ஸஃபார் அஹ்மத்
ahmedzafaar@gmail.com
ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் களத்தின் வெப்பம் தறிகெட்டுச் சென்று கொண்டிருக்கிறது. அனுமார் வால் போன்று முப்பத்தெட்டு வேட்பாளர்களுடன் வாக்குச் சீட்டு அச்சிடப்பட்டுக் கொண்டு இருக்கும் இத்தருணத்தில் போட்டி என்ற ஒன்று இருப்பதோ மூன்று பேருக்கும் இடையில் தான்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அழிவில் இருந்த நாட்டை தான் மீட்டெடுத்ததாய்க் கூறிக் கொண்டு களமிறங்கி இருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடமோ அள்ளி வீசுவதற்குக் கட்டுக் கட்டாய் வாக்குறுதிகள் அவர் சட்டைப்பையில் பத்திரமாய் இருக்கின்றன. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, சம்பூரணமான அரசியல் ஒழுங்கு மாற்றம் என்று கூறிக் கொண்டு பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கிறார்.
தனிப்பட்ட குரோதங்களால் பகைத்துக் கொண்டும், முறைத்துக் கொண்டுமிருந்தாலும் சஜித்தும், ரணிலும் ஐக்கிய தேசியக் கட்சி என்ற ஒரே பாசறையில் வளர்ந்தவர்கள். ஆரம்பகாலத்தில் ரணில் செய்வது எல்லாம் நாம் முன்வைக்கும் பொருளாதார சீர்திருத்தங்கள் தான் என்று சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷடி சில்வா வீணை வாசித்துக் கொண்டிருந்தார். இப்போது என்ன ஆனதோ தெரியவில்லை.ஹர்ஷ எதையும் சொல்வதில்லை. ஹர்ஷ உட்பட பதினைந்து, இருபது பேர் ரணிலிடம் சரணாகதியடைவார்கள் என்று கடந்த இரண்டு வருடமாய் உலாவிய வதந்தியும் அப்படியே செத்துப் போய்விட்டது. வேறு வழியின்றி ரணில், மக்களின் பரிகாசத்திற்கும், எள்ளலுக்குமுள்ளான பொதுஜன முன்னணியின் கணிசமான பாராளுமன்ற உறுப்பினர்களைச் சேர்த்துக் கொண்டு பவனி வருகிறார். நூறுக்கும் மேற்பட்ட பொதுஜன முன்னணி உறுப்பினர்கள் இன்று ராஜபக்சாக்களைக் கைவிட்டு விட்டு ரணிலோடு இருக்கிறார்கள். பேசாமல் ரணிலை பொதுஜன முன்னணியின் தலைவராக நியமிக்கலாம் போல இருக்கிறது.
தேர்தல் கோலங்களை அவதானிக்கும் போது எல்லோருக்கும் பொது எதிரியாய் தேசிய மக்கள் சக்தி இருப்பதாகத் தெரிகிறது. தொட்டதுக்கெல்லாம் குறைபிடிக்கும் கொடுமைக்கார மாமியிடம் அகப்பட்ட மருமகள் போலத்தான் அநுரகுமாரவினதும் தேசிய மக்கள் சக்தியினதும் நிலைமை இருக்கிறது. என்னதான் தேசிய மக்கள் சக்தி என்று கூறிக் கொண்டாலும் ஜே.வி.பி சித்தாந்தப்புலத்தில் வளர்ந்தவர்கள் இவர்கள் என்றவாறு 1988/1989ம் ஆண்டு கால ஜே.வி.பி கிளர்ச்சி மீண்டும் சமூகவலைத்ளங்களில் தூசு தட்டி எடுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் இம்முறை இந்த சேறுபூசல்கள், வழக்கமான தேர்தல்கால வாக்கியங்கள் எதுவும் பெரியளவில் சிங்கள மக்களிடம் எடுபடவில்லை.1980ம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமை பறிப்பு, 1981ல் எரிக்கப்பட்ட யாழ்நூலகம், 1982ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை நடத்தாமல் தன் சொல்படி கேட்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் நடத்திய சர்வஜன வாக்கெடுப்பு என்னும் மோசடித் தேர்தல், சிங்கள மக்களின் அரச எதிர்ப்பை மடைமாற்ற அதனைத் தொடர்ந்து 1983ல் ஜே.ஆர் அரசு நடத்திய ஜூலைக் கலவரம் என்று இலங்கை நிரந்தர இருட்டுக்குள் விழுவதற்குக் காரணமான அத்தனையும் புள்ளிவிபரங்களுடன் அதே சமூகவலைத்தளங்களில் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
வழக்கமாய் இலங்கைத் தேர்தல்களில் இனவாதம் ஒன்றுதான் பேசு பொருளாகும். ‘தமிழன் நாடு கேட்கிறான். தேசத்தைக் காப்பாற்ற வாக்குப் போடுங்கள்’ என்ற கோஷம் புலிகள் உயிர்ப்புடன் இருக்கும் வரை இருந்தது. 2009ம் ஆண்டு புலிகள் முற்றாய்த் துடைத்தெறியப்பட்ட பின்னர் அரசியல் செய்ய ‘இஸ்லாமோபோபியா’ பேசுபொருளானது. 2019ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு கோட்டாபயவிற்கு தேர்தல் விஞ்ஞாபனம் உண்மையில் தேவைப்பட்டிருக்கவே இல்லை. முஸ்லிம் வெறுப்பு அவரை வெல்லவைக்கத் தாராளமாய்ப் போதுமானதாய் இருந்தது.
