எமது ஆட்சியில் இஸ்லாமிய கலாசாரங்களுக்கு தடைவிதிக்கப்படும் எனக்கூறுவது பச்சைப் பொய்
முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாப்போம் என்கிறார் அநுரகுமார
(எம்.வை.எம்.சியாம்)
நாம் ஆட்சிக்கு வந்தால் ரமழான், ஹஜ் பண்டிகைகளில் ஏதேனும் ஒன்று நிறுத்தப்படும் எனவும் ஐவேளைத்தொழுகை நிறுத்தப்படும் எனவும் தாடி வளர்க்க விடமாட்டோம் எனவும் கூறுகின்றனர். எதிர்க்கட்சியினருக்கு எம்மைப் பற்றி விமர்சிப்பதற்கு ஒன்றுமில்லை. இவை அனைத்தும் அடிப்படையற்றவை என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
2015 இல் வீழ்ந்த மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம்களுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்து 2019 இல் ஆட்சிக்கு வந்தார். இறுதியில் மீண்டும் தோல்வியடைந்தார். இன்று இனவாதத்தை வழிநடத்துவது யார்? மொட்டுக் கட்சியின் இனவாதிகள் ரணிலின் பின்னால் உள்ளனர். எஞ்சியவர்கள் சஜித் பிரேமதாசவின் பின்னால் உள்ளனர். நாட்டில் இனவாதத்தை தோற்கடிக்கவும் உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகளை கைது செய்யவும் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
மாவனெல்ல பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
எமது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. எமக்கு எதிராக எதிர்க்கட்சியினர் போலி பிரசாரங்களையும் பொய்யான செய்திகளையும் உருவாக்குகின்றனர். ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கண்டிக்குச் சென்று நாம் ஆட்சிக்கு வந்தால் பெரஹெராவை நிறுத்துவோம் எனக் கூறுகின்றனர். குருநாகலுக்கு சென்று நாம் ஆட்சிக்கு வந்தால் எத்கந்த பெரஹெராவை நிறுத்துவோம் எனக் கூறுகிறார்கள். சமுர்த்தியை இல்லாமல் செய்வோம் எனக் கூறுகின்றனர். வர்த்தகர்களை சந்தித்து நாம் அவர்களை வர்த்தகம் செய்யவிடமாட்டோம் எனக் கூறுகின்றனர். இவ்வாறான போலிப் பிரசாரங்களையே முன்னெடுக்கின்றனர்.
முஸ்லிம் மக்களை சந்தித்து நாம் ஆட்சிக்கு வந்தால் ரமழான் ஹஜ் பண்டிகைகளில் ஏதேனும் ஒன்று நிறுத்தப்படும் எனவும் ஐவேளைத் தொழுகை நிறுத்தப்படும் எனவும் தாடி வளர்க்க விடமாட்டோம் எனவும் கூறுகின்றனர். அப்படியென்றால் நானும் தாடி வளர்த்துள்ளேன். அந்தளவுக்கு அச்சமடைந்துள்ளனர்.
எமது தேரர்களை சந்தித்து அன்னதானம் வழங்குவதை நிறுத்துவார்கள் எனவும் தேசிய கொடியை மாற்றுவார்கள் எனவும் இரண்டு வீடுகள் கடைகள் இருந்தால் ஒன்றை பறிமுதல் செய்வார்கள் எனவும் கூறுகின்றனர். இதன்மூலம் என்ன விளங்குகிறது. எம்மைப் பற்றி விமர்சிப்பதற்கு அவர்களுக்கு ஒன்றுமில்லை. அவை அனைத்தும் உண்மையற்றவை. அடிப்படையற்றவை.
இந்த நாட்டில் எவ்வாறு இனவாதம் பரவும் என்பதை நாம் அறிவோம். நாட்டில் மதவாதம் எப்படி பரவியது என்பதை நாம் அறிவோம். 2015 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டார். அவரை ஏன் மக்கள் தோற்கடித்தனர்? வீழ்ந்த மஹிந்த ராஜபக்ஷ எவ்வாறு எழுச்சியடைந்தார்? மஹிந்த ராஜபக்ஷ திருடர் அல்ல எனவும் அவர் குற்றவாளி அல்ல எனவும் நிரூபிக்கப்பட்டுவிட்டதா?
வீழ்ந்த மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம்களுக்கு எதிராக கருத்துகளை முன்வைத்தார். ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரவிட்டால் நாடு வீழ்ச்சி அடையும் என்றார். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றார்.நாடும் நாட்டு மக்களும் ஆபத்தில் என்றார். இறுதியில் என்ன நடந்தது. ராஜபக்ஷக்கள் ஆட்சிக்கு வந்தனர். மீண்டும் திருடத் தொடங்கினர். மக்கள் அவர்களை மீண்டும் வீட்டுக்கு அனுப்பினர்.
மொட்டுக்கு என்ன நடந்தது. இன்று மொட்டுக் கட்சியில் இருந்தவர்கள் ரணிலின் பின்னால் உள்ளனர். இன்று இனவாதத்தை வழிநடத்துவது யார்? ரணில் விக்ரமசிங்கவே வழிநடத்துகிறார். எஞ்சியவர்கள் சஜித் பிரேமதாசவின் பின்னால் உள்ளனர். நாட்டில் இனவாதத்தை தோற்கடிக்கவும் உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகளை கைது செய்ய வேண்டுமாயின் தேசிய மக்களுக்கு வாக்களியுங்கள் என்றார்.- Vidivelli