அறுகம்பேயில் இஸ்ரேல் நலன்கள் மீது தாக்குதல்? உளவுத் தகவலால் கடும் பாதுகாப்பு சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை
பாதுகாப்பு பிரச்சினை தொடர்பில் அறிவிக்க சிறப்பு இலக்கம்
(எப்.அய்னா)
அம்பாறை, பொத்துவில், அறுகம்பே பகுதியில் இஸ்ரேல் சுற்றுலா பயணிகள் மற்றும் அவர்களது தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் அச்சுறுத்தல் உள்ளதாக கிடைக்கப் பெற்றுள்ள உளவுத் தகவலால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவின் நேரடி ஆலோசனை மற்றும் மேற்பார்வையில், கிழக்கு சுற்றுலா பயணிகள் தொடர்பில் விஷேட பாதுகாப்பு பொறிமுறை ஒன்று அமுல் செய்யப்பட்டு நடைமுறைபப்டுத்தப்பட்டு வருகின்றது.
குறிப்பாக அறுகம்பேவை மையப்படுத்தி 500 இற்கும் அதிகமான பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் சிறப்பு கடமைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளதுடன், வீதிச் சோதனை சாவடிகள் உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனைவிட கடற்படையினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியும் பாதுகாப்பை பலப்படுத்துவதில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக கிழக்கி மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பணிமனை தெரிவித்தது.
மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழலை மையப்படுத்தி, அறுகம்பேயில் உள்ள இஸ்ரேலிய நலன்கள் இலக்கு வைக்கப்படலாம் என்ற உளவுத் தகவல் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு அரச உலவுத் துறை ஊடாக கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக சிறப்பு உளவுத்துறை அதிகாரிகள் அறுகம்பே விரைந்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகத்தின் உயர் மட்ட தகவல்கள் தெரிவித்தன.
சுற்றுலா பயணிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை:
அம்பாறை மாவட்டத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் அறுகம்பே பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் நேற்று (23) தனது நாட்டு மக்களுக்கு சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளது.
அறுகம்பே பிரதேசத்தில் உள்ள பிரபல சுற்றுலாத் தலங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கும் நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக தூதரகம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் வசிக்கும் அமெரிக்க பிரஜைகள் மற்றும் தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட எவரும் அறுகம்பே பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயமும் தமது பிரஜைகள் இலங்கைக்கு விஜயம் செய்யும் போது கவனமாக இருக்குமாறு அறிவித்தல் விடுத்துள்ளது.
அமெரிக்க தூதரகம் விடுத்த எச்சரிக்கை அறிவிப்பு மற்றும் பொலிஸ் தலிமையகம் நேற்று வெளியிட்ட சிறப்பு அறிக்கையை அடுத்து இலங்கையிலுள்ள மேலும் பல வெளிநாட்டு தூதரகங்கள் தமது பிரஜைகளுக்கு எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது.
இதன்படி, இலங்கைக்கான ரஷ்ய தூதரகம் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயமும் இலங்கைக்கு விஜயம் செய்யும் தமது பிரஜைகளை அவதானமாக இருக்குமாறு அறிவித்துள்ளன.
பொலிஸ் பேச்சாளர் கூறுவதென்ன?:
இந் நிலையில், இந்த அபாய எச்சரிக்கை தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ நேற்று முற்பகல் விஷேட செய்தியாளர் சந்திப்பை நடாத்தி விடயங்களை தெளிவுபடுத்தி இருந்தார்.
“ ‘அறுகம்பே பிரதேசத்தில் இஸ்ரேலியர்கள் தங்கியிருக்கும் கட்டிடம் ஒன்று உள்ளது. அங்கு தங்கியிருப்போர் மீது தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அறுகம்பே பகுதியில் இஸ்ரேலியர்களால் கட்டப்பட்ட கட்டிடம் ஒன்று உள்ளது. மண்டபம் போன்ற இடம் அது. பொதுவாக, அறுகம்பே மற்றும் பொத்துவில் பகுதிகள் ‘சர்பிங்கில்’ அலைச் சறுக்கு விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டுவதால் இஸ்ரேலியர்களின் கவனத்தை அது ஈர்த்துள்ளது.
கடந்த சில நாட்களாக இங்குள்ள இஸ்ரேலியர்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படக்கூடும் என்ற தகவல் கிடைத்தது. இதன் காரணமாக கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய குறித்த பகுதியில் வீதித்தடைகள் மேற்கொள்ளப்பட்டு அங்கு வந்து செல்வோரும் வாகனங்களும் சோதனையிடப்பட்டு வருகின்றது.
இன்று பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை, இராணுவம் மற்றும் கடற்படை மற்றும் குறிப்பாக புலனாய்வுப் பிரிவினர் தேவையான இடங்களில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதிக்கு மேலதிகமாக மற்ற பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பையும் உயர் மட்டத்தில் வைத்திருக்குமாறு பொலிஸாருக்கு தெரிவித்துள்ளோம்.’ என நிஹால் தல்துவ தெரிவித்தார்.
