எம்.பி.எம்.பைறூஸ்
சிறுபான்மையின மக்களுக்கு எதிராக திட்டமிட்டு அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதும், பின்னர் தேவையேற்படுகையில் பொறுப்புக்கூறலின்றி மன்னிப்புக்கோரி அல்லது ஒடுக்குமுறையை நியாயப்படுத்தி அறிக்கையிட்டுக் கடந்து செல்வதும் இலங்கைக்கு ஒன்றும் புதிதல்ல.
ஜனாதிபதித் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் தெரிவு செய்யப்படவுள்ள புதிய ஜனாதிபதி சிறுபான்மையின மக்களின் மத கலாசார உரிமைகளை உறுதிப்படுத்துபவராக இருக்க வேண்டும் என்ற நியாயமாக எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளதை மறுப்பதற்கில்லை.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பேசுபொருளாகவுள்ள பரீட்சைக்குத் தோற்றும் முஸ்லிம் பெண்கள் தமது கலாசார ஆடையை அணிவதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இந்தக் கட்டுரை ஆராய்கிறது.
திருகோணமலை ஸாஹிரா மாணவிகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்
திருகோணமலை ஸாஹிரா கல்லூரியில் கல்வி பயின்று, க.பொ.த உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றிய 70 முஸ்லிம் மாணவிகளின் பரீட்சைப்பெறுபேறுகளை அவர்கள் காதை மறைக்கும் விதமாக ஹிஜாப் அணிந்துவந்து பரீட்சை விதிகளை மீறியதாகக் காரணம் குறிப்பிட்டு வெளியிடாமல் இடைநிறுத்திவைத்து, பின்னர் வெளியிட்ட சம்பவம் அனைவரும் அறிந்ததே. ஆனால் பரீட்சைப்பெறுபேறுகள் வெளியாகி, அனைத்தும் சுமுகமாக முடிந்துவிட்டது போல் வெளித்தெரிந்தாலும், இவ்விவகாரத்தில் இன்னமும் இழுபறிநிலை தொடர்கிறது. கட்டுப்பாடுகள் மிகுந்த சமூகத்திலிருந்து தமது எதிர்காலம் பற்றிய மிகையான கனவுகளுடன் உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவிகள், தற்போது எதிர்காலம் தொடர்பான அச்சத்துடன் நாட்களைக் கடத்துகின்றனர்.
திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகள் 70 பேரின் உயர்தரப் பரீட்சைப்பெறுபேறுகள் இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ள சம்பவத்தின்மீது வெளிச்சம் பாய்ச்சும் வகையில் முதன்முதலில் அறிக்கையொன்றை வெளியிட்ட சர்வதேச அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகம், ‘பரீட்சைகளின் நேர்மைத்தன்மையை உறுதிப்படுத்துவது உரிய அதிகாரிகளின் பொறுப்பாகும். இதன்போது பின்பற்றப்படும் நடைமுறைகள் மத அல்லது பாலின அடிப்படையில் எந்தவொரு மாணவரையும் புறந்தள்ளும் விதமாக அமையக்கூடாது. அவ்வாறிருக்கையில் அம்மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததாகக் குறிப்பிட்டு அவர்களது பரீட்சைப்பெறுபேறுகளை வெளியிடாமல் இடைநிறுத்திவைப்பதானது அவர்களின் மதசுதந்திரத்தை மீறுவதாகவே அமைந்திருக்கின்றது. இவ்வாறான நடவடிக்கைகள் சமூகங்களுக்கு இடையில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப முனைவதாகக்கூறும் அரசாங்கத்தின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்திசெய்யாது’ எனக் கடுமையாக சுட்டிக்காட்டியிருந்தது.
இலங்கை ஜனநாயக சோசலிஸ குடியரசின் அரசியலமைப்பின் 10 ஆவது சரத்தின் பிரகாரம் இந்நாட்டுப்பிரஜைகள் அனைவரும் மதசுதந்திரத்துக்கு உரித்துடையவர்களாவர். அதேபோன்று 12(2) சரத்தானது எந்தவொரு நபரும் பால் அல்லது மத அடிப்படையில் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுவதைத் தடுப்பதுடன், 14(1)(ஈ) சரத்து அனைத்துப்பிரஜைகளும் தமக்கு விரும்பிய மதம், நம்பிக்கை, வழிபாட்டு முறைமை, நடைமுறை அல்லது கோட்பாட்டைப் பின்பற்றுவதற்கான சுதந்திரத்தை உறுதிசெய்திருக்கின்றது.
