கண்டி மற்றும் மாவனெல்லை ஆகிய பிரதான நகரங்களை அண்மித்த பகுதிகளில் ஒரே இரவில் நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை 7 சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
அத்துடன் இந்த புத்தர் சிலைகள் உடைப்பு விவகாரம் தொடர்பில் மேலும் இரு சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்களைக் கைது செய்ய சிறப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர மேலும் கூறினார்.
இந் நிலையில் கண்டி, மாவனெல்லை நகரின் பல பகுதிகளுக்கு பொலிஸ் விசேட அதிரடிப் படை பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்பட்டுள்ள நிலையில், இரு நகரங்களுக்கு உட்பட்ட அனைத்து பிரதேசங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க, கண்டி பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரணவீர, கேகாலை பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித்த சிறிவர்தன ஆகியோருக்கு உரிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
பிரதேசத்தின் அமைதியை தொடர எடுக்க முடியுமான அனைத்து அதிகபட்ச நடவடிக்கைகளையும் முன்னெடுக்க இதன்போது பொலிஸ் மா அதிபர் குறித்த பிரதேசங்களின் உயர் பொலிஸ் அதிகாரிகளையும் அதிரடிப் படை கட்டளைத் தளபதியையும் அறிவுறுத்தியுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் தகவல்கள் தெரிவித்தன.
கடந்த வாரம் மாவனெல்லை பகுதியில் இரு புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டிருந்த்தன. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அதிகாலை 3.00 மனியளவில் வெலம்பட பொலிஸ் பிரிவின் லெயம்கஹவலவிலும், மாவனெல்லை பொலிஸ் பிரிவில் மாவனெல்லை – திதுருவத்த சந்தியில் உள்ள புத்தர் சிலையும் தாக்கி சேதமாக்கப்பட்டிருந்தன. இதனைவிட யட்டி நுவர ஸ்ரீ தொடங்வல நாக விகாரை வளாகத்தில் உள்ள புத்தர் சிலை ஒன்றும் உடைக்கப்பட்டிருந்த்தது.
எவ்வாறாயினும் மாவனெல்லை பொலிஸ் பிரிவில் மாவனெல்லை – திதுருவத்த சந்தியில் புத்தர் சிலையை உடைக்க வந்த சந்தேக நபர்களில் ஒருவரை பிரதேசவாசிகள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர். இந்த நிலையில் அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் மற்றும் ஏனைய சாட்சிகள் பிரகாரம் நேற்று முன் தினம் மேலும் ஐவரும் நேற்று ஒருவரும் என கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் கண்டி, மாவனெல்லை பகுதிகளை அண்மித்த முஸ்லிம்களாவர்.
அவர்களில் 6 பேரை நேற்று மாவனெல்லை பொலிஸார் நீதிமன்றில் ஆஜர் செய்தனர். இதன்போது அவர்களை எதிர்வரும் 2019 ஜனவரி 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார். நேற்று கைது செய்யப்பட்ட நபர் இன்று மன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.
இதனைவிட மேலும் இருவரை அடையாளம் கண்டுள்ள பொலிஸார் அவர்களை தேடி வருகின்றனர். புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தில் சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல் செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி கைதானவர்களுக்கு எதிராக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணைக்கப்பாட்டு சட்ட விதிவிதானங்களின் கீழ் (ஐ.சி.சி.பி.ஆர்) குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கண்டி, மாவனெல்லை பகுதிகளில் அமைதியை பேண தொடர்ந்து பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli