எம்.பி.எம்.பைறூஸ்
இலங்கையைப் பொறுத்தவரை ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் கீழ் இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் பெரும்பாலானோர் மீது இச் சட்டமானது தவறான முறையில் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு முறைப்பாடுகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப்பட்டுள்ளன.
மஹியங்கனையில் தர்மச்சக்கர வடிவிலான ஆடையை அணிந்த மஸாஹினா எனும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டமை, புனைகதை ஒன்றில் பௌத்த பிக்குகள் குறித்து எழுதியமைக்காக சிங்கள நாவலாசிரியர் ஷக்திக்க ஷத்குமார கைது செய்யப்பட்டமை, சமூக செயற்பாட்டாளர் ரம்ஸி ராஸிக் அவரது பேஸ் புக் பதிவொன்றுக்காக கைது செய்யப்பட்டமை, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி கைது செய்யப்பட்டமை உட்பட மேடை நகைச்சுவை நிகழ்ச்சியில் மதங்களை அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்டு நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டமை மற்றும் அதனை தனது யூ டியூப் பக்கத்தில் பதிவேற்றியமைக்காக யூ டியூப் செயற்பாட்டாளர் ப்ரூனோ திவாகர கைது செய்யப்பட்டமை என பல சம்பவங்கள் சம்பவங்கள் இலங்கையில் ஐ.சி.சி.பி.ஆர். சட்டம் பிரயோகிக்கப்பட்டமைக்கு உதாரணங்களாகும்.
இந் நிலையில் 2019.08.29 திகதியிட்டு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரால், பதில் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடித்தில் ஐ.சி.சி.பி.ஆர். சட்டம் தவறான முறையில் பிரயோகிக்கப்படுவது தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த கடித்தில் மேற்படி சட்டத்தைப் பிரயோகிப்பதற்கான விரிவான வழிகாட்டல்களையும் மனித உரிமைகள் ஆணைக்குழு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இச் சட்டம் கொண்டுவரப்பட்டதன் நோக்கம் யுத்தம் அல்லது இனம், மதத்தை அடிப்படையாகக் கொண்ட விரோதமான நிலைப்பாட்டை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் அல்லது அவற்றை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் என்பவைகளைச் செய்தலாகாது என்பதாகும். எனினும் இலங்கையில் இச் சட்டம் மேற்படி குற்றங்களை இழைத்தவர்கள் மீது பிரயோகிக்கப்படாது, சட்டத்துக்குப் புறம்பான வகையில் பலர் மீது பிரயோகிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையை (ஐ.சி.சி.பி.ஆர்) பயன்படுத்தும் விதம் தொடர்பாக இலங்கையில் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகள் நீண்டகாலமாக விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளனர். இந்த சட்டம் பல ஆண்டுகளாக பல சர்ச்சைக்குரிய கைதுகளுக்கு அடிப்படையாக அமைந்ததாகவும் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை மீறும் வகையில் இச் சட்டத்தை பொலிசார் பயன்படுத்துகிறார்களா என்றும் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
இலங்கையில் யுத்தத்தின் பின்னர் இன, மத பதற்றங்களைத் தூண்டும் விதமான வெறுப்புப் பேச்சு உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இதன் காரணமாக பாரிய இன வன்முறைகளும் நடந்து முடிந்துள்ளன. எனினும் இவற்றைக் கட்டுப்படுத்தும் விதத்தில் இச் சட்டம் பிரயோகிக்கப்படவில்லை.
குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழு, நாட்டில் இன, மத பதற்றங்களைத தோற்றுவிக்கும் வகையில் நடந்து கொண்ட சிலர் மீது ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு சிபாரிசுகளை முன்வைத்திருந்தது. எனினும் இந்த சிபாரிசு இதுவரை அமுல்படுத்தப்படவில்லை. மாறாக எந்தவித குற்றங்களையும் இழைக்காத அல்லது சாதாரண சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவர்கள் மீது ஐ.சி.சி.பி.ஆர் சட்டம் பிரயோகிக்கப்பட்டமை ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இச் சட்டமானது தம்மீது தவறான முறையில் பிரயோகிக்கப்பட்டுள்ளதாகக் கூறி மஹியங்கனையைச் சேர்ந்த மஸாஹினா மற்றும் நாவலாசிரியர் ஷக்திக்க ஷத்குமார ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். அதேபோன்று பிரபல யூடியூப் பதிவர் ப்ரூனோ திவாகர் கடந்த வாரம் தன்னை ஐசிசிபிஆர் சட்டத்தின் கீழ் கைது செய்த குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார். இதன் மூலம் தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக 50 மில்லியன் ரூபா நஷ்டயீடு தருமாறும் கோரியுள்ளார்.
