உயர்பீட கூட்டத்திற்கு போகாத அலிசாஹிர்
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ஷெய்யத் அலிசாஹிர் மௌலானா கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டத்தில் கலந்துகொள்ளவிலை. எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவை வெளிப்படுத்த வேண்டும் என்கிற தீர்மானத்தை மேற்கொள்ளும் குறிப்பிட்ட கூட்டத்திற்கு வராத அவர் சொந்த ஊரில் இடம்பெற்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டமையால் வர முடியாமல் போனதாக கூறியிருக்கிறார்.
எனினும், வார இறுதியில் மட்டக்களப்புக்குச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்ட மற்றுமொரு நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார் அலிசாஹிர் எம்.பி..
தமிழரசு கட்சியை தன்பக்கம் ஈர்க்க
இம்ரான் ஊடாக தூதுவிடும் சஜித்
தமிழ் தேசிய கூட்டமைப்பை தனது பக்கம் ஈர்த்துக்கொள்வதற்காக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் ஊடாக தூது அனுப்பி வருகிறார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ.
ஓரளவு தமிழ், சிங்கள மக்களின் ஆதரவையும் கொண்டுள்ள ஒரு முஸ்லிம் பிரதிநிதியான இம்ரான் மகரூபை வைத்து இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்களை சந்தித்து தமது ஆதரவை பெற்றுக் கொள்ள சஜித் முயற்சித்து வருகிறார்.
கடந்த வாரம் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.சிறிதரன் எம்.பி.யை சந்தித்த இம்ரான், வார இறுதியில் திருமலை மாவட்ட எம்.பி. குகதாசனையும் சந்தித்து சஜித்தின் தூதை எத்தி வைத்திருக்கிறார்.
இது தவிர வடக்கு கிழக்கில் உள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகள், தொழிற்சங்கங்கள் சிவில் அமைப்புகளை சஜித் பக்கம் திருப்பும் பணி இம்ரானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சத்தியம் பெற்ற ரிஷாட் பதியுதீன்
ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை வெளியிடுவதற்காக அக்கட்சியின் உயர்பீடம் கொழும்பு கிரீன் ப்ளஸ் ஹோட்டலில் நேற்று முன்தினம் கூடியது. கட்சித் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் கூடிய இந்த கூட்டத்தின்போது யாரை ஆதரிப்பது என்பது பற்றி ஆராயப்பட்டது. என்றாலும் இறுதித்தீர்மானம் எட்டப்படவில்லை என்ற செய்தியே வெளியானது.
இந்நிலையில், உள்ளே என்னென்ன பேசப்பட்டது, எவ்வாறான வாதங்கள் முன்வைக்கப்பட்டது என்பது பற்றி எதுவுமே வெளியாகவில்லை. உயர்பீட கூட்டத்தில் நடந்தவற்றை வெளியில் சொல்லக் கூடாது என்று கட்சித் தலைவர் ரிஷாட் பதியுதீன் உறுப்பினர்களிடம் சத்தியம் பெற்றுக்கொண்டுள்ளார் என தெரியவருகிறது.
இதனால்தான், அங்கு என்ன நடந்ததென்பது பற்றி வெளிச்சத்துக்கு வராமல் உள்ளது.
ஒரு எம்.பி.க்கு 80 கோடி நிதியா?
மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக திகாமடுல்ல மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு மாத்திரம் 800 மில்லியன், அதாவது 80 கோடி ரூபா வரை நிதி ஒதுக்கப்பட்டதாக தெரியவருகிறது.
அந்நிதியிலிருந்து கிழக்கிலுள்ள பிரபல பாடசாலையொன்றிற்கு மாத்திரம் 60 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தாகவும் மாவட்டத்திலுள்ள கரையோர பிரதேச செயலகங்கள் பலவுக்கும் பல்வேறு வேலைத்திட்டங்களுக்கான வரைபு காட்டப்பட்டே இந்த நிதி ஒதுக்கீட்டை பெற்றுக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.
எனினும், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக ஒதுக்கப்பட்ட அந்த நிதியானது தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அமைதி காக்கும் பௌஸி எம்.பி.
முஜிபுர் ரஹ்மான் கொழும்பு மாநகர சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை கடந்த வருடம் ஜனவரியில் இராஜினாமா செய்தார். இந்நிலையில், கொழும்பு மாவட்ட ஐ.ம.ச. பட்டியலில் அடுத்தபடியாக அதிக விருப்பு வாக்கு பெற்றிருந்த சிரேஷ்ட உறுப்பினர் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி மீண்டும் பாராளுமன்றம் நுழைந்தார். பாராளுமன்றத்திற்கு வந்ததிலிருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக செயற்பட்டுவந்த பௌஸி எம்.பி., ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தனது நிலைப்பாட்டை உத்தியோகபூர்வமாக அறிவிக்காது தொடர்ந்தும் அமைதிகாத்து வருகின்றார்.
மாயமானார் ஹரீஸ் எம்.பி.
முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் கடந்த ஞாயிறன்று கூடி ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பதை தீர்மானித்தது. குறித்த தீர்மானத்தை ஊடகங்களுக்கு அறிவிப்பதற்கு தயாரானபோது கூட்டத்தில் இருந்த அனைவரும் கட்சித் தலைவரின் பின்னால் நின்றுகொண்டனர்.
எனினும், அந்த இடத்திலிருந்து திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் இருக்கவில்லை. உடனே, ‘ஹரீஸ் எங்கே’ என தேடிய கட்சித் தலைவர் ஹக்கீம் ‘ஹரீஸையும் வரச் சொல்லுங்கள்’ என அங்கிருந்தவர்களிடம் கூறினார். என்றபோதிலும் ஊடகங்களுக்கு கட்சியின் தீர்மானத்தை அறிவிக்கும் அந்த இடத்திலிருந்து மாயமாகியிருந்தார் ஹரீஸ் எம்.பி.
