அஷ்ஷெய்க் எம்.ஐ.எம் அன்வர் (ஸலபி⁄மதனி)
மனிதன் இயல்பிலேயே கூட்டு வாழ்வுக்குரியவன். இதனால் அவனை சமூகப்பிராணி என அழைப்பர். காரணம், அவனால் தனித்து வாழ முடியாது. சமூக வாழ்வில் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் தலைமை ஏற்பவராகவே உள்ளோம். இஸ்லாம் இயல்பிலேயே ஒரு சமூக மார்க்கம். அதன் வழிபாடுகளிலிருந்து வாழ்க்கைமுறைவரை கூட்டு வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்களைக் கொண்டது. உங்களில் மூவர் பயணித்தாலும் உங்களுக்கு தலைமை அவசியம் என ஒரு நபிமொழி உணர்த்துகிறது. தலைமைக்கான முக்கியத்துவத்தை மட்டுமல்லாமல் அதற்கான வழிகாட்டுதல்களையும் இம்மார்க்கம் தன்னுள்ளே கொண்டுள்ளது. மனிதகுல வரலாற்றிலேயே வெறும் 23 வருடங்களில் ஒரு மிகப்பெரும் வரலாற்றுப் புரட்சியை, சமூக மாற்றத்தை ஏற்படுத்திய இறைத்தூதரின் தலைமைத்துவ வரலாறு நமக்கு முன்னே அதற்கு வழிகாட்டிக்கொண்டிருக்கிறது.
இறுதி இறைத்தூதர் என்ற வகையில் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தங்களின் பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு அவசியமான அனைத்து ஆளுமைப் பண்புகளையும் அல்லாஹுதாலா அவர்களிடம் வளரச்செய்திருந்தான். எனவே, அவர்கள் தனது தூதுத்துவத்தை எவ்விதக் குறையுமின்றி நிறைவேற்றினார்கள். இதனாலேயே தனிமனிதர் என்ற வகையில் வாழ்க்கையில் வெற்றிகண்டவர்களின் வரிசையில் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் முன்னணியில் திகழ்கிறார்கள். இறைத்தூதர் அவர்களுக்குப் பிறகு இஸ்லாத்தையும், இஸ்லாமிய கலாசாரம், நாகரிகம், சமூக அமைப்பு என்பவற்றையும் பேணிப்பாதுகாத்துவரும் பொறுப்பு முஸ்லிம்களுடையதாகும். எனவே, தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு முஸ்லிமும் தனது வாழ்வில் வெற்றிபெறுவதற்கும் இஸ்லாமிய சமூகத்தவர் என்றவகையில் அனைத்து முஸ்லிம்களும் தம்மீது சார்ந்துள்ள இப்பொறுப்புகளை நிறைவேற்றி அல்லாஹுதஆலாவின் அன்பைப் பெறுவதற்கு அவசியமான தலைமைத்துவ கோட்பாடுகள் திருக்குர்ஆனிலும் இறைத்தூதர் அவர்களின் நடைமுறையான ஸுன்னாவிலும் நிறைவாகக் காணக் கிடைக்கின்றன.
இறைத்தூதர்களின் தலைமைத்துவத்தில், வஹீயின் இரண்டு பாகங்களான ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) மூலமாக இறக்கியருளப்பட்ட வேதமும் தூதர்களது வழிமுறைகளும் துணை நிற்கும். அவர்களுக்குப் பின்னால் கலீபாக்களும் அதிகாரிகளும் தலைமை தாங்குபவர்கள் என்ற போதிலும் இறைவனுடைய, இறைத்தூதருடைய சட்டத்துக்கு இசைவாகவே அவர்கள் நிர்வகிக்க வேண்டும்.
முஸ்லிம் சமூகத்துக்கு தலைமைத்துவம் இருக்க வேண்டியது ஒரு கட்டாயக் கடமை என்பது இஸ்லாமிய அறிஞர்களின் ஒருமித்த கருத்தாகும். இதற்காக அவர்கள் பலமான சான்றுகளை திருக்குர்ஆன், ஸுன்னா ஆகியவற்றிலிருந்து முன்வைத்து வாதாடுகின்றனர். அந்த வாதத்திற்கான ஒரு ஆதாரமே கீழ்வரும் ஹதீஸாகும். முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு நீண்ட ஹதீஸில் ஹுதைபா இப்னு யமான் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களைப் பார்த்து கூறினார்கள்:
“முஸ்லிம்களின் கூட்டமைப்பையும் அவர்களது தலைவரையும் நீங்கள் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.” (புகாரி)
இஸ்லாமிய சமூகத்தின் அடித்தளம் அதன் தலைமைத்துவத்தின் மீதே கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இதனைத்தான் உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
“நிச்சயமாக கூட்டமைப்பு இன்றி இஸ்லாம் இல்லை தலைமைத்துவம் இன்றி கூட்டமைப்பு இல்லை. அடிபணிதல் இன்றி தலைமைத்துவம் இல்லை.” (அத்தாரமீ)
இஸ்லாமிய சமூகத்தின் யதார்த்த நிலையையே உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் எடுத்துக் கூறியுள்ளார்கள். இந்த யதார்த்தத்தை புரிந்துகொள்ளத் தவறியதால்தான் நாம் உலக அரங்கிலிருந்து பல கோணங்களிலும் பின்தள்ளப்பட்டுவிட்டோம். முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
“இஸ்லாத்தின் வளங்கள் ஒவ்வொன்றாக அழிந்துபோய்விடும். அவற்றில் ஒன்று அழியும் போது அடுத்துள்ளதை மக்கள் பற்றிப் பிடித்துக்கொள்வார்கள். அவ்விதம் தலைமைத்துவமே முதலில் அழிந்து போகும். இறுதியாக அழிந்துபோவது தொழுகையாகும்.” (அஹ்மது)
இவ்வாறெல்லாம் தலைமைத்துவத்தின் அவசியத்தை இஸ்லாம் வலியுறுத்துவதற்கான காரணம் இது இஸ்லாமிய சமூகத்துக்கு இன்றியமையாத ஒன்று என்பதனாலேயே ஆகும்.
இஸ்லாமிய தலைமைத்துவத்துக்கு தெரிவு செய்யப்படும் ஒரு தலைவர் பின்வரும் ஆளுமைப் பண்புகளை கொண்டிருத்தல் வேண்டும் என ஷரீஆ எதிர்பார்க்கிறது:
குவ்வத் எனும் உடல், உள ஆற்றல்
அமானத் எனும் பொறுப்புணர்வு
ஹிஃப்ழ் எனும் பேணுதல்
இல்ம் எனும் அறிவு ஆற்றல்
இஸ்லாம் எல்லா மனிதர்களின் ஆற்றல்களுக்கும், திறமைகளுக்கும் மதிப்பும், சந்தர்ப்பமும் வழங்குகிறது. ஒவ்வொருவருக்கும் அவரவர் தகுதிக்கேற்ற பொறுப்புகளை வழங்குகிறது. தலைமைத்துவத்துக்கும் அப்படித்தான். இஸ்லாம் தலைமைத்துவத்தை பல படிநிலைகளாக பிரித்துள்ளதோடு அதைப் பொறுப்பேற்கத் தேவையான குறைந்தபட்ச தகைமையையும் வரையறுத்துள்ளது.
எடுத்துக்காட்டாக, தொழுகை நடத்தும் இமாமிற்கு (தலைவர்) தேவையான குறைந்தபட்சத் தகைமை திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள பாத்திஹா அத்தியாயத்தைச் சரியான உச்சரிப்புடன் ஓதும் ஆற்றல் பெற்றிருத்தலாகும். பதினைந்து நிமிடங்கள் வரை நீடிக்கும் இத்தொழுகையில் இமாமுக்குப் பின்னால் ஏராளமான மக்கள் வரிசையாக நிற்பார்கள். ஆனால் இங்கு பாத்திஹா அத்தியாயமே அவரது தலைமைத்துவத்தை ஏற்பதற்கான ஆக குறைந்தபட்ச தகைமையாகும். அதேவேளை ஆட்சிப் பொறுப்பை ஏற்கத் தேவையான தலைவரின் தகுதி வித்தியாசமானது.
