பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தயார் செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்ற நிலையில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கான வியூகங்களும் வகுக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்திற்குத் தக்கவாறு முஸ்லிம் சமூகத்திலும் தகுதியான வேட்பாளர்கள் களமிறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன. குறிப்பாக நாடு தோறும் பழைய முகங்களன்றி புதியவர்கள் களமிறக்கப்பட வேண்டும் என்பதில் இளம் தலைமுறையினர் கடும் அழுத்தங்களை வழங்கி வருகின்றனர். இதனையும் மனதிற் கொண்டே அரசியல் கட்சிகள் தமது வேட்பாளர் தெரிவை மேற்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
எனினும் தமக்கும் இடம் வழங்கப்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் போர்க் கொடி தூக்கியுள்ளனர். தாம் தேர்தலில் நின்றால் மக்களால் நிராகரிக்கப்படுவோம் என்பதற்கான சமிக்ஞைகள் விளங்கியும் கூட அதிகார போதையில் தம்மையும் வேட்பாளர் பட்டியலில் உள்வாங்குமாறு கட்சிகளின் தலைமைகளுக்கு இவர்கள் அழுத்தங்களை வழங்க ஆரம்பித்துள்ளனர். எனினும் சமூகத்திற்குப் பயனற்ற இவ்வாறானவர்களின் அரசியல் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான தருணமாக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டியது கட்சித் தலைமைகளின் கடப்பாடாகும்.
கடந்த காலங்களில் முஸ்லிம் எம்.பி.க்களாகப் பதவி வகித்த பலரால் சமூகத்திற்கு எந்தவித பிரயோசனமும் இல்லை என்பதே யதார்த்தமாகும். இவர்களில் பலர் பாராளுமன்ற அமர்வுகளில் கூட போதியளவு பங்குபற்றவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிகிறது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகளைப் பயன்படுத்தி தமது தனிப்பட்ட நலன்களை அடைந்து கொள்ள இவர்கள் முயன்றார்களே தவிர கடந்த காலங்களில் சமூகம் எதிர்நோக்கிய இக்கட்டான தருணங்களில் எந்தவித சமூகம்சார் பணிகளையும் இவர்களால் முன்னெடுக்க முடியாமல் போனமை துரதிஷ்டமாகும். குறிப்பாக முழு நாட்டுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடிய 20 ஆம் திருத்தம் போன்ற சட்டங்களுக்கு கை உயர்த்துவதிலும் அதற்காக சலுகைகளைப் பெற்றுக் கொள்வதிலும் இந்த முஸ்லிம் எம்.பி.க்கள் முன்னின்றார்கள் என்பது வெட்கித் தலைகுனிய வேண்டியதாகும்.
எனவேதான் இவர்களுக்கு மீண்டும் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கக் கூடாது.
இதனிடையே சில முஸ்லிம் பிரதேசங்களில் பள்ளிவாசல்கள், சிவில் அமைப்புகள், உலமா சபை கிளைகள் என்பன தகுதியான வேட்பாளர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளதையும் அவதானிக்க முடிகிறது.
தமது மாவட்டத்தின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துகின்ற அதேவேளை பொருத்தமானவர்களை களமிறக்குவதை நோக்காகக் கொண்டு சில பகுதிகளில் இவ்வாறான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிகள் வெற்றி பெறும்பட்சத்தில் முஸ்லிம் அரசியல் கட்சிகளைப் புறந்தள்ளி சுயாதீனமாக செயற்படக் கூடிய சில பிரதிநிதிகளையும் எம்மால் தெரிவு செய்யக் கூடியதாகவிருக்கும். எனினும் கடந்த முறை புத்தளத்திற்கு கிடைத்த கசப்பான அனுபவத்தை அனைவரும் மனதிற் கொண்டே தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்பதையும் நினைவூட்ட விரும்புகிறோம்.
இன்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திசாநாயக்க தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆரம்பித்துள்ளார். எனினும் நிலையானதொரு அமைச்சரவையும் பாராளுமன்ற ஆதரவும் இல்லாத நிலையில் அவரால் தனது திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடியாத நிலை தோன்றியுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தி அவர் முன்வைத்துள்ள முற்போக்கான திட்டங்களை அமுல்படுத்துவதாயின் அவரது கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் கிடைக்க வேண்டியது அவசியமாகும். இன்றேல் ஜனாதிபதித் தேர்தல் வெற்றியும் கானல்நீராகிப் போய்விடும்.
எனவேதான் பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதியின் தரப்பிற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் முஸ்லிம் சமூகத்தின் தேர்தல் வியூகங்கள் அமைவது நாட்டிற்கும் சமூகத்திற்கும் நன்மைபயக்கும் எனலாம். இதனை மனதிற்கொண்டு அனைவரும் தமது தீர்மானங்களை மேற்கொள்வார்கள் என நம்புவோமாக.- Vidivelli