இந்த தேர்தலில் இத்தகு இனவாதப் பரப்புரைகள் எல்லாம் காலியாகிப் போனதற்கு 2022ம் ஆண்டு மக்கள் எழுச்சிக்குப் பிறகான இலங்கையைப் புரிந்து கொள்வது முக்கியம். வயிற்றுப் பசியும், வரிசைகளும், தட்டுப்பாடும் மக்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னாள் இனவாதிகள் எல்லாம் ‘நாங்கள் இனவாதிகள் அல்லர்’ என்று மேடை தோறும் சத்தியம் செய்யுமளவுக்கு நிலைமை மாறி இருக்கிறது.
இதனால் தானோ என்னவோ இப்போது இலங்கை அரசியலில் பெரும் மாற்று சக்தியாய் உருவெடுத்து இருக்கும் ஜே.வி.பிக்கு எப்படி வசைபாடலாம் என்று புரியாமல் பாரம்பரியக் கட்சிகளின் தலைவர்களும், அவர்களது பக்த கோடிகளும் 1988 –1989ம் ஆண்டுகால சர்வநாச சரித்திரத்தில் தம் வகிபாகத்தை இடது கையால் மறைத்துக் கொண்டு திரும்பத் திரும்ப பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.
சரி, இப்போதைய நிலைமையில் இம்மூன்று போட்டியாளர்களினதும் நிலைமை என்ன?
ரணில் வரிசையை ஒழித்தார்தான், தட்டுப்பாட்டை நீக்கினார் தான், அத்தியவசியங்களை பல்பொருள் அங்காடிகளில் ராக்கையில் நிரப்பினார் தான். ஆனால் அதற்காக மக்கள் கொடுத்த விலை ரொம்பவே அதிகம். இது எல்லோரையும் விட ரணிலுக்குத் தெரியும். அவருக்கு தேர்தல் என்றாலே அலர்ஜியாகிவிடுகிறது. உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைத்தது போல ஜனாதிபதித் தேர்தலைத் தள்ளிப் போட அவரால் முடியவில்லை. ஜனாதிபதித் தேர்தல் என்பது அரசியல் சாசனத்தில் தெளிவாய் வரையறுக்கப்பட்ட ஒன்று. அதற்காக ஜனாதிபதித் தேர்தல் என்ற அறிவிப்பைப் பெற்றுக் கொள்வது ஒன்றும் இலங்கைப் பிரஜைகளுக்கு அத்தனை இலகுவான காரியமாய் இருக்கவில்லை. ஏழு மலை, ஏழு கடல் தாண்டி வசிக்கும் ராஜகுமாரியை அடையப் போகும் போது இளவரசர்களுக்கு ஏற்படும் சிரமங்களைப் போலத்தான் ரணில் ஜனாதிபதியாக இருக்கும் தேசத்தில் தேர்தலைப் பெற்றுக் கொள்ள மெனக்கிடுவதும் என்பதற்கு கடந்த இரு மாதங்களாய் நடந்து வந்த கண்ணுக்குத் தெரியாத சூழ்ச்சிகளே போதுமான சான்று.
சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைக்குப் பிறகு மின்சாரம், நீர்க்கட்டணங்கள் எல்லாம் மூன்று மடங்காகின. அரச ஊழியர்களின் சம்பளப் பெறுமதி முப்பத்தாறு சதவீதத்தால் தேய்மானத்திற்குள்ளானது. கிட்டத்தட்ட இருபத்தைந்து சதவீதமனவர்கள் வறுமைக்கோட்டிற்குள் தடாலடியாய் உள்வாங்கப்பட்டார்கள். வேலையின்மை அதிகரித்தது. இறக்குமதிக் கட்டுப்பாடுகளால் மூலப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் மூடுவிழாக் கண்டன. கடந்த இரண்டு வருடத்தில் மட்டும் ஆறு லட்சம் பேர் நாட்டைவிட்டு வெளியேறினார்கள். இந்த வலியும் வேதனைமிகு தியாகங்களும் சாமானியர்களுக்கு மட்டுமாய் இருந்தது தான் இங்கே சோகம். கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் ஆயிரத்து இருநூறு பில்லியன் ரூபாய்கள் வரி ஏய்ப்பு நடந்து இருப்பதாய்க் கூறுகிறது திறைசேறி. அதாவது இலங்கையின் பிரதான வருவாய் மூலாதாரங்களான சுங்கம், இறைவரித் திணைக்களம், மதுசாரத் திணைக்களம் அறவிடத் தவறிய தொகை இது.
இந்த வரிகளை எல்லாம் முறையாக அறவிட எந்தவொரு திட்டமுமின்றி சர்வதேச நாணய நிதியம் சொன்னபடி வரி வருமானத்தை அதிகரிக்க நடந்த கபடி ஆட்டத்தில் மொத்தமாய்ப் பாதிக்கப்பட்டது அப்பாவிகள் தான். 2027 வரை கடன்களை மீள் செலுத்த தேவை இல்லை என்று இலங்கை கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது. மற்றபடி, எப்போதும் போல அந்நியச் செலாவணியை அள்ளித் தரும் சுற்றுலாத்துறையும், வெளிநாடு வாழ் இலங்கையர்கள் அனுப்பும் பணமுமே டொலர் கையிருப்பைப் பேண உதவிக் கொண்டு இருக்கின்றன. உற்பத்திகள் என்று எதுவுமில்லை. இஞ்சி, பால், மீன், முட்டை என உணவுப் பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய வேண்டி இருக்கிறது நிலைமை.
இப்படியாக சர்வதேச நாணய நிதியத்தை பூச்சாண்டியாகக் காட்டிக் கொண்டு மக்களின் மானியங்களுக்கும், நிவாரணங்களுக்கும் ஆப்புச் சொருகிய ரணில் இப்போது திடீர் கிறிஸ்மஸ் தாத்தா அவதாரம் எடுத்து இருக்கிறார். 2025 ஜனவரி முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தை 25 முதல் 50 சதவீதமாய் அதிகரிக்கப் போவதாய் சர்வதேச நாணய நிதியமே அரண்டு ஓடுமளவுக்கு ஒரு வாக்குறுதியை அறிவித்து இருக்கிறார். இதற்கு மட்டும் மாதம் மூவாயிரத்து அறுநூறு கோடி ரூபாய் மேலதிகமாய் செலவாகும் என்று சொல்லப்படும் நிலையில் தப்பித் தவறி ரணில் வென்றால் இப்பணத்தை திரட்ட யார் மீது வரி விதிப்பார் என்று தெரியவில்லை. மூச்சுவிடுவதற்கும் வரி விதித்தால் தான் இதெல்லாம் சாத்தியம்.
இதை எல்லாம் தாண்டியும் ரணிலுக்கு வர்த்தக சமூகத்தில் இருக்கும் செல்வாக்கை குறைத்து மதிப்பிட முடியாது. ரணில் யாரோடு ஆட்சி செய்தாலும் சரி, இப்படி தெரிந்த பிசாசே இருந்துவிட்டுப் போகட்டும் என்று கருதுபவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் அபிலாஷைகள் ரணிலை வெல்ல வைக்க இன்றைய திகதியில் போதுமானதாய் இல்லை.
எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தன் அப்பா முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவைப் போல அரசியலில் ஒரு முதிர்ச்சியான ஒருவரல்ல. சில சமயங்களில் அவரது நடவடிக்கைகளும், பேச்சும் மூடன் – மட்டி கதைகளில் வருவது போன்று இருக்கும். நான் ஜனாதிபதியானால் நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்கிறீர்களா என்று அறிந்து கொள்ள இரவு வேளைகளில் உங்கள் வீடு தேடி வருவேன் என்பார். யானை விரட்டும் மந்திரம் சொல்வார். மூன்றாம் வகுப்பு படிக்கும் பிள்ளைகளிடம் ‘என் அருமைத் தோழர்களே! இந்த ரணிலைப் பாருங்கள்’ என்று உரையாற்றி பேட்டை எங்கும் பயப் பிராந்தியை ஏற்படுத்திவிட்டுப் போவார். திடீரென்று ஆங்கிலத்தில் பேசுவார். வெள்ளைக்காரனே தோற்குமளவுக்கு அந்த ஆங்கிலம் இருக்கும். IELTS மாணவர்களுக்கு நல்ல பிரயோசனமாய் இருக்கும்.
