எஸ்.எல்.சியாத் அஹமட்
பாராளுமன்ற நூலகர்
எமது வரலாற்றில் இடம்பிடித்த தலைவர்களில் ஒருவரான மர்ஹூம் பாக்கீர் மாக்கார் அவர்களின் வாழ்க்கை மற்றும் அவரது அரும்பணிகள் பற்றி நினைவுகூர கிடைத்தமையிட்டு மகிழச்சியடைகின்றேன்.
கௌரவமும் செல்வாக்கும் நிறைந்த முக்கிய பதவியான சபாநாயகர் பதவியானது பாராளுமன்ற முறைமை நிலவுகின்ற நாடுகளில் ஒரு முக்கிய பதவியாக காணப்படுகின்றது.
1377 ஆம் ஆண்டு பிரித்தானியாவைச் சேர்ந்த “சேர் தோமஸ் ஹங்கர்போர்ட்” என்பவரின் நியமனத்துடன் இச் சபாநாயகர் பதவி தோற்றம் பெறுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இலங்கை அரசியல் நிர்வாகக் கட்டமைப்பில் மூன்றாம் நிலையில் காணப்படும் பதவியே சபாநாயகர் பதவியாகும்.
இத்தகைய பின்னணியில் தோற்றம் பெற்ற சபாநாயகர் பதவியை அலங்கரித்தவர்களில் ஒருவர் தான் மர்ஹூம் பாக்கீர் மாக்கார் அவர்கள்.
மர்ஹூம் பாக்கீர் மாக்கார் அவர்கள் பல்வேறு அரசியல் பதவிகளில் சேவையாற்றிய போதிலும் சபாநாயகர் என்ற பதவியைக் கொண்டே பிரபலம் அடைந்தவராக காணப்படுகின்றார்.
மர்ஹூம் பாக்கீர் மாக்கார் இலங்கை முஸ்லிம்களின் ஆரம்ப குடியேற்றத் தலங்களில் ஒன்றாகக் காணப்படுகின்ற, மாணிக்கக் கல் வியாபாரத்தில் பெயர்பெற்று, தனக்கேயான கலாசாரங்களையும் பாரம்பரியங்களையும் கொண்ட பேருவளை நகரத்தில் 1917 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி பிறந்தார்.
அவரின் தந்தை “ஹகீம் அலியா மாக்கார்” சிறந்த வியாபாரியாகவும், ஆயுர்வேத மருத்துவராகவும் பன்முகத் திறமைகளை கொண்டவராகவுமிருந்தார். இவரது தாயார் ராஹிலா உம்மா மாக்கார் கணவரின் பணிகள் மற்றும் மரபுகளைக் காப்பாற்றும் சிறந்த பெண்மணியாகத் திகழ்ந்தார்.
இவர்கள் இலங்கைக்கான அரேபியர் குடியேற்றத்தின் முன்னோடியாகத் திகழ்ந்த ஷேக் ஜமாலுதீன்- அல்-மக்தூமி அவர்களின் வம்சத்தைச் சேர்ந்தவராகளாக இருக்கின்றார்கள். அக்காலத்திலேயே நன்கு கல்வி கற்ற குடும்பமாக இக் குடும்பம் காணப்பட்டது.
இக்குடும்பத்தில் பிறந்த மர்ஹூம் பாக்கீர் மாக்கார் இளம் வயதிலிருந்தே கல்வியில் அக்கறையுடன் இருந்தார். தனது ஆரம்பக்கல்வியை பேருவளையில் உள்ள அல்-பாஸியத்துல் நஸ்ரியா பாடசாலையில் கற்றார். பின்பு 1924 ஆம் ஆண்டு, தனது 7 வயதில், கொழும்பு 12 இல் உள்ள சென் செபஸ்டியன்ஸ் கல்லூரியில் தனது கல்வியை ஆரம்பித்தார். பின்னர் மேல்நிலைக் கல்விக்காக அவர் கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் சேர்ந்தார்.
மர்ஹூம் பாக்கீர் மாக்காருடைய அரசியல் வாழ்க்கைக்கும், அத்துறையிலான சாதனைகளுக்கும், அத்திவாரமும், அடிப்படைப் பயிற்சியும் அவர் பயின்ற கொழும்பு ஸாஹிராக் கல்லூரியிலேயே இடப்பட்டது. இங்கு, அவர் கல்லூரி இதழின் ஆசிரியராகவும், முஸ்லிம் மஜ்லிஸ் தலைவராகவும், தமிழ் இலக்கிய சங்கத்தின் தலைவராகவும் செயற்பட்டு தனது திறமையை வளர்த்துக் கொண்டார்.
மர்ஹூம் டி. பி. ஜாயா ஸாஹிரா கல்லூரியின் அதிபராக இருந்த காலத்தில் மர்ஹூம் பாக்கீர் மாக்கார் அதே கல்லூரியில் மாணவராகவும், ஆசிரியராகவும் கடமையாற்றியமை அவருக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாகும்.
1940 ஆம் ஆண்டில் சீனியர் கேம்பிரிஜ் (Senior Cambridge) தேர்வுகளை முடித்த பாக்கீர் மாக்கார், இலங்கை சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால், இரண்டாம் உலகப் போர் தொடங்கியதால், அவர் 1942 ஆம் ஆண்டு சிவில் பாதுகாப்புச் சேவையில் பணியாற்றத் தொடங்கினார். போருக்குப் பிறகு, மீண்டும் சட்டக் கல்லூரியில் இணைந்து, 1950 ஆம் ஆண்டில் சட்டத்தரணியாக தேர்ச்சி பெற்று களுத்துறை மாவட்டத்தில் சட்ட சேவையை தொடங்கினார். 1951 ஆம் ஆண்டில், களுத்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராகவும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மர்ஹூம் பாக்கீர் மாக்காரின் அரசியல் பயணம் பேருவளை நகரசபையிலிருந்து ஆரம்பமாகின்றது. இவர் 1950ஆம் ஆண்டு, பேருவளை நகரசபை உறுப்பினராகப் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டு, பின்னர் நகரசபைத் தலைவராகவும் பதவி ஏற்றார்.
மேலும் பேருவளை நகராட்சி மாநகராட்சியாக மாறிய போது நகராதிபதியாகவும், 1960 ஆம் ஆண்டு வரை செயற்பட்டார்.
1960 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பேருவளைத் தேர்தல் தொகுதியில் மர்ஹூம் பாக்கீர் மாக்கார் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், சில மாதங்களிலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டதால், அவர் மீண்டும் 1960 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தாலும், 1965 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார்.
1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு பேருவளைத் தொகுதியில் அமோக வாக்குகளால் வெற்றி பெற்றார்.
அதுமாத்திரமன்றி அப்போதைய தேசிய அரச பேரவையின் துணை சபாநாயகராகவும் தெரிவு செய்யப்பட்டார். அப்போது சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்ட கலாநிதி ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ் தனது சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்த போது 1978 ஆம் ஆண்டு இலங்கைப் பாராளுமன்றத்தின் சபாநாயகராக மர்ஹூம் பாக்கீர் மாக்கார் தெரிவு செய்யப்பட்டு 1983 ஆம் ஆண்டுவரை பதவி வகித்தார்.
இவர், இலங்கை பாராளுமன்றக் கட்டிடம் ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டைக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டபோது, அதன் முதல் சபாநாயகராகவும் திகழ்ந்தார்.
தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் மர்ஹூம் பாக்கீர் மாக்கார் பெற்றிருந்தமையால் பாராளுமன்ற அமர்வுகளை சிறப்பாக வழிநடத்திச் சென்றதோடு பாராளுமன்றத்தின் ஒழுங்கையும் பாரம்பரியத்தினையும் காக்க முக்கிய பங்காற்றினார்.
இவர் பாராளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களினதும் நன்மதிப்பைபெற்றிருந்தார். ஆளும் கட்சியினது பாராட்டை மட்டுமன்றி எதிர்க்கட்சியினதும் பாராட்டைப் பெற்ற ஒரு நேர்மையான சபாநாயகராக விளங்கினார்.
இக்காலப்பகுதியில் இவருடைய உத்தியோகபூர்வ வாசஸ்தலமான மும்தாஜ் மஹால் மக்களின் நலன் பேணும் அலுவலகம் போன்று செயற்பட்டதாகக் குறிப்பிடுவர். தினமும் நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து மக்கள் வந்து தங்கள் பிரச்சினைகள் பற்றி சபாநாயகருடன் கலந்துரையாடி அவற்றுக்கு தீர்வும் பெற்றுச் சென்றதாக குறிப்பிடப்படுகின்றது.
பேருவளைத் தொகுதி, அதிகமாக பெரும்பான்மை சமூகத்தினர் வாழுமிடம் என்றபோதிலும், அங்கு முஸ்லிம்கள் அரசியலில் செல்வாக்குள்ளவர்களாக, இன்றுவரை இருக்க, மர்ஹூம் பாக்கீர் மாக்காரே காரணம் என்றால் அது மிகையாகாது.