சட்ட அமுலாக்க அதிகாரிகள், குறிப்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு (TID) ஆகியன சமூக ஊடகங்களில் போலிப் பதிவுகளைப் பகிர்ந்ததற்காக மேற்கொண்ட கைதுகள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) மற்றும் ICCPR சட்டத்தோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
ICCPR சட்டம், ஒவ்வொரு தனிநபரினதும் கண்ணியத்தை அங்கீகரிப்பதோடு நாடுகளினுள் திருப்தியான முறையில் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தவும் செய்கின்றது.
எழுத்தாளர் சக்திக சத்குமார
33 வயதான பின்-நவீனத்துவ நாவலாசிரியரான சத்குமார, இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார், பௌத்த மதகுருமார்கள் சம்பந்தப்பட்ட பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர்களை பாலியல் தேவைக்கு பயன்படுத்துவது பற்றி அவர் எழுதிய சிறுகதையால் பொல்கஹவெலயைச் சேர்ந்த பௌத்த துறவிகள் குழு ஒன்று கோபமடைந்ததை அடுத்து 2019 ஏப்ரல் மாத ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டார். குறித்த சிறுகதை பௌத்தத்தை அவமதிப்பதாக சத்குமார மீது குற்றம் சாட்டப்பட்டது.
சக்திக சத்குமார பொல்கஹவெல பொலிசாரால் 2019 ஏப்பிரல் 01 திகதி கைது செய்யப்பட்டு, 2019 ஒகஸ்ட் 08 பிணையில் விடுவிக்கப்பட்டார். பொல்கஹவெல காவல்துறையின் கவனயீனம் காரணமாக அவருக்கு 130 நாட்கள் சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்ததுடன், சுமார் பத்து மாதங்கள் வேலையை இழக்க நேரிட்டது.
சட்ட மா அதிபரால் வழக்கு தொடர்வதற்கான உரிய காரணம் ஏதும் இல்லை என பொல்கஹவெல மஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தப்பட்டதை தொடர்ந்து கடந்த 2021 பெப்ரவரி 09 ஆம் திகதி சக்திக சத்குமாராவை நிரபராதி என தீர்ப்பளித்து வழக்கு முடிவுக்கு வந்தது. முகநூலில் பதிவிட்ட சிறுகதை சம்பந்தமாக காவல் நிலையத்துக்கு கிடைக்கப்பெற்ற புகாரே இவ்வளவு அநீதிகளும் அவருக்கு நிகழ வழிவகுத்தது. கலை மற்றும் இலக்கிய நூல்கள், எழுத்தாளர்கள் மற்றும் சுதந்திர ஆர்வலர்கள் சம்பந்தமாக முறைப்பாடுகள் கிடைக்க பெறும் தருனங்களில் முறையான ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் பின்னரே உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை தமது கவனத்துக்கு கொண்டுவருவதுடன் மற்றும் கருத்து சுதந்திரத்தை மீறி அதை சவாலுக்கு உட்படுத்தி சக்திக சத்குமாரவை கைது செய்த சந்தர்ப்பத்திலும் அச்செயற்பாட்டை கண்டித்து சுதந்திர ஊடகஇயக்கம் தமது கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. ஆனாலும் இன்னும் அந்த தர்க்க ரீதியற்ற நடைமுறை தொடர்ந்து கொண்டே செல்கின்றதை பார்க்க கூடியதாக உள்ளது.
மஸாஹினா
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களை அடுத்து, நாட்டின் பல பகுதிகளில் அச்சமும் சந்தேகமும் பரவிய நிலையில், முஸ்லிம் சமூகம் மோசமான பின்னடைவை எதிர்கொண்ட நிலையில், மஹியங்கனையைச் சேர்ந்த 47 வயதான ஒரு பிள்ளையின் தாயான மஸாஹினா, மே மாதம் 17 ஆந் திகதி கைது செய்யப்பட்டார். கப்பலின் சுக்கான் வடிவம் பொறிக்கப்பட்ட கப்டான் ஆடையில் தர்மச் சக்கரம் பொறிக்கப்பட்டிருப்பதாகத் தவறாகக் கருதிய பொலிஸ் அதிகாரியினால் அதே சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மஸாஹினா கைது செய்யப்படும் போது அந்த ஆடையில் உள்ள சின்னம் தர்மச்சக்கரத்தை ஒத்திருக்கிறது என்ற சிறு எண்ணம் கூட அவருக்கு இருக்கவில்லை. முந்தைய வருடத்தில் தான் வேலை செய்த குவைத்தில் உள்ள தனது வீட்டு உரிமையாளரான பெண்மணியால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட அதே ஆடையினையே அவர் அணிந்திருந்தார். குண்டு வெடிப்புக்குப் பிறகு அனைத்தும் மாறிவிட்டன.
