ஜனாதிபதிக்கு ஒரு மடல்

0 90

பெரு­ம­திப்­பிற்கு­ரிய ஜனா­தி­பதி அனு­ர­கு­மார திஸா­நா­யக்க அவர்­களே,
நீங்கள் ஜனா­தி­பதி ஆன தருணம் முதல், உங்­களை வாழ்த்த உங்­களை எவ்­வாறு அழைப்­பது என்று முடிவு செய்ய இய­லாமல் ஒரு சில நாட்கள் குழப்­பத்தில் ஆழ்ந்­தி­ருந்தேன்.

பதவி கிடைத்­த­வுடன் வானில் பறக்கும் ஏனை­ய­வர்கள் போலன்றி, எப்­போதும் தரையில் கால்­களை பதித்­தி­ருக்கும் உங்­களை எப்­படி அழைத்­தாலும் அதை நீங்கள் பொருட்­ப­டுத்தப் போவ­தில்லை என்ற நம்­பிக்கை ஏற்­பட்­டதால் இறு­தியில் இதை எழுதத் துணிவு கொண்டேன்.

இலங்­கையின் ஜனா­தி­பதி பத­வியில் படிந்­துள்ள அசுத்­தங்­க­ளையும், மாசுக்­க­ளையும் போக்­கு­வதே தாங்கள் அப்­ப­த­வியை ஆசித்த பிர­தான நோக்கம் என்­ற­ப­டியால், அப்­ப­த­வியால் நீங்கள் பெருமை அடை­வதை விட அப்­ப­த­விதான் உங்­களால் பெருமை அடைந்­துள்­ளது என்றே நான் கரு­து­கின்றேன்.

எனது திரு­மண நாளுக்கு அடுத்­த­தாக என்­னு­டைய வாழ்வின் மிக மகிழ்ச்­சி­யான நாள் நீங்கள் வெற்றி வாகை சூடிய அந்த செம்­டெம்பர் மாதத்தின் 22ம் நாளே­யாகும். மேலும், அந்நாள் இலங்­கையர் பல­ரு­டைய வாழ்வின் மிக மகிழ்ச்­சி­யான நாளாக இருக்கும் என்­பது என்­னு­டைய கணிப்­பாகும்.

உங்­களின் இவ்­வ­ர­லாற்றுச் சிறப்­பு­மிக்க வெற்றி நாடு முழு­வ­திலும் ஒரு கோலா­க­லத்தை தோற்­று­வித்­துள்­ள­மைக்கு முக்­கிய காரணம், இந்­த ­நாட்டின் ஒடுக்­கப்­பட்ட பெரும்­பான்­மை­யி­னரின் சுதந்­திரம் மற்றும் வளம் பற்­றிய கனவு இனி நன­வாகும் என்ற நம்­பிக்­கையே. மேலும் நடக்­கவே முடி­யாது என்று நம்­பிக்கை இழந்­தி­ருந்த ஒரு விடயம் இனி நடை­பெறும் என்ற எதிர்­பார்ப்பும் தங்களது வெற்றி கார­ண­மாக மக்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்­ளது.

அன்­பிற்­கு­ரிய ஜனா­தி­பதி அவர்­களே, நான் உங்­களை நேரில் பார்த்­த­து­மில்லை ஒரு வார்த்தை பேசி­ய­து­மில்லை. இருப்­பினும், ஊட­கங்­களில் உங்கள் உரை­களை கேட்டு நான் மிகவும் மகிழ்ச்­சி­ய­டைந்தேன். உங்­களின் சுவா­ர­சி­ய­மான சொல்­லாட்­சியுடன் அதில் பொதிந்­தி­ருந்த சிறந்த, ஆக்­க­பூர்­மான கருத்­துக்­களே என்னை அதிகம் கவர்ந்­தன.

குதூ­க­ல­மாக இருந்­தி­ருக்க வேண்­டிய உங்­க­ளு­டைய இள­மைப்­ப­ருவம் உட்­பட உங்கள் வாழ்­நாளின் முப்­பது ஆண்­டு­களை விட அதிக காலப்­ப­கு­தியை இந்த நாட்டின் விமோ­ச­னத்­திற்­காக நீங்கள் அர்ப்­ப­ணித்­துள்­ளீர்கள். இந்த நீண்ட நெடுங்­கா­லத்தில் உங்­க­ளுக்கு ஏற்­பட்ட சவால்கள், துன்­பு­றுத்­தல்கள், அவ­ம­திப்­புக்கள் எண்­ணி­ல­டங்­கா­தவை என்­ப­தையும் தேசத்தின் நல­னிற்­காக நீங்கள் அவற்­றை­யெல்லாம் சகித்து வந்­தீர்கள் என்­ப­தையும் நாம் நன்கு அறிவோம்.