உளவுத் தகவல் வெளிநாட்டிலிருந்து வந்ததா?:
இந்த உளவுத் தகவல்கள் வெளிநாட்டிலிருந்து கிடைக்கப்பெற்றதா அல்லது இந்நாட்டின் புலனாய்வுப் பிரிவினரிடம் இருந்து கிடைக்கப்பெற்றதா என வினவியபோது, பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ அதற்கு இவ்வாறு பதிலளித்தார்.
“அது தொடர்பாக என்னிடம் எந்த தகவலும் இல்லை. இந்த தகவல் வெளிநாட்டில் இருந்து வந்ததா அல்லது நமது நாட்டின் உளவு அமைப்புகளுக்கு கிடைத்ததா என்பதை என்னால் கூற முடியாது. ஆனால், பதில் பொலிஸ் மாஅதிபருக்கு கிடைத்த உளவுத்துறை தகவல் படி, பாதுகாப்பை அதிகரிக்குமாறு கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.’ என தெரிவித்தார்.
பொத்துவில் பகுதியில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அதிகரிப்பு; தேவாலயமும் நிர்மாணம் :
எவ்வாறாயினும் கிழக்கில் பொத்துவில், அறுகம்பே உள்ளிட்ட பகுதிகளில் அண்மைக் காலமாக இஸ்ரேலின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. குறிப்பாக சுற்றுலா பயனிகளாக வந்து அங்கு தொழில் நிமித்தம் தங்கியிருக்கும் இஸ்ரேலியர்கலின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக, அவர்களின் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக அதிகரித்து செல்லும் போக்கு உள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
பொத்துவில் பிரதேச செயலகத்தின் நிர்வாக அதிகாரி எம்.எம்.எம். ஸுஹைர் மக்களின் இந்த கருத்தினை உறுதிப்படுத்தும் விதமாக வெளிநாட்டு ஊடகம் ஒன்றிடம் கருத்து தெரிவித்துள்ளார். அவரின் கூற்றுப்படி, அறுகம்பே பகுதியில் உள்ள பல ஹோட்டல்களில் இஸ்ரேலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு அந்தந்த ஹோட்டல்களில் இருந்து இலவச உணவு கிடைப்பதாகவும், அவர்கள் மூலம் சுற்றுலா பயணிகளும் அந்தந்த ஹோட்டல்களுக்கு அழைத்து வரப்படுவதாகவும் பொத்துவில் பிரதேச செயலகத்தின் நிர்வாக அதிகாரி எம்.எம்.எம். ஸுஹைர் தெரிவித்துள்ளார்.
மேலும் பல இஸ்ரேலியர்கள் அப்பகுதியில் பல கட்டிடங்களை கொள்வனவு செய்துள்ளதாகவும், அவர்கள் அப்பகுதியில் ஒரு தேவாலயத்தை நிர்மானித்துள்ளதாகவும் பொத்துவில் பிரதேச செயலகத்தின் நிர்வாக அதிகாரி எம்.எம்.எம். ஸுஹைர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புக்கு விஷேட நடவடிக்கைகள் :
இவ்வாறான பின்னணியில் நேற்று 23ஆம் திகதி முதல் எந்தவொரு சுற்றுலாப் பயணிக்கும், பாதுகாப்பு தொடர்பான ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனடியாக 1997 இலங்கை பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பணிமனை தெரிவித்துள்ளது.
பொலிஸ் சுற்றுலாப் பிரிவை மேலும் பலப்படுத்தி நடைமுறைப்படுத்துவதற்கு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய சகல பொலிஸ் நிலையங்களுக்கும் விசேட அறிவுறுத்தல்களை வழங்கவுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் இராணுவ நிலைமையை கருத்திற்கொண்டு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பின் பேரில், பொலிஸ் மற்றும் புலனாய்வு அமைப்புக்கள் விசேட வேலைத்திட்டத்தை தயாரித்து நடைமுறைப்படுத்தவுள்ளதாக அவ்வறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அடுத்து வரும் 4 மாதங்களில் அதிக சுற்றுலா பயணிகள் :
எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தில் அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். குறிப்பாக நவம்பர் முதல் அறுகம்பே பகுதிக்கு அதிகளவான சுற்றுலா பயனிகள் வருகை தருவர் என எதிர்ப்பார்க்கபப்டும் நிலையில் அதில் அதிகமானோர் இஸ்ரேலியர்களாவர்.
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியக தரவுகளின்படி, இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் இந்தியா, சீனா, ரஷ்யா, ஜேர்மனி, பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்தே அதிக சுற்றுலா பயணிகள் நாட்டுக்குள் வந்துள்ளனர்.
அந்த தரவுகளின்படி, இந்த வருடத்தின் கடந்த 9 மாதங்களில் இஸ்ரேலில் இருந்து 20,515 சுற்றுலாப் பயணிகளும் 43,678 அமெரிக்கர்களும் 136,464 பிரித்தானிய பிரஜைகளும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli