பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் பிரசாரப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று சரியாக இரு மாத காலத்திற்குள் பாராளுமன்ற தேர்தலும் நடைபெறவிருப்பதால் ஜனாதிபதித் தேர்தலின் பெறுபேறுகளே பாராளுமன்றத் தேர்தலிலும் பிரதிபலிக்கப் போகிறது என்பது வெள்ளிடை மலை.
ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ள நிலையில் அக் கட்சி பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெறுவதன் மூலமே நாட்டை சீராக முன்கொண்டு செல்ல முடியும் என அரசியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஜனாதிபதி ஒரு கட்சியிலும் பிரதமர் ஒரு கட்சியிலுமாக ஆட்சி அமையும் போது அது கருத்து வேறுபாடுகளுக்கு வித்திட்டு அரசியல் ஸ்திரமின்மைக்கு நாட்டைத் தள்ளிவிடும் என்பதை நாம் கடந்த காலங்களில் கண்டுள்ளோம். நல்லாட்சி அரசாங்கத்தில் மைத்திரி ரணில் முரண்பாடு காரணமாக தேசிய பாதுகாப்பு உட்பட மேலும் பல துறைகளில் நிர்வாக சீரழிவுகள் ஏற்பட்டதை நாம் நன்கறிவோம்.
அநுரகுமார திசாநாயக்கவுக்கு பெரும்பான்மை பலம் பாராளுமன்றத்தில் கிடைக்கும்பட்சத்திலேயே அவரால் தனது திட்டங்களை சரிவர நடைமுறைப்படுத்தக் கூடியதாக இருக்கும். தற்போது வெறும் மூன்று அமைச்சர்களுடன் அவர் நாட்டை நிர்வகிக்க வேண்டியுள்ளது. இதனால் அரச நிர்வாகத்தை அவரால் சரிவர முன்கொண்டு செல்ல முடியாதுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பட்டியலில் கடந்த காலங்களில் ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான எவருக்கும் இடமளிக்கப்படவில்லை. அதைவிடவும் அதிகமான புதுமுகங்கள் களமிறக்கப்பட்டுள்ளன. எனினும் இவ்வாறு புதிதாக அரசியலில் களமிறக்கப்பட்டுள்ள பலர் பொருத்தமற்றவர்கள் என்ற விமர்சனத்தையும் சிலர் முன்வைத்து வருகின்றனர்.
எதுஎப்படியிருப்பினும் அக் கட்சியில் தெரிவு செய்யப்படும் எவரும் அக் கட்சியின் கொள்கைகளை மீறி ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதற்கோ இனவாத பிரசாரங்களில் ஈடுபடவோமாட்டார்கள் என நம்பிக்கை வைக்க முடியும்.
அவ்வாறு தேசிய மக்கள் ஆட்சியமைத்தால் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளாக அமையப் போகும் பாரம்பரிய அரசியல் கட்சிகளும் தமது உறுப்பினர்களை தூய்மையானவர்களாக வைத்திருப்பது அவசியமாகும். மக்கள் நாட்டில் ஊழல் மோசடியற்ற இனவாதமற்ற நாட்டின் வளங்களைச் சுரண்டாத மக்களை நேசிக்கின்ற அரசியல் தலைவர்களையே விரும்புகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சியிலும் அதே தகுதியுடைய கடந்த காலங்களில் ஊழல் மோசடிகள் சுரண்டல்களில் ஈடுபடாத தூய்மையானவர்களையே பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். அந்த வகையில் தற்போது களமிறங்கியுள்ள அனைத்து கட்சிகளிலுமுள்ள வேட்பாளர்கள் தொடர்பில் மக்கள் மிகத் தெளிவுடன் பரிசீலித்தே இம்முறை வாக்களிக்க வேண்டும். அடுத்து அமையப் போகும் பாராளுமன்றத்தில் ஆளும்கட்சியிலும் சரி எதிர்க்கட்சியிலும் சரி தெரிவு செய்யப்படும் அனைவரும் சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
அது மாத்திரமன்றி வயதானவர்கள் ஊழல் பேர்வழிகள் என பலரும் ஒதுங்கியுள்ள நிலையில் முன்னரை விட தற்போது தேர்தல் களம் தூய்மையாகியுள்ளது. தேர்தலின் பின்னர் நாட்டின் அரசியல் களம் மேலும் தூய்மையாகும் என எதிர்பார்க்கலாம். அவ்வாறு ஆளும் தரப்பிலும் எதிர் தரப்பிலும் தூய்மையானதொரு ஆட்சி அமைய பிரார்த்திப்போம்.-Vidivelli