இந்த நீண்ட காலத்தில் நீங்கள் பெற்ற அர­சியல் அனு­ப­வத்தால், இவ்­வ­னப்பு மிகு நாடு விழுந்­துள்ள அழிவின் ஆழத்தை புரிந்து கொள்­ளவும், அதே போல என்­றா­வது ஒருநாள் ஆட்­சியும் அதி­கா­ரமும் கிடைத்தால் மேற்­கொள்ள வேண்­டிய பரி­கா­ரங்கள் யாவை என்­பது பற்­றியும் நீங்கள் நன்கு புரிந்து கொண்­டி­ருக்­கின்­றமை இந்­நாட்டின் அதிர்ஷ்­டமே ஆகும்.

மேலும், ஒரு சாதா­ரண நடுத்­தர குடும்­பத்தில் பிறந்த நீங்கள் அதே போன்ற பெரும்­பான்­மை­யான இலங்­கை­யர்­களின் தேவைகள், எதிர்­பார்ப்­புகள் மற்றும் உணர்­வு­களை நன்கு உணர்­ந்தி­ருப்­பீர்கள் என்­ப­திலும் துளி­ய­ளவும் எமக்கு சந்­தேகம் கிடை­யாது. அதே சமயம், நாட்டின் அதி­கா­ரத்தை தம் வசம் வைத்­தி­ருந்த ஊழல்­மிகு ­ தி­ரு­டர்களுடன் நேர­டி­யாக மோதிக்­கொண்­டி­ருந்­தவர் என்ற வகையில் அவர்­களின் பித்­த­லாட்டங்கள் பற்­றியும் நீங்கள் நன்கு அறிந்­தி­ருப்­பீர்கள் என்­ப­திலும் சந்­தே­க­மில்லை. எனவே, இந்த தேசத்தை கட்­டி­யெ­ழுப்ப என்ன செய்ய வேண்டும் என்­பது பற்றி ஒரு சிறந்த மதிப்­பீட்டை நீங்கள் பெற்­றி­ருப்­பது சர்வ நிச்­சயம்.

தங்­க­ளுக்கு அதி­காரம் கிடைத்தால், பின் விளை­வு­களை பொருட்­ப­டுத்­தா­மலும், எவ­ரு­டைய செல்­வாக்­கையோ அந்­தஸ்த்­தையோ பாரா­மலும் சட்­டத்தை எழுத்து பிச­காமல் நிலை நிறுத்­து­வ­தாக நீங்கள் வெகு கால­மாக கூறி வந்­தீர்கள். இதி­லி­ருந்தே நம் நாட்டின் முக்­கிய பிரச்­சனை இங்கு சட்­டத்தின் ஆளுகை இல்­லா­மையே என்ற மகத்­தான உண்­மையை நீங்கள் நன்கு புரிந்­துள்­ளீர்கள் என்­பது தெளி­வா­கின்­றது.

ஒரு சாதா­ரண குடி­மகன் மற்றும் உள்­நாட்டு இறை­வரி திணைக்­க­ளத்தின் முன்னாள் பிரதி ஆணை­யாளர் நாயகம் என்ற வகையில், வழி­காட்டும் அள­வு­கோ­லாக எப்­போதும் சட்­டத்தின் ஆளு­கைக்கு முன்­னு­ரிமை வழங்­கு­மாறு அன்­புடன் நான் தங்­களை கேட்­டுக்­கொள்­கிறேன்.

இன்று நம் நாட்டில் நீதி பறிபோய், அதி­கார துஷ்பிர­யோகம் செய்­யப்­பட்டு, ஊழல், முறை­கே­டுகள் கரை­பு­ரண்­டோடி, சமூகம் சீர் கெட்டு, மனித உரி­மைகள் மீறப்­பட்டு, இன மோதல்கள் உரு­வாகி, ஜன­நா­யகக் கட்­ட­மைப்பும் பல­வீ­ன­ம­டைந்­துள்­ளது. இவற்றின் விளை­வாக அர­சாங்­கத்தின் மற்றும் நீதித்­து­றையின் மீதான பொது மக்கள் நம்­பிக்­கையும் சீர்­குலைந்து பல சமூகப் பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்கு வழி­வ­குத்­துள்­ளது.

1978 ஆம் ஆண்டில் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட பின்­னரே சட்­டத்தின் ஆளுகை சீர்­கு­லைய ஆரம்­பித்­தது என்­பது உன்­னிப்­பாக நோக்கும் போது தெளி­வாகும் ஒரு முக்­கிய விட­ய­மாகும். இதன் கார­ண­மா­கவே 1990 ஆம் ஆண்­டி­லி­ருந்து நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை ஒழிக்க வேண்டும் என்ற போராட்­டங்கள் அதி­க­ரித்­துள்­ளன.

நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட பின் தீவிரவாதமும் இன வாதமும் வேக­மாக பர­வி­ய­துடன் இது தற்­செ­ய­லாக அல்­லது எதிர்­பா­ராமல் ஏற்­பட்­ட­தொரு நிலை அல்ல. மாறாக, நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையின் கீழ் ஒரு தனி­ந­ப­ருக்கு எல்­லை­யில்லா அதி­கா­ரங்­களை வழங்­கிய விவே­க­மற்ற செயலால் ஏற்­பட்ட கொடிய பின்­வி­ளைவே அது.

கடந்த காலத்தில் அனைத்து ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­களும் தமது தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களில் தாம் பத­விக்கு வந்தால் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மையை ஒழிப்­ப­தாக உறு­தி­ய­ளித்து வந்த போதிலும், அவர்கள் எவரும் ஆட்­சிக்கு வந்த பின்னர் அந்த வாக்­கு­று­தியை நிறை­வேற்­ற­வில்லை. அதா­வது, பதவி கையில் கிடைத்­ததன் பின் அவர்­களின் பதவி மோகமும், சுய­ந­லமும், சர்­வா­தி­கார வெறியும், நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைமை வழங்கும் எல்­லை­யற்ற அதி­கா­ரத்தை இழக்க இட­ம­ளிக்­க­வில்லை.

பத­விக்கு வந்தால் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை ஒழிப்­ப­தாக நீங்கள் அளித்த வாக்­கு­று­தியை நிச்­சயம் நிறை­வேற்­று­வீர்கள் என்ற நம்­பிக்கை எமக்கு உண்டு.

சட்­டத்தின் முன் அனை­வரும் சமம் என்ற விட­யத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­தா­னது, சமூ­கத்தின் அனைத்து மட்­டங்­க­ளிலும் உள்­ள­வர்கள் மனதில் நீதி மற்றும் நியாய உணர்வை உறுதிப்படுத்தும். குறிப்­பாக சிறு­பான்­மை­யினர் மத்­தியில் தாம் ஏனைய எவ­ரையும் விட தாழ்ந்­த­வர்­களோ அல்­லது தாம் இந்­நாட்டின் இரண்டாம் தர குடி­மக்­களோ அல்ல என்ற உணர்வை நிலை­நி­றுத்த வேண்­டு­மாயின் சட்டம் என்­பது அனை­வ­ருக்கும் பொது­வா­ன­தாக இருத்தல் வேண்டும். அவ்­வாறு இல்­லாத போது சிறு­பான்­மை­யினர் மாற்று வழி­க­ளுக்குத் திரும்­பு­வதைத் தவிர்க்க முடி­யாது என்­ப­தோடு அவ்­வ­ழிகள் பொது­வாக நல்­ல­வை­யாக இருப்­ப­தில்லை. சிறு­பான்மை அர­சியல் கட்­சி­களின் தோற்றம், சிறு­பான்­மை­யி­னரின் சத­வீ­தத்­திற்­கேற்ப அரச வேலை வாய்ப்­புகள் மற்றும் உயர்­கல்வி வாய்ப்­பு­க­ளுக்­காகப் போரா­டு­வது போன்ற இன அடிப்­ப­டை­யி­லான போராட்­டங்கள் இத்­த­கைய சூழ­லில்தான் வெடிக்­கின்­றன. இது இறு­தியில் நாட்டில் அர­சியல், பொரு­ளா­தார மற்றும் சமூக ஸ்திர­மின்­மைக்கு வழி­வ­குக்கும். உண்­மையில் இது போன்­ற­தொரு நிலை­மைதான் நம் நாட்­டிற்கும் ஏற்­பட்­டுள்­ளது.
நம் அழ­கிய தாய்த்­திரு நாட்டை உலகில் வள­மா­ன­தொரு நாடாக மாற்­று­வ­தற்­கான ஆற்றல் மற்றும் உண்­மை­யான உந்­துதல் உங்­க­ளிடம் மட்­டுமே உள்­ளது என்று உறு­தி­யாக நான் நம்­பு­வ­தா­லேயே என்­னு­டைய இக்­க­ருத்­துக்­களை நான் தங்­க­ளுடன் இவ்­வாறு பகிர்ந்து கொள்­கின்றேன்.