அல்குர்ஆன் ஒருவரை பதவிக்கு நியமிப்பதற்கான தகைமையாக அவர் உடல் ஆரோக்கியம் கொண்டவராக இருத்தல் வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைக்கிறது. இதனை நபி மூஸா (அலைஹிஸ் ஸலாம்) அவர்களின் சம்பவம் ஒன்றுடன் தொடர்புபடுத்தி பேசுகிறது. நபி ஷுஐப் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களிடம் அவரது மகள் அவரை பணிக்கு அமர்த்துமாறு கூறும் போது அவரிடம் இருக்கும் இரண்டு தகைமைப் பண்புகளை கூறியே அவர் பதவிக்கான பரிந்துரையை முன்வைக்கிறார். இதனை அல்குர்ஆன் பின்வருமாறு பிரஸ்தாபிக்கிறது.
அவ்விருவரில் ஒருவர் கூறினார்: “என் அருமைத் தந்தையே! நீங்கள் இவரை பணிக்கு அமர்த்திக்கொள்ளுங்கள். நீங்கள் பணிக்கு அமர்த்துபவர்களில் நிச்சமாக இவர் சிறந்வர். பலமுள்ளவர் நம்பிக்கையானவர்.” (அல்-கஸஸ்:26;)
ஒருமுறை அபூதர் அலகிபாரி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தன்னை ஒரு பிராந்தியத்துக்கு ஆளுநராக நியமிக்குமாறு வேண்டிக்கொண்ட போது முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
நான் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் எனக்குத் தாங்கள் பொறுப்புகள் தரக்கூடாதா? எனக் கேட்டேன். அதற்கவர்கள் எனது தோளில் ஒரு தட்டு தட்டிவிட்டுக் கூறினார்கள். “அபூ தர்ரே! நீர் பலவீனமானவர். அப்பொறுப்போ மிகப் பெரும் அமானிதமாகும். அதனை உரிய முறையில் சரியாக நிறைவேற்றாவிட்டால் மறுமை நாளில் அது ஒரு சாபமாகவும் இழிவாகவும் மாறிவிடும்.” (முஸ்லிம்)
தலைமைத்துவத்தை இஸ்லாம் ஒரு அமானிதம் என்று கருதுகிறது. அதனை ஏற்றுக்கொள்பவர் ஒரு மாபெரும் பொறுப்பை தன் தலைமீது சுமந்துகொள்பவராக மாறிவிடுகின்றார். அதனைச் செவ்வனே பூர்த்தி செய்வதற்காக இரவு-பகலாக உழைப்பது அவர்மீது கடமையாக்கப்பட்டுள்ளது. தனக்குக் கீழுள்ளவர்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு இயங்கவேண்டும். துலைமைத்துவப் பொறுப்புக்குறித்து அவர் ஒருபோதும் பராமுகமாக வாழ முடியாது. அவர் தலைமைத்துவ இருக்கையில் அமர்ந்துகொண்டு மக்களின் விவகாரங்களை ஏனையோர் பக்கம் பொறுப்புச் சாட்டிவிட்டு ஒதுங்கிவிட முடியாது. முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “அமானிதங்கள் (பொறுப்புகள்) பாழ்படுத்தப்பட்டால் மறுமையை எதிர்பாருங்கள்.” (புகாரி)
பிறிதொரு முறை முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு பொறுப்பு தகுதி இல்லாதவரிடம் ஒப்படைக்கப்பட்டால் மறுமையை எதிர்பாருங்கள்.” (புகாரி)
நிச்சயமாக தலைமைத்துவம் என்பது ஒரு அமானிதம். அதாவது பொறுப்புணர்வுடன் நிறைவேற்றப்படவேண்டிய கடமைகளாகும். அதனை ஒருவர் தகைமை இல்லாத நிலையில் ஏற்றுக் கொண்டு, அதன் பொறுப்புகளை சரிவர நிறைவேற்றத் தவறினால் அது மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாக மாறிவிடுவதோடு அது மறுமை நாளில் அவருக்கு கேடாகவும் சாபமாகவும் மாறிவிடும் என்பதை மேற்போந்த ஹதீஸ்கள் வாயிலாக அறியமுடிகிறது.