மஸாஹினா கைது செய்யப்பட்ட நாள் காலை பொதுமக்களிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அன்று காலை மஸாஹினா ஒருவங்கிக்குச் சென்றார், கடைக்குச் சென்று பொருட்களை வாங்கிவிட்டு முச்சக்கர வண்டியில் வீடு திரும்பினார்.
மஸாஹினா சம்பவம் நடந்த ரமழான் மாதத்தில் நோன்பு நோற்றிருந்தார். பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது, சிங்களத்தில் பேச முடியாத நிலையில் காணப்பட்டார். சிங்கள மொழியில் எழுதப்பட்ட ஒரு அறிக்கையில் கையெழுத்திட வற்புறுத்தப்பட்டதாக அடிப்படை உரிமை மீறல் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் அவருக்கு பிணை வழங்கப்பட மாட்டாது எனவும், இந்த வழக்கு மஹியங்கனை நீதவான் நீதிமன்ற நீதிபதியினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அவரது குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்டது. விளக்கமறியல் என்பது அந்த முஸ்லிம் பெண் தனிமைப்படுத்தப்பட்டமை அவருக்கு பெரும் சோதனையாக அமைந்தது. அவர் பதுளை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, பௌத்த மதத்தை அவமதித்ததாக கைதிகள் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் அச்சுறுத்தப்பட்டார்.
இவ்விரு சம்பவங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட சட்டத்தரணியும் மனித உரிமை ஆர்வலருமான ஜெஹான் குணதிலக்க, “ஐசிசிபிஆர் சட்டத்தின் பிரிவு 3(1) முக்கியமாக தேசிய, இன அல்லது மத குழுக்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் நபர்களை பொறுப்புக்கூறச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, ஆனால் அவ்வாறு தூண்டிய எந்த ஒரு நபரும் தண்டிக்கப்படவில்லை. அளுத்கம, திகன அல்லது குருநாகலில் வன்முறையைத் தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட எவரும் இச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
“எனவே, சட்டத்தின் இந்தப் பிரிவின் பின்னணியில் உள்ள முக்கிய நோக்கம் இன்றுவரை அடையப்படவில்லை. எவ்வாறாயினும், பௌத்த மதகுருமார்களை இழிவுபடுத்தும் வகையில் புனைகதை ஒன்றை எழுதியதற்காக சத்குமார போன்ற ஒரு எழுத்தாளரை கைது செய்து சிறையில் அடைக்க இந்தப் பிரிவு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஐசிசிபிஆர் சட்டம் வெறும் குற்றம் அல்லது அவமதிப்புகளைக் கையாள்வதில்லை. மிகப் பெறுமதியாகப் பயன்படுத்தப்பட வேண்டிய சட்டப் பிரிவை, அந்தச் சட்டத்தின் கீழ் வராத ஒரு நோக்கத்திற்காக துஷ்பிரயோகம் செய்யும் ஒரு சோகமான வழக்கு இதுவாகும்” என அவர் விளக்கினார்.
ரம்ஸி ராசிக்
கடந்த ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி, பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் தான் எழுதிய கட்டுரையில், அனைத்து இனவாத நடவடிக்கைகளுக்கும் எதிராக முஸ்லிம்கள் சிந்தனா ரீதியான போராட்டம் (Ideological Jihad) ஒன்றினை முன்னெடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து ரம்ஸி ராசிக்கிற்கு முகநூல் வாயிலாக உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டன.
2020 ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி இவர் பொலிஸாரிடம் தனக்கு விடுக்கப்படும் மிரட்டல்களைக் குறித்து முறையிட்டார். ஆனால், இந்த மிரட்டல்களைக் குறித்து விசாரணை செய்யாமல் பொலிஸார் ராஸிக்கை கைது செய்தனர். இது குறித்து விசாரணை செய்த சி.ஐ.டி., ரம்ஸி ராசிக்கை நீதிவான் நீதிமன்றத்துக்கு பிணை அளிக்கும் அதிகாரமற்ற சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பட்டு சட்டத்தின் கீழ் மன்றில் ஆஜர் செய்திருந்தது.