சட்­டத்தை நிலை நிறுத்­திய வண்ணம், அனைத்துப் பிரிவு குடி­மக்­க­ளையும் சம­மாக நடத்தும் ஒரு நல்­லாட்சி இருக்கும் பட்­சத்தில், சிறுபான்மை அர­சியல் கட்­சிகள், இயக்­கங்­கள, சங்­கங்கள், அமைப்­புகள், பாட­சா­லைகள் போன்ற எத­னு­டைய தேவையும் இங்கு இருக்­காது. ஒரு தேசத்­திற்கு அழகைச் சேர்க்கும் பன்­மு­கத்­தன்­மையை ஒழிக்க வேண்டும் அல்­லது தனித்­துவ கலாச்­சார, மத அடை­யா­ளங்கள் அழிக்­கப்­பட வேண்டும் என்­பது இதன் கருத்­தல்ல. அந்த தனிப்­பட்ட அடை­யா­ளங்கள் இருக்கும் போது ‘நாம் அனை­வரும் இலங்­கையர்’ என்ற ஒற்­றுமை மனப்­பான்­மையை ஊக்­கு­விப்­ப­தற்கு அர­சாங்கம் எப்­போதும் முன்­னு­ரிமை கொடுக்க வேண்டும் என்­ப­தையே நான் கூற முயற்­சிக்­கின்றேன். அப்­போ­துதான் தீவி­ர­வாதம், பயங்­க­ர­வாதம், மத­வாதம், இன­வாதம் போன்­றவை ஒழிந்து நம் நாடு வளர்ச்சிப் பாதையில் வெற்றி நடை போட இயலும்.

இலங்கை வாழ் மக்கள் சுமார் அரை நூற்­றாண்டு கால­மாக எதிர்­பார்த்­தி­ருந்த உண்­மை­யான மாற்­றத்தை உங்­களால் ஏற்­ப­டுத்த முடியும் என்­பது என் போன்ற உங்­க­ளுக்கு வாக்­க­ளித்­த­வர்­கக்கு – ஏன், தற்­சயம் வாக்­க­ளிக்­கா­த­வர்­க­ளுக்குக் கூட- துளிர் விட்டு வரும் ஒரு நம்­பிக்­கை­யாகும்.

என்னைப் போலவே பலருடைய கற்பனையிலும் உள்ளதொரு இலங்கை எப்படி இருக்குமெனில்,
அதில் மட்டக்களப்பில் மக்களின் மனதைக் கவர்ந்த ஒரு சிங்களவர் அரசாங்க அதிபராக இருப்பார்.
சட்டத்தை மதிக்கும் ஒரு தமிழர் மாத்தறையில் பொலிஸ் அத்தியட்சகராக இருப்பார்.
யாழ்ப்பாணத்திலோ இன மத பேதமின்றி கடமையாற்றும் ஒரு சிநேகபூர்வ முஸ்லிம் ஆளுநராக இருப்பார்.

சட்டத்தின் ஆட்சிக்கு முன்னுரிமை கொடுக்கும் ஒரு முன்மாதிரி மாமனிதன் நாட்டின் நிர்வாக அதிகாரியாக பதவி ஏற்கும் அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்ற ஏக்கத்துடன நாம் பல காலம் காத்திருந்தேமாம். அந்த அதிசயமானது, அனுர குமார திஸாநாயக்க என்ற வடிவத்தில் கடந்த செப்டெம்பர் 22ஆம் திகதி நிகழ்ந்து விட்டது என்றே நாம் நம்புகின்றோம்.

இங்ஙனம் நாட்டை நேசிக்கும்,
என்.எம்.எம். மிஃப்லி
உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின்
முன்னாள் பிரதி ஆணையாளர் நாயகம்.

-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.