உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மூடப்பட்ட காத்தான்குடி அதர் பள்ளிவாசலை திறக்க அனுமதி
புதிய நிர்வாக சபையும் திணைக்களத்தினால் நியமனம்
எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடியில் கடந்த நான்கு வருடங்களாக மூடப்பட்டிருந்த காத்தான்குடி ஜாமிஉல் அதர் பள்ளிவாயல் தொழுகைக்காக விடுவிக்கப்பட்டுள்ளது. 2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் குண்டுத்தாக்குலுக்குப் பின்னர் இலங்கையில் பல தௌஹீத் பள்ளிவாயல்கள் மூடப்பட்டு தடை விதிக்கப்பட்டதுடன் சில நிறுவனங்களுக்கும் செயற்படுவதற்கு தடை விதிக்கப்பட்டது. இவ்வாறு மூடப்பட்ட தௌஹீத் பள்ளிவாயல்களில் காத்தான்குடி ஜாமிஉல் அதர் பள்ளிவாயலும் ஒன்றாகும்.
இந்த ஜாமிஉல் அதர் பள்ளிவாயல் 2019 இல் மூடப்பட்டு பாதுகாப்பு அமைச்சினால் பொலிசாரின் மேற்பார்வையின் கீழ் கொண்டு வரப்பட்டது. இப் பள்ளிவாயல் 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 2009ம் ஆண்டு இந்தப் பள்ளிவாயலில் ஜும்ஆ ஆரம்பிக்கப்பட்டதுடன் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வக்பு சபையில் 2015 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது.
ஈஸ்டர் தாக்குதலையடுத்து தொழுகை இடை நிறுத்தப்பட்டு பள்ளிவாயலை பாதுகாப்பு அமைச்சு பொறுப்பேற்றதுடன் பள்ளிவாயலை மூடி அதன் திறப்பை பொலிசார் எடுத்துச் சென்றனர்.
இதையடுத்து இப் பள்ளிவாயலில் இடம் பெற்று வந்த ஐவேளை தொழுகைகள் ஜும்ஆத் தொழுகை குர்ஆன் மதரசா மார்க்க உபன்னியாசம் அனைத்தும் நிறுத்தப்பட்டு இதற்கான தடை வரத்தமானியும் வெளியிடப்பட்டது.
எனினும் இந்தப் பள்ளிவாயலை திறந்து ஐந்து வேளை தொழுகை மாத்திரமாவது இடம் பெற வேண்டுமென நலன் விரும்பிகள் சிலர் தொடர்ச்சியாக முற்சித்து வந்தனர்.
இப் பள்ளிவாயல் தொடர்பான விசாரணைகளை பொலிசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மேற் கொண்டு முடிவுற்ற நிலையில் இப்பள்ளிவாயலை தொழுகைக்காக திறப்பதற்கு அனுமதி கோரி காத்தான்குடியைச் சேர்ந்த பல தரப்பட்டோரும் முயற்சிகளை மேற் கொண்டனர்.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் முபீன் காத்தான்குடி நகர சபை முன்னாள் தவிசாளர் அஸ்பர் உள்ளிட்ட பலரும் வெவ்வேறு வகையான முற்சிகளை மேற் கொண்டனர்.
கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீன் ஊடாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஊப் ஹக்கீம் உட்பட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்துக்கு இந்த விடயம் கொண்டு செல்லப்பட்டது.
இதற்காக உழைத்த நலன் விரும்பிகள் பல தடவைகள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் பிரமுகர்களை சந்தித்ததுடன் இங்கு தொழுகை நடாத்த அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் காத்தான்குடிக் கிளையின் சிபாரிசுக் கடிதமும் வழங்கப்பட்டது.
இந்த முயற்சியின் பின்னணியில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் கையொப்பத்துடனான கடிதம் ஜனாதிபதியினால் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி மாநாட்டில் ஜனாதிபதியிடம் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமினால் கையளிக்கப்பட்டதுடன் ஜனாதிபதியின் கவனத்துக்கும் கொண்டு வந்தனர். எனினும் இதற்கான அனுமதி கிடைக்காத நிலையில் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்த நிலையில் 2023 பெப்ரவரி 5 ஆம் திகதி இப்பள்ளிவாயலை பொலிசார் முழுமையாக கையகப்படுத்தி தமது பாவனைக்கு எடுக்க எத்தனித்தபோது மறுநாள் காத்தான்குடியில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு கவனயீர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றும் பொது மக்களினால் நடாத்தப்பட்டது.
இதில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன முன்னாள் செயலாளர் சபீல் நளீமி காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் ஜவாஹிர் உட்பட நலன் விரும்பிகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் இப் பள்ளிவாயலை ஐந்து வேளை தொழுகைக்காக திறக்க அனுமதிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தப் பின்னணியில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹீர் மௌலானா ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்தநாயக்கா ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
அத்தோடு தொடரச்சியாக பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹீர் மௌலானா மேற் கொண்ட முயற்சியினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் இப் பள்ளிவாயலை திறப்பதற்கும் ஐந்து வேளை தொழுகையை மேற் கொள்ளவும் தற்போது அனுமதி வழக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமாணி அறிவித்தலும் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனடிப்படையில் இப்பள்ளிவாயலுக்கான புதிய நிருவாக சபை ஒன்றை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வக்பு சபை நியமித்துள்ளது. இந்த புதிய நிருவாக சபை உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதம் காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய சிறீதரினால் இவ்வாரம் வழங்கி வைக்கப்பட்டது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் சியாட் இந்த நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.
இதற்கான நிருவாக சபையில் காத்தான்குடியிலுள்ள பிரதான ஜும்ஆப் பள்ளிவாயல்களான முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாயல், மீரா பெரிய ஜும்ஆப்பள்ளிவாயல், ஜாமியுழ்ழாபிரீன் பெரிய ஜும்ஆப்பள்ளிவாயல் ஆகிய மூன்று பள்ளிவாயல்களில் இருந்து தலா மூன்று பேர் வீதம் 9 பேரும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திலிருந்து இரண்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுமாக 11 நிருவாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பள்ளிவாயலின் திறப்பினைபொலிசார் வழங்கியதையடுத்து விரைவில் தொழுகைக்காக பள்ளிவாயல் திறக்கப்பட்டு ஐந்து வேளை தொழுகை மாத்திரம் இடம்பெறுமென முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அதிகாரி தெரிவித்தார்.
இந்தப் பள்ளிவாயலை திறந்து தொழுவதற்காக அனுமதி வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதற்கான முழு முயற்சியையும் மேற் கொண்டு அனுமதியினை பெற்றுத் தந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹீர் மௌலானா மற்றும் இதற்காக பல்வேறு வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீன் காத்தான்குடி நகர சபை முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் உட்பட காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஏனைய அரசியல் பிரமுகர்கள் அனைவருக்கும் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட நலன் விரும்பிகள் மற்றும் அப்பகுதி பொது மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.
சகவாழ்வும் சகோதரத்துவமும் சமதானமும் ஒற்றுமையும் இதன் மூலம் கட்டியெழுப்பப்படல் வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இப்பள்ளிவாயல் திறக்கப்பட்டு தொழுகைகள் இடம் பெறட்டும்.- Vidivelli