மஹிந்த மீதான அன்பு மாறாது
எனினும் ரணிலை ஆதரிக்கிறேன்
பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பழீல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை கடந்த வாரம் சந்தித்திருந்தார். இதன்போது, ‘நான் உங்களையும் பொதுஜன பெரமுன கட்சியையும் மிகவும் நேசிக்கிறேன். உங்கள் மீதான மரியாதையும் கட்சி மீதான பற்றும் ஒருபோதும் மாறாது. என்றாலும் இந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க தீர்மானித்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
இதனை உறுதிப்படுத்தியுள்ள அமைச்சர் பந்துல குணவர்தன, பேருவளை இரத்தினக்கல் ஏற்றுமதித் துறையைச் சேர்ந்த வர்த்தகர்கள் உட்பட முஸ்லிம் மக்கள் தங்கள் ஆதரவை ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார்.
இதனிடையே, களுத்துறை மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் பலரும் ஜனாதிபதி ரணிலின் வெற்றிக்கு பாடுபடுவதாக உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஹிஸ்புல்லாஹ்வின் வீட்டுத் திருமணத்தில்
மஹிந்தவும் சஜித்தும்
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் இரண்டாவது புதல்வரின் திருமண வைபவம் கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றது. இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் சிராந்தி ராஜபக்சவும் ஜோடியாகவே சென்று கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிலையில் மஹிந்த இருந்த சாப்பாட்டு மேசையில் முஸ்லிம் அரசியல்வாதிகள் பலரும் இருந்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் அதில் கலந்துகொண்டிருந்தார்.
பலதரப்பட்ட அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டிருந்த இந்த நிகழ்வில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான கதையாடல்களே அதிகம் இடம்பிடித்துள்ளது.
உயர்பீட இரு அமர்வுகளிலிருந்து
யஹியா கான் இடைநிறுத்தம்
ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பான முக்கிய தீர்மானத்தை எடுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாத்தில் இடம்பெற்றது. இதன்போது , லுஹர் தொழுகைக்கான அதான் கூறப்பட்டதையடுத்து அக்கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அந்த இடைவெளியில் உறுப்பினர்கள் பலரும் அமைதியான நிலையில் அவரவர் நிலையில் இருந்துகொண்டனர். இதன்போது புகைப்படங்களை எடுத்த மு.கா உயர்பீட உறுப்பினர் ஏ.ஸி.யஹியாகான் அதனை முகநூலில் பதிவேற்றியிருந்தார். இதனையடுத்து அந்த புகைப்படங்களுக்க அநாகரிகமான முறையில் பின்னூட்டம் செய்த வலைஞர்கள் கேலி செய்ய ஆரம்பித்தனர்.
இதனையடுத்து உடனடி நடவடிக்கையாக, யஹியாகான் அன்றைய உயர்பீடம் மற்றும் அடுத்த உயர்பீடக் கூட்டம் ஆகிய இரு அமர்வுகளில் பங்குபற்றுவதனை இடைநிறுத்துவதாக அறிவித்தார் கட்சித் தலைவர் ஹக்கீம்.
இந்த அறிவிப்பையடுத்து தலைவரோடு கைகுலுக்கி சிரித்துக்கொண்டே வெளியேறிச் சென்றார் யஹியாகான்.
செயற்பட தொடங்கிய
கபீரும் ஹலீமும்
ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்திவந்த ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் முன்னாள் அமைச்சர்களுமான கபீர் ஹாஷிம், எம்.எச்.ஏ.ஹலீம், தலதா அத்துக்கோரள உள்ளிட்ட பலரும் கட்சி செயற்பாடுகளில் ஈடுபாடுகாட்டாது அமைதியாக இருந்ததை அவதானிக்க முடிந்தது.
என்றாலும், ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தற்போது கபீர் ஹாஷிம் மாவனெல்லையிலும் எம்.எச்.ஏ.ஹலீம் ஹாரிஸ்பத்துவயிலும் மீண்டும் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதையும் காணக் கிடைக்கிறது.
ஆனால், தலதா தொடர்ந்தும் ஐ.தே.க.வும் ஐ.ம.ச.வும் ஒன்றிணைய வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறாராம்.
மொட்டு வேட்பாளர் அறிவிப்பு
நிகழ்வில் முஸ்லிம் ஆதரவாளர்கள்
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக நேற்று காலை 7.30 சுப நேரத்தில் நாமல் ராஜபக்ச அறிவிக்கப்பட்டார். அவரது தந்தை மஹிந்த ராஜபக்சவால் பெயர் முன்மொழியப்பட்டு இந்த அறிவிப்பு வெளியானது.
இந்த நிகழ்வில் சில முஸ்லிம் ஆதரவாளர்களும் கூடியிருந்ததை அவதானிக்க முடிந்தது.
சமூக நீதிக் கட்சியின் விஷேட மாநாடு
தேசிய மக்கள் சக்தியிலிருந்து அண்மையில் வெளியேறிய சமூக நீதிக் கட்சியானது நாளை மறுதினம் கிண்ணியாவில் தேசிய செயற்குழு அங்கத்தவர் மாநாட்டை நடத்துகிறது.
இவ்விஷேட மாநாட்டில், ஜனாதிபதித் தேர்தல் குறித்த கட்சியின் நிலைப்பாட்டினை, செயற்குழு அங்கத்தவர்களுடன் கூடி ஆராய்ந்து முடிவெடுத்து, தலைமைத்துவ சபைக்கு அறிவிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
‘திடமாய் முன்னோக்கி’ எனும் மகுடத்தில் கீழ் இந்த மாநாடு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
- Vidivelli