பொய் குற்றம்சாட்டியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை தேவை

0 89

கர்ப்பிணித் தாய்மாருக்கு கருத்தடை சிகிச்சை செய்ததாக டாக்டர் ஷாபிக்கு எதிராக குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமையவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போதிய ஆதாரம் இல்லாததால் வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக நீதிமன்றில் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது.

இந்த வழக்கைத் தாக்கல் செய்த போதே இதுவொரு அப்பட்டமான பொய்க் குற்றச்சாட்டு என்பதை குற்றப் புலனாய்வுப் பிரிவினரே உறுதி செய்திருந்தனர். எனினும் இலங்கையின் நீதிமன்றப் பொறிமுறையிலுள்ள கால தாமதம் மற்றும் அப்போதிருந்த இனவாத அரசாங்கத்தின் அழுத்தங்கள் காரணமாக இந்த வழக்கை உடன் முடிவுக்குக் கொண்டுவர முடிந்திருக்கவில்லை. சுமார் 5 வருடங்களாக இழுத்தடிக்கப்பட்ட வழக்கு நேற்றைய தினம் தள்ளுபடி செய்யப்பட்டதன் மூலம் டாக்டர் ஷாபி உத்தியோகபூர்வமாக குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டுள்ளதுடன் சுதந்திரமாக தனது நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அனுமதியைப் பெற்றுள்ளார்.

உலக வர­லாற்­றி­லேயே ஒரு வைத்­தி­ய­ருக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்ட மிகவும் முட்­டாள்­த­ன­மான குற்­றச்­சாட்டே இந்த வழக்காகும். பகுத்­த­றி­வுக்கு அப்­பாற்­பட்ட இந்தக் குற்­றச்­சாட்டை, இத­னுடன் தொடர்­பு­டைய வதந்­தி­களை முன்­னின்று பரப்­பி­யோரும் வைத்­தி­யர்­கள்தான் என்­பதே இங்கு கவ­லைக்­கு­ரி­ய­தாகும். மேலும் இந்த பொய்­யான குற்­றச்­சாட்டைக் கட்­டி­யெ­ழுப்பி அதனை ஊடகம் ஒன்­றுக்கு வழங்­கி­யவர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒரு­வரே என்­பதும் அதை­விட கவ­லை­யான தக­வ­லாகும். அந்த வகையில் மிகப் பார­தூ­ர­மான இந்தக் குற்­றச்­சாட்டை முன்­வைத்து முழு நாட்­டை­யுமே தவ­றாக வழி­ந­டாத்­திய வைத்­தி­யர்கள், பொலிசார், மத தலைவர்கள் மற்றும் ஊட­கங்கள் என்­ப­வற்­றுக்கு எதி­ராக நீதித்­துறை என்ன நட­வ­டிக்கை எடுக்கப் போகி­றது என்­பதே நம்முன் உள்ள கேள்­வி­யாகும்.

இந்த குற்­றச்­சாட்­டுக்­களின் அடிப்­ப­டையில் வைத்­திய சேவையில் இருந்து சுகா­தார அமைச்­சினால் இடை­நி­றுத்­தப்­பட்டு, டாக்டர் ஷாபி கைது செய்­யப்­பட்டு பின்னர் பிணையில் விடு­விக்­கப்­பட்­டார். எனினும் அவர் குற்­ற­மற்­றவர் என சுகா­தார அமைச்­சினால் கண்­ட­றி­யப்­பட்­ட­தை­ய­டுத்து அவர் மீளவும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டார். இதன்போது அவர் இடைநிறுத்தப்பட்டிருந்த காலப்பகுதிக்கான சம்பள நிலுவை மீள வழங்கப்பட்டது. இந் நிதியைக்கூட அவர் அரச வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக அன்பளிப்பாக வழங்கியிருந்தார்.

அநியாயமாக கைது செய்யப்பட்ட டாக்டர் ஷாபி சிறையிலடைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் மிக மோசமான அனுபவங்களுக்கு முகங்கொடுத்திருந்தார். பிளாஸ்டிக் போத்தலில் தண்ணீரை நிறைத்து அதனையே தலையணையாக பயன்படுத்தி தான் 46 நாட்கள் சிறையில் தூங்கியதாக அவர் ஊடகங்களிடம் தெரவித்திருந்தார். இந்தக் கைதால் டாக்டரின் குடும்பம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. டாக்டரின் மனைவியும் பிள்ளைகளும் இந்த நாட்டில் பாதுகாப்பாக குடியிருக்க ஒரு வீட்டைக் கூட வாடகைக்குப் பெற முடியாத நிலை நாட்டில் தோற்றம் பெற்றிருந்தது. கிழக்கு மாகாணத்திலும் கண்டியிலும் அவர்கள் பல மாதங்களாக தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டியிருந்தது. பிள்ளைகளின் கல்வி உரிமை கூட மறுக்கப்பட்டது.

டாக்டர் ஷாபி குற்றமற்றவர் என்று தீர்ப்பளிப்பதால் மாத்திரம் இந்த விடயத்தை முடிவுக்குக் கொண்டு வந்துவிட முடியாது. மாறாக இவ்வாறான மிக மோசமான இனவாதக் குற்றச்சாட்டின் பின்னணியில் இருந்த சகலரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

2019 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 2020 பாராளுமன்றத் தேர்தல்களில் ஒரு தரப்பினர் வெற்றி பெறுவதற்காக சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை தூண்டுவதற்காகவே டாக்டர் ஷாபி விவகாரம் திட்டமிட்டு சோடிக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவர். இதன் மூலம் ஆட்சிக்கு வந்த தரப்பினர் எவ்வாறு மக்களால் மிகவும் கேவலமான முறையில் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள் என்பதும் எவ்வாறு வெளிநாட்டுக்குத் தப்பியோடினார்கள் என்பதும் வரலாறு.

எனினும் இதனுடன் சம்பந்தப்பட்ட சகலருக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டும். டாக்டர் ஷாபி நேற்று நீதிமன்றுக்கு வெளியில் வைத்து குறிப்பிட்டுள்ளது போன்று உடனடியாக இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதனடிப்படையில் அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான இனவாதத்துக்கு எதிரான அரசாங்கம் இதுவிடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களுக்கு கடும் தண்டனை வழங்குவதன் மூலமே மீண்டும் மீண்டும் இந்த நாட்டில் டாக்டர் ஷாபிகளுக்கும் அவர்கள் சார்ந்த சமூகத்திற்கும் அநியாயம் இழைக்கப்படுவதை தடுக்க முடியுமாகவிருக்கும். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.