– இடமாற்றம் பெற கல்வி அமைச்சுக்குச் சென்று வந்தபோது சம்பவம்
– குழந்தையையும் தாயையும் இழந்து தவிக்கும் ஆசிரியை
எதிர்பாராத திடீர் நிகழ்வுகள் வாழ்க்கைச் சக்கரத்தை மாற்றி விடுகின்றன. இந்நிகழ்வுகளும் அதனையொட்டிய வாழ்க்கை மாற்றங்களும் வாழ்க்கை பற்றிய புரிதலை மட்டுமன்றி இறை நியதியையும் உணர்த்தி நிற்கின்றன.
தனது 4 ½ மாத குழந்தையின் நலனுக்காக பாடசாலை இடமாற்றமொன்றைப் பெற்றுக் கொள்ளச் சென்ற ஆசிரியையொருவர் அன்புக் குழந்தையை மட்டுமன்றி தனது அன்புத் தாயையும் பறிகொடுத்த பரிதாப சம்பவமொன்று கடந்த திங்கட்கிழமை கெலிஓயா பகுதியில் இடம்பெற்றுள்ளது.
புசல்லாவ நகரில் பிரசித்தி பெற்ற புசல்லாவ தேசிய பாடசாலையில் பல வருடங்கள் ஆசிரியையாகப் பணியாற்றும் கெலிஓயா முறுத்தகஹமுளயைச் சேர்ந்த ஆசிரியை அருகிலுள்ள கம்பளை சாஹிரா கல்லூரிக்கு தற்காலிக இடமாற்றமொன்றை எதிர்பார்த்துள்ளார். இவர் தனது 4 ½ மாத குழந்தையின் பராமரிப்பைக் கருத்திற் கொண்டு இவ்விடமாற்றத்தைப் பெற்றுக் கொள்வதற்காக முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்த இடமாற்றம் தான் கடமையாற்றுவது தேசிய பாடசாலை என்பதால் கொழும்பிலுள்ள கல்வி அமைச்சில் சென்று தேவையான விடயங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. இதனால், இவர் கடந்த 12 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் துணைக்கு தனது தாயார் மற்றும் சகோதரி உட்பட இரு குழந்தைகளுடன் முச்சக்கரவண்டியொன்றை வாடகைக்கு அமர்த்தி கொழும்பு நோக்கி சென்றுள்ளனர்.
அன்றைய தினம், கல்வி அமைச்சில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை முடித்துக் கொண்டு அங்கிருந்து 11.30 மணியளவில் திரும்பியுள்ளனர். இவர்கள், பயணத்தை நிறைவு செய்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, பிற்பகல் 1.30 மணியளவில் கொழும்பு – கண்டி பிரதான வீதியில் வேவல்தெனிய பகுதியில் முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பிரதான பாதையை விட்டு விலகி முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் பின்பக்கத்தில் முட்டி மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இதில் படுகாயமடைந்த சாரதி உட்பட அனைவரும் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு வரக்காபொல போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் இந்த ஆசிரியையின் தாயார் மற்றும் அவரின் 4½ மாத குழந்தை அஹமட் ரிப்னாஸ் மற்றும் முச்சக்கர வண்டியின் சாரதி முஹம்மத் நஸார் (வயது 60) ஆகியோர் வரக்காபொல போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் காயமடைந்த அஹமட் ரினாஸ் மற்றும் ஆசிரியையின் சகோதரி ஆகியோர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், காயமடைந்த ஆசிரியை எம்.எப். ஷர்மிளா வரக்காபொல போதனா வைத்தியசாலையில் இருந்து கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
“முச்சக்கரவண்டி வேகமாக வந்து கட்டுப்பாட்டை இழந்த நிலையில் நிறுத்தப்பட்டிருந்த லொறியின் பின்பகுதியில் மோதி விபத்திற்குள்ளாகியது. நாம் ஓடிச் சென்று பார்த்தோம். இரத்த வெள்ளத்தில் இருந்த அனைவரையும் வெளியே எடுத்து வரக்காபொல போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உதவினோம்” என்று இவ்விபத்து சம்பவத்தை நேரில் கண்ட பிரதேசவாசியொருவர் தெரிவித்தார்.
இவ்விபத்தில் உயிரிழந்த குழந்தையின் ஜனாஸா செவ்வாய்க்கிழமை காலையும் ஏனைய இருவரின் ஜனாஸாக்கள் செவ்வாய்க்கிழமை இரவும் உடுநுவர வரஹந்தெனிய ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் பெருந்திரளானோரின் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டன.
இவ்விபத்து தொடர்பான விசாரனைகளை வரக்காபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சாரதிக்கு ஏற்பட்ட தூக்க மயக்கத்தினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் நம்புகின்றனர்.- Vidivelli