிதர்களுக்கு போதிக்கின்றது. தன்னை சபித்தவர்கள், தனக்கெதிராக சதிமுயற்சி செய்தவர்களைக்கூட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்பாகவும் பண்பாகவுமே அணுகினார்கள்.
நபி (ஸல்) அவர்களை ஒரு பிரேதம் கடந்து சென்றது. உடனே நபியவர்கள் எழுந்து நின்றார்கள். அப்போது அவர்களிடத்தில், ”இது ஒரு யூதனின் பிரேதம் (இதற்காகவா நீங்கள் எழுந்து நிற்கிறீர்கள்?)” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”அதுவும் ஒரு உயிர்தானே” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: சஹ்ல் பின் ஹுனைஃப் மற்றும் கைஸ் பின் சஃத் (ரழி) நூல்: புகாரி (1313)
உஹுத் போரில் நபிகளாரின் முகத்தில் காயமேற்பட்டது. பல் உடைக்கப்பட்டது. அந்நேரத்தில், “நபியவர்களே! இந்த எதிரிகள் நாசமாகட்டுமென நீங்கள் பிரார்த்தனை செய்யக் கூடாதா?” என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்: “சாபமிடுபவனாக நான் அனுப்பப்படவில்லை! நானோ ஓர் அழைப்பாளனாக, அருட்கொடையாகவே அனுப்பப்பட்டிருக்கிறேன்.” (முஸ்லிம்)
“யா அல்லாஹ்! என் கூட்டத்தாருக்கு நேர்வழிகாட்டு! நிச்சயமாக அவர்கள் அறியாத மக்களாவர்!” (புஹாரி)
அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்)” என்று சொல்வதற்குப் பதிலாக, ”அஸ்ஸாமு அலைக்கும் (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்)” என்று நேருக்கு நேராக நபிகளாரை சபித்தவர்கள்தான் அந்த யூதர்கள். எனினும் நபிகளார் அவர்களுடனும் அன்பாகவே நடந்து கொண்டார்கள்.
நபி (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்த யூத சிறுவன் ஒருவன் நோயுற்றான். எனவே அவனைப்பற்றி நலம் விசாரிப்பதற்காக அவனிடத்தில் வந்து அவனுடைய தலைக்கு அருகில் அமர்ந்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரழி) நூல்: புகாரி (1356)
தனக்குத் தொந்தரவளித்தவர்களுடனும் அன்பாக நடந்துகொண்ட நபிகளார், மக்களிடையே இஸ்லாத்தின் உண்மையான முகத்தை காட்டுவதற்கும் அதனை மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்கும் எடுத்துக்கொண்ட உயர்ந்த வழிமுறையையே பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகின்றது.
“அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர் (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்.” (அல்-குர்ஆன் 3:159)
” மென்மை ஒரு காரியத்தில் இருந்தால் அதனை அது அழகு படுத்தும். ஒரு காரியத்திலிருந்து அது (மென்மை) எடுபட்டுவிட்டால் அது அதனைக் அசிங்கப்படுத்திவிடும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.
ஆவேசம், ஆத்திரம், தூர நோக்கின்றி செயல்படுதல், நிதானமிழத்தல், கரடு முரடான வார்த்தைப் பிரயோகங்கள், வரம்பு மீறிய விமர்சனங்கள், வீணான குதர்க்கங்கள், சந்தேகத்துக்கிடமான முறையில் செயலாற்றுதல், பீதியைக் கிளப்பி விடுதல், சர்ச்சைக்குரிய காரியங்களில் தலையிடுதல் போன்ற விடயங்களை தவிர்க்கவும் பிரச்சினைகளை இலகுவாக தீர்த்துக் கொள்வதற்கும் ஐக்கியத்தையும் சமாதானத்தையும் சுபிட்சத்தையும் மேலோங்கச் செய்வதற்கும், நிதானமும் விட்டுக் கொடுப்பும் சகிப்புத் தன்மையும் மென்மையும் பொறுமையும் நற்செய்தி கூறுதலும், அன்பாக அணுகுதலும் அத்தியவசியமானவையாகும், அதனையே நபிகளார் எமக்கு வழிகாட்டித் தந்துள்ளார்கள்.
