நல்லிணக்க அடிப்படையில் புத்தர் சிலையை முஸ்லிம்கள் புனரமைத்து கொடுக்க வேண்டும்
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார்
மாவனெல்லையில் சேதமாக்கப்பட்ட புத்தர் சிலைகளை நல்லிணக்க அடிப்படையில் முஸ்லிம்கள் முன்வந்து புனரமைத்துக்கொடக்க வேண்டும். இதன் மூலம் தங்கள் நேர்மையையும், குற்றமற்ற தன்மையையும் நிரூபிக்க வேண்டும் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் தெரிவித்தார்.
அலரிமாளிகையில் நேற்று வியாழக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், மாவனெல்லை பிரதேசத்தில் புத்தர் சிலைகளை உடைத்து சேதமாக்கியதை ஐக்கிய தேசிய கட்சி வன்மையாக கண்டிக்கின்றது. கடந்த மூன்றரை வருடங்களில் நாட்டில் அமைதியான சூழ்நிலையை பெற்றுக்கொடுத்து நீதித்துறை உள்ளிட்ட முத்துறைகளும் சுதந்திரமாக செயற்படுவதற்கான சாதகமான நிலை நாட்டில் உருவாக்கிகொடுக்கப்பட்டுள்ளது.
எனினும் சிலர் பிரச்சினைகளை உருவாக்கி சேறுபூசும் வகையில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
ஆனால் கடந்த 52 நாட்களாக நாட்டில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடி சந்தர்ப்பத்தில் இவ்வாறான பிரச்சினைகள் தோற்றம் பெற்றிருக்கவில்லை. பிரச்சினைகள் இல்லாத சந்தர்ப்பங்களில் இடம்பெறும் இதுபோன்ற சம்பவங்களை இனவாதத்தை தூண்டும் செயற்பாடாகவே கொள்ள வேண்டும்.
ஆகவே, இவை அனைத்தும் நாட்டில் இனவாத்தை உருவாக்கி நாட்டில் காணப்படும் நல்லிணக்கத்தை சீரழித்து அரசாங்கத்தை எதிர்க்க முன்னெடுக்கும் முயற்சியாகும்.
இதனுடன் தொடர்புப்பட்ட குற்றவாளிகள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். ஆகையால், அவர்களை கைது செய்யவேண்டாம் என பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக என்மீது சேறு பூசும் வகையிலான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. உண்மையாக மாவனெல்லை பிரதேசத்துக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றே குறிப்பிட வேண்டும்.
கூட்டிணைந்த வகையில் முன்னெடுக்கப்படும் இந்த சேறுபூசல் மற்றும் வைராக்கியமான சம்பவங்களை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு சமூகவலைத்தளங்களினூடாக மக்களிடையே பிரச்சினைகளை உருவாக்குவதை தவிர்த்து தகுந்த சாட்சிகளை நிரூபிக்கவேண்டும். அவ்வாறு என்மீதான குற்ற்சாட்டு நிரூபிக்கப்படுமானால் நான் பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்வேன்.
ஆகவே, திட்டமிட்டு செய்த இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பது மாத்திரமல்லாமல், சேறு பூசும் வகையில் சமூகத்தில் பொய் பிரசாரங்களை செய்துவருபவர்களை கண்டறிந்து அவர்களுக்கான தண்டனையை பெற்றுக்கொடுக்க வேண்டும். அவ்வாறு மனநிலை பாதிக்கப்பட்டவர்களால் புத்தர் சிலை உடைக்கப்பட்டிருக்குமானால் அவர்களுக்கும் தகுந்த தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.
எந்த இனத்தவராக இருந்தாரும் நாட்டில் இனவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் உருவாக்க முயற்சிப்பார்களானால் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும். இவ்வாறான இனப்பிரச்சினைகள் நாட்டில் உருவாக்கப்படும்போது போட்டித்தன்மையுடைய சமூகத்தில் முன்னேற முடியாது.
பொருளாதார ரீதியாகவும் பாரிய பின்னடைவினையே சந்திப்போம். சேறுபூசல்களின் மூலம் என்னை வீழ்த்தவோ தோற்கடிக்கவோ முடியாது. நான் ஊழல் அரசியல்வாதியல்ல. சேறுபூசல்களை கண்டு நான் அஞ்சப்போவதுமில்லை. மாவனெல்லையில் சேதமாக்கப்பட்ட புத்தர் சிலைகளை நல்லிணக்க அடிப்படையில் முஸ்லிம்கள் முன்வந்து புனரமைத்துக்கொடுக்க வேண்டும். இதன் மூலம் தங்கள் நேர்மையையும், குற்றமற்ற தன்மையையும் நிரூபிக்க வேண்டும்.
முஸ்லிம்களது நல்லெண்ணத்தின் அடையாளமாகவும் சமாதானமாகவும், பிற இனத்தவர்களுடன் ஒத்துழைப்புடனும் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தவும், இதை செய்யவேண்டும்என்றும் அவர் தெரிவித்தார்.
-Vidivelli