1983 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மர்ஹூம் பாக்கீர் மாக்கார் சபாநாயகர் பதவியில் இருந்து விலகி, அமைச்சராகப் பதவியேற்றார். பின்னர், 1988 ஆம் ஆண்டு, அவர் பாராளுமன்றத்தில் இருந்து விலகி, தென் மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். மாகாண சபை முறை இந்நாட்டில் ஏற்படுத்தப்பட்ட பின்னர் முதலாவது முஸ்லிம் ஆளுநராக நியமிக்கப்பட்டவரும் இவராவார்.
சமூக சேவையாளரான மர்ஹூம் பாக்கீர் மாக்கார் முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்தில் பெரும் அக்கறையுள்ளவராகக் காணப்பட்டார்.
இவர் இலங்கை முஸ்லிம் லீக்கின் உப தலைவராக இருந்த காலத்தில் கலாநிதி எம்.சீ.எம். கலீல் உடன் இணைந்து முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கான முயற்சிகளில் பாடுபட்டு வந்தார்.
முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களுக்கு இணையாக கல்வியிலும், பொருளாதாரத்திலும், அரசியலிலும் முன்னேற்றம் காண்பதில் வாலிபர்களின் பங்களிப்பு முக்கியத்துவமானது என்பதை நன்குணர்ந்த அவர் அரசியலில் முஸ்லிம்களின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டுமென்பதற்காக முஸ்லிம் லீக் வாலிப முன்னணி என்ற அமைப்பை உருவாக்கினார்.
இந்த இயக்கத்தின் மூலம் மர்ஹூம் பாக்கீர் மாக்கார் முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் சமூக உணர்ச்சியையும், நாட்டுப் பற்றையும் ஏற்படுத்தி அவர்களுக்குப் புதுத்தெளிவையும், புதுத்தெம்பையும் ஊட்டி இளைய தலைமுறையை உருவாக்குவதில் வெற்றிகண்டார். கிராமப் புற முஸ்லிம் இளைஞர்களை ஒன்றுதிரட்டி அவர்களுக்குத் தலைமைத்துவப் பயிற்சியையும் வழிகாட்டல்களையும் வழங்கி தேசிய தலைவர்களாக வாலிபர்களை உருவாக்கிய ஒரே இயக்கம் இதுவாகும்.
மேலும் முஸ்லிம்களின் உரிமைக் குரல் பொதுமக்களை எய்தவேண்டுமாயின் அவர் தம் பிரச்சினைகளை நாடறியச் செய்ய வேண்டுமென்பதை நன்கறிந்த பாக்கீர் மாக்கார் பத்திரிகைத் துறையிலும் எமக்கு வழிகாட்டிச் சென்றுள்ளார். “தோன்” என்ற ஆங்கில இதழையும், “உதயம்” என்ற தமிழ் இதழையும் பல வருடங்களாக நடத்தி வந்தார். அவர் தம் அயராத உழைப்பையும், தனது வருமானத்தில் கணிசமான பகுதியையும் முஸ்லிம் வாலிப முன்னணிக்கும், “தோன்” மற்றும் “உதயம்” பத்திரிகைகளுக்குமாக வழங்கியமை இங்கு குறிப்பிடத்தக்க செயலாகும்.
இது போன்ற பணிகளில் எப்பொழுதும் முன்னின்று உழைக்கும் பண்பினால் இவர் அனைவரது அபிமானத்திற்குமுரியவராகத் திகழ்ந்தார்.
மர்ஹூம் பாக்கீர் மாக்கார் அவர்கள் நாட்டின் அனைத்து மக்களுக்கும் சேவை செய்த ஒரு திறமையான தலைவராக விளங்கியமையால் 1992 ஆம் ஆண்டு, இலங்கையின் அரசாங்கம் அவருக்கு “தேசமான்ய” விருது வழங்கிக் கௌரவித்தது.
தேசமான்ய மர்ஹூம் பாக்கீர் மாக்கார் அவர்கள் 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி தனது 81 ஆவது வயதில் இறையடி சேர்ந்தார்.
மர்ஹூம் பாக்கீர் மாக்கார் அவர்களின், அரசியல் வாழ்வை, இவரது மகன் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி இம்தியாஸ் பாகிர் மாக்கார் அவர்கள் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
இலங்கை முஸ்லிம்களிடையே தோன்றிய அருந்தலைவர்களுள் ஒருவராகவும், இனங்களுக்கிடையே ஒற்றுமையை வளர்க்கப் பாடுபட்ட ஒருவராகவும் திகழ்ந்த மர்ஹூம் பாக்கீர் மாக்கார் அவர்களை நினைவுகூரும் இவ் வேளையில் அவர் தமது கோட்பாடுகளினுள் சிறப்பம்சமாக வலியுறுத்திச் சென்ற “இனங்களுக்கிடையேயான ஒற்றுமை” என்ற பண்பினை எமது வாழ்விலும் பேணிப் பாதுகாப்போம்.– Vidivelli