நாட்டின் அதியுச்ச சட்டம் மேற்கூறப்பட்ட விதிகளைக்கொண்டு அனைத்துப்பிரஜைகளினதும் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தியிருக்கையில், குறித்தவொரு மதம் மற்றும் அதுசார்ந்த ஆடைகளைக் காரணங்காட்டி பரீட்சைப்பெறுபேறுகளை இடைநிறுத்துவது ஏற்புடையதல்ல எனச் சுட்டிக்காட்டியிருக்கிறது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு. அதுமாத்திரமன்றி அரசியலமைப்பின் 27(2)(எச்) சரத்தின் ஊடாக சகலருக்கும் சமத்துவமான கல்வி உரிமை உறுதிசெய்யப்பட்டிருப்பதாகவும், அவ்வாறிருக்கையில் மாணவரொருவர் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அனுமதி மறுப்பதோ அல்லது அவரது பெறுபேறை இடைநிறுத்திவைப்பதோ இவ்வுரிமையை மீறுவதாகவே அமையும் எனவும் ஆணைக்குழு தெரிவித்திருக்கிறது.
இருப்பினும் ஜூலை 4 எனத் திகதியிடப்பட்டு, ஜூலை 15 ஆம் திகதி மேற்கூறப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மாணவிகளின் கைகளுக்குக் கிடைக்கப்பெற்ற பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சீ.அமித் ஜயசுந்தரவினால் அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில், கடந்த க.பொ.த உயர்தரப்பரீட்சையின்போது பரீட்சை மண்டபத்துக்குள் நுழைவதற்கு முன்னரும், பரீட்சை எழுதும் காலப்பகுதியிலும் ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் விதத்தில் பரீட்சைக்குத் தோற்றவேண்டும் என்பது குறித்து பாடசாலை அதிபர், பரீட்சை மேற்பார்வையாளர் உள்ளிட்டோரால் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்த போதிலும், அவற்றை அம்மாணவிகள் பின்பற்றவில்லை என்பது அவதானிக்கப்பட்டமையால் பரீட்சைப்பெறுபேறுகள் இடைநிறுத்திவைக்கப்பட்டதாகவும், இருப்பினும் அம்மாணவிகள் முதற்தடவையாக பாடசாலைப் பரீட்சார்த்தியாக இப்பரீட்சைக்குத் தோற்றியமையைக் கருத்திற்கொண்டு பரீட்சைப்பெறுபேறுகள் வெளியிடப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அம்மாணவிகள் தாம் காதை முழுமையாக மறைக்கும் வகையில் ‘ஹிஜாப்’ அணிந்து செல்லவில்லை எனவும், மாறாக பரீட்சை விதிமுறைகளைப் பின்பற்றும் அதேவேளை தமது மத நம்பிக்கையுடன் முரண்படாத வகையில் காதுகள் தெரியக்கூடிய வகையிலான துணியையே (Shawl) அணிந்துசென்றதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அவ்வாறிருக்கையில் அம்மாணவிகள் பரீட்சை விதிகளை மீறியதாகதாகத் தீர்மானித்து, அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் மேற்கூறப்பட்ட கடிதத்தின் நேர்மைத்தன்மை தொடர்பில் கேள்வி எழுகிறது.
இதுகுறித்து தன்னார்வ அடிப்படையில் மீளவும் அவதானம் செலுத்தியிருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இவ்விவகாரம் தொடர்பில் முறையான உள்ளக விசாரணையை முன்னெடுக்குமாறு பரீட்சை ஆணையாளர் நாயகத்திடம் வலியுறுத்தியிருப்பதுடன் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறுவதைத் தவிர்ப்பதற்காக இந்நெருக்கடிக்குக் காரணமாக அமைந்த விதிமுறையை மீள்பரிசீலனைக்கு உட்படுத்தி, குழப்பமற்ற வகையில் வெளியிடுமாறும் கோரியிருக்கிறது.
அதேவேளை இவ்விடயம் தொடர்பில் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளரான ஷ்ரீன் ஸரூர் கருத்து வெளியிடுகையில், பெறுபேறுகள் இடைநிறுத்திவைக்கப்பட்ட மாணவிகளுக்கு பரீட்சைகள் திணைக்களத்தினால் முற்திகதியிட்டு அனுப்பிவைக்கப்பட்ட கடிதமானது தனக்கு வைத்தியர் ஷாபி சிஹாப்தீனின் சம்பவத்தை நினைவூட்டுவதாகத் தெரிவித்தார். அத்தோடு ஒருவரை அவரது மத நம்பிக்கைகளின் அடிப்படையில் குற்றமிழைத்தவர் எனக்கூறிவிட்டு, பின்னர் அதனை நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் தேடப்படுகின்றன எனவும் அவர் விசனம் வெளியிட்டார்.