‘எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் ஆரம்பத்தில் மக்களின் மனநிலையை மாற்றவே முயற்சிப்பதாகவும், ரம்ஸி ராஸிக்கும் அவ்வாறான சில சொற்களைப் பயன்படுத்தி இனங்களுக்கு இடையே குரோதம் ஏற்படும் விதத்திலான சமூக வலைத்தள பதிவுகளை அனைவரும் பார்க்கும்படியாக பதிவிட்டு வந்துள்ளார்” என சி.ஐ.டி.யின் விசாரணை அதிகாரிகள் நீதிவான் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக கூறினர்.
இந் நிலையிலேயே ரம்ஸி ராசிக் சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், ரம்ஸி ராசிக் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றில் பிணை மனுவினை தாக்கல் செய்திருந்தார். இம் மனு விசாரணைக்கு வந்தபோது, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்த பட்டபெத்தி முன்னிலையில், இந்த விவகாரம் தொடர்பிலும் பொலிஸார் செயற்பட்டுள்ள விதம் தொடர்பிலும் சுட்டிக்காட்டி பிணை கோரினார். ‘எனது சேவை பெறுநர் கைது செய்யப்பட காரணமாக கூறப்படும் பதிவு, இனங்களுக்கு இடையே குரோதத்தை ஏற்படுத்தும் விதமான பதிவொன்று அல்ல. குறித்த பதிவு முஸ்லிம்கள் வன்முறைகளை நோக்கி செல்லக் கூடாது என்பதையே வேண்டுவதாக உள்ளது. சொற்களையன்றி முழுமையான கருத்தையே பார்க்க வேண்டும். சிந்தனா ரீதியிலான போராட்டம் என்பது ஆயுதப் போராட்டங்கள் அல்ல. கருத்துக்களால் மோதுவதையே அது குறிக்கின்றது. இது யுத்தத்தை தூண்டும் பதிவல்ல. அப்படியாக இருக்கும் போது எனது சேவை பெறுநரின் கருத்தை தவறாக அர்த்தப்படுத்திக்கொண்டு அவரைக் கைது செய்துள்ளமை தவறானதாகும்” என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நீதிமன்றைக் கோரினார்.
இதனையடுத்து திறந்த மன்றில் பிணை வழங்க அனுமதித்த நீதிபதி ஆதித்த பட்டபெந்தி, தனது பிணை உத்தரவில் பின்வருமாறு சுட்டிக்காட்டினார். ‘சிவில் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச சட்டம் இலங்கையில் அமுல் செய்யப்பட்டதன் நோக்கம், சர்வதேச ரீதியில் உள்ள அடிப்படை உரிமைகளை இலங்கை மக்களுக்கும் உறுதி செய்வதாகும். அப்படியாயின் அவ்வாறான உரிமைகளில், சுதந்திரங்களில் கருத்து சுதந்திரம் மிக முக்கியமானது. ஒருவர் பேனை, கணினியைக் கொண்டு போராடுவது என்பது,கருத்துக்கள் சார்ந்து முன்னெடுக்கும் நடவடிக்கையே. அதற்கு வித்தியாசமான பொருட்கோடல் கொடுப்பது தவறானதாகும். குறித்த சொல்லுக்கான பொருட் கோடல் குறித்து சாட்சி விசாரணையின் போதே உரிய தீர்மானங்கள் எடுக்க வேண்டும். எனவே சந்தேக நபருக்கு பிணையளிக்க இந்த நீதிமன்றம் தீர்மானிக்கின்றது” என நீதிபதி அறிவித்தே பிணை வழங்கியிருந்தார். இதற்கமைய சுமார் 161 நாட்கள் சிறைவாசத்தின் பின்னர் ரம்ஸி ராசிக் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
ரம்ஸிக்கு நஷ்டயீடு செல்லுமாறு
உயர் நீதிமன்றம் தீர்ப்பு
தான் கைது செய்யப்பட்டதன் மூலம் தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி ரம்ஸி ராசிக் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்தார். இது குறித்து விசாரித்த மன்று சமூக செயற்பாட்டாளர் ரம்ஸி ராசிக் கைது செய்யப்பட்டமை, தடுத்து வைக்கப்பட்டமை சட்டவிரோதமானது எனவும் அது அவரது அடிப்படை உரிமைகளை மீறிய நடவடிக்கை எனவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதன்படி ரம்ஸி ராசிக்குக்கு அவரை கைது செய்த சி.ஐ.டி.யின் கணினி மற்றும் பகுப்பாய்வு பயிற்சி பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சேனாரத்ன, அப்போதைய சி.ஐ.டி. பணிப்பாளர் டப்ளியூ. திலகரத்ன ஆகியோர் தமது சொந்த நிதியிலிருந்து நட்டஈடு செலுத்த வேண்டும் எனவும், ரம்ஸி ராசிக்கின் சட்டவிரோத கைதுக்கு அரசும் பொறுப்புக் கூற வேண்டும் என்பதால் அரசும் ஒரு மில்லியன் ரூபா நட்டஈடு செலுத்த வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பறிவித்தது. இந்தத் தீர்ப்பானது இலங்கையில் ஐசிசிபிஆர் சட்டம் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை உயர்நீதிமன்றமே உறுதி செய்த முக்கிய தருணமாகும்.