ஒருமுறை நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் ஓர் இறை மறுப்பாளன் அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்களை கடும் வார்த்தைகளால் தூசித்துக்கொண்டிருந்தான், இதை பார்த்து நபி (ஸல்) அவரகள் புன்னகைத்துக் கொண்டிருந்தார்கள், சிறிது நேரம் மௌனமாக இருந்த அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் பொறுமை இழந்து தானும் பதிலுக்கு கடும் வார்த்தைகளால் பதிலளிக்கலானார்கள். உடனே நபி (ஸல்) அவரகள் அதிருப்தியுடன் தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து விரைவாக அகன்றார்கள். பதறிப்போன அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் நபிகளாரை சந்தித்து பணிவாக காரணம் வினவ நபி (ஸல்) அவரகள் “அவன் உங்களை தூஷித்துக்கொண்டிருக்கும் போது மலக்குமார்கள் உங்களுக்கு ஆசீர்வாதம் வழங்கிக் கொண்டிருந்தார்கள். நீங்கள் எப்போது அவனுக்கு கோபத்துடன் பதில் கொடுக்க ஆரம்பித்தீர்களோ மலக்குமார்கள் அவ்விடத்தை விட்டு அகன்றுவிட்டார்கள். ஷைத்தான் அவ்விடத்தை நிரப்பினான். ஷைத்தான் இருக்கும் சபையில் நான் இருப்பதில்லை” என பதிலளித்தார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
அபூ மூஸா அல் அஷ்அரீ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். “நபி (ஸல்) அவர்கள், முஆத் (ரழி) அவர்களையும் என்னையும் யமன் நாட்டிற்கு (ஆட்சி நடத்தவும் பிரசாரம் செய்யவும்) அனுப்பினார்கள். அப்போது (எங்கள்) இருவரிடமும், “நீங்கள் இலேசானதையே மக்களுக்கு நற்செய்தி கூறுங்கள், வெறுப்பூட்டி விடாதீர்கள். ஒருவரோடொருவர் இசைந்து பழகிக் கொள்ளுங்கள். ஒருவரோடொருவர் (கருத்து வேறுபட்டு) பிணங்காதீர்கள” என்று (அறிவுரை) கூறினார்கள். ஆதாரம் : புகாரி.
நேர்மையோடு (நடுநிலையாகச்) செயற்படுங்கள். நிதானமாக செயற்படுங்கள். (வரம்பு மீறிவிடாதீகள்.) அறிந்துகொள்ளுங்கள்: உங்கள் யாரையும் அவரது நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது. மாறாக, அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையினாலேயே அவரால் சொர்க்கம் நுழைய முடியும்.
அறிவிப்பாளர் :ஆயிஷா (ரலி) அவர்கள்
நூல் : புகாரி
நற்செய்தி கூறுதல், அன்பாக அணுகுதல், மென்மையைக் கடைப்படித்தல், நிதானப்போக்கை கையாளுதல், இலகு படுத்துதல், நடுநிலையாக செயற்படுதல், வரம்பு மீறாதிருத்தல், எச்சந்தர்ப்பத்திலும் பிறருக்கு தீங்கிழைக்காமலிருத்தல் போன்ற விடயங்கள் தான் முஸ்லிமின் அடையாளங்களாகும். ஒரு முஸ்லிம் இத்தகைய குணங்கள் மூலமே தன்னை ஒரு முஸ்லிம் என்று உலகிற்கு அடையாளப்படுத்த முயற்சிக்க வேண்டும். இப்படிப்பட்ட அழகிய பண்பாடுகளை தன்னகத்தே கொண்டு முஸ்லிமாக வாழ்பவர் தான் வாயால் தஃவா செய்யா விட்டாலும் தனது வாழ்க்கையையே பிற மனிதர்களுக்குரிய மிகப்பெரும் தஃவாவாக அமைத்துக் கொண்டவராவார்.
-Vidivelli