இதேவேளை இலங்கையில் பதிவாகிவரும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு மற்றும் பக்கச்சார்பு சம்பவங்கள் குறித்து மிகுந்த கரிசனை அடைவதாகத் தெரிவித்திருக்கும் ‘அனைவருக்கும் நீதி’ அமைப்பு, முஸ்லிம் மாணவர்களின் மதசுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் பதிவாகிவரும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு மற்றும் பக்கச்சார்பு சம்பவங்கள் குறித்து மிகுந்த கரிசனையடைகின்றோம். அண்மையில் திருகோணமலை ஸாஹிரா கல்லூரியில் 70 முஸ்லிம் மாணவிகளின் உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியிடாமல் இடைநிறுத்திவைக்கப்பட்டன. பரீட்சையின்போது காதுகள் மூடப்பட்டிருக்கக்கூடாது என்ற கொள்கையே அதற்குக் காரணமாகக் கூறப்பட்டது. இருப்பினும் இக்கொள்கை தமது மத விழுமியங்களைப் பின்பற்றுவதற்கும், ஹிஜாப் அணிவதற்குமான தெரிவை மேற்கொண்ட முஸ்லிம் பெண்களை ஒடுக்கும் வகையிலும், பெரிதும் பாதிப்பதாகவும் அமைந்திருக்கின்றது. அதுமாத்திரமன்றி இது இலங்கையில் முஸ்லிம்களுககு எதிரான மதரீதியான ஒடுக்குமுறை தொடர்வதற்கு வாய்ப்பேற்படுத்துகின்றது.
இந்நடவடிக்கை பல்வேறு தடைகளைக் கடந்து உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றும் முஸ்லிம் மாணவிகளுக்கு அவர்களது பல்கலைக்கழகக்கல்வி மறுக்கப்படல் உள்ளிட்ட பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தும். இலங்கையில் குறிப்பாக மருத்துவமனைகள், பாடசாலைகள் மற்றும் பொதுப்போக்குவரத்து உள்ளிட்ட பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதை சகித்துக்கொள்ளமுடியாத மனநிலை உருவாகிவருகிறது. இவ்வாறானதொரு பின்னணியில் மாணவர்களின் மதசுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை நகரை அண்மித்து வாழும், பெரும்பாலும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச்சேர்ந்த மாணவர்கள் பலர் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். அதன்போது பரீட்சை முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில் மாணவர்களின் காதுகள் வெளித்தெரியவேண்டும் என விதிக்கப்பட்டிருந்த வரையறைக்கு அமைவாக அவர்கள் இறுக்கமாக அணியும் ஹிஜாப்பை தவிர்த்து, தளர்வான – வெளித்தெரியக்கூடியவாறான வெண்ணிற துணிகளையே அணிந்திருந்தனர். அதேபோன்று அன்றைய தினம் உரிய பரீட்சை நிலையங்களில் மேற்பார்வையில் ஈடுபட்டவர்கள் அம்மாணவர்களைப் பரீட்சை எழுதுவதற்கு அனுமதித்திருந்தனர்.
இருப்பினும் கடந்த மேமாதம் 31 ஆம் திகதி உயர்தரப்பரீட்சைப் பெறுபேறுகள் வெளியான நிலையில், பரீட்சைகள் திணைக்களமானது மேற்குறிப்பிட்டவாறு ஹிஜாப் அணிந்திருந்த மாணவர்கள் ‘புளுடுத் கேட்பான்களை’ பயன்படுத்தியிருக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டு, அம்மாணவர்களின் பெறுபேறுகளை வெளியிடாது இடைநிறுத்தியுள்ளது. இதன்விளைவாக அம்மாணவர்கள் பல்கலைக்கழக உயர்கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்பு மறுக்கப்படக்கூடிய அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
பொதுவில் முஸ்லிம் பெண்கள் கல்வியைத் தொடர்வதற்கு அவர்களது சமூகங்களுக்கு உள்ளேயே பல்வேறு தடைகளுக்கு முகங்கொடுப்பதாகவும், அத்தடைகளைக் கடந்து வந்த இம்மாணவர்கள் தற்போது ‘முஸ்லிம்களுக்கு எதிரான போக்கினால்’ பாதிப்படைந்திருப்பதாகவும் ஆசிரியர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதற்கு முன்னரும் திருகோணமலையில் கல்வித்துறை சார்ந்து முஸ்லிம் பெண்களின் ஆடை குறித்து சர்ச்சைகளும், முரண்பாடுகளும் நிலவின.