சஜித் பிரேமதாஸ தனக்கு அடித்தள சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் இருக்கிறது என்று நினைக்கிறார். 2020ம் ஆண்டு ஐ.தே.க யை உடைத்துக் கொண்டு சஜித் பிரேமதாஸ வெளியேறிய போது வழக்கமாய் ரணிலுக்கு ஸலாம் போடும் தமிழ்- முஸ்லிம் கூட்டணிகளும் சஜித்தோடு சேர்ந்து கொண்டன.
அதே கூட்டணிதான் இன்னமும் தொடர்கிறது. இவர்களின் தயவில் மலையகம் மற்றும் வடக்கு – கிழக்கில் பெருவாரியான வாக்குகளை அள்ள முடியும் என்பது சஜித்தின் திட்டம். ரணிலோடு ஒப்பிடும் போது சஜித்திற்கு சிங்கள மாவட்டங்களில் வாக்கு வங்கி இருக்கிறது. வடக்கு–கிழக்குக்கு வெளியே தமிழ்–முஸ்லிம்களின் பரவலான ஆதரவும் இருக்கிறது. இதெல்லாம் பலனைத் தருமா என்பதுதான் கேள்வி.
சந்தேகமே இல்லை. ஜே.வி.பி தலைவர் அநுர குமார திஸாநாயக்க தான் இம்முறை பெரும்பாலன சிங்கள மக்களின் விருப்பத்திற்குரிய தேர்வு. முன்னர் ராஜபக்ச கம்பெனி கோலோச்சிய இலங்கையின் தெற்கு மாவட்டங்கள் உட்பட வடக்கு – கிழக்கைத் தவிர ஏனைய மாவட்டங்களில் அநுரவின் கொடிதான் பறக்கிறது. கடந்த எழுபத்தாறு வருட காலமாய் மாறி மாறி ஆண்ட பாரம்பரியக் கட்சிகள் மீது ஏற்பட்டு இருக்கும் காரமான விமர்சனமும் 2022ம் ஆண்டு ஏற்பட்ட மக்கள் புரட்சியுமே பெரும்பான்மை சமூகத்தின் அலை அநுர மீது திரும்பி இருக்கப் பிரதான காரணம்.
சரி.என்னதான் சிங்களப் பிரதேசங்களில் ஜே.வி.பி அதன் செல்வாக்கை அதிகரித்துக் கொண்டாலும் வடக்கு – கிழக்கில் அதுவும் தமிழர்கள் மத்தியில் இன்னமும் தவழும் நிலையிலேயே இருக்கிறது. மகிந்த ராஜபக்சவுடன் தேனிலவில் இருந்த காலப் போக்கில் ஜே.வி.பி, தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக பேணி வந்த கொள்கைகள் இதற்குக் காரணமாய் இருக்கலாம். அல்லது ஜே.வி.பி இன் கொள்கைகள் பற்றிய போதிய தெளிவின்மையாக இருக்கலாம். இதேவேளை ஏனைய மாவட்டங்களைப் போலவே கிழக்கில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் முன்னர் இருந்ததைவிட ஜே.வி.பி யின் செல்வாக்கு கணிசமாய் அதிகரித்து இருக்கிறது.
ஜே.வி.பி இற்கு இத்தேர்தல் களத்தில் அமைந்திருக்கும் ஜாக்பாட் அதிர்ஷ்டம் என்னவென்றால் இது நாள்வரையான முக்கிய தேர்தல்களில் ஒன்றாய் இருந்த ரணிலும் சஜித்தும் பிரிந்திருப்பதுதான். அதுவும் வடக்கு மற்றும் கிழக்கில் வாக்குகள் ரணில் என்றும் சஜித் என்றும் சிதறும் போது ஜே.வி.பி மூன்றாம் இடத்திற்கு வந்தாலும் சேதாரம் ஒன்றுமில்லை. ஜே.வி.பி இன் வெற்றி என்பது வடக்கு–கிழக்கு மாகாணங்களிற்கு வெளியே சிங்கள வாக்குகளை எந்தளவுக்கு அள்ளும் என்பதிலேயே முழுமையாய் தங்கியிருக்கிறது.
சரி ஜே.வி.பி யின் பிரதான பலவீனம் என்ன? வடக்கு கிழக்கில் சிறுபான்மை வாக்குகளைக் கவரப் பெரிய திட்டம் எதுவும் இன்றி இப்போதே வென்றுவிட்டதாய் நினைத்துக் கொண்டு அடுத்த கெபினட் பற்றிப் பேசிக் கொண்டு இருப்பதுதான்.- Vidivelli