றிப்தி அலி
”எனது தொலைபேசிக்கு காலை சுமார் 7.00 மணியளவில் வட்ஸ்அப்பின் ஊடாக அழைப்பொன்று வந்தது. அதற்கு பதிலளித்த போது அழைப்பெடுத்தவர் ஸலாம் கூறினார்.
நானும் பதில் கூறினேன். நீங்கள் தாஹா முஸம்மில் தானே என்று கேட்டார். ஆம், என்ன விடயம்? சொல்லுங்கள் என்றேன்.
இன்றிரவு 8 மணிக்கு காஸா விடயம் தொடர்பில் முக்கியமான கலந்துரையாடலொன்று சூம் தொழிநுட்பத்தின் ஊடாக இடம்பெறவுள்ளது, இவ்விடயத்தில் நீங்கள் அதிக ஆர்வம் காட்டுவதால் தான் உங்களை அழைக்கின்றோம். இக்கலந்துரையாடலுக்கு எல்லோரையும் அழைக்கவில்லை. இதனால், உங்கள் விருப்பத்தை கூறுங்கள் என்றார்.
சரி கலந்துகொள்கிறேன் எனப் பதிலளித்தேன். மிக்க மகிழ்ச்சி, உங்களுக்கு கடவுச்சொல்லொன்றை (Password) அனுப்பியிருக்கிறோம், கிடைத்ததா என்று பார்த்துச் செல்லுங்கள். நாம் அனுப்பிய கடவுச்சொல் தானா என்பதை உறுதிசெய்ய அதை கூறுங்கள் என்றார். குறித்த கடவுச்சொல்லை கூறினேன். அவ்வளவு தான் எனது வட்ஸ்அப்பின் கதை முடிந்தது. எனது வட்ஸ்அப்பின் கட்டுப்பாடு அவன் வசமானது.’’
தனது வட்ஸ்அப் ஹெக் செய்யப்பட்ட அனுபவத்தினை ஏனையேரின் படிப்பினைக்காக மூத்த ஊடகவியலாளர் தாஹா எம். முஸம்மில் அவருடைய பேஸ்புகில் மேற்கண்டவாறு பதிவு செய்துள்ளார்.
இவர் போன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன், மூத்த ஊடகவியலாளர் லத்தீப் பாறூக், முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் எனப் பல நூற்றுக் கணக்கானோரின் வட்ஸ்அப் இலக்கங்கள் கடந்த ஒரு வார காலப் பகுதிக்குள் ஹெக் செய்யப்பட்டுள்ளன.
இலங்கையில் இணைய மோசடியில் ஈடுபட்ட 1,000க்கு மேற்பட்ட வெளிநாட்டவர்கள் அண்மையில் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதில் அதிகமானோர் சீனப் பிரஜைகளாவார்.
இவ்வாறான நிலையிலேயே, எமது நாட்டிலுள்ள முக்கியஸ்தர்களின் வட்ஸ்அப் இலக்கங்கள் ஹெக் செய்யப்படுகின்றன. வட்ஸ்அப் இலக்கங்கள் ஹெக் செய்யப்பட்ட பின்னர், குறித்த வட்ஸ்அப் இலக்கங்கள் ஊடாக அவர்களுடன் தொடர்பிலுள்ளவர்களுக்கு பண உதவி கோரி ஆங்கில மொழியில் தகவல்கள் அனுப்பப்படுகின்றன.
“I’m trying to send some money to a friend but it’s not going through i think I’m having issues with my details i don’t know if you can help me send to the person’s details 100,000 LKR i will definitely refund back first thing tomorrow morning insha’Allah” நான் எனது நண்பர் ஒருவருக்கு பணம் அனுப்ப முயற்சிக்கிறேன். எனினும் என்னால் அனுப்ப முடியாதுள்ளது. நான் விபரங்களை தரும் ஒரு நபருக்கு அவசரமாக 1 இலட்சம் ரூபா பணம் அனுப்ப முடியுமா? இன்ஷா அல்லாஹ் நாளை காலை முதல் வேலையாக உங்கள் பணத்தை திருப்பித் தருவேன்’’ என அதில் குறிப்பிடப்படுகிறது.
இதற்கமைய, பணத்தினை வைப்புச் செய்ய வங்கிக் கணக்கிலக்கத்தினை கோரினால், உடனடியாக வங்கிக் கணக்கிலக்கம் அனுப்பப்படுகின்றது. இதனை நம்பி பலர் குறித்த வங்கிக் கணக்கிலக்கத்திற்கு பணத்தினை வைப்புச் செய்து கை சேதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலே பதிவு செய்யப்பட்டதைப் போன்ற தகவலொன்று முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் ஆகியோரின் வட்ஸ் அப் இலக்கத்திலிருந்து இக்கட்டுரையாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த தகவலுக்கமைய, வங்கிக் கணக்கிலத்தினை அனுப்புமாறு கோரப்பட்ட போது, இரண்டு வெவ்வேறு வங்கிக் கணக்கிலங்கள் அனுப்பப்பட்டன.
