என்.எல்.எம்.மன்சூர்
ஏறாவூர்
இஸ்லாம் முஸ்லிம் பெண்களுக்கு பூரண சுதந்திரத்தை வழங்கியுள்ள அதேவேளை அவர்களது கண்ணியத்தைப் பேணும் வகையிலான ஆடை ஒழங்குகளையும் வரையறை செய்துள்ளது. இதன் அடிப்படையில் முஸ்லிம் பெண்கள் வீட்டை விட்டுச் வெளிச்செல்லும் போது பர்தா, அபாயா, ஹிஜாப் என முகத்தை தவிர்த்து உடலை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிந்து கொள்கின்றார்கள். முஸ்லிம் பாடசாலை மாணவிகளுக்கு கூட பர்தா அணிவதற்கும், மாணவர்கள் தொப்பி போடுவதற்கும் அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. கல்வியமைச்சும் இதனை அனுமதித்துள்ளதுடன், மனித உரிமை ஆணைக்குழுவும் இதற்கு ஆதரவாகவே உள்ளது. மாணவிகள் பர்தா அணிவதற்கு அரசு இலவசமாக சீருடை வழங்குவதும் அரசாங்க அங்கீகாரத்திற்கு சிறந்த ஆதாரமாகும். எந்தவொரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்படுவதில்லை.
எனினும் அண்மைக் காலமாக முஸ்லிம் பெண்கள் பரீட்சை மண்டபங்களிலும் தொழில் செய்யும் இடங்களிலும் பல சவால்களுக்கு முகங் கொடுக்க வேண்டியுள்ளது. முஸ்லிம் மாணவிகள் மாத்திரமன்றி போட்டிப் பரீட்சைக்குத் தோற்றும் பெண்களும் கூட இவ்வாறான நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள். பர்தா அணிந்த பெண்கள் ஒரு சில பரீட்சை நிலையங்களில் மேற்பார்வையாளர்களின் கெடுபிடிகளுக்கு ஆளாக்கப்படுகின்றார்கள். ஒரு சில மேற்பார்வையாளர்கள் மாணவர்களை தொப்பியை கழற்றிவிட்டு பரீட்சை மண்டபத்திற்கு வருமாறு உத்தரவிடுவதுடன் மாணவிகளின் பர்தா, ஹிஜாப் உடைகளிலும் தலையிடுகின்றார்கள். குறிப்பாக இம்முறை நடைபெற்ற க.பொ.த. உயர்தர பரீட்சையில் திருகோணமலை மாவட்டத்தில் மாத்திரமன்றி மட்டக்களப்பு கல்வி வலயத்திலும் ஒரு பாடசாலையில் பர்தா தொடர்பான சம்பவம் பதிவாகியுள்ளது.இது விடயமாக பெற்றோர் உயர் அதிகாரிகளிடம் முறையிட்ட போது தீர்வு காணப்பட்டது. அதே போன்று வேறு சில மாவட்டங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
கல்வியமைச்சின் சுற்றுநிருபமானது, பரீட்சை எழுதும்போது பரீட்சார்த்திகளின் காதுகள் தெரியும் வகையில் ஆடை அணிந்திருத்தல் வேண்டும் என்று குறிப்பிடுகிறது. கடந்த சில வருடங்களாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகின்றது. இது விடயத்தில் முஸ்லிம் பரீட்சாத்திகள் கட்டுப்பட்டே நடந்து கொள்கின்றார்கள். சில மாணவிகள் பர்தாவை தவிர்த்து ஷோல் அணிந்து பரீட்சை எழுதுகிறார்கள். ஆனாலும் ஒரு சில பரீட்சை நிலையங்களின் மேற்பார்வையாளர்கள் முஸ்லிம் பரீட்சாத்திகளை அவமானப்படுத்துவது போலவும், மன உளைச்சலை உண்டாக்கும் வகையிலும் நடந்து கொள்வதும் கவலைக்குரிய விடயமாகும்.
எந்த சந்தர்ப்பத்திலும் பரீட்சைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் முஸ்லிம் மாணவிகள் நடந்து கொள்ளவில்லை. அப்படியிருந்தும் அண்மைக் காலமாக கலாச்சார உடையணிந்து வரும் மாணவர்களும், மாணவிகளும் சில பரீட்சை மண்டபங்களில் மேற்பார்வையாளர்கள், நோக்குனர்களால் ஏனைய மாணவர்களுக்கு முன்னிலையில் அவமானப்படுத்துவது போல் கண்டிப்புடன் நடந்து கொள்கின்றார்கள்.
