பொய்யான குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ளவர்களுக்கு எதிராக விரைவில் வழக்கு
வைத்தியர் ஷாபி அறிவிப்பு; அரசியலுக்கு வருவாரா என்பதற்கும் பதில்
(எப்.அய்னா)
தனக்கு எதிராக எந்த அடிப்படையும் இல்லாமல் கருத்தடை குற்றச்சாட்டினை முன்வைத்து இனவாதத்தை தூண்டி, தனது வாழ்வை சீரழித்த பொலிஸ், அதிகாரிகள், ஊடகவியலாளர் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் அறிவித்தார்.
கருத்தடை குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், குருணாகல் நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு முன்பாக ஊடகவியலாளர்களிடம், தனது சட்டத்தரணி மைத்திரி குணரத்ன சகிதம் பேசும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இனி மேல், தன்னை போல எவரும் பழிவாங்கலுக்கு, இனவாதத்துக்கு இரையாகக் கூடாது என்பதற்காக இந்த சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக வைத்தியர் ஷாபி குறிப்பிட்டார்.
இதனிடையே, தான் ஒரு அரச உத்தியோகத்தர் எனும் ரீதியில் அரசியலில் ஈடுபட எந்த எதிர்பார்ப்பும் இல்லை எனவும், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் தனக்கான நீதியை பெற்றுத்தந்த்துள்ள நிலையில், இந்த நல்ல மாற்றம் தொடர வேண்டும் என வைத்தியர் ஷாபி கூறினார்.
அத்துடன் தன் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டாலும், தனக்காக குரல் கொடுத்த ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள், அரசியல் தலைமைகளுக்கும், குறிப்பாக ஜனாதிபதிக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
இதனிடையே, எதிர்வரும் ஒரு வாரத்துக்குள், அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை முன் வைத்து, இனவாதத்தை அரசியல் தேவைகளுக்காக விதைத்த அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கைகளுக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்படும் என வைத்தியர் ஷாபியின் சட்டத்தரணி மைத்திரி குணரத்ன குறிப்பிட்டார்.– Vidivelli