இலங்கையில் 2007 ஆம் ஆண்டு 56 ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச சமவாயச் சட்டம் (ஐ.சி.சி.பி.ஆர்) அமுல்படுத்தப்பட்டுள்ளது முதல் நூற்றுக் கணக்கானோர் இச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையினால் இச் சட்டம் உலக நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட எடுக்கப்பட்ட முயற்சியானது, உலகெங்கும் தலைவிரித்தாடும் இன, மத பதற்றங்கள் மற்றும் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதை நோக்காகக் கொண்டேயாகும். துரதிஷ்டவசமாக இலங்கையில் இச் சட்டமானது கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தவும் இன, மத மற்றும் அரசியல் நோக்கங்களின் கீழ் பிரஜைகளைப் பழிவாங்கவுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதை மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் ஊடாக விளங்கிக் கொள்ள முடிகிறது. அத்துடன் நாட்டில் சமீப காலங்களில் தோற்றம் பெற்ற இன, மத வன்முறைகளுக்கு காரணமானவர்கள் மீது இச் சட்டம் பயன்படுத்தப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிட்டுக் கூறப்பட வேண்டியதாகும்.
2013 ஆம் ஆண்டு அளுத்கம மற்றும் மஹரகம ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற இரு வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு வெளியிட்ட இன, மத பதற்றங்களைத் தூண்டும் கருத்துகளுக்கு எதிராக பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மீது ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் க்கை எடுக்குமாறு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரிப்பதற்கான நியமிக்கப்பட்ட ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தது. எனினும் இதுவரை அவருக்கு எதிராக இச் சட்டத்தின் கீழ் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மாறாக, இச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரும் வகையில் எந்தவித குற்றங்களையும் இழைக்காத பலர் மீது ஐ.சி.சி.பி.ஆர் சட்டம் தவறான முறையில் பிரயோகிக்கப்பட்டுள்ளது என்பதை அவர்களது வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் விரிவாக சுட்டிக்காட்டியுள்ளனர். இக் கைதுகளுக்கு எதிராக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஐசிசிபிஆர் சட்டத்தின் 3(1) ஆம் பிரிவின் கீழ் அண்மைக் காலமாக கைதுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை கவலைக்குரியதாகும். இந்த சட்டம் வடக்கு மற்றும் கிழக்கு முழுவதும் உள்ள முன்னாள் போராளிகள் மற்றும் பொது மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராகவும் இச் சட்டம் பிரயோகிக்கப்பட்டது. 2018 ஜூன் நடுப்பகுதியில் மாத்திரம் ICCPR சட்டத்தின் மேற்கூறிய பிரிவின் கீழ் 12 பேர் கைது செய்யப்பட்டனர். இச் சட்டத்தின் கீழான கைது மற்றும் விசாரணை செயல்முறைகள் பயங்கரவாத புலனாய்வு பிரிவால் நடத்தப்படுகின்றன. இது பயங்கரவாத தடுப்புப் பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணை செயல்முறைகளுக்கு சமமானதாகும். சாதாரண குடிமக்களின் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தையே அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதானது மனித உரிமைகள் கண்ணோட்டத்தில் மிகப் பாரிய தவறாகும். அந்த வகையில் இலங்கை இந்த தவறான பாதையை மாற்றி, ஐ.சி.சி.பி.ஆர் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் உண்மையான நோக்கத்தை அடையும் வகையில் இச் சட்டத்தைப் பிரயோகிக்க முன்வர வேண்டும். அதன் மூலமே இலங்கையில் அண்மைக்காலமாக தோற்றம் பெற்றுள்ள இன, மத பதற்றங்கள் மற்றும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவர முடியுமாக இருக்கும்.- Vidivelli