அமைதியான தேர்தலுக்கு அனைவரும் ஒத்துழைப்போம்

0 13

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் பிரசாரங்களும் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றன. இந்நிலையில் யாருக்கு வாக்களிப்பது என்பது பற்றிய தீர்மானத்தை நாட்டு மக்கள் ஓரளவு எட்டியிருப்பதை உணர முடிகிறது.

தேர்தல் நெருங்க நெருங்க ஒரு வகையான பதற்றம் தோன்றியிருப்பதையும் மறுப்பதற்கில்லை. நாட்டை மீண்டும் குழப்ப நிலைக்குள் தள்ளுவதற்கு சில சக்திகள் முனையக் கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது. ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படுகின்ற போது வெற்றி பெறும் தரப்பும் தோல்வியுறும் தரப்புகளும் தமக்குள் மோதிக் கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தேர்தல் காலத்தில் இலங்கைக்கு பயணம் செய்யும் தமது நாட்டுப் பிரஜைகளை அவதானமாக நடந்து கொள்ளுமாறு அமெரிக்கா பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளதும் இதன் பின்னணியிலேயே ஆகும். இருப்பினும் நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் தேவையான அளவு பொலிசாரும் இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எனினும் இவற்றையும் மீறி தேர்தல் பிரசாரங்களிலோ அல்லது வாக்களிப்பின்போதோ அல்லது பெறுபேறுகள் வெளியிடப்படும் போதோ வன்முறைகளைத் தோற்றுவிக்க சில சக்திகள் முனையக் கூடும் என்ற அச்சத்தைத் தவிர்க்க முடியவில்லை. அவ்வாறான எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்பட்டு விடக் கூடாது எனப் பிரார்த்திப்போமாக.

நாட்டு மக்களைப் பொறுத்தவரை இந்தத் தேர்தல் மிக முக்கியமானதாகும். நாட்டில் இனவாதமற்ற ஒரு சூழல் தொடர வேண்டும் என்பதுடன் பொருளாதார சுபீட்சம் நிலவ வேண்டும் என்பதும் அனைவரதும் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. அதேபோன்று ஊழல் மோசடிக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்பதும் இந்த தேர்தலின் பிரதான கோஷங்களில் ஒன்றாகும். அந்த வகையில் பிரதான எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யக் கூடிய ஒருவருக்கு நாம் எமது வாக்குகளை அளிக்க வேண்டியது அவசியமாகும். தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதைத் தீர்மானிக்கும் போது அற்ப சலுகைகளையோ தனிப்பட்ட நலன்களையோ முன்னிறுத்தாது நாட்டினதும் சமூகத்தினதும் நலன்களை முன்னிறுத்தியே தீர்மானம் எடுக்க வேண்டும்.

நாம் எந்த வகையிலும் சட்டத்தை மீறும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. அமைதியாகச் சென்று வாக்களித்துவிட்டு வீடுகளுக்குத் திரும்பிவிட வேண்டும். வெற்றி தோல்வியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்வதுடன் ஏனைய தரப்பினரின் மனதைப் புண்படுத்தும் வகையில் தமது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ளக் கூடாது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் இன்று தேர்தல் பற்றிய காரசாரமான வாக்குவாதங்கள் நீடிப்பதைப் பார்க்கிறோம். நமக்கு கருத்துச் சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக எல்லை மீறி அதனைப் பிரயோகிக்க முனையக் கூடாது. அது தேவையற்ற முரண்பாடுகள் தோன்றவே வழிவகுக்கும்.

எனவேதான் தேர்தல் பற்றிய கதையாடல்களை மிகவும் நிதானமாக முன்னெடுக்குமாறு ஆலோசனை கூற விரும்புகிறோம்.

தேர்தல் பிரசாரத்தின் இறுதிக் கட்டத்தில் மக்களைத் திசை திருப்பும் வகையில் பொய்ப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதைக் காண்கிறோம்.

துரதிஷ்டவசமாக சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமது மேடைகளில் சமூகங்களிடையே அச்சத்தைத் தோற்றுவிக்கும் வகையில் பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டியதாகும். தாம் ஆதரிக்கும் வேட்பாளரின் கொள்கைகளை முன்வைத்துப் பிரசாரம் செய்ய வேண்டுமே தவிர ஏனைய வேட்பாளர்களைப் பற்றிய உண்மைக்குப் புறம்பான கதைகளை கட்டவிழ்க்கக் கூடாது என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தேசத்தின் குடிமக்களாகிய முஸ்லிம்கள் தமது வாக்குரிமையை பயனுள்ள விதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வாக்களிப்பதில் அசிரத்தையுடன் நடந்து கொள்ளக் கூடாது என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வலியுறுத்தியுள்ளது. இதனையும் முஸ்லிம் வாக்காளர்கள் மனதிற் கொள்ள வேண்டும்.

நடைபெறவுள்ள தேர்தலில் நாட்டுக்கு மிகப் பொருத்தமான ஒரு தலைவரைத் தெரிவு செய்து தருமாறும் எந்தவித அசம்பாவிதங்களுமின்றி அமைதியாக தேர்தல் நடந்து முடிய வேண்டும் என்றும் இறைவனிடம் பிரார்த்திப்போம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.