இலங்கையைப் பொறுத்தமட்டில் அண்மைய வருடங்களில் சிறுபான்மையின முஸ்லிம்களை ஒடுக்கும் வகையிலான வழிகாட்டல்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. கொவிட் – 19 பெருந்தொற்றுக் காலப்பகுதியில் தொற்றினால் உயிரிழந்தோரின் சடலங்களைப் புதைப்பதற்கு அரசாங்கம் தடைவிதித்ததுடன், இது முஸ்லிம்களின் மத்தியில் வலுவான காயத்தைத் தோற்றுவித்தது. அதேபோன்று தவறான பரப்புரைகளை அடிப்படையாகக்கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டப்பட்ட வன்முறைச் சம்பவங்களும் கடந்த காலங்களில் பதிவாகியிருந்தன.
இவ்வாறானதொரு பின்னணியில் பரீட்சைகளின் நேர்மைத்தன்மையை உறுதிப்படுத்துவது உரிய அதிகாரிகளின் பொறுப்பாகும். இதன்போது பின்பற்றப்படும் நடைமுறைகள் மத அல்லது பாலின அடிப்படையில் எந்தவொரு மாணவரையும் புறந்தள்ளும் விதமாக அமையக்கூடாது. அவ்வாறிருக்கையில் மேற்குறிப்பிட்ட மாணவர்களின் உயர்தரப்பரீட்சைப் பெறுபேறுகளை இடைநிறுத்திவைப்பது அவர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுடன் சமூகங்களுக்கு இடையில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப முனைவதாகக் கூறும் அரசாங்கத்தின் எதிர்பார்ப்புக்கும் முரணாகவே அமையும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
சட்டக்கல்லூரி மாணவிகளும் பாதிப்பு
இதனிடையே கொழும்பு ரோயல் கல்லூரி மண்டபத்தில் அண்மையில் இடம் பெற்ற இலங்கை சட்டக்கல்லூரிக்கான அனுமதி பரீட்சையில் தோற்றிய முஸ்லிம் மாணவிகள் அணிந்திருந்த ஹிஜாப் ஆடையை பரீட்சை நிலைய அதிகாரிகள் கட்டாயப்படுத்தி அகற்றிய சம்பவம் பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள சட்டக் கல்லூரி மாணவர்களின் முஸ்லிம் மஜ்லிஸ், முஸ்லிம் மாணவிகளுக்கு பரீட்சை மண்டபத்தில் இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென இலங்கை சட்டக் கல்லூரியின் அதிபரைக் கோரியுள்ளது.
எதிர்காலத்தில் பரீட்சைகளின் போது இவ்வாறான அநீதிகள் இடம்பெறாமலிருப்பதற்கு சட்டக் கல்லூரி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் முஸ்லிம் மஜ்லிஸ் சட்டக் கல்லூரி அதிபரை வேண்டியுள்ளது.
இலங்கை சட்டக் கல்லூரியின் முஸ்லிம் மஜ்லிஸ் இவ்விவகாரம் தொடர்பில் கல்லூரி அதிபர் அத்துல பத்திநாயக்கவுக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளது.
சட்டக் கல்லூரி முஸ்லிம் மஜ்லிஸின் தலைவர் அர்கம் முனீர் மற்றும் பொதுச் செயலாளர் பாராஹ் நௌசாத் ஆகியோர் கையொப்பமிட்டு அனுப்பியுள்ள கடிதத்தில், கடந்த 2023 செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி நடைபெற்ற இலங்கை சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சை எழுதிய முஸ்லிம் மாணவிகளுக்கே இவ் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் பெண்களின் அடையாளமான கலாசார ஆடை ஹிஜாப் அணிந்து பரீட்சை எழுதச் சென்ற முஸ்லிம் மாணவிகள் பரீட்சையின் போது தங்களது ஹிஜாபை அகற்றுமாறு கோரப்பட்டிருக்கிறார்கள். சுதந்திரமாக தங்களது மத நம்பிக்கையை அனுஷ்டிப்பதை இது மீறியதாக அமைந்துள்ளது.