தேசிய மட்டத்தில் நடைபெறுகின்ற பரீட்சைகள் அனைத்தினுடைய விதிமுறைகள், நடைமுறைகள் குறித்து பரீட்சை திணைக்கள அதிகாரிகள் அழகாகவும், தெளிவாகவும் மேற்பார்வையாளர்கள், நோக்குனர்களுக்கு அறிவுறுத்தல் வழங்குகின்றார்கள். அத்துடன் கைநூல்கள், சுற்றுநிருபங்களும் கொடுக்கின்றார்கள். அப்படியிருந்தும் ஒரு சில பரீட்சை நிலையங்களின் மேற்பார்வையாளர்கள் ஏன் இப்படி நடந்து கொள்ள வேண்டும்.
புனிதமான கல்விப் பணியாற்றும் மேற்பார்வையாளர்கள் எதிர்கால வாழ்க்கையை இலக்காக கொண்டு முன்னேறும் ஆவலில் பரீட்சையில் திறமைகாட்ட வரும் மாணவர்களுக்கு இடையூறு விளைவிப்பது பண்பான செயலா? அண்மைக் காலமாகவே முஸ்லிம்கள் விடயத்தில் சந்தேகப் பார்வையும், குறுகிய சிந்தனையும் கொண்டவர்களே இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றார்கள்.
கடந்த ஜனவரியில் நடைபெற்ற க. பொ. த. உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய திருமலை ஸாஹிறா மாணவிகள் ஹிஜாப் அணிந்த நிலையில் மேற்பார்வiயாளர்கள் அனுமதி வழங்கி பரீட்சை எழுதிய போதும் பெறுபேறு இடைநிறுத்தப்பட்டுள்ளது. பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவரின் அறிக்கையே இதற்கு காரணமாகும். குறித்த மாணவிகள் தமது கலாசார ஆடைகளை அணிந்து பரீட்சைக்குத் தோற்றியதன் மூலம் பரீட்சை விதிமுறைகளை மீறியுள்ளனர் என்று பரீட்சைத் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்துள்ளார் அந்த அதிகாரி. புனிதமான கல்வித் துறையின் உயர் பதவிகளுக்குள் இருப்பவர்கள் மாணவர்களின் கல்வியோடு விளையாடுவதையே இச்செயல்கள் எடுத்துக்காட்டுகின்றன.
அது மாத்திரமன்றி, அதிபர்கள் சிலரும் இதே பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளனர். வினைத்திறன்காண் தடை தாண்டல் பரீட்சைக்குத் தோற்ற ஹிஜாப் அணிந்து சென்ற 13 அதிபர்களும் முதல் நாள் 6 மணி நேரம் பரீட்சை எழுதியுள்ளார்கள். மறுநாள் பரீட்சை முடியுந்தறுவாயில் பரீட்சை மண்டப மேற்பார்வையாளர்கள் இவர்களுக்கு இடையூறு விளைவித்ததுடன் அடையாள அட்டை, அனுமதியட்டை என்பவற்றையும் புகைப்படமெடுத்துச் சென்றுள்ளனர்.
பொதுவாகவே பரீட்சார்த்திகள் கடைசி நேரத்தில் மிகவும் பதற்றதுடன் காணப்படுவார்கள். வினா இலக்கங்கள், விடைத்தாள் பக்கங்களை சரிபார்த்தல், விடுபட்ட வினாக்கள் ஏதுமுள்ளதா? விடைகளில் கடைசியில் எதையாவது சரிபார்த்து எழுதுவதா? என்று தடுமாறும் நேரத்தில் இடைஞ்சல் கொடுத்தது எந்த வகையில் நியாயமானது.? அதுவும் அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் தரத்திலுள்ள அதிபர்களை அவமானப்படுத்தியது தகுமா?
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருகோணமலை சண்முகா மகளிர் வித்தியாலயத்திற்கு ஹிஜாப் அணிந்து கடமைக்குச் சென்ற ஆசிரியையை கடமையைச் செய்யவிடாது தடுத்த சம்பவம் நீதிமன்றம் வரை சென்றதும் பிரதேசத்தில் தமிழ் முஸ்லிம் முரண்பாடுகளுக்கு வழிவகுத்ததும் நாம் அறிந்ததே. இறுதியில் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் நீதிமன்றமும் குறித்த ஆசிரியைக்கு சார்பாகவே தீர்ப்பு வழங்கின.
எனவே உயரதிகாரிகள் இவ்வாறான விடயங்களில் இன மத வெறுப்புகளைப் புறந்தள்ளி மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கு கொண்டு நீதியாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.- Vidivelli