மக்கள் வங்கியின் தலவாக்கலை கிளையிலுள்ள ராஜ் குமாரின் 038200180027355 எனும் கணக்கிலக்கமும் ஹற்றன் நஷனல் வங்கியின் புத்தள கிளையிலுள்ள ஆர்.எம்.ஏ.பி. பலுவிலவின் 075020235510 எனும் கணக்கிலக்கமும் குறித்த நிதி மோசடிக்காக இக்கட்டுரையாளருக்கு அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நிதி மோசடி நோக்கில் ஹெக் செய்யப்பட்ட வட்ஸ்அப் இலக்கங்களை பெரும்பாலனோர் உடனடியாக மீள தங்கள் கட்டுப்பாட்டுக் கொண்டு வருகின்றனர். அதற்கு தேவையான வசதிகளும் ஆலோசனைகளும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான நிலையில், போதிய தொழிநுட்ப அறிவில்லாதவர்கள் ஹெக் செய்யப்பட்ட வட்ஸ்அப் இலக்கத்தினை மீளவும் பெற முடியாமல் தவிக்கின்றனர். இதனால் ஹெக் செய்யப்பட்ட அவர்களின் வட்ஸ்அப் இலக்கத்தின் ஊடாக தகவல் தொடர்ச்சியாக அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இவ்வாறான செய்திகளை நம்பி பலர் பணத்தினை நிதி மோசடியாளர்களினால் வழங்கப்பட்ட கணக்கிலக்கங்களுக்கு வைப்புச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மானின் வட்ஸ்அப் இலக்கம் ஹெக் செய்யப்பட்டமை தொடர்பில் அவர் குற்றப்புலனாய்வு பிரிவில் உடனடியாக முறைப்பாடொன்றினை பதிவுசெய்தார். அத்துடன் அவருடைய வடஸ்அப் ஹெக் செய்யப்பட்ட போது வந்த செய்தியினை நம்பி பணத்தினை வங்கிக் கணக்கில் வைப்புச் செய்தவர்கள் தன்னை தொடர்புகொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த மோசடி தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளமையினால் இதில் ஈடுபடும் நபர்களை கண்டுபிடிப்பதற்காகவே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இந்தக் கோரிக்கையினை முன்வைத்தார்.
இதேவேளை, வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் ஊடாக பெறப்படும் போலியான செய்திகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவும் விளம்பரங்கள் மூலம் தனிநபர் தரவு மற்றும் நிதித் தகவல்களைப் பெற்று இணைய மோசடிகள் இந்த நாட்களில் பொதுவாக இடம்பெறுவதை காணக்கூடியதாகவுள்ளது என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதன்படி, பல்வேறு வங்கிகள், வணிக நிறுவனங்கள், சர்வதேச அமைப்புகள் ஆகியவற்றின் பெயர்களைப் பயன்படுத்தி இணையவழி ஊடாக நன்கொடைகள், ரொக்கப் பரிசுகள், அதிர்ஷ்ட வெற்றிகள், அதிக லாபம் ஈட்டும் பொருட்களை வழங்குதல், காப்பீடு வழங்குதல் ஆகியவற்றிற்காக பதிவு செய்து கொள்ளுமாறு அறிவித்து அனுப்பப்படும் போலியான குறுந்தகவல்கள் மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் ஊடாக OTP எனும் ஒரு தடவை பயன்படுத்தும் கடவுச்சொல் தகவல்களைக் கோரும் செய்திகள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் மேலும் அறிவுறுத்துகிறது.
இந்த இணைய மோசடியாளர்கள் போலி இணையத்தளங்கள், சமூக ஊடகங்கள், குறுஞ்செய்திகள் மற்றும் வட்ஸ்அப் செய்திகள் ஊடாக உங்களை தொடர்பு கொள்ள முயற்சிப்பார்கள் எனவும் இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அவர்கள் அனுப்பும் லிங்கின் உள்ளே பிரவேசிப்பதன் ஊடாக சம்பந்தபட்ட நபரின் கணினி, தொலைபேசி தரவுகள் திருடப்படும் நிதி மோசடி உள்ளிட்ட மோசடிகள் இடம்பெற்று வருகின்றன. விசேடமாக வட்ஸ்அப் செய்திகள் மூலம் அனுப்பப்படும் கடவுச்சொல்லை கேட்பதன் மூலம் உங்கள் வட்ஸ்அப் கணக்கை மோசடியாளர்கள் கட்டுப்படுத்துவார்கள் என குறித்த மன்றம் அறிவித்துள்ளது. இவ்வாறான மோசடிகள் தொடர்பில் ஒவ்வொரு நபரும் மிக அவதானமாக இருக்க வேண்டியுள்ளது. அத்துடன் இந்த மோசடிகள் தொடர்பில் தங்கள் குடும்ப உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அயலவர்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தி அவர்களையும் அவதானமாக இருக்கச் செய்ய வேண்டும்.– Vidivelli