அத்தோடு முஸ்லிம் மாணவிகளின் பரீட்சை அனுமதி இலக்க அட்டை மற்றும் தேசிய அடையாள அட்டை என்பன பெறப்பட்டு அவற்றை புகைப்படம் எடுத்துள்ளனர். அத்தோடு சில பரீட்சை மேற்பார்வையாளர்களால் தகாத வார்த்தைப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது பரீட்சை வழிமுறைகளை மீறிய செயல் மாத்திரமல்ல. அரசியல் யாப்பினை மீறிய செயலுமாகும். மாணவர்களின் தனித்துவம் மற்றும் உரிமைகள் மீறப்பட்டுள்ளன.
மாணவிகள் மீதான இவ்வாறான அழுத்தங்களினால் அவர்கள் மனதளவில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான நிலைமை பரீட்சையின் போது மட்டுமல்ல தொடர்ந்தும் மனநிலை பாதிக்கப்பட்டு அவர்களது கல்விச் சாதனைகளுக்கும் பாதிப்பாக அமையும்.
இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்களின் மதம் மற்றும் கலாசாரங்களுக்கு அப்பால் சமநிலையினை பேணி வருகின்ற நிலையில், இலங்கை சட்டக் கல்லூரியின் அதிபர் என்ற வகையில் முஸ்லிம் மாணவிகள் எதிர்கொண்ட குறித்த அநீதி தொடர்பில் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிபர் பரீட்சைக்குத்
தோற்றியவர்களும் பாதிப்பு
திருகோணமலை மாணவிகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டது போன்றே ஹிஜாப் அணிந்து வினைத்திறன் காண் தடை தாண்டல் பரீட்சைக்கு தோற்றியமைக்காக, மேல் மாகாணத்தின் 13 முஸ்லிம் அதிபர்களின் பெறுபேறுகள் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பவமும் பதிவாகியுள்ளது. இந்த விடயம் தொடர்பிலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு பாதிக்கப்பட்ட அதிபர்கள் செய்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2023 ஆம் ஆண்டு அதிபர் சேவை தரம் 2 இல் இருந்து தரம் ஒன்றுக்கு தரமுயர்த்துவதற்கான வினைத்திறன் காண் தடை தாண்டல் பரீட்சை இரு தினங்களில் நடாத்தப்பட்டிருந்தன. முதல் நாள் 6 மணி நேரம் பரீட்சை எழுதியுள்ள பரீட்சார்த்திகள் மறு நாள் பரீட்சை எழுதிக்கொண்டிருக்கும் போது, இறுதி 20 நிமிடங்களுக்குள் அங்கு வந்த அதிகாரிகளின் அசெளகரியங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பரீட்சார்த்திகளின் அடையாள அட்டைகளை பெற்று அவர்களது பரீட்சை அனுமதிச் சீட்டுடன் வைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர்.
கொட்டாஞ்சேனை மத்திய கல்லூரியில் நடந்த இந்த பரீட்சையில் 7 ஆம் இலக்க பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்கு தோற்றிய முஸ்லிம் அதிபர்களே இந்த அநீதிக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இந் நிலையில், வினைத்திறன் காண் தடை தாண்டல் பரீட்சை பெறுபேறுகள் கடந்த ஜூன் 5 ஆம் திகதி இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பெறுபேறுகளை பரீட்சித்த போது, ஹிஜாப் அணிந்து பரீட்சைக்கு தோற்றிய முஸ்லிம் அதிபர்கள் 13 பேரினதும் பெறுபேறுகள் வெளியிடப்படாமல் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட அதிபர்கள் சார்பில் கருத்து வெளியிட்ட திருமதி உல்பத் தெரிவித்தார்.
இவ்வாறு பாடசாலை மாணவிகள் சட்டக்கல்லூரி அனுமதிப் பரீட்சைக்குத் தோற்றியோர் மற்றும் அதிபர்களுக்கான வினைத்திறன் காண் தடை தாண்டல் பரீட்சைக்குத் தோற்றியோர் என பல்வேறு தரப்பினரும் இவ்வாறு பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் உரிய கவனம் செலுத்தி எதிர்காலத்திலும் இவ்வாறான நிலைமை தோற்றம் பெறாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டியதுடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வழிகாட்டல்களைப பின்பற்ற வேண்டியதும் காலத்தின் தேவையாகும்.
அதேபோன்று நாளைய தேர்தலில் வெற்றி பெறப் போகும் ஜனாதிபதி, தேர்தல் பிரசார காலத்தில் வாக்குறுதியளித்தவாறு நாட்டில் மத சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க துணிந்து செயற்பட வேண்டும்.- Vidivelli