தலைவராக தெரிவுசெய்யப்படும் ஒருவர் தனது வாழ்வில் பேணுதலாகவும், பின்பற்றத்தக்க முன்மாதிரியாகவும் இருத்தல் வேண்டும். சமூக வாழ்வில் முன்மாதிரி எனும் பிறரால் பின்பற்றத்தக்க ஆளுமைப் பண்பை தொலைத்தவராக இருப்பாரானால் அவர் பிறருக்கு கட்டளையிடும் விவகாரங்களில் தனது சொந்த வாழ்வில் எந்த பெறுமானமும் இல்லாது இருக்குமாக இருந்தால் அவரது தலைமைத்துவத்தில் மக்கள் சலிப்படைவதோடு, அவருக்கெதிராக கிளர்ந்தெழவும் செய்வார்கள். ஏனெனில் ஒரு தலைமையைப் பின்பற்றி நடப்பதில் இஸ்லாம் முன்வைக்கும் எல்லைக் கோடு அவர் பாவகாரியங்களை வெளிப்படையாக செய்வதோடு ஆரம்பிக்கிறது. இது அவரது தனிப்பட்ட வாழ்வில் பேணுதல் அற்ற நிலையை பிரதிபலிக்கிறது.
நபி யூஸுப் (அலைஹிஸ்ஸலாம்) தான் வாழ்ந்த தேசத்தின் ஆட்சிப் பொறுப்பை தனக்கு வழங்குமாறு கோரிய போது தன்னிடம் உள்ள இரண்டுவிதமான தகைமைப் பண்புகைள அந்தப் பொறுப்புக்கு தகுதியாக கூறுகிறார்கள். அதனை அல்-குர்ஆன் பின்வருமாற பிரஸ்தாபிக்கிறது.
(யூஸுபாகிய) அவர் கூறினார்: “இந்த பூமியின் களஞ்சியங்களுக்கு என்னை (அதிகாரியாய்) நியமியுங்கள். நிச்சயமாக நான் பேணுதலுள்ளவனாகவும், அறிவுள்ளவனாகவும் உள்ளேன்,” (யூஸுப்:55)
இங்கு ஒரு தேசத்தின் முக்கிய தலைமைப்பொறுப்பை ஏற்பதற்கு தகுதியாக இரு முக்கிய தகைமைப் பண்புகளை நபி யூஸுப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கூறுகிறார்கள். அவற்றுள் ஒன்று தான் பொறுப்பெடுக்கப்போகின்ற பதவியை இதய சுத்தியோடு கையாளும் பேணுதல் தனக்கிருப்பதாக கூறுகிறார்கள். அந்த நாடு எதிர்கொள்ளவிருக்கின்ற ஒரு பொருளாதார பேரிடர் காலத்தில் நிதி பரிபாலன பதவியை பொறுப்பெடுப்பவரும் ஆளுமைரீதியாக பேணுதல் அற்றவராகவும், அந்த பொறுப்பு குறித்த அறிவற்றவராகவும் அமையும் போது அதனால் அந்த நாடும் அதன் மக்களும் அதலபாதாளத்தில் போய் விழுந்தும் விடும் நிலையே தோன்றும். இது நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும். இந்நிலையில் அந்தப் பொறுப்பை நிர்வகிக்கக்கூடிய தேவையான தகைமைப் பண்புகள் தனக்கிருப்பதாக கூறி அந்நாட்டு அரசிடம் அவர் முன்வைக்கும் பாங்கு எமக்கு போதிய சான்றுகளாகும். எனவேதான் ஒரு தலைமைப் பொறுப்பை வகிப்பதற்காக நியமிக்கப்பட இருப்பவரிடம் இத்தகைய பண்புகள் அவசியம் காணப்படல் வேண்டும் என்பது இஸ்லாமிய அறிஞர்களின் ஏகோபித்த நிலைப்பாடாகும்.- Vidivelli