ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பற்றிய விபரங்களும் ஓரளவு உறுதியாகத் தொடங்கியுள்ளன. வழக்கம்போல கட்சி தாவல்களும் ஆரம்பித்துள்ளன. இம்முறை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கிடையில் மும்முனைப் போட்டி நிகழும் என்பது இப்போதைக்கு உறுதியாகியுள்ளது. இதற்கப்பால் மேலும் பல முகாம்களைச் சேர்ந்த வேட்பாளர்களும் களமிறங்கவுள்ளனர்.
இலங்கையைப் பொறுத்தவரை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் மிக முக்கியமானதாகும். நாட்டை பொருளாதார ரீதியாக முன்னேற்றுதல், புரையோடிப் போயுள்ள ஊழல் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தல், அரச நிர்வாகத்தை வினைத்திறனுடையதாக மாற்றுதல், கடன் நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்தல் என புதிதாக தெரிவாகப் போகும் ஜனாதிபதியின் முன் ஏராளமான பணிகள் காத்திருக்கின்றன. அதேபோன்றுதான் நாட்டின் முன்னேற்றத்திற்கும் அமைதிக்கும் பெரும் தடையாக விளங்கும் இனவாதத்தை தோற்கடித்து சிறுபான்மை மக்களையும் அரவணைத்துச் செல்லக் கூடிய ஒருவரையே அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவு செய்ய வேண்டிய கடப்பாடும் இலங்கையருக்கு உள்ளது.
இன மத சிறுபான்மையினர் என்ற வகையில் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியதும் அடுத்த ஜனாதிபதியின் முன்னுள்ள பொறுப்பாகும். கிறிஸ்தவ மக்களைப் பொறுத்தவரை உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதியைப் பெற்றுத்தருவதாக உறுதியளிக்கும் வேட்பாளர்களுக்கே தமது ஆதரவு இருக்கும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்திருக்கிறார். தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்களது தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. போர் முடிவுக்கு வந்து பல வருடங்கள் கடந்து விட்டாலும் இனப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்குவதாக வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. சம்பந்தன் ஐயாவும் எந்தவொரு தீர்வையும் காணாத நிலையிலேயே மரணித்துப் போய்விட்டார். இந்நிலையில் தமிழ் மக்களும் தமது அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய தலைவர் ஒருவருக்கே வாக்களிப்பர். சில தமிழ் கட்சிகள் சேர்ந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளன. இது எந்தளவு தூரம் புத்திசாதுரியமானது எனத் தெரியவில்லை.
முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை சமூகத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற கட்சிகளின் நிலையோ பரிதாபகரமாக உள்ளது. இக் கட்சிகள் சமூகத்தின் அபிலாசைகள் பற்றிய எந்தவிதப் பிரக்ஞையுமற்றுள்ளன. கட்சித் தலைவர்கள் ஒருபுறமும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மறுபுறமும் இருந்து அரசியல் செய்கின்ற துரதிஸ்ட நிலையே நீடிக்கிறது. சிலர் ஓரணியில் இருந்து கொண்டு மறு அணிக்கு பகிரங்கமாகவே ஆதரவு வழங்கி வருகின்றனர். இது முஸ்லிம் அரசியல்வாதிகளின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியுள்ளது. தேர்தல் நெருங்கும் காலப்பகுதியில் முஸ்லிம் அரசியல்வாதிகளின் கட்சி தாவல்கள் நிச்சயம் முஸ்லிம் சமூகத்தை தலைகுனிவுக்குள்ளாக்கும் என்பதே நிதர்சனமாகும். முஸ்லிம் கட்சிகள் தபால் மூல வாக்குகள் அளிக்கப்பட்ட பின்னரும் கட்சி தாவிய கசப்பான காட்சிகளை நாம் கடந்த காலங்களில் கண்டுள்ளோம்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என இதுவரை முஸ்லிம் சமூகத்தினுள் எந்தவித ஆக்கபூர்வமாக கலந்துரையாடலும் நடந்ததாகத் தெரியவில்லை. முஸ்லிம் சிவில் சமூகமோ அல்லது முஸ்லிம் அரசியல் கட்சிகளோ இது பற்றி இன்னமும் ஆராயவில்லை. ஒரு ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பதாயின் அவரிடம் சமூகம் சார்பில் முன்வைக்கப்பட வேண்டிய கோரிக்கைகள் இதுவரை கண்டறியப்படவில்லை. இவ்வாறான நிலையில் இம்முறையும் இந்த அரசியல்வாதிகளின் நலன்களுக்காக முஸ்லிம் சமூகத்தின் வாக்குகள் அடகு வைக்கப்படப் போகின்றன என்பது மட்டும் நிச்சயம்.
முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை மூன்று பிரதான வேட்பாளர்களையும் பரந்துபட்ட அளவில் ஆதரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன. எனினும் இந்த ஆதரவை என்னவிதமான நிபந்தனைகளின் பேரில் முஸ்லிம்கள் வழங்கப் போகிறார்கள் என்ற கேள்விக்குத்தான் இதுவரை விடை கிடைக்கவில்லை. வேட்பாளர்களின் வழக்கமான வார்த்தை ஜாலங்களை நம்பி ஒரு சமூகமாக நாம் வாக்களிக்க முடியாது. ஆகக் குறைந்தது எழுத்து மூல ஒப்பந்தங்களைச் செய்து, அவற்றை சமூகத்தின் முன் வெளிப்படுத்தி ஆதரவை வழங்குவதே சிறந்ததாகும். இந்த அரசியல் கலாசாரத்தை முஸ்லிம் கட்சிகள் பின்பற்ற முன்வர வேண்டும். இதற்கான அழுத்தங்களை கட்சிகளின் ஆதரவாளர்களும் சிவில் அமைப்புகளும் வழங்க வேண்டும். அப்போதுதான் முஸ்லிம் அரசியல் கட்சிகளை பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்த முடியுமாகவிருக்